நகரமே நாறுது... தெற்கு மட்டும் தேறுது!| Dinamalar

நகரமே நாறுது... தெற்கு மட்டும் தேறுது!

Added : டிச 23, 2014
Share
''மித்து! நான் ஆட்டோவுல வந்துட்டு இருக்கேன்... ரெண்டே நிமிஷம்!,'' என்று மொபைலில் பேசியபடி, 'மக்கள் ஆட்டோ'வில், பீளமேடு ஆஞ்சநேயர் கோவிலில் வந்து இறங்கினாள் சித்ரா. ''அக்கா! என் வண்டியிலயும் கொஞ்சம் பிரச்னை...நானும் ஆட்டோ தான்...!,'' என்ற மித்ரா, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 'நம்ம ஆட்டோ'வில் வந்து இறங்கினாள். ''கூட்டம் அதிகமா இருக்குடி...கொஞ்ச நேரம் கழிச்சு, உள்ள
நகரமே நாறுது... தெற்கு மட்டும் தேறுது!

''மித்து! நான் ஆட்டோவுல வந்துட்டு இருக்கேன்... ரெண்டே நிமிஷம்!,'' என்று மொபைலில் பேசியபடி, 'மக்கள் ஆட்டோ'வில், பீளமேடு ஆஞ்சநேயர் கோவிலில் வந்து இறங்கினாள் சித்ரா.


''அக்கா! என் வண்டியிலயும் கொஞ்சம் பிரச்னை...நானும் ஆட்டோ தான்...!,'' என்ற மித்ரா, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 'நம்ம ஆட்டோ'வில் வந்து இறங்கினாள்.


''கூட்டம் அதிகமா இருக்குடி...கொஞ்ச நேரம் கழிச்சு, உள்ள போகலாம்,'' என்ற சித்ரா, ''சென்னையில இன்னும் மழையடிக்குது...இங்க என்னடான்னா, மழையக் காணோம். செம்ம குளிரா இருக்கு,'' என்று கைகளிரண்டையும் இறுக்கமாய்க் கட்டிக் கொண்டாள்.


''கிளைமேட் குளிராத்தான் இருக்கு. ஊருக்குள்ள தான், பல பேருக்கு குளிர் விட்டுப் போச்சு,'' என்று வில்லங்கமாய் ஆரம்பித்தாள் மித்ரா.


''அப்பிடி யாருடி தெனாவட்டாத் திரியுறது...?,''

''ஆளும்கட்சி கவுன்சிலர்க சில பேரு தான்...பாதாள சாக்கடை, குடிதண்ணி எதுவாயிருந்தாலும், எங்களைக் கேக்காம கனெக்ஷன் கொடுத்தா, நடக்கிறதே வேறன்னு பகிரங்கமா மெரட்டுறாங்க. காந்தி பார்க் பக்கத்தால, ஒரு வீட்டுக்கு யுஜிடி கனெக்ஷன் கொடுக்கிறதுக்கு 'பக்கா'வா பர்மிஷன் வாங்கிட்டு வந்து, வேலை ஆரம்பிக்கிறப்ப, அங்க வந்த மூன்று நாட்டு மன்னர்களோட பேரைக் கொண்ட கவுன்சிலரு, 25 ஆயிரம் ரூபா கொடுக்கலைன்னா, வேலை நடக்க விட மாட்டேன்னு தகராறு பண்ணிருக்காரு. இன்னிக்கு வரைக்கும், கனெக்ஷன் கொடுக்கலை,''


''குடி தண்ணிக்கு தான், கவுன்சிலர்களும், பிளம்பர்களும் சேர்ந்து அநியாயத்துக்கு வசூலைப் போடுறாங்கன்னு 'கம்பிளைன்ட்' இருந்துச்சு. இப்போ யுஜிடிக்கு இந்த நிலைமை வந்திருச்சா?,'' என்று கொதித்தாள் சித்ரா.


''அக்கா! நீ சொல்றது பழைய 'கம்பிளைன்ட்'டு... இப்போ பிளம்பர்களே புலம்பர்களாயிட்டாங்க. கார்ப்பரேஷனை நிழலா இருந்து நடத்துற ஒருத்தரு, வேற மாதிரி வசூல்ல இறங்கிட்டாராம். புது கனெக்ஷன் கேக்குறவுங்களுக்கு, இவுங்களே ஒரு டீமை வச்சு, பைப் மாட்டிக் கொடுத்துட்டு, பணத்தையும் வாங்கிர்றாங்களாம். லைசென்ஸ்டு பிளம்பர்க வந்தா, பேருக்கு 2 ஆயிரம் ரூவா கொடுத்து அனுப்பச் சொல்லிர்றாங்களாம்,'' என்றாள் மித்ரா.


''ஆமா மித்து! சுந்தராபுரம் ஏரியாவுல, வீடே கட்ட ஆரம்பிக்கலை. அதுக்குள்ள வாட்டர் கனெக்ஷன் கொடுத்துட்டாங்க. அந்த கட்டடமே இப்போ சிறுவாணித் தண்ணியில தான் கட்றாங்க?,''


''அநியாயம்க்கா....! 'சவுத் ஜோன்'ல தான், இந்த வேலை அதிகமா நடக்குதாம்!,''


''நகரமே நாறுது...தெற்கு மட்டும் தேறுதுன்னு கவுன்சிலர்க 'பன்ச்' டயலாக் பேசுறாங்க தெரியுமா?,'' என்றாள் சித்ரா.


''ஆமாக்கா! நானும் கேள்விப்பட்டேன். அடுத்த தேர்தல்ல ஒரு தொகுதியில மட்டும் ஜெயிச்சா போதும்னு முடிவு பண்ணிட்டாங்களோ?,'' என்றாள் மித்ரா.


''அப்பிடித்தான் நினைக்கிறேன். ஏற்கனவே, 40 கோடி ரூபாய்க்கு அந்த மண்டலத்துல வேலை நடக்குது. இப்போ, குறிச்சி குளத்துக்கு 18 கோடி ஒதுக்கிருக்காங்க,'' என்றாள் சித்ரா.


''குறிச்சி குளமே, பிடபிள்யு கிட்ட இருக்கு. அதுக்கு கார்ப்பரேஷன் சார்புல, இவ்ளோ 'ஃபண்ட்' ஒதுக்குனதே, பெரிய சர்ச்சையாச்சு. இதுல, கார்ப்பரேஷன் ஏரியாவுலயே இல்லாத பேரூர் குளத்துல நடைபாதை, சைக்கிள் டிராக் போட கார்ப்பரேஷன் 'ஃபண்ட்'டுல ஒன்றரை கோடி ரூபா ஒதுக்குறது என்ன நியாயம்னு மத்த கவுன்சிலர்க கொந்தளிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.


''எதிர்க்கட்சிக்காரங்க ஏன் கவுன்சில் மீட்டிங்ல கேக்கலை?,'' என்றாள் சித்ரா.


''கேக்கிறதுக்கு யாரு இருக்கா? டிஎம்கேகாரங்க தான் கட்சி எலக்ஷன்னு சொல்லி, மீட்டிங்குக்கு வரலையே. எல்லாரும் எதிர்பார்த்த மீனா லோகு, கார்த்திக், பாரி, அருண்குமார் எல்லாரும் 'அவுட்' ஆயிட்டாங்க பார்த்தியா. பொங்கலூர் ஆளுங்களை எல்லாம் காலி பண்ணுனது, அவுங்க கட்சித் தலைவர் தானாம்'' என்றாள் மித்ரா.


''அதை விடு...பழைய சி.இ.,இன்சார்ஜை 'சஸ்பெண்ட்' பண்ணுனாங்க. அவரு சீக்கிரமே 'ரிட்டயர்டு' ஆகப்போறாரு. ஆனா, அவரை 'சஸ்பெண்ட்' பண்ணுனதுக்குக் காரணமான 3 லாரிகளும் இன்னும் வரவேயில்லை. இதையாவது, இந்த டிஎம்கே கவுன்சிலர்க கேக்கலாமே,'' என்றாள் சித்ரா.


''கேட்ருக்கலாம்!. புதுசா வந்த கமிஷனருக்கு இந்த விஷயம் தெரியுமான்னே தெரியலை!,'' என்றாள் மித்ரா.


''தெரியாதுன்னுதான் நினைக்கிறேன். அவரு, காலங்காத்தால 5.00 மணிக்கு எந்திரிச்சு, ரெண்டு மணி நேரம் கார்லயே செம்ம ரவுண்ட் அடிக்கிறாரு. ஆனா, அதிகாரிங்க யாரும் வளையுறதாகத் தெரியலை,'' என்றாள் சித்ரா.


''கமிஷனரு, வேலை நடக்கணும்னு கார்ல சுத்துறாரு. சிட்டிக்குள்ள ஏடிபிஓ ஒருத்தரு, வசூலுக்காக கார்ல சுத்துறாரு. அவரோட மண்டலத்துல, அப்ரூவலுக்கு வர்ற 'பைல்' எதையும் ஆபீசுல வைக்கிறதே இல்லையாம். கார்ல போட்டுட்டு, கிளம்பிர்றாரு. ரேஸ்கோர்ஸ்ல எங்கயாவது காரை நிறுத்திட்டு, சம்மந்தப்பட்டவுங்களை வர வச்சு, பேரம் பேசுறாராம். அவரோட கார் டிரைவரே 'பைலை' டீல் பண்றாருங்கிறாங்க,'' என்றாள் மித்ரா.


''கிழக்க உதிக்கிற சூரியன், வேற திசையில உதிச்சாலும் இவுங்க மாற மாட்டாங்கக்கா!,''


''பில்டிங் மேட்டர் பத்தி பேசுறப்ப, நம்மூரு மேடத்தை மறக்க முடியுமா? அவுங்க மத்த 'பைல்'களை மத்த ஆபீசர்க கிட்டத் தள்ளி விட்றாங்களாம். பட்... பில்டிங் சம்மந்தமான 'பைலை' மட்டும், வேற யாரும் பாக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்களாம்!,''


''அவுங்களுக்கு தான் மினிஸ்டர் பங்ஷன்கள்ல கலந்துக்கவே நேரம் போத மாட்டேங்குதே,'' என்றாள் சித்ரா.


''அது சரி! அவுங்க கேம்ப் ஆபீஸ்ல யாரு வந்தாலும் உடனே பாத்துரலாம்கிறாங்க. பத்திரிகைக்காரங்களை மட்டும், உள்ளேயே விடக்கூடாதுன்னு ரொம்ப 'ஸ்ரிக்ட்டா' சொல்லிருக்காங்களாமே!,'' என்றாள் மித்ரா.


''நீ 'ஸ்ரிக்ட்'ன்னு சொன்னதும், ஸ்கூல்ல 'ஸ்ரிக்ட்'டா இருந்ததுக்காக 'சஸ்பென்ட்' ஆன, நம்ம சித்தாபுதூர் எச்.எம்., ஞாபகத்துக்கு வந்துட்டாங்க!,'' என்றாள் சித்ரா.


''என்னக்கா சொல்ற...அவுங்களை 'சஸ்பெண்ட்' பண்ணுனதுக்கு வேற காரணம் சொன்னாங்களே!,''


''ஆனா, ஸ்கூல்ல நடந்ததே வேறன்னு நம்ம 'சோர்ஸ்' சொல்றாங்க. அங்க வேலை பாக்கிற ஒரு வாத்தியாரு, ரெண்டு மூணு 'நான் டீச்சிங் 'ஸ்டாஃப்' எல்லாம் சேர்ந்து, ஸ்கூல்லயே ராத்திரியில தண்ணியடிக்கிறதா ஒரு தகவல் வந்திருக்கு. இதை அந்தம்மா கண்டு பிடிச்சு, கண்டிச்சிருக்காங்க,'' என்று மித்ரா முடிப்பதற்குள், 'அப்பிடின்னா...,' என்றாள் சித்ரா.


''முழுசாக் கேளுக்கா! அதே ஸ்கூல்ல 'லவ்' பண்ணிட்டுத்திரிஞ்ச பிளஸ் டூ பொண்ணையும், பையனையும் கூப்பிட்டு, கடுமையாத் திட்டி, அந்தப் பொண்ணோட வீட்டுலயும் தகவல் சொல்லிருக்காங்க. மாணவர் அமைப்புங்கிற பேர்ல, இதைப்பத்திக் கேக்க வந்த ஒருத்தரையும் துரத்தி விட்டாங்க. இவுங்க எல்லாம் சேர்ந்து 'ப்ளான்' பண்ணித்தான், ஸ்கூலை நொறுக்கிருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''அப்படின்னா, பசங்க அடிக்கலையா?,''


''பசங்களும் பண்ணிருக்காங்க. ஆனா, பட்டாசு, கல்லை எல்லாம் உள்ளே கொண்டு போக ஏற்பாடு பண்ணுனதே, அங்க 'விளையாடுற' ஒரு வாத்தியார் தானாம். ரெண்டு மூணு வாத்தியார்களை அங்கயிருந்து மாத்தலைன்னா, ஸ்கூலே கெட்டுக் குட்டிச்சுவராப் போயிரும்கிறாங்க,''


''இதுல, கல்வித்துறையில இருக்கிற ரெண்டு லேடி ஆபீசர்சும், சரியா விசாரிக்காம, அந்த எச்.எம்.,மை பழி வாங்கிட்டதா சொல்றாங்க,'' என்றாள் சித்ரா.


''உளவுத்துறை இதெல்லாம் மேல ரிப்போர்ட் பண்ணாதா?,'' என்றாள் மித்ரா.


''நம்ம போலீசா...? அவுங்க பண்ற கூத்து இருக்கே...செஞ்சோற்றுக் கடன் தீர்த்த வள்ளலோட பேரைக் கொண்ட ஒரு போலீஸ்காரரு ஜி.எச்.,ல இருக்காரு. அவரு, அங்க இருக்கிற கடைகள்ல, ஓட்டல்கள்ல போயி, இஷ்டத்துக்கு கண்டதையும் வாங்கிச் சாப்பிட்டு, காசே கொடுக்கிறதில்லையாம். காசு கேட்டா, கேசு போடுவேன்னு மெரட்டுறாராம்,'' என்றாள் சித்ரா.


''இதென்னக்கா பெருசு! இந்த கொடுமையக் கேளு. தீபாவளிக்கு முன்னாடி...கொடிசியா ரோட்டுல, ஈவ்னிங் டைம்ல... ஒரு காலேஜ் பொண்ணும், பையனும் கார்ல உக்காந்திருக்கிறப்ப, அந்த ஏரியா போலீஸ்காரர் ஒருத்தர் பிடிச்சிருக்காரு. அந்த பையனைத் துரத்தி விட்டுட்டு, அந்தப் பொண்ணை மெரட்டி, பயன்படுத்துனதாவும், மறுபடியும் அந்தப் பொண்ணுக்கு போன் பண்ணி தொந்தரவு பண்ணுனதாவும் போலீஸ்காரங்களே பேசிக்கிறாங்க,''


''அடப்பாவி!''


''அதுக்கு அந்தப் பொண்ணு, நான் கமிஷனர்ட்ட 'கம்பிளைன்ட்' பண்ணப்போறேன்னு சொல்லிட்டா. உடனே, இந்த போலீஸ்காரரு, மொபைலை 'ஸ்விட்ச் ஆப்' பண்ணிட்டு, ரெண்டு மூணு நாளைக்கு ஆள் 'எஸ்கேப்' ஆயிட்டாரு. அதுல, அந்தப் பொண்ணு 'ஆப்' ஆயிருச்சு. இப்போ, அதே போலீஸ்காரரு, அதே ஸ்டேஷன்ல தைரியமா வேலை பாத்துட்டு இருக்காரு. கமிஷனரு விசாரிச்சா உண்மை தெரியவரும்,'' என்றாள் மித்ரா.


''மித்து! ஒரே நிமிஷம்...எங்க மாமா அங்க நிக்கிறாரு. பாத்து பேசிட்டு வர்றேன். நீ உள்ள போய் சாமி கும்பிடு,'' என்று வேகமாய் நகர்ந்தாள் சித்ரா.
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X