பொது செய்தி

தமிழ்நாடு

இயக்குநர் பாலசந்தர் காலமானார்

Updated : டிச 24, 2014 | Added : டிச 23, 2014 | கருத்துகள் (77)
Advertisement
இயக்குநர் பாலசந்தர் காலமானார்

சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலசந்தர். "இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார்

1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார்.
அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக' விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலசந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார். 1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த்' என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.

சினிமாவில் தடம்: வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, 1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்கும் தெய்வத்தாய் என்ற படத்துக்கு வசனம் எழுத வாய்ப்பு வந்தது. முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார். அதே ஆண்டு 1965ல் நீர்க்குமிழி என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இயக்குநராக அறிமுகமானார். நடிகர் நாகேஷ் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்பு உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்சினைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், இரு கோடுகள், பூவா தலையா, பாமா விஜயம், தாமரை நெஞ்சம், நான் அவனில்லை, புன்னகை, எதிர் நீச்சல், சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, அக்னிசாட்சி, வறுமையின் நிறம் சிகப்பு, புதுப்புது அர்த்தங்கள், வானமே எல்லை, ஜாதிமல்லி, நூற்றுக்கு நூறு, கல்கி, பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்கள் சிறந்த படங்களாக அமைந்தன.

தயாரிப்பு நிறுவனம்:1981ல் "கவிதாலயா" என்னும் திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலமாக பிற இயக்குனர்களின் கைவண்ணத்தில் பல திரைப்படங்களை அளித்தார். வெற்றிப்படங்களான அச்சமில்லை அச்சமில்லை, சிந்து பைரவி உள்ளிட்ட 56 திரைப்படங்களை தயாரித்துள்ளார்.

இவரால் உருவான நடிகர்கள்:தமிழ்த் திரையுலகில் இன்று முன்னணி நடிகராக விளங்கும் ரஜினியை 1975ல் அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் பாலச்சந்தர். அதே போல நடிகர் கமலஹாசன் ஏற்கனவே அறிமுகமாகியிருந்தாலும், பாலசந்தரின் அதிக படங்களில் நடித்துள்ளார். சிரஞ்சீவி, ராதாரவி, நாசர், பிரகாஷ்ராஜ், பூர்ணம் விஸ்வநாதன், சரத்பாபு, சார்லி, விவேக், எஸ்.பி.பி. என இவர் அறிமுகப்படுத்திய நடிகர்கள் ஏராளம். இன்னமும் இவரைக் கண்டாலே எழுந்து நின்றுவிடுவார் ரஜினி.

இவரால் வந்த நடிகைகள்: ஸ்ரீதேவி, ஜெயப்பிரதா, சரிதா, சுஜாதா, ஸ்ரீப்ரியா, ஜெயசுதா, ஜெயசித்ரா, கீதா, ஸ்ரீவித்யா, சுமித்ரா, ஜெயந்தி, மதுபாலா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தினார்.

புதுமுக நடிகர்கள் படம்:அவள் ஒரு தொடர்கதை போன்ற சில திரைப்படங்களை முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்தே இயக்கியிருந்தார். ஜெயலட்சுமி, ஸ்ரீபிரியா, விஜயகுமார், ஜெய்கணேஷ் ஆகியோர் அறிமுகமான இப்படம் ஒரு வெற்றிப்படமாகவும் அமைந்தது. பட்டினப்பிரவேசம் திரைப்படத்திலும், டெல்லி கணேஷ், சிவச்சந்திரன் போன்றோரை அறிமுகம் செய்தார். இதுவும் வெற்றிப்படமே.

பிறமொழி நடிகர்கள்:பிற மொழியிலிருந்தும் சிலரை தமிழில் அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு. அவர்களுள் சுஜாதா (அவள் ஒரு தொடர்கதை), ஷோபா (நிழல் நிஜமாகிறது), சரத்பாபு (நிழல் நிஜமாகிறது), சரிதா (தப்புத்தாளங்கள்), பிரகாஷ்ராஜ் (கல்கி) ஆகியோர் அடங்குவர்.

செஞ்சுரி:இதுவரை 101 படங்கள் இயக்கியுள்ளார். முதல்படம்: நீர்க்குமிழி; நூறாவது படம்: பார்த்தாலே பரவசம்; கடைசிப் படம்: பொய்.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு...:எஸ். வி.சேகர் (வறுமையின் நிறம் சிகப்பு), மவுலி (நிழல் நிஜமாகிறது) ஒய். ஜி.மகேந்திரன் (நவக்கிரகம்) மற்றும் காத்தாடி ராமமூர்த்தி (பட்டினப்பிரவேசம்) என, முன்னரே நாடக மேடையில் புகழ் பெற்றிருந்த சிலரை சினிமாவுக்கு அழைத்து வந்தார்.

நடிகராக அவதாரம்:கல்கி, பொய், ரெட்டைச்சுழி, நினைத்தது யாரோ, உத்தம வில்லன் போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார்.

ரஜினிக்கு பிடித்த படம்:பாலசந்தர் இயக்கிய படங்களில் அவள் ஒரு தொடர்கதை, அரங்கேற்றம் ஆகிய 2 படங்களும் ரஜினிக்கு பிடித்த படங்கள்.

ஆஸ்கர் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், பாலசந்தர் தயாரித்த ரோஜா படத்தின் மூலம் அறிமுகமானார்.

நிறைவேறாத கனவு:தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிகர்களாக திகழும் ரஜினி - கமல் இருவரும் இணைந்து கடைசியாக நடித்த படம், 1979ல் பாலசந்தர் இயக்கத்தில் வெளியான "நினைத்தாலே இனிக்கும்' திரைப்படம். 35 ஆண்டுகளுக்குப் பின் இருவரையும் வைத்து ஒரு திரைப்படம் இயக்குவதற்கு பாலச்சந்தர் திட்டமிட்டிருந்தார். அது நடக்கவில்லை என்பது தமிழ் ரசிகர்களுக்கு ஏமாற்றமே. பாலசந்தர், வெளிநாட்டில் படப்பிடிப்பை நடத்திய முதல் படமும் இதுவே.

யாருக்கு அதிக வாய்ப்பு:* தனது இயக்கத்தில் பாலசந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன், முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகைகளில் சவுகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
* சக இயக்குநர்கள் மற்றும் தனக்கு பின் வந்த இயக்குநர்கள் யாராக இருந்தாலும், சிறந்த படம் கொடுப்பவர்களை தயங்காமல் பாராட்டி விடுவார்.
* சிவாஜியை வைத்து பாலசந்தர் இயக்கிய ஒரே படம் எதிரொலி. 1971ல் இப்படம் வெளியானது.
* பாலச்சந்தர் இயக்கிய முதல் வண்ண திரைப்படம் நான்கு சுவர்கள். ரவிச்சந்திரன் மற்றும் ஜெய்சங்கர் நடித்து 1971ல் வெளியானது. இவர் இயக்கிய கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம் நிழல் நிஜமாகிறது.
* துவக்க காலத்தில் நாடக பாணியிலான திரைப்படங்களை (மேஜர் சந்திரகாந்த், நீர்க்குமிழி, தாமரை நெஞ்சம்) இயக்கிய பாலசந்தர், நகைச்சுவையில் தனது முத்திரையைப் பதித்த படங்கள், அனுபவி ராஜா அனுபவி, பூவா தலையா, பாமா விஜயம் போன்றவை. இதன் பின் இவர் இயக்கிய நகைச்சுவைப் படங்களான தில்லு முல்லு, பொய்க்கால் குதிரை சிறந்த வெற்றியை பெற்றன.
* நூறு படங்களுக்கும் மேலாக இயக்குனராகப் பணியாற்றி இருந்தாலும், எம்.ஜி.ஆரை பாலசந்தர் இயக்கியதே இல்லை. அவரது ஒரே ஒரு படத்துக்கு (தெய்வத்தாய்) வசனம் மட்டும் எழுதினார்.
* பாலசந்தரின் இயக்கத்தில் சிந்து பைரவி படத்தில் தனது பாத்திரத்திற்காக, சுஹாசினி இந்திய அளவில் சிறந்த நடிகை விருது பெற்றார். இளையராஜாவிற்கும் சிறந்த இசையமைப்பாளர் விருதை ஈட்டித் தந்த படம் இது.
* பாலசந்தரின் இயக்கத்தில் ஜெயலலிதா நடித்த ஒரே படம் மேஜர் சந்திரகாந்த்.
* ஒருமுறை "பெப்சி' தலைவராக இருந்திருக்கிறார்.

இந்தி படங்கள்:ஏக் துஜே கேலியே, ஜரா சி ஜிந்தகி, ஏக் நயீ பஹேலி போன்ற படங்களை இந்தியில் இயக்கியுள்ளார்.

நான்கு மொழி:தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியவர்.

டிவி தொடர்கள்:தூர்தர்ஷனில் 1990ல் வெளிவந்த இவரது "ரயில் சிநேகம்' இன்றளவும் பேசப்படும் தொடர். கையளவு மனசு, காசளவு நேசம், காமடி காலனி, ரகுவம்சம், அண்ணி போன்ற15க்கும் மேற்பட்ட "டிவி' சீரியல்களை இயக்கினார். பின்னாளில் வெளிவந்த மெகா சீரியல்களுக்கு இவர்தான் வழிகாட்டி.

8 தேசிய விருது:இவர் இயக்கிய மற்றும் தயாரித்த இரு கோடுகள், அபூர்வ ராகங்கள், தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை, ருத்ரவீணா, ஒரு வீடு ஒரு வாசல், ரோஜா ஆகிய படங்களுக்கு மொத்தம் 8 தேசிய விருதுகள் கிடைத்தன.

விருதுகள்:1968 - 1993 - தமிழக அரசு விருது
1973ல் - கலைமாமணி விருது
1974 - 1994 - 12 முறை பிலிம்பேர் விருது (சவுத்)
1976 - 1982 - நந்தி விருது
1981ல் - பிலிம்பேர் விருது
1987ல் - மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது
1992ல் - அறிஞர் அண்ணா விருது
2008 - 39வது சர்வதேச திரைப்படவிழாவில் "வாழ்நாள் சாதனையாளர் விருது'
2011ல் - தாதா சாகிப் பால்கே விருது.
கவுரவ டாக்டர் பட்டங்கள் - 3 பல்கலை

பாலசந்தர் இயக்கிய திரைப்படங்கள்:
1.நீர்க்குமிழி,
2.நாணல்,
3.மேஜர் சந்திரகாந்த்,
4.பாமா விஜயம்,
5.அனுபவி ராஜா அனுபவி,
6.எதிர் நீச்சல்,
7.தாமரை நெஞ்சம்,
8.பலே கொடலு (தெலுங்கு),
9.பூவா தலையா,
10.சட்டெகலப்பு சடேயா (தெலுங்கு),
11.இரு கோடுகள்,
12.பத்தாம்பசலி,
13.எதிரொலி,
14.நவகிரகம்,
15.காவிய தலைவி,
16.நான்கு சுவர்கள்,
17.நூற்றுக்கு நூறு,
18.பொம்மா பொருசு (தெலுங்கு),
19.புன்னகை,
20.கண்ணா நலமா,
21.வெள்ளி விழா,
22.அரங்கேற்றம்,
23.சொல்லத்தான் நினைக்கிறேன்,
24.அவள் ஒரு தொடர்கதை,
25.நான் அவனில்லை,
26.அபூர்வ ராகங்கள்,
27.மன்மதலீலை,
28.அந்துலாணி கதா (தெலுங்கு),
29.மூன்று முடிச்சு,
30.அவர்கள்,
31.பட்டின பரவசம்,
32.அயினா (இந்தி),
33.நிழல்நிஜமாகிறது,
34.மாரோ சரித்ரா (தெலுங்கு),
35.தப்பு தாளங்கள்,
36.தப்பிடா தலா (தெலுங்கு),
37.நினைத்தாலே இனிக்கும்,
38.அந்தமானிய அனுபவம் (தெலுங்கு),
39.நூல் வேலி,
40.குப்பெடு மனசு (தெலுங்கு),
41.இடி கதா காடு (மலையாளம்),
42.கழகன் (தெலுங்கு),
43.வறுமையின் நிறம் சிவப்பு,
44.அகாலி ராஜ்யம் (தெலுங்கு),
45.அடவாலு மீகு ஜோகர்லு (தெலுங்கு),
46.எங்க ஊர் கண்ணகி,
47.தொலிகோடி கூடிண்டி (தெலுங்கு),
48.தில்லு முல்லு,
49.தண்ணீர் தண்ணீர்,
50.எத் துஜே கே லியே (இந்தி),
51.47 நாட்கள்,
52.47 ரோஜூலு (தெலுங்கு),
53.அக்னி சாட்சி,
54.பெங்கியாழி அரலிடா ஹூவு (கன்னடம்),
55.பொய்கால் குதிரை,
56.ஜாரா சி ஜிங்காடி (இந்தி),
57.கோகிலம்மா (தெலுங்கு),
58.எக் நய் பகலி (இந்தி),
59.அச்சமில்லை அச்சமில்லை,
60.ஈரடு ரேகேகலு (கன்னடம்),
61.கல்யாண அகதிகள்,
62.சிந்து பைரவி,
63.முகிலே மலிகே (கன்னடம்),
64.சுந்தர ஸ்வாப்நகலு (கன்னடம்),
65.புன்னகை மன்னன்,
66.மனதில் உறுதி வேண்டும்,
67.ருத்ரவேணா (தெலுங்கு),
68.உன்னால் முடியும் தம்பி,
69.புது புது அர்த்தங்கள்,
70.ஒரு வீடு இரு வாசல்,
71.அழகன்,
72.வானமே இல்லை,
73.திலோன் கா ரிஷ்தா (இந்தி),
74ஜாதி மல்லி,
75.டூயட்,
76.கல்கி,
77.பார்த்தாலே பரவசம்,
78.பொய்.

'டிவி' சீரியல்கள்
1. ரயில் சிநேகம்,
2. மர்மதேசம்
3. காசளவு நேசம்,
4. பிரேமி
5. காதல் பகடை,
6. கையளவு மனசு
7. சஹானா,
8. சாந்தி நிலையம்
9. அண்ணி
10. ரமணி வெர்சஸ் ரமணி
11. எங்கிருந்தோ வந்தாள்
12. நிலவை பிடிப்போம்
13. ஜன்னல் 1
14. ஜன்னல் 2, உள்ளிட்ட பல சீரியல்கள்.

Advertisement


வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
santhosh - Lima,யூ.எஸ்.ஏ
25-டிச-201403:30:51 IST Report Abuse
santhosh டைரக்டர் பாலசந்தர் சார் அவர் படங்களின் மூலமாக பெண் விடுதலையை வலியுறுத்திய மீண்டும் ஒரு பாரதியார் அவதாரம். வாழ்க அவர் புகழ்.
Rate this:
Share this comment
Cancel
sridharan - chennai  ( Posted via: Dinamalar Windows App )
24-டிச-201402:09:03 IST Report Abuse
sridharan sir you are always great. RIP sir
Rate this:
Share this comment
Cancel
mohan - Tirunelveli  ( Posted via: Dinamalar Android App )
24-டிச-201400:47:44 IST Report Abuse
mohan இயக்குனர் சிகரத்திற்கு வைரமுத்து வரிகளால் ஒரு அஞ்சலி......... மோகன் ..... செட்டிநாடு .... ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்ச்ங்களால் அந்த இன்னுயிர் வாழ்க பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை கடல் தொடு ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதேன்ன ! மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க ! தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க ! பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க! போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க !
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X