நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்| Dinamalar

நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்

Added : டிச 24, 2014 | கருத்துகள் (1)
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் இரு கண்கள்: நாளை மூதறிஞர் ராஜாஜி நினைவு நாள்

இருபதாம் நூற்றாண்டில் அரசியலில் ஆட்சிப் பொறுப்பில் இருந்து கொண்டே, இலக்கியத்திற்கும் அருந்தொண்டாற்றிய ஓர் ஆற்றல்சால் ஆளுமை ராஜாஜி (1978-1972). அவர் 'மூதறிஞர்' 'ராஜரிஷி', 'சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்'. 94 ஆண்டுகள் 17 நாட்கள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்.


விவேகானந்தரின் வாழ்த்து:

சென்னை சட்டக் கல்லூரியில் ராஜாஜி பி.எல். படிக்கும் போது, மாணவர் விடுதி ஒன்றில் தங்கினார். அப்போது நடந்த ஓர் அரிய நிகழ்ச்சி: சுவாமி விவேகானந்தர் சென்னைக்கு வந்த போது, ராஜாஜி தங்கி இருந்த விடுதிக்கு வருகை தந்தார்; அவரது அறைக்கும் சென்றார். சுவாமி விவேகானந்தரை ராஜாஜி பணிவோடு வரவேற்றார். விவேகானந்தர் ராஜாஜி தங்கி இருந்த அறையைத் ஒருமுறை நோட்டம் விட்டார்; சுவரில் தொங்கிக் கொண்டிருந்த கண்ணபிரானின் படத்தினை ராஜாஜியிடம் சுட்டிக்காட்டி, "கண்ணனின் வண்ணம் ஏன் நீலமாக இருக்கிறது?” என்று கேட்டார். அதைக் கேட்டு ராஜாஜி திகைக்கவில்லை. உடனே பதில் சொன்னார்: "வானமும் கடலும் எல்லை அற்றவை. அவற்றின் நிறம் நீலம். கண்ணனும் எல்லையற்றவன். எங்கும், என்றும், எல்லாமாய் இருப்பவன். அதனால் தான் கண்ணனை நீல வண்ணனாக உருவாக்கி இருக்கிறார்கள்”. இந்த விளக்கத்தினைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் வியந்தார்; ராஜாஜியின் கூரிய அறிவைப் புகழ்ந்தார். "இந்த இளைஞர் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவார்” என்று வாழ்த்தி, அறையை விட்டு வெளியேறினார்.


சிறப்பான பணி:

ராஜாஜி சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் என்னும் பதவியில் வீற்றிருந்தவர்; தமிழகத்தின் முதல்வராகப் பணியாற்றிய பெருமையும் படைத்தவர்; மைய அரசில் அமைச்சராகவும் வங்காள மாநில ஆளுநராகவும் பணியாற்றியவர் எனினும், அவர் இப்பதவிகளை எல்லாம் பெரிதாகக் கருதவில்லை. மனித குலத்திற்கு இரு கண்களைப் போன்று விளங்கும் இதிகாசங்களான மகாபாரதம் இராமாயணம் குறித்து 'வியாசர் விருந்து' என்றும், 'சக்கரவர்த்தி திருமகன்' என்றும் இரு நூல்கள் எழுதி முடித்ததையே அவர் சிறப்பானதாகக் கருதினார். "இந்த இரண்டு நூல்களை நான் எழுதும் பாக்கியம் பெற்றேனே என்று என்னுடைய இந்த 90ம் ஆண்டை முடிக்கும் மார்கழியில் பெருமிதம் அடைகிறேன். பகவான் அருள் எதையும் எவனையும் செய்யச் செய்யும் நாட்டுக்கு நான் பல பணிகள் செய்ததாக நண்பர்கள் போற்றுவதுண்டு. அவற்றில் எல்லாம் 'வியாசர் விருந்தும்' 'சக்கரவர்த்தி திருமகனும்' எழுதி முடித்தது தான் மேலான பணி என்பது என் கருத்து. எல்லாவற்றையும் விட அதுவே என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியையும் அமைதியையும் தந்தது” என்னும் ராஜாஜியின் ஒப்புதல் வாக்குமூலம் இங்கே குறிப்பிடத்தக்கது. ராஜாஜியின் எழுத்துப் பணிகளிலே முக்கியமானது மொழிபெயர்ப்பு. வெறுமனே சொல்லுக்குச் சொல் என என மொழிபெயர்த்துச் செல்லாமல், பொருளுக்கு முதன்மை தந்து, தமிழ் மொழி வாசகர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் தங்குதடை இல்லாத நடையில் மொழிபெயர்த்துக் தருவது ராஜாஜியின் வழக்கம்.


சமயோசித பேச்சு சமயோசிதமாகப் பேசுவதிலும் ராஜாஜி வல்லவர். சுதந்திரப் போராட்டத்தின் போது சென்னை கடற்கரையில் ராஜாஜி பேசும் போது ஒருவன் மேடையை நோக்கி கற்களை வீசினான். கூட்டத்தில் சலசலப்பு. சிலர் கூட்டத்தை விட்டு எழுந்து செல்லவும் முயன்றனர். ராஜாஜி கூட்டத்தினரைப் பார்த்து, "எல்லோரும் அப்படியே அமைதியாக உட்காருங்கள். நம்மவருக்குச் சரியாகக் குறி பார்த்து ஆளை அடிக்கத் தெரியாது. அப்படி இருந்திருந்தால் வெள்ளைக்காரன் என்றைக்கோ இந்த நாட்டிற்குச் சுதந்திரம் கொடுத்திருப்பான்” என்றார். அதைக் கேட்டு அங்கே பலத்த சிரிப்பு ஒலி எழுந்தது, கூட்டத்தினர் அமைதி அடைந்தனர். ராஜாஜி தொடர்ந்து பேசினார்.


நகைச்சுவை உணர்வு:

தி.மு.க.,வில் பிளவு ஏற்பட்ட போது, ராஜாஜி எம்.ஜி.ஆரை ஆதரித்தார். ராஜாஜியிடம் வாழ்த்துப் பெறுவதற்காக எம்.ஜி.ஆர். சென்ற போது கால தாமதம் ஆயிற்று. அவர் ராஜாஜியிடம் "திரைப்பட ஷூட்டிங் காரணமாக தாமதமாயிற்று” என்று விளக்கினார். ராஜாஜி வேடிக்கையாக "ஷூட்டிங் முடிந்துதான் ரொம்ப நாளாயிற்றே!” என்று கூறினார். அவர் எம்.ஜி.ஆர். 1967 ல் சுடப்பட்டதைக் குறிப்பிட்டார். கூடியிருந்தோர் ராஜாஜியின் நகைச்சுவை உணர்வை ரசித்தனர். கவிஞர் நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் நூல்களைச் சின்ன அண்ணாமலை 'தமிழ்ப் பண்ணை' வாயிலாக வெளியிட்டுப் பெருமை சேர்த்தார். 1946ல் பெருமுயற்சி எடுத்துக் கவிஞருக்காக நிதி திரட்டினார். நிதி வழங்கும் நிகழ்ச்சியில் நிதியைக் கவிஞரிடம் வழங்கினார் ராஜாஜி. கவிஞர் எழுந்து ராஜாஜியை வணங்கி, நிதியைப் பெற்று, அருகில் இருந்த தம் மனைவியிடம் கொடுத்தார். அதைக் கவனித்த ராஜாஜி, "நிதி போய்ச் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்து விட்டது” என்றார். கூட்டத்தில் எழுந்த சிரிப்பொலியும் கர ஒலியும் மண்டபத்தையே அதிரச் செய்தன.


ஊழல் இடமாற்றம்?

ராஜாஜி முதல்வராக இருந்த போது அவரது நண்பர் ஒருவர், குறிப்பிட்ட மாவட்டத்தில் உள்ள ஒரு கலெக்டர் வாங்கும் லஞ்சத்தை எல்லாம் குறிப்பிட்டு அவரை மாற்ற வேண்டும் என்று ராஜாஜிக்கு கடிதம் எழுதினார். அந்த கலெக்டரை மாற்ற முடியாது என்று பதில் எழுதினார் ராஜாஜி. அதற்கான காரணத்தையும் தந்தார். "ஊழலையும் லஞ்சத்தையும் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்ற நான் விரும்பவில்லை. அந்த கலெக்டர் மீதுள்ள ஆதார பூர்வமான குற்றச்சாட்டுக்களை எழுதி அனுப்புங்கள். நாம் அவரை ஜெயிலுக்கு அனுப்புவோம்!” என்று எழுதியிருந்தார் ராஜாஜி.


தொகுதிக் கண்ணோட்டம்:

ஒரு சமயம் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் காங்கிரஸ்காரர்களும் சட்டப் பேரவையில் தத்தம் தொகுதிகளின் குறைகளை அடுக்கத் தொடங்கினர். அந்த விவாதங்களுக்குப் பதில் கூறும் பொழுது ராஜாஜி சிறிது சாமர்த்தியமாக, "அங்கத்தினர்கள் தொகுதிக் கண்ணோட்டம் கொண்டிருப்பது சரியல்ல” என்று பேசி சமாளிக்கப் பார்த்தார். அடுத்த நாள் ஜீவா பேச எழுந்த போது ராஜாஜிக்குச் சுடச்சுடப் பதில் கொடுத்தார். "இங்குள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தொகுதி உண்டு. தொகுதி மக்களின் வாக்குகளைப் பெற்று சட்ட சபைக்கு வந்தவர்கள் வாக்காளர்களின் குறைகளுக்காக இங்கு வாதிடத்தான் செய்வார்கள். ஆனால் முதலமைச்சருக்கு தொகுதி கிடையாது. ஒரு தொகுதியில் நின்று மக்களின் வாக்கைப் பெற்று சட்ட சபைக்கு வந்தவரல்லர் அவர் வந்த வழி வேறு” என்று ஜீவா கூறியதும் சபையில் எல்லோரும் சிரித்து விட்டார்கள். சிரிப்பு ஓய்ந்தவுடன், "தொகுதி இல்லாத அவருக்குத் தொகுதிக் கண்ணோட்டம் இருக்க முடியாது!” என்று பலத்த கர ஒலிகளுக்கிடையே ஜீவா கூறி முடித்தார். அதனை கை தட்டி ரசித்தவர்களில் ராஜாஜியும் ஒருவர்!

-பேராசிரியர் இரா.மோகன், எழுத்தாளர், பேச்சாளர் 94434 58286

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X