மாற்றத்துக்கு மக்கள் தயார் சபாக்கள் முன்வர வேண்டும்! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றத்துக்கு மக்கள் தயார் சபாக்கள் முன்வர வேண்டும்!

Added : டிச 28, 2014
Share

சிறு வயதில், என் அண்ணனுக்கும், தாய்மாமாவுக்கும் இசை ஆர்வம் இருந்ததால், அவர்களோடு பழகி, எனக்கும் இசை ஆர்வம் ஏற்பட்டது.என் அக்கா கணவர் மலேசியாவிலிருந்து வரும்போதெல்லாம், வீட்டில் இருப்போர் அனைவரும், பாடல் பாட வேண்டும் என, விரும்புவார். நான், கர்நாடக சங்கீத, சினிமா பாடல்களை பாடுவேன். அப்போது, எனக்கு வயது, 10. பன்னிரண்டு வயதில் முதல் முறையாக, பாலமுரளி கிருஷ்ணாவின் கச்சேரியை கேட்டேன். அது என் மனதில் பசுமரத்தாணி போல், ஆழப் பதிந்தது.மதுரையில், கர்நாடக இசைக் கலைஞர் மதுரை சோமு, தன்வீட்டுக்கு அருகில் உள்ள, ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் அடிக்கடி கச்சேரி நடத்துவார். அதில், புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் பாடுவர். வீணை பாலச்சந்தர், சிட்டிபாபு போன்றோரின் நிகழ்ச்சிகளை அங்குதான் கேட்டேன். அதேபோல், மதுரை ரயில்வே காலனியில், நவராத்திரி விழாக்களில், இசைக் கச்சேரி நடக்கும். அதில், பாம்பே சகோதரிகள் சரோஜா, லலிதா ஆகியோரின் பாட்டினை கேட்டேன். அவர்கள் பாடிய, கல்யாண வசந்த ராகம், எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அந்த ராகத்தில் சொக்கிப் போன நான், அதே ராகத்தில் சாக்சபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் அமைத்த, இசைத்தட்டை அடிக்கடி கேட்டேன்.அண்ணனின் தயவால், இசைத்தட்டுகளில், எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை சோமு, தியாகராஜர், எம்.எல்.வசந்தகுமாரி, வசந்த கோகிலம் ஆகியோரின் பாடல்களை விரும்பிப் கேட்பேன். குறிப்பாக, எம்.எஸ்.சுப்புலட்சுமியின், 'சகுந்தலை' படப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.எம்.டி.ராமநாதன், ஜேசுதாஸ், மதுரை மணி அய்யர் ஆகியோரின் பாடல்களை விரும்பிக் கேட்பேன். அவர்களில், மணி அய்யரின் ஆலாபனை பாடும் முறையில் தனித்துவம் இருப்பதை கண்டேன்.இப்போது பாடும் கலைஞர்களில், சஞ்சய் சுப்பிரமணியன், டி.எம்.கிருஷ்ணா, அருணா சாய்ராம் ஆகியோர் எனக்கு பிடித்தவர்களில், முக்கியமானோர். டி.எம்.கிருஷ்ணாவின், அமைப்பு முறையை மாற்றியமைக்கும் எண்ணம், பாராட்டுதலுக்குரியது. இன்றைய கர்நாடக இசை உலகில், தமிழ் பாடல்கள் உதிரிப்பாடல்களாக பாடப்படுகின்றன. அதற்கான வரலாற்றுப் பின்னணியையும் அறிய வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர், தெலுங்கு மன்னர்களே நம்மை ஆண்டனர். அந்த காலத்தில் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர். சியாமா சாஸ்திரி ஆகியோர், புகழ்பெற்றிருந்தனர். அதையே பின்பற்றுதல் முறையல்ல. முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசல கவிராயர் ஆகிய தமிழிசை மூவர் காலத்தால் முந்தியவர்கள். எனவே, தமிழ் பாடல்களை அதிகளவில் பாட வேண்டும். கல்கி, அண்ணாமலை செட்டியார் போன்றோர் அதற்கான பணிகளில் ஈடுபட்டனர். இன்றும் அதற்கான தேவை இருக்கிறது. கர்நாடக சங்கீத கீர்த்தனைகள் பெரும்பாலும், பக்தியை மையமாக கொண்டுள்ளன.பக்தி அவசியம் தான். அதற்காக அதையே முழுமுதற்பொருளாக கொள்ளக் கூடாது. பக்திப் பாடல்களில் இருந்து, கர்நாடக இசையை மீட்டெடுக்க வேண்டும். இன்றைய காலத்துக்கு ஏற்றாற்போல், அம்புஜம் கிருஷ்ணாவின் பாடல்கள் உள்ளன. அவற்றை முன்னெடுக்க வேண்டும்.மதுரை ராகப்ரியா சபாவும், கடவு அமைப்பும் இணைந்து நடத்தும் கச்சேரிகளில், தமிழ் பாடல்கள் அதிகளவில் பாடப்படுகின்றன.

குறிப்பாக, 'தமிழுக்கும் அமுதென்று பேர்', 'ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்', 'விட்டு விடுதலையாகி' ஆகிய பாடல்களின், இரண்டு வரிகளை, முக்கால் மணி நேரத்துக்கு கலைஞர்கள் பாடும் போது, மக்கள் பலத்த வரவேற்பு அளித்ததை பலமுறை பார்த்திருக்கிறேன். மக்கள் மாற்றத்துக்கு தயாராகவே உள்ளனர். சபாக்ககள் முன் வர வேண்டும்.
-சுரேஷ்குமார இந்திரஜித் -(கவிஞர்)


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X