கோடி கேட்ட கான்ட்ராக்டர்... ஆடிப்போன மாஜி!| Dinamalar

கோடி கேட்ட கான்ட்ராக்டர்... ஆடிப்போன 'மாஜி'!

Added : டிச 30, 2014
Share
''மித்து! பொங்கலுக்காக...வீட்டுல 'பெயின்டிங்' வேலை நடக்குது. சாரிடி...என்னால இன்னிக்கும் வர முடியாது. ஆனா, நியூஸ் கேக்காமலும் இருக்க முடியாது. கொஞ்சம் வாசிக்கிறியா?,'' என்று மொபைலில் கெஞ்சினாள் சித்ரா. ''அதுக்கென்ன...! நிறையாவே நியூஸ் இருக்கு. பட்...ஒன் கண்டிஷன். நியூஇயருக்கு எனக்கு 'ப்ளாக் ஃபாரஸ்ட்' கேக் வாங்கித்தரணும். ஓகே...!,'' என்று குரலை உயர்த்தினாள்
கோடி கேட்ட கான்ட்ராக்டர்... ஆடிப்போன 'மாஜி'!

''மித்து! பொங்கலுக்காக...வீட்டுல 'பெயின்டிங்' வேலை நடக்குது. சாரிடி...என்னால இன்னிக்கும் வர முடியாது. ஆனா, நியூஸ் கேக்காமலும் இருக்க முடியாது. கொஞ்சம் வாசிக்கிறியா?,'' என்று மொபைலில் கெஞ்சினாள் சித்ரா.


''அதுக்கென்ன...! நிறையாவே நியூஸ் இருக்கு. பட்...ஒன் கண்டிஷன். நியூஇயருக்கு எனக்கு 'ப்ளாக் ஃபாரஸ்ட்' கேக் வாங்கித்தரணும். ஓகே...!,'' என்று குரலை உயர்த்தினாள் மித்ரா.


''ரொம்பத்தான்... கார்ப்பரேஷன்ல தான், ஆளுக்கு ஆளு 'கேப்'ல கெடா வெட்றதா சொல்றாங்க. உனக்கு 'கேக்' வெட்டணுமா?,'' என்றாள் சித்ரா.


''என்னக்கா! உன்கிட்டயே முக்கியமான நியூஸ் இருக்கிறாப்புல தெரியுது. நீ முதல்ல சொல்லு!,'' என்றாள் மித்ரா.


''செம்மொழி மாநாடு முடிஞ்சு நாலரை வருஷமாச்சு. அதுல ஊழல் செஞ்சவுங்க மேல நடவடிக்கை எடுப்போம்னு சொல்லி, பதவிக்கு வந்தவுங்க, பதவியும் பறி போய், வீட்டுல உக்காந்திருக்காங்க. ஆனா, இப்போ கார்ப்பரேஷன்ல 'பவர்ஃபுல்'லா வலம் வர்ற கான்ட்ராக்டர் ஒருத்தரு, 'மாஜி' ஒருத்தரை கேசு போடுவோம்னு மெரட்டி, ரெண்டு கோடி கேட்ருக்காராம்,'' என்றாள் சித்ரா.


''என்னக்கா சொல்ற...ரெண்டு கோடியா?,'' என்று அலறினாள் மித்ரா.


''உனக்கே தலை சுத்துதா? அந்தப் பெரியவருக்கு எப்பிடி இருந்திருக்கும். இத்தனைக்கும் அவரு, போன பீரியட்ல கவுன்சில்ல 'டம்மி'யாத்தான் இருந்தாரு. சம்பாதிச்சவுங்கள்லாம் வேற. ஏதோ இவருக்கு சம்பளம் மாதிரி கொடுத்தாங்க. இப்போ, இவரு மேல கேசு போடுறதாச் சொல்லி மெரட்டி பணம் கேட்டதால, அவரு காய்ச்சல் வந்து காலனிக்குள்ள முடங்கிட்டாராம்,''


''அந்த கான்ட்ராக்டருக்கு, யாரு கொடுத்த தைரியம்?,''


''அதெல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம். இதுல நடந்த இன்னொரு கூத்தைக்கேளு. ரெண்டு கோடி ரூபா கேட்டதும் அலறுன அந்த பெரியவரு, 'ஏற்கனவே இதைச் சொல்லித்தான் பழைய ஆளு, 50 லட்ச ரூபா எங்கிட்ட வாங்கிட்டாரு. இப்போ, ரெண்டு கோடிக்கு எங்க போவேன்?'னு கேட்ருக்காரு,'' என்றாள் சித்ரா.


''சம்பாதிச்சவுங்க எல்லாம் ஜாலியா இருக்காங்க. எப்பவுமே 'டம்மி'யா இருக்கிறவுங்க தான் மாட்றாங்க,'' என்றாள் மித்ரா.


''இப்பவும் அதே நிலைமை தான். கார்ப்பரேஷன்ல மட்டுமில்லாம, ஆளும்கட்சியிலயும் 'டம்மி'யாயிட்டாராம் மன்னர் மகன். அவரை நம்புன ஆளுங்க ஒருத்தருக்கும், எந்தப் பதவியும் கிடைக்கலைன்னு ஒரே புலம்பலா இருக்கு!,'' என்றாள் சித்ரா.


''ஆளும்கட்சி தேர்தல்ல, பயங்கர புகைச்சலாயிருச்சுன்னு நானும் கேள்விப்பட்டேன். சிங்காநல்லூர்க்காரரும், கவுண்டம்பாளையத்துக்காரரும் பயங்கரமா கொந்தளிச்சிட்டாங்களாமே. ஆக்சுவலா, இறந்து போனவுங்க, சரியா செயல்படாதவங்களை மட்டும் மாத்திட்டு, மத்தவுங்களை அப்பிடியே தொடர விடுங்கன்னு தலைமை சொல்லிருக்கு,''


''அப்பிடின்னா, பல இடங்களுக்கு தேர்தலே இருக்காதுன்னு சொல்லு!,''


''அதான் தலைமையோட விருப்பம். கவுன்சிலர்க, சொசைட்டி பதவியில இருக்கிறவுங்களுக்கு கட்சிப்பதவி கிடையாதாம். ஆனா, இங்க பழைய ஆளுங்கள்ல தங்களுக்கு ஒத்துப்போற ஆளுகளைத் தவிர, மத்தவுங்களை எல்லாம் தூக்குறதுக்கு தீவிரமா வேலை நடக்குதாம். அதனால, பாதிக்கப்பட்டவுங்க, பல பேரு சேர்ந்து கார்டனுக்குப் போறதா முடிவு பண்ணிருக்காங்க,'' என்றாள் மித்ரா.


''அதுல இன்னொரு 'ஃபிராடு' வேலை நடக்குது...கேள்விப்பட்டியா?,'' என்றாள் சித்ரா.


''என்னாச்சு...கள்ள ஓட்டுப் போட ரெடி பண்ணிருக்காங்களா?,''


''இல்லை மித்து! 2013 ஆக.6க்கு முன்னால, உறுப்பினர் அடையாள அட்டை இருக்கிறவுங்க மட்டும் தான், இந்த தேர்தல்ல ஓட்டுப் போட முடியுமாம். புது அட்டையில, ஜெ., போட்டோவே மாறியிருக்குமாம். ஆனா, நிறையப்பேரு, பழைய அட்டை மாதிரியே ரெடி பண்ணி, ஓட்டுப் போட முயற்சி பண்றாங்கன்னு கட்சிக்குள்ளே கசமுசாவாயிட்டிருக்கு,''


''இதாவது பரவாயில்லைக்கா! டிஎம்கே உட்கட்சித் தேர்தல்ல நடந்த கூத்து, கோயம்புத்தூர்ல அந்தக் கட்சி கூடாரத்தையே கலைச்சிரும் போலிருக்கு,'' என்றாள் மித்ரா.


''அவுங்களும் கள்ள ஓட்டுப் போட்டுட்டாங்களா?,'' என்று குறுக்கிட்டாள் சித்ரா.


''அதெல்லாம் இல்லை...அங்க ரெண்டை நாலு மாவட்டமாப் பிரிச்சதுலயே பயங்கர குளறுபடி. அப்புறம் பார்த்தா, தேர்தல் நடத்த வந்தவுங்கள்லயிருந்து, ஓட்டுப் போட்டவுங்க வரைக்கும் எல்லாரையும் காசுலயே அடிச்சு தான், 3 மாவட்டம் ஜெயிச்சதா சொல்றாங்க. ஒரு ஓட்டுக்கு ஒரு லட்சமாம். பகுதிக்கழகத்துக்கு 10 லட்ச ரூபாயாம்!,'' என்றாள் மித்ரா.


''அடேங்கப்பா! அவ்ளோ வசதியானவுங்களா...அவுங்க?,'' என்றாள் சித்ரா.


''இதுக்கெல்லாம் சொந்தக்காசை எடுப்பாங்களா? இவுங்க மூணு பேருக்கும் 'ஸ்பான்சர்' பண்ணுனவரு, மணல் அதிபராம். அவரு சம்பாதிச்சது வேற ஆட்சியா இருந்தாலும், அடிப்படையில அவரு இந்த கட்சிக்காரராம். தன்னோட ஆளுங்க வரணும்னு, காசை வாரி இறைச்சிருக்காராம்!,'' என்றாள் மித்ரா.


''மித்து! புதுசா 4 மாவட்டச் செயலாளர்களும் ஒண்ணா பதவி ஏற்கலைன்னு தெரியும். ஆனா, இந்த நாலு பேருமே ஒரே யூனிபார்மா, ஒரு நிகழ்ச்சியைத் தவிர்த்துட்டாங்க. அது தெரியுமா? பதவிக்கு தேர்ந்தெடுத்த, ரெண்டு நாள்ல பெரியார் நினைவு நாள் வந்திருக்கு. அதுக்கு, அவரோட சிலைக்கு மாலை போட யாருமே போகலையாம். முத முதலா, அவரோட சிலைக்கா மாலை போடுறதுன்னு 'சென்டிமென்ட்' பாத்துதான், நாலு பேருமே வரலைன்னு மூத்த உடன் பிறப்புக, தலைமைக்கு தகவலைத் தட்டி விட்ருக்காங்க,'' என்றாள் சித்ரா.


''அன்னிக்கு எதுவும் கோவிலுக்குப் போயிருந்தாங்களோ என்னவோ?,'' என்று சிரித்தாள் மித்ரா.


''நீ கோவில்ன்னு சொன்னதும், ஞாபகம் வருதுடி... இருகூர்ல வரதராஜப் பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 8 ஏக்கர் இடத்தை, அங்க இருக்கிற ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு, 'சைட்' போட்டு வித்துட்டு இருக்காராம். அவரை யாரும் கேக்க முடியலையாம். காரணம், பெரிய இடத்து 'சப்போர்ட்'டாம்,'' என்றாள் சித்ரா.


''கவுன்சிலர்க மட்டுமா? சிட்டிக்குள்ள 'க்ரைம்' எல்லாம் கண்டு பிடிக்கிற முக்கியமான போலீஸ் ஆபீசரும், அவரோட மாமனாரும் தான், ஊருக்குள்ள கட்ட பஞ்சாயத்துல பட்டைய கெளப்புறாங்களாம். மூணு கோடி ரூபா காதல் ஜோடி மேட்டர்ல, அந்த மாமனாரே ரெண்டை அமுக்கிட்டதா ஒரு தகவல்,'' என்றாள் மித்ரா.


''முருகா...முருகா! வேற என்னவெல்லாம் பண்றாங்க?,''


''ரெண்டு பேரும் சேர்ந்து, சிட்டிக்குள்ள பஞ்சாயத்துக்குரிய இடத்தை எல்லாம் பார்த்து, பஞ்சாயத்தை முடிச்சு வச்சு, அநியாய ரேட்டுக்கு அதை வாங்கிருவாங்களாம். அப்புறம் செம்ம ரேட் வச்சு வித்துருவாங்களாம். திருச்சி ரோட்டுல, ஆக்கிரமிப்புல இருந்த ஒரு இடத்தை மீட்டுக் கொடுத்து, இடத்துக்காரருக்கு சென்ட் 4 லட்சம்னு கொடுத்துட்டு, இவுங்க 20 லட்ச ரூபாய்க்கு வித்துட்டாங்களாம். மொத்தம் 24 சென்ட் இடமாம்,''


''அப்பப்பா...! இப்பிடியெல்லாம் சம்பாதிச்சு என்ன பண்ணப் போறாங்களாம்,'' என்றாள் சித்ரா.


''அந்த போலீஸ் ஆபீசரு, 10 நாளு லீவு போட்டு, கத்தார் கிளம்பிட்டாராம். அங்க 'இன்வெஸ்ட்' பண்ணப் போயிருக்காரா? ஜாலி பண்ணப் போயிருக்காரான்னு தெரியலை,'' என்றாள் மித்ரா.


''இந்த போலீஸ் ஆபீசர் இப்பிடின்னா...ஏ.ஆர்.ல இருக்கிற, ஒரு போலீஸ் ஆபீசர், அங்க இருக்கிற 'வுமன் போலீஸ்'களை பாடப்படுத்துறாராம். அவருக்கு ஒத்துப் போகலைன்னா, குவாட்டர்சை காலி பண்ணிருவாராம். ஒரு லேடி போலீஸ், தற்கொலை முயற்சி பண்ணிட்டாங்க. அதுக்கு இவருதான் காரணம்னு அவரோட கணவரே, 'டிவி'யில பேட்டி கொடுத்துட்டாரு!,''


''அப்பவாவது அவர் மேல நடவடிக்கை எடுத்தாங்களா?,''


''இல்லியே...கணவர் பேட்டி கொடுத்ததுக்கு, அவுங்க மனைவிய 'சஸ்பெண்ட்' பண்ணிருக்காரு. அவுங்க ஐகோர்ட்ல போய், 'ஆர்டர்' வாங்கிட்டு வந்து, இப்ப வேலையில சேர்ந்திருக்காங்க. அவரை எங்க மாத்துனாலும், ரெண்டே மாசத்துல இங்க வந்துருவாராம். அந்தளவுக்கு அந்த 'ஏட்டன்' பெரிய 'இன்புளூயன்ஸ்' வச்சிருக்காராம். கொடுமைய பார்த்தியா?,'' என்றாள் சித்ரா.


''பார்க்கிறதைப் பத்தி ஒரு நியூஸ். அரசு பஸ் டிரைவர், கண்டக்டருக்கு ஆளு எடுக்கிறாங்கள்ல. அதுக்கு, கண் டெஸ்ட் பண்ணி, ஜி.எச்.ல 'சர்ட்டிபிகேட்' வாங்கணும். அதுக்கு ஒரு ஆளுக்கு 300லயிருந்து 600 வரைக்கும் வாங்குறாங்களாம். கண்ல கொஞ்சம் பிரச்னை இருந்தா, 800 ரூபாயாம்,'' என்றாள் மித்ரா.


''இவுங்க வாங்குற 800 ரூபா லஞ்சம், எத்தனை உசிரை வாங்கப் போகுதோ?,'' என்று வருத்தப்பட்ட சித்ரா, ''சரி சரி! நான் அப்புறமா பேசுறேன். நிறையா வேலை இருக்கு,'' என்று பேச்சைத் துண்டித்து, வேலையில் தீவிரமானாள்.Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X