பொது செய்தி

தமிழ்நாடு

நாவலை எதிர்த்து விளம்பரம் தேடுகிறதா இந்து அமைப்பு?

Updated : ஜன 03, 2015 | Added : ஜன 03, 2015 | கருத்துகள் (11)
Advertisement
நாவலை எதிர்த்து விளம்பரம் தேடுகிறதா இந்து அமைப்பு?

எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள மக்களையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அந்த நாவலுக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது: கடந்த, 1940 களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், 'மாதொரு பாகன்!' குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது தான் இந்நூல். தற்போது, நாடு முழுவதும், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன், இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி இல்லாத சூழலில், குழந்தை பேற்றுக்காக பல்வேறு முறைகளை கையாண்டுள்ளனர். அதுபோன்ற சமூக வழக்கத்தை தான், பல்வேறு ஆதாரங்களுடன், கற்பனை கதாபாத்திரங்கள் மூலம், நூலில் விவரித்துள்ளேன். இதற்காக, கற்பனையாக ஒரு ஊரையும் தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கிறேன். குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணை, ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு, அவ்வூர் மக்கள் அனுப்புகின்றனர். அந்த திருவிழாவில், தனக்கு பிடித்த ஒரு ஆடவனை தேர்ந்தெடுத்து, அந்த பெண் குழந்தைப் பேறு பெறுகிறாள். இது தான், 'மாதொரு பாகன்' கதை. இப்படி பிள்ளைப் பேறு பெற வேண்டும் என்பதற்காக, நாயகியை உறவுக்காரர்கள் திருவிழாவிற்கு அனுப்ப முடிவெடுக்க, நாயகன் மறுக்கிறான். இருந்தும் நாயகி, வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு பிள்ளை பேறு நிலையை எட்டுகிறார். இது பிடிக்காததால், நாயகன் தற்கொலைக்கு முயல்கிறான். 'பாண்டவர்கள், திருதிராஷ்டிரன் ஆகியோர் பிறந்ததும், இந்த முறையில் தான்' என, மகாபாரதம் சொல்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் கதை பின்னப்பட்டுள்ளது. கதையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் சான்று உள்ளதோடு, நாட்டார் வழக்கு ஆவணங்களும் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன், முக்தா சீனிவாசனின், 'அவன் அவள் அது' படமும், பாலச்சந்தரின், 'கல்கி' படமும் கூட, வாடகைத் தாயின் கதையை சித்தரிப்பவை தான். எந்த இடத்திலும், சமூகம் பயன்படுத்திய வழக்கத்தை, நியாயம் என்றோ தவறென்றோ, நான் சொல்லவில்லை. ஆனால், நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை தடை செய்யக் கோருவதும், என்னை கைது செய்ய வேண்டும் எனச் சொல்வதும், ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை அல்ல. கருத்துக்கு எதிர் கருத்து சொல்லலாம்; இல்லை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டு, போராட்டம் நடத்துவதும், நூலை எரிப்பதும் சரியான அணுகுமுறை இல்லை.
கண்ணன், காலச்சுவடு பதிப்பாளர்: இது, நாவலை மேலோட்டமாக கூட வாசித்திராதவர்கள் எழுப்பும் வெற்று குரல். குழந்தையில்லாத தம்பதியர் படும் துயரத்தை, அணுஅணுவாக இந்த நாவல் பதிவு செய்துள்ளது. அதை படிப்பவர்களின் உள்ளம் உருகிப் போகும். அப்படிப்பட்ட நாவலை எதிர்ப்பது, பிற்போக்குத்தனம்; கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை. ஒரு புத்தகத்தின் கருத்தோடு முரண்பாடு ஏற்பட்டது எனில், அதற்கு எதிராக ஒரு புத்தகத்தை பதிப்பிக்க வேண்டும். அதுவே, சரியான நடவடிக்கை. மாறாக, அதை எரிப்பதும், தீயிட்டு கொளுத்துவதும் கண்டிக்க வேண்டிய ஒன்று. இவ்வாறு, அவர் கூறினார்.

ஆ.இரா.வேங்கடாசலபதி, இலக்கிய திறனாய்வாளர்: அந்த நாவலில், நம் முன்னோரின் நம்பிக்கை, பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை எதிர்ப்பது, அவர்களின் நம்பிக்கையை எதிர்ப்பதற்கு சமம். புத்தகத்தை மிதித்தால், அதை தொட்டுக் கும்பிடுவது நமது மரபு. அதை செருப்பால் அடிப்பதும், தீயிட்டு கொளுத்துவதும், கலைமகளை அவமானப்படுத்துவதற்கு சமம். ஒரு புத்தகத்துக்கான எதிர்ப்பு, மற்றொரு புத்தகமாக இருக்க வேண்டுமே தவிர, அதை தடை செய்வது, சரியான செயலாகாது. இந்துப் பெண்களை இழிவுபடுத்துகிறது என, அமைப்புகள் சொல்லும், நாவலில் இடம் பெற்ற சம்பவம், தமிழகத்தில் நடந்தவை. அதை இல்லை என்று நாம் மறுக்க முடியாது. அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அந்த நாவலை வாசித்தவர்களில், 98 சதவீதம் பேர் இந்துக்களே. எங்களின் மனம் இதுவரை புண்படவில்லை.
சாருநிவேதிதா, எழுத்தாளர்: இது மிகப்பெரும் அத்துமீறல்; அடாவடித்தனம். தமிழ் இன்று வரை உயிர்ப்போடு இருப்பதற்கு, எழுத்தாளர்களே முக்கியக் காரணம். சினிமாவில் நம் பண்பாடு காணாமல் போய்க் கொண்டிருக்கிறது. நம் பெண்களை இழிவுபடுத்தும் செயல்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் ராமதாஸ் மட்டுமே, அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். சினிமா நிகழ்த்தும் கலாசார வன்முறையை தட்டிக் கேட்க துப்பில்லாதோர், இலக்கியவாதியை எதிர்ப்பது, அராஜகம்; அக்கிரமம். இது, நல்லதொரு வழிமுறையில்லை. கருத்து ரீதியாக எதிர்க்க வேண்டிய ஒன்றை, கருத்து ரீதியாகவே எதிர்க்க வேண்டும்.
நாஞ்சில் நாடன், எழுத்தாளர்: எந்த எழுத்தாளனும் பொறுப்பில்லாமல் எழுதுவதில்லை. ஒவ்வொருவருக்கும் சமூக அக்கறை உண்டு. இலக்கியம் குறித்து அறியாத, அதை முழுமையாக புரிந்து கொள்ளவே முடியாதோர், அதை எதிர்ப்பது, மூர்க்கத்தனமானது. இந்த நாவலை எதிர்க்கும் எவருக்கும், இலக்கியத்தோடு தொடர்பு இல்லை. இந்த நிலையில், அந்த நாவலை அவர்கள் புரிந்து கொண்ட விதம் குறித்து கேள்வி எழுகிறது. பெருமாள் முருகன், அந்த மண்ணில் வாழ்ந்து வருபவர். தமிழ் இலக்கியத்துக்கு பெரும் கொடைகளை வழங்கி இருக்கிறார். அந்த மண்ணின் மக்களின் வாழ்வை, ஈரத்தை, காயத்தை பதிவு செய்ததில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. அதற்காக அங்குள்ள அமைப்புகள், அவருக்கு விழா எடுத்து பாராட்டி இருக்க வேண்டும். மாறாக, எதிர்ப்பது என்பது, அந்த மண்ணுக்கு அவர்கள் செய்யும் துரோகம்.
மனுஷ்யபுத்திரன், கவிஞர்: எழுத்தாளர்களுக்கு எதிராக, மத அடிப்படைவாதிகள் செயல்படுவது, புதியதல்ல; எச்.ஜி.ரசூலின் கட்டுரைக்காக, முஸ்லிம் அடிப்படைவாதிகள், அவரை ஊர் விலக்கம் செய்தனர். அதேபோல், 'ஆழிசூழ் உலகு' நாவலுக்காக, கிறிஸ்துவ மத அடிப்படைவாதிகள், ஜோ.டி.குரூஸை ஊர் விலக்கம் செய்தனர். இது கண்டித்தக்கது. இந்த செயலை வளர விடக்கூடாது. அதேநேரத் தில், இதுபோன்ற பிரச்னைகளை செய்வதெல்லாம் உள்ளூரில் இருக்கும் சிறு அமைப்புகள் என்பதை மறந்து விடக்கூடாது. இவர்கள், ஊடக விளம்பரத்துக்காக இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதை சட்ட ரீதியாக எதிர்க்க வேண்டும். இல்லையெனில், நாளை விளம்பரத்துக்காகவும் சில பதிப்பாளர்கள் இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்க முடியாது.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன்: 'மாதொரு பாகன்' நாவலின், தமிழ், ஆங்கில ஆக்கங்களை முழுமையாகப் படித்து விட்டேன். மண்வாசனையுடன் கதை சொல்லப்பட்டிருக்கிறது. அந்த கதையின் கருப் பொருளில், மாற்றுக் கருத்து உடையவர்கள், ஜனநாயக ரீதியில்தான் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்; மிரட்டல் விடுக்கக்கூடாது. ஒரு கலை படைப்பினை வெளிவர விடாமல் தடுப்பதும், மிரட்டுவதும் பாசிச போக்கு. இதை, முற்போக்கு சிந்தனை கொண்ட அனைத்து எழுத்தாளர்களும் கண்டிக்க வேண்டும். இல்லாவிடில், இதே நிலை, அனைவருக்கும் ஒரு நாள் ஏற்படும்.
தமிழ்ச் செல்வன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்க தலைவர்: நாவல், 2010ல் வெளியானது. அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளனர். ரத்தன் டாடா அறக்கட்டளை நிதி உதவியுடன், பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, போதிய ஆவணங்களுடன், இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது.

இத்தனை ஆண்டுகளுக்குப் பின், நாவலை எதிர்ப்பதற்கான காரணம் புரியவில்லை. இந்து அமைப்புகள், சுய அரசியலுக்காக, இந்த பிரச்னையை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது. படைப்புகளையும், படைப்பாளிகளையும் எதிர்ப்பது, கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகும்.
ஜெயமோகன், எழுத்தாளர்: இந்த நாவலுக்கு எதிராக போராடுபவர்கள், இந்துக்கள் அல்ல; ஜாதி அமைப்பினர். ஜாதியை தாண்டி, அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டிய சூழ்நிலையில், ஜாதியை முன் வைத்து, இந்து கோஷத்தை எழுப்புவோர், கண்டிக்கப்பட வேண்டியவர்கள். இந்து மதம், அறிவார்ந்த மதம். அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட மதம். அதை, இவர்கள் போன்ற, தெருச் சண்டியர்களால் வழிநடத்த விடுவது, தவறு. இரண்டாயிரம் ஆண்டுகளாக, இந்து மதம், தன்னை விமர்சிக்க அனைத்து விதமான உரிமைகளையும் வழங்கி இருக்கிறது. பண்பட்ட இந்து மதத்தினர், இதை ஒருபோதும் எதிர்க்க மாட்டார்கள். ராஜாராம் மோகன்ராய், காந்தி, அம்பேத்கர் போன்ற இந்துக்கள் மூலமாகவே, இந்து மதம் தன்னை, தனது குறைகளை சரி செய்து கொண்டு நடைபோடுகிறது. இன்று, அனைவரையும் இந்துக்களாக ஒருங்கிணைக்க வேண்டிய காலத்தில், இதுபோன்ற ஜாதி அமைப்புகளின் வழியாக, இந்துக்களின் குரலை ஒலிக்க விடுவது தவறானது.
திருமாவளவன், விடுதலை சிறுத்தைகள்: கொங்கு மண்டலத்தில் மிகவும் அன்போடு இல்லற வாழ்வை நடத்தும் ஒரு குடும்பத்தைப் பற்றிய நாவல், மாதொரு பாகன். அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பண்பாட்டு வழக்கத்தை காரணமாகக் காட்டி, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது அதைத் தடை செய்ய வேண்டும் என்று இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. அந்த நாவலின் படிகளைத் தீயிட்டுக் கொளுத்தியும், அதை எழுதியவரையும் பதிப்பித்தவரையும் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் பா.ஜ.க.,- - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், வேறு சில மதவாத அமைப்புகளும் செயல்பட்டு, மக்கள் மத்தியில் பதற்றத்தை விதைத்து வருவது தேவையில்லாதது. இந்துத்துவ அமைப்புகள், எழுத்துரிமையை, கருத்துரிமையை பறிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது.


இப்போது எதிர்ப்பது ஏன்?

அர்ஜுன் சம்பத், இந்து மக்கள் கட்சி தலைவர்: கம்யூனிச, திராவிட இயக்க சிந்தனை உடையவர்கள், இந்து மதத்தை தாக்குவதையும், எழுதுவதையுமே வேலையாக கொண்டுள்ளனர். மற்ற மதங்களை பற்றி அவர்கள் வாய் திறப்பதே இல்லை. 'விஸ்வரூபம், கத்தி, டாவின்சி கோட்' உள்ளிட்ட திரைப்படங்களுக்கு, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்தபோது, இவர்களின் குரல் ஏன் ஒலிக்கவில்லை? அவற்றை படைத்தவர்களும் கலைஞர்கள் தானே! திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவில் நடப்பதாக, ஒரு அபத்தமான புனைகதையை, 'மாதொரு பாகன்' நாவலில், பெருமாள் முருகன் கூறுகிறார். இதனால், தேர் திருவிழாவிற்கு வரும் பெண்கள் மட்டுமின்றி, அந்த திருவிழாவை நடத்தும் அமைப்புகளும் மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இந்த படைப்பு வெளிவந்து, நான்கு ஆண்டுகளைக் கடந்த பின், இப்போது, அதை மிகச் சிறந்த படைப்பாக கொண்டாடுகின்றனர். அதனால் தான், இப்போது, அதை கண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதை கண்டிக்கும் விதமாக, கண்டன கூட்டங்கள் நடத்தவும், புகார் பெறவும் போலீசார் அனுமதி அளிக்கவில்லை. அதனால், அப்பகுதி மக்கள், தங்களின், மனநிலையை வெளிப்படுத்தும் விதமாக, அந்த நூலுக்கு, தீயிட்டு இருக்கின்றனர். அதை, பயங்கரவாதம் என, மற்றவர்கள் கூவுவது தான் வேடிக்கையாக இருக்கிறது. எங்களின் எதிர்ப்பை, ஜனநாயக ரீதியில், தொடர்ந்து முன்வைப்போம்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A. Sivakumar. - Chennai,இந்தியா
03-ஜன-201519:34:24 IST Report Abuse
A. Sivakumar. பா.ஜ.க தொடர்ந்து பெற்று வரும் வெற்றிகளால், இந்துத்துவா அமைப்புக்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக கொலஸ்டிரால் ஏறி வருவதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்று...
Rate this:
Share this comment
Cancel
ramesh - coimbatore,இந்தியா
03-ஜன-201517:50:53 IST Report Abuse
ramesh தமிழ்நாடு ஒரு புண்ணிய பூமி. 34000க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. தமிழ்நாட்டின் பண்டைய கால தொன்மையான அற்புதமான வரலாற்றை கோவில்களே அடையாளம் காட்டியுள்ளன. ராமநாதபுரம், ராமேஸ்வரம், சிவகங்கை, தென்காசி, சிவகாசி, மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஸ்ரீரங்கம், ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீவில்லிபுதூர், இன்னும் திரு என்ற தெய்வப் பெயருடன் துவங்கும் எண்ணிலடங்கா ஊர்களின் பெயர்கள் இவற்றை நிரூபிக்கின்றன. இப்படி ஹிந்து சமயத்தை இரண்டற கலந்துள்ள தமிழகத்தில் மக்களுடைய நம்பிக்கையை புண்படுமாறு எழுதி மக்கள் ஒன்றும் சொல்ல மாட்டார்கள், அப்படி கேட்டால் கருத்து சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என்று சொல்லி விடலாம் என்று சில எழுத்தாளர்கள் நினைக்கிறார்கள். மக்களின் தெய்வ நம்பிக்கையை கொச்சைபடுத்தகூடாது. இவர்கள் எப்படி தங்கள் எழுத்தின் மீது நம்பிக்கையை வைக்கிறார்களோ அது போல மக்கள் தெய்வத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-ஜன-201517:40:05 IST Report Abuse
Kasimani Baskaran இதை விட்டுவிட்டு ஊழல் மன்னர்களை தோலுரிக்கும் வழிவகைகளை கண்டுபிடிக்கலாம்... அவ்வாறு எந்த அமைப்பு செய்தாலும் அது தமிழனுக்கு செய்யும் பெரிய தொண்டு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X