எப்பேர்ப்பட்ட மனிதர்களும் தன் வீட்டில் ஒரு இறப்பு ஏற்படும் போது சோகத்தாலும் அதிர்ச்சியாலும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் திகைத்துப்போய்விடுவார்கள்.
அந்த நேரம் நண்பர்களும் உறவினர்களும் கூட தமக்கு தெரிந்ததை சொல்வார்களே தவிர சரியான விஷயத்தை,விவரத்தை சொல்லமாட்டார்கள்.
அந்த அந்திம நேரத்தை பயன்படுத்தி அடுத்தவர் வேதனையில் பணம் பார்க்கும் கூட்டமும் அதிகம்.
கொட்டகை போடுவது பார்பரை வரவழைப்பது பம்பைக்காரருக்கு சொல்லிவிடுவது சேர் ஏற்பாடு செய்வது ப்ரீசர்(இறந்தவர் உடலை பாதுகாத்து வைக்கும் பெட்டி) கொண்டுவருவது என்று இறந்த வீட்டில் செய்யவேண்டிய வேலைகள் எத்தனை எத்தனையோ இருக்கிறது.இது அத்தனைக்கும் தனித்தனியாக 'காசு' பார்ப்பவர்கள்தான் அதிகம் பேர் இருக்கிறார்கள், காசு கொடுத்தாலும் சரியாக செய்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்பது இன்னும் வேதனையான விஷயம்.
இறப்பு நடந்த வீட்டில் நடக்கும் இந்த நீண்ட நாள் வேதனைக்கு விடியல் ஏற்படுத்தி கொடுத்து கொண்டு இருப்பவர்தான் கோவை விளாங்குறிச்சியைச் சேர்ந்த செல்வராஜ்.
கோவை விளாங்குறிச்சியை சுற்றி உள்ள பத்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் யார் வீட்டில் இறப்பு ஏற்பட்டாலும் ஒரு போன் செய்தால் போதும் உடனே இறந்தவர் வீட்டிற்கு ப்ரீசர் போய்விடும், சிறிது நேரத்தில் பந்தல் கட்டப்பட்டு சேர் போடப்பட்டு ட்யூப் லைட் மாட்டப்பட்டு என்று அடுத்தடுத்து முதல் கட்ட வேலைகள் பார்க்கப்படும்.
பின்னர் இறந்தவர் உடலை ஈமக்கிரியை செய்யப்போகும் மயானத்திற்கு சொல்லிவிடுவது தேவைப்பட்டால் மருத்துவ சான்றிதழ் பெற்றுதருவது சடங்கு செய்ய தேவைப்படும் பம்பைக்காரர் முதல் டோபி வரை ஏற்பாடு செய்து தரப்படும்.
இவ்வளவும் செய்துதரும் மாற்றுத்திறனாளியான செல்வராஜ் இறந்தவர் வீட்டிற்கு போய் துக்கம் விசாரித்து ஆறுதல் சொல்வதுடன் கடைசியில் மயானம் வரை போய் தனது அஞ்சலியையும் செலுத்திவருகிறார்.
இந்த இறுதி காரியங்களுக்கு எப்படிப்பார்த்தாலும் குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும், செலவு ஒரு பக்கம் என்பதைவிட யாரை எங்கே தேடுவது என்ற சிரமம் அதிகம்.
எந்தவித செலவும் வைக்காமல் எவ்வித சிரமமும் தராமல் முற்றிலும் இலவசமாக இந்த சேவையை செய்து தருகிறார் செல்வராஜ்.
யார் இந்த செல்வராஜ்.
முடங்கிகிடந்தால் சிலந்தியும் நம்மை சிறைப்பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் விலகி வழிகொடுக்கும்
என்ற கொள்கைக்கு சொந்தக்காரரான இவர் பார்க்காத தொழில் இல்லை செய்யாத வேலை இல்லை.
அரையனாவுக்கு(மூன்று காசு) சைக்கிளுக்கு காற்று அடித்து வயிற்றுப்பாட்டை பார்த்துக்கொள்ள ஆரம்பித்தவர் உறக்கம் மறந்து ஊன் துறந்து கடுமையான உழைத்ததன் காரணமாக இன்று நல்ல நிலையில் இருக்கிறார்.
நடுவில் நடந்த விபத்தில் முதுகுதண்டில் அடிபட்டதன் காரணமாக கழுத்துக்கு கீழ் செயல்பட முடியாத நிலைக்கு உள்ளானார்.எங்கேயாவது போவது என்றால் சேரில்வைத்துதான் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும்.ஆறுதல் சொல்லவந்தவர்கள் இவரால் பிரயோசனம் இல்லை இனி வாழ்நாள் முழுவதும் ஒரு ஒரமாக வைத்து கஞ்சி ஊத்துங்க என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டனர்.இந்த வார்த்தையை கேட்டு மனதால் வீறு கொண்டு எழுந்த செல்வராஜ் அதன் பிறகு சம்பாதித்ததும் சாதித்ததும் நிறைய.இடது கையை மட்டும் உபயோகித்து போன் பேசமுடியும் தனது உடலில் நடக்கும் இந்த ஒரு நடவடிக்கையை வைத்தே தொழில் செய்து முன்னேறி தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் வேண்டிய அளவு சம்பாதித்தார்.
இனி சம்பாதித்தது போதும் இந்த சமுதாயத்திற்கு ஏதாவது உபயோகமாக செய்து கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்த போத அக்கம் பக்கத்தில் இறப்பு நடந்த வீடுகளில் உள்ளவர்கள் செய்வதறியாத நிலையுடன் இருப்பதை பல இடங்களில் பார்த்தார்.அவர்கள் தேவை என்ன என்பதை உணர்ந்து அதை நாமே செய்தால் என்ன என்று கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் யோசித்து செய்ய ஆரம்பித்த சேவைதான் இது.
தனது தந்தை கிருஷ்ணசாமி நினைவு அறக்கட்டளை சார்பாக செய்யப்படும் இந்த சேவைக்கு தேவைப்படும் டிரைவர்கள் முதல் பார்பர் வரை இவரே மாத சம்பளம் கொடுத்து வீட்டில் வைத்திருக்கிறார். இது தவிர ப்ரீசர் நாற்காலி பந்தல் வேன் என்று வீட்டையே பாதி கிட்டங்கியாக்கியும் வைத்துள்ளார்.
ஜாதி மதம் மொழி இனம் உயர்ந்தவர் தாழ்ந்தவர் ஏழை பணக்காரர் என்ற எந்த வித்தியாசமும் இல்லாமல் அனைவருக்கும் இந்த சேவை உண்டு. முற்றிலும் இலவசம் என்றாலும் இறந்த வீட்டை சேர்ந்தவர்கள் அவர்களாகவே முன்வந்து கொடுக்கும் பணத்தை அறக்கட்டளை சார்பாக வாங்கிக்கொள்கிறார் அது நூறு ரூபாயாக இருந்தாலும் சரி பத்தாயிரம் ரூபாயாக இருந்தாலும் சரி.
எனது முழு நேரமும் இப்போது இதுதான் என் வேலை. இந்த சேவைக்கு மணைவி சாவித்ரி மற்றும் மகன் கவுதம் ஆகியோர் பெரிதும் உதவியாக இருக்கின்றனர்.என் சக்திக்கு உள்பட்டு பத்து கிலோமீட்டர் சுற்று வட்டாரத்திற்குள் இதை செய்து தருகிறேன் ஆனால் இன்னும் பல கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த சேவை போய்ச்சேரவேண்டும். கோவை என்று மட்டும் இல்லை இந்த தொண்டு எல்லா ஊர்களிலும் கிடைக்கவேண்டும் என்பதே என் கனவு என்று சொல்லி நெகிழ்கிறார்.
கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ளவர் நீங்கள் என்றால் இந்த இருபத்து நான்கு மணி நேர இலவச சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்:7373726363,7373756363.தன்னம்பிக்கையின் சின்னம் சமூக சிந்தனையாளர் உழைப்பின் இலக்கணம் மாற்றுத்திறனாளிகளின் முன்னோடியான செல்வராஜ் செய்யும் இந்த தொண்டு சிறக்க வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய எண்:9994499933.
- எல்.முருகராஜ்