பொது செய்தி

தமிழ்நாடு

ஒரு நதியைத் தேடி...! காலத்தால் மறக்கப்பட்ட கவுசிகா..!எக்ஸ். செல்வக்குமார் மற்றும் ஏ.சிவகுருநாதன்

Updated : ஜன 05, 2015 | Added : ஜன 05, 2015 | கருத்துகள் (15)
Advertisement
ஒரு நதியைத் தேடி...! காலத்தால் மறக்கப்பட்ட கவுசிகா..!எக்ஸ். செல்வக்குமார் மற்றும் ஏ.சிவகுருநாதன்

நூறு கோடி ரூபாய்க்கு ஒரு பாலம் கட்டலாம்; ஆயிரம் கோடி ரூபாய் இருந்தால், பறக்கும் ரயில் விடலாம்; பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு ஒரு துணை நகரம் உருவாக்கலாம்; பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு தங்க நாற்கரச் சாலைகள் அமைக்கலாம்; எத்தனை கோடி ரூபாய் இருந்தால்...ஒரு நதியை உருவாக்க முடியுமென்று கேட்டால், யாரிடம் இருக்கிறது பதில்?

வளர்ச்சி என்ற பெயரில், காடுகளையும், கழனிகளையும்...கூடவே நதிகளையும் நாசப்படுத்தி விட்டோம்; நீர் நிலைகளை நிர்மூலமாக்கி விட்டோம். இன்னும் லேசாய் உயிர்ப்போடு இருக்கிற நதிகளிலும் சாயக்கழிவுகளையும், ஆலைக்கழிவுகளையும், சாக்கடையையும் கலந்து, கொஞ்சம் கொஞ்சமாக சமாதி கட்டிக் கொண்டிருக்கிறோம்.நம்மிடம் இருந்ததையெல்லாம் அழித்து விட்டு, தண்ணீருக்காக அண்டை மாநிலங்களோடு, சதாகாலமும் சட்டச் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். இன்றைக்கே இப்படி என்றால், எதிர்கால சந்ததியின் நிலையை நினைத்தே பார்க்க முடியவில்லை.

இயற்கையின் மிச்சமாய் இருக்கிற நதிகளையாவது காப்பாற்றியே தீர வேண்டிய கட்டாயம் எழுந்திருக்கிறது. தேசிய நதிகளை இணைப்பது, என்றுமே எட்டாக்கனியாய்த் தெரிகிறது. தமிழகத்துக்குள் பாய்கிற நதிகளையாவது இணைக்கலாம் என்று, அரசுக்கு ஆலோசனை உதித்து, 8 ஆண்டுகள் முடிந்து விட்டன. முதற்கட்டமாக, ஆண்டுதோறும் 13 டி.எம்.சி., நீர் கடலில் கலப்பதைக் குறைக்கும் வகையில், தாமிரபரணி-கருமேனியாறு-நம்பியாறு நதிகளை இணைக்க, தமிழக அரசு கடந்த 2006ல் முடிவெடுத்து, அதற்கான பணிகளையும் துவக்கியது. ஆனால், 6 கட்டப்பணிகளில் 3 கட்டப்பணிகள் கூட முழுதாக முடியவில்லை. இந்நிலையில் தான், காவிரியின் கிளை ஆறுகளான பவானியையும், நொய்யலையும் இணைக்க வேண்டுமென்ற சங்க நாதம், கொங்கு மண்ணிலிருந்து ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. அவிநாசி-அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் தான், இந்த கோரிக்கைக்கான அடிநாதம்.

இதுவரையிலும் எந்த வகையிலும் கவனம் பெறாத கவுசிகா நதியை, இத்திட்டத்தில் சேர்ப்பதன் மூலமாக, இவ்விரு நதிகளையும் இணைக்க முடியுமென்பது தான், அரசுக்கு விவசாயிகள் முன் வைத்துள்ள யோசனை. கவுசிகா நதியா...காதிலேயே கேட்டிராத பெயராக இருக்கிறதே... நிஜமாகவே, அப்படி ஒரு நதி இருந்ததா? இன்னும் உயிர்ப்போடு இருக்கிறதா? இந்த கேள்விகளுடன், அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டுச் சங்கத்தின் நிர்வாகிகளைச் சந்தித்தோம். அவர்கள் வைத்திருந்த வரைபடத்தை வைத்து, அந்த நதி வழித்தடத்தில் பயணம் செய்ய முடிவெடுத்தோம். சங்கத்தின் செயலாளர் செல்வராஜ், தலைவர் குமாரசாமி, துணைச் செயலாளர் மகாலிங்கம், கோதபாளையம் பாலு உள்ளிட்ட பல்வேறு விவசாயிகளும், இந்த பயணத்தில் நம்மோடு இணைந்தனர். மேற்குத் தொடர்ச்சி மலையில், பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திலுள்ள குருடி மலையில் துவங்கிய நமது பயணம், வாகனம் மற்றும் நடைப் பயணமாக தொடர்ந்து, சுல்தான்பேட்டை அருகில், நொய்யலில் கவுசிகா நதி சங்கமிக்குமிடத்தில் முடிவடைந்தது.


நதிமூலம் எது?

குருடிமலையில், சில ஓடைகள் மற்றும் சிற்றருவிகள் சேர்ந்து, கவுசிகா நதி உற்பத்தியாகிறது. மேட்டுப்பாளையம் ரோட்டிலிருந்து தெற்குப்பாளையம் வழியாகச் சென்று, பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்துக்குட்பட்ட குருடிமலைப் பகுதிக்குச் சென்றால், இந்த நதியின் மூலத்தைப் பார்க்க முடியும். அங்கிருந்து நூறடி ஆழமுள்ள பள்ளத்தில், பெரிய ஓடையாக மாறும் கவுசிகா நதி, அப்பகுதி மக்களால் குருடி மலையாறு என்றே அழைக்கப்படுகிறது. வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், ஆளை மூழ்கடிக்கும் அளவுக்கு, அந்த பள்ளத்தில் தண்ணீர் வருமென்பதை, வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் உறுதி செய்கின்றனர்.

இந்த ஓடைப் பள்ளமானது, தெற்குப்பாளையம் அருகே, மேட்டுப்பாளையம் சாலையைக் கடந்து, இடிகரை, அத்திப்பாளையம், கள்ளிப்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளின் வழியாக, கோவில்பாளையத்தில் சத்தி சாலையையும், பச்சாபாளையம், வாகராயம்பாளையம் வழியாக, தெக்கலூரில் அவிநாசி சாலையையும் கடக்கிறது. பின்பு, புதுப்பாளையம், வஞ்சிப்பாளையத்தைக் கடந்து, சுல்தான்பேட்டை அருகில், நொய்யல் ஆற்றில் சங்கமிக்கிறது.எத்தனையோ நதிகள், நம் வரைபடங்களில் இருக்கின்றன. இந்த நதியும் அப்படித்தானா? இல்லாவிட்டால்...மழைக்காலத்தில், வெள்ளம் பாய்ந்து, இந்த மண்ணிலுள்ள குளங்களையும், மக்களின் மனங்களையும் ஈரப்படுத்துகிற நதியா?


இதுதான் குருடிமலையாறு!

கவுசிகா நதி உற்பத்தியாகும், குருடி மலைக்கு அருகில், தண்ணீர்ப்பந்தல் என்ற இடத்தில் வசித்து வரும் விவசாயி மருதாசலம், 72, கூறுகையில், ''நான் இங்கே தான் 40 ஆண்டுகளாக, விவசாய வேலை செய்து கொண்டிருக்கிறேன். இந்த மலையை குருடி மலை என்பார்கள்; சிலர் குரு ரிஷி மலை என்றும் சொல்வார்கள். அந்த மலையிலுள்ள அருவிகளிலிருந்து பாயும் தண்ணீர் தான், இந்த ஓடையில் பாயும். அதனால் தான், இதை குருடிமலையாறு என்று சொல்லுவோம். மழைக்காலத்தில், நன்றாகவே வெள்ளம் பாய்ந்தோடும். நான் வந்த காலத்தில் இருந்ததை விட, இப்போது இந்த பள்ளம் மேலும் 10 அடிக்கு ஆழமாயிருக்கிறது. இதற்கு கவுசிகா நதி என்றொரு பெயர் இருப்பது பற்றி எனக்குத் தெரியாது,'' என்றார்.


ஒரு ஆறு... பல பேரு!

குருடி மலைக்கு குரு ரிஷி மலை, சிரஞ்சீவி மலை என்றும் பெயர்கள் இருக்கின்றன. தடாகம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள இந்த மலையைப் பற்றி, வரலாற்று ஆய்வாளர் சி.ஆர்.இளங்கோவன் சொல்லும் தகவல்கள், ஆச்சரியமூட்டுபவை. இந்த மலைச்சிகரம், குறடு போல முப்பட்டகமாகக் காணப்பட்டதால், குறடு மலை என்று அழைக்கப்பட்டு, குருடி மலை என்று மாறியதாகச் சொல்கிறது இவரது 'பெரியநாயக்கன் பாளையம்- அன்றும் இன்றும்' நூல். இந்த குருடி மலைத்தொடரில், லேம்ப்டன் பீக் (5030 அடி), நாடு கண்டான் போலி (5297 அடி), மேல்முடி (5385 அடி) என 3 சிகரங்கள் உள்ளன. அருணகிரிநாதரின் திருப்புகழில், குருடி மலை என்ற சொல், இந்த மலையைக் குறிப்பதாகவுள்ளது. துடிசைக் கிழார் எழுதியுள்ள துடிசை (துடியலூர்) புராணத்தில், இந்த மலை 'குருவ விருடி மலை' என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையிலிருந்து உற்பத்தியாகும் இந்த நதியின் கரையில், கவுசிக முனிவர் என்பவர் குடில் அமைத்து வாழ்ந்து வந்ததாகவும், அவரது பெயரில் தான் இந்த பெயர் வந்ததாகவும் ஒரு பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது.கவுசிகன் என்ற குறுநில மன்னர், இப்பகுதியை ஆண்டு வந்ததால், அவரது பெயரில் இந்த நதி அழைக்கப்படுவதாகவும் இன்னொரு கதையும் கூறப்படுகிறது. மலையோர விவசாயிகளால், குருடிமலையாறு என்றழைக்கப்படும் இந்த நதியை, வழியோர கிராமங்கள் பலவற்றிலும் வண்ணத்தங்கரை ஓடை என்று அழைக்கின்றனர். இதற்கு தன்னாசிப்பள்ளம் என்ற பெயரும் இருக்கிறது. ஒரு காலத்தில், சந்நியாசி இந்த ஆற்றின் கரையில் வாழ்ந்ததால், சந்நியாசிப்பள்ளம் என்று அழைக்கப்பட்டு, நாளடைவில் தன்னாசிப் பள்ளமாக மாறியதாகவும் ஒரு தகவல் கூறுகிறது.

யாரந்த லேம்ப்டன்?நம்மூர் மலைக்கு ஆங்கிலேயப் பெயரா என்று ஆச்சரியம் எழுகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், இந்தியா முழுவதும் உள்ள இயற்கை அமைப்புகளை அறிவியல் முறையில் (திரிகோணமிதி) அளவிட, அன்றைய ஆட்சியாளர்களுக்கு தூண்டுகோலாக இருந்த வில்லியம் லேம்ப்டன் பெயரை, அக்காலத்திலேயே இந்த சிகரத்துக்கு வைத்து, கவுரவித்துள்ளனர் ஆங்கிலேயர்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
annaidhesam - karur,இந்தியா
06-ஜன-201505:31:11 IST Report Abuse
annaidhesam அருமையான கட்டுரை..இதுபோன்ற சமூக விழிப்புணர்வு மேம்படுத்தும் செய்திகளை வரவேற்கிறோம் ..கோவை மக்கள் இந்த ஆற்றை மீட்பார்கள் ... மாநில அரசிற்கு ஆற்றில் ஓடும் நீரை விட மணலே முக்கியம் ...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
06-ஜன-201502:47:39 IST Report Abuse
மதுரை விருமாண்டி Watershed, gulley, creek, stream, rapid, river என்று படிப்படியாக நதியின் கருவில் இருந்து கடைசி பயணம் வரை அது தவழும் இடங்களுக்கு பெயர் உண்டு. அமெரிக்காவில் நீரின் வழித் தடத்தையும், அதன் கருவையும் சுத்தமாகப் பேணி, எதுவும் கலக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். இதில் பெரும் பங்கு வகிப்பது நகர மேம்பாட்டுத் திட்டங்களே. மலை அடிவாரம் முதல் வானுயர வளர்ந்த நகரம் வரை, கட்டும் வீடுகள், குடியிருப்புகள் அனைத்தும், இந்த நீர் தடங்களுக்கு எந்த வித இடைஞ்சலும் தராமல் இருப்பதை கண்டால், இந்தியன் என்று சொல்லிக் கொள்ளவே அருவருப்பாக இருக்கும்..10 லட்சம் பேர் வாழும் நகரில் கூட, சாக்கடைத் த்ண்ணீர் ஒரு சொட்டும் இந்த நீர்த் தடங்களில் நுழையாது. பொறியாளர்களும், கண்காணிப்பாளர்களும் இயற்கையை மதித்தும், சட்டத்தை மதித்தும் நிம்மதியாக இருக்கிறார்கள். நம் ஊரில், பச்சை சாக்கடையை குளங்களில், ஏரிகள், ஆறுகளில் விட்டும், நீர் வழித் தடங்களை அபகரித்தும் பன்றிகள் போல வாழ்கிறோம்..
Rate this:
Share this comment
Cancel
raveendran - Coimbatore ,இந்தியா
05-ஜன-201523:14:01 IST Report Abuse
raveendran கோவை மக்களே அறியாத மறக்கப்பட்ட நதியை, உலகுக்கு தெரிவித்த தின மலருக்கும், செல்வ குமார் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும் . கௌசிகா நதி ஓடிய வழியில் ஒரு பாத யாத்திரை க்கு ஏற்பாடு செய்தால் ராக் அமைப்பு அனைத்து கோவை சுற்றுச்சூழல் அமைப்புகளையும் ஒருங்கிணைத்து அழைத்து வரத் தயாராக இருக்கிறது. ராக் அமைப்பு செய்லர் ரவீந்திரன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X