என் பார்வை :ஹா...ஹா... என சிரியுங்கள் 'ஹார்ட் அட்டாக்' வராது...!| Dinamalar

என் பார்வை :ஹா...ஹா... என சிரியுங்கள் 'ஹார்ட் அட்டாக்' வராது...!

Added : ஜன 05, 2015
என் பார்வை :ஹா...ஹா... என சிரியுங்கள் 'ஹார்ட் அட்டாக்' வராது...!

நகைச்சுவையே மருந்து. நாம் சிரிக்கும் பொழுதெல்லாம் வயிறு மற்றும் நுரையீரலை பிரிக்கும் உதரவிதானம் சுருங்கி, நுரையீரலில் உள்ள காற்றை வெளியே தள்ளுகிறது. இதனால் சுவாசம் எளிதாகிறது. 'ஹா...ஹா...ஹா' அல்லது 'ஹோ...ஹோ...ஹோ' என சிரிக்கும் நமது சிரிப்பில் தன்னிச்சையாக சிரித்தல், உணர்ச்சிவசப்பட்டு சிரித்தல், கட்டாயத்தினால் சிரித்தல் மற்றும் பேய்த்தனமாக சிரித்தல் என நான்கு வகை உண்டு. இதில் எந்த வகையிலும் சேராமல், எதற்கும் சிரிக்காமல் இருக்கும் உம்மனாமூஞ்சிகளுக்கு 'அப்போனோக்லியா' என்ற வியாதி இருக்கலாம்.
பாதாம் கொட்டை பாட்டி : சில சிடுமூஞ்சிகள் படும்பாடு நமக்கு மிகவும் சிரிப்பை ஏற்படுத்தும். ஒரு கோபக்கார பஸ் கண்டக்டர் எல்லோரிடமும் 'வள்...வள்...' என விழுவார். ஆனால் ஒரு பாட்டிக்காக வாடிக்கையாக பஸ்சை ஸ்பெஷலாக நிறுத்தி, அவரை பஸ்சில் ஏற்றிக் கொள்வது வழக்கம். இதற்கு கைமாறாக அந்தப்பாட்டியும் தினமும் நாலைந்து பாதாம் கொட்டைகளை கொடுப்பார். ஒரு நாள் திடீரென அந்த கண்டக்டர் பாட்டியிடம், ''ஏன் பாட்டி... பாதாம் கொட்டையை நீ சாப்பிட வேண்டியது தானே?,'' என கேட்க பாட்டி, ''எனக்கு பல் இல்லையே!,'' என கூறினார். கண்டக்டருக்கோ அடுத்த நாள் மறுபடியும் ஒரு சந்தேகம்.
''உனக்கு தான் பல் இல்லையே பாட்டி. ஏன் தினமும் பாதாம் கொட்டையை வாங்குற?,'' என கேட்க பாட்டியோ கூலா... ''வெளிநாட்டிலிருந்து என்னோட பேரன் எனக்கு பிடிக்குமுன்னு சாக்லேட் அனுப்புறான். அதை சப்பி சாப்பிட்டுட்டு... உள்ளே இருக்குற கொட்டையை தானே உனக்கு தினமும் தரேன்,'' என்றார். கண்டக்டரோ வாந்தியெடுக்க ஆரம்பிக்க... பஸ்சில் எல்லோரும் சிரித்தனர். சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் வாய் விட்டு சிரிக்க வேண்டும். அப்போது தான் ஹார்மோன்கள் சமநிலை அடையும். கோபத்தை துாண்டும் 'அட்ரீனல்லின்' கட்டுப்படும்.
குழந்தைகளின் செய்கைகள் கூட சில நேரங்களில் நம்மை சிரிக்க வைத்துவிடுகின்றன. ஒரு தாத்தா தன் வீட்டு வாசலில் ஒரு நாள் உட்கார்ந்திருந்த பொழுது தெருவில் தனது பேரனின் வாத்தியார் வருவதைப் பார்த்தார். உடனே தெரு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பேரனை பார்த்து, ''டேய் வீட்டுக்குள்ளே ஓடுடா... உங்க வாத்தியார் வந்துட்டு இருக்காரு. லீவு போட்டுட்டு விளையாடறத பார்த்தா திட்டுவாரு,'' என சத்தம் போட பேரனோ, ''தாத்தா நீ முதல்ல வீட்டுக்குள்ள போ... நீ செத்துப் போனதா சொல்லித்தான் நான் லீவு போட்டுருக்கேன்,'' எனக்கூற சுற்றியிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.
மன அழுத்தம் நீக்கும் மருந்து :'சிக்மாய்டு' என்ற உளவியல் வல்லுனர் வாய்விட்டு சிரிப்பதால் மனக்கஷ்டங்கள் மறைந்து போய்விடுவதாக ஆய்வு செய்து குறிப்பிட்டுள்ளார். சிரிக்கத் தெரியாதவர்கள் சிக்கலான சூழ்நிலைகளில் முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள். அழுது கொண்டே பிறக்கும் குழந்தை கூட பிறந்த நான்கு மாதத்திலேயே சிரிக்கக் கற்றுக் கொள்கின்றது. சிரிக்காமல் இருப்பவர்களுக்கு பல நோய்கள் உண்டாகின்றன.
இதய நோயாளிகளில் 60 சதவீதம் பேர் வாய்விட்டு சிரிக்கத் தெரியாதவர்கள் தான். அடிக்கடி சிரிப்பதால் ரத்தத்தில் 'கார்டிசால்' 'எபிநெப்ரின்' மற்றும் 'என்டார்பின்கள்' உற்பத்தியாகி மன அழுத்தம் நீங்குகிறது. உடலில் 'டி-செல்கள்' அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமிகளுக்கான 'ஆன்டிபாடிகளும்' போதுமான அளவு உற்பத்தி ஆகின்றன. மன அமைதியும், நிம்மதியான ஆழ்ந்த துாக்கமும் உண்டாகிறது.
குடும்பத்தில் கூட ஒருவருக்கொருவர் அன்பாக இருந்தால் தான் சிரித்து கொண்டிருக்க முடியும். மாமியார் இறந்து போனதற்கு துக்கம் விசாரிக்க ஒரு பெண் போனாள். ''எப்படி இறந்து போனார்?,'' என கேட்க அந்த மருமகளோ, ''கிணற்றில் மாமியார் விழுந்து இறந்து விட்டார்,'' என்றார். இந்த பெண்ணோ, ''எங்க வீட்டிலும் தான் கிணறும் இருக்கு, மாமியாரும் இருக்கு, ஆனா ஒன்னும் நடக்கமாட்டேங்குதே!,'' என அலுத்து கொண்டாள். ''அதுவா எப்படி நடக்கும் நாம தான் தள்ளிவிடணும்,'' என்றாள்
மருமகள் நகைச்சுவையாக... இவ்வாறு வீட்டிலேயே ஒருவருக்கொருவர் கோபத்துடன் இருந்தால் சிரிப்பு எப்படி இருக்கும். குடும்ப உறுப்பினர்களுக்குள் அடிக்கடி நகைச்சுவையாக பேசிக்கொண்டால் தான் அன்பு மேம்படும்.
இடைவெளி கூடாது :தகவல் தொழில்நுட்பம் அதிகமாகிவிட்ட சூழ்நிலையில் ஒருவருடன் ஒருவர் நெருக்கமாக பேசி கொள்வதில்லை. இதனால் சிரிப்பு என்ற சந்தோஷத்தை இழந்து கொண்டிருக்கிறோம். நான் வெளியூர் சென்றபோது, ஒரு ஓட்டலில் என் எதிரில் உட்கார்ந்திருந்தவரை பார்த்தேன். அவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. அதனால் அவரை பார்த்து லேசாக சிரித்து விட்டு, ''நீங்கள் பேஸ் புக்கில் இருக்கிறீர்களா?,'' என கேட்டேன். இல்லையென தலையாட்டினார். ''அப்ப 'டிவி' சீரியல்ல எதுவும் நடிக்கிறீர்களா? எங்கோ உங்களை பார்த்த மாதிரி இருக்கு,'' என்றேன்.
அவரோ கோபமாகி ''நாசமாப்போச்சு! ஒரு வருஷமா உங்க எதிர் வீட்ல தான் குடியிருக்கேன்னு,'' கூற எனக்கு வெட்கமாகி விட்டது. ஏனென்றால் நாம் இப்பொழுது ஒருவருக்கொருவர் நேராக பேசிக்கொள்வதில்லை. இதனால் நம்முடைய நகைச்சுவை உணர்வு குறைந்து கொண்டே இருக்கிறது.
நோய் வராது :கண்ணீர் விடும் அளவுக்கு சிரிப்பவர்களுக்கு ஆஸ்துமா நோய் வராது. நாம் சிரிக்கும் பொழுது சுரக்கும் 'என்டார்பின்' உடல் வலியை நீக்கி, உற்சாகமான மனநிலையை உண்டாக்குகிறது. மூளையின் 'ஹைப்போதலமாஸ்' நைட்ரிக் ஆக்சைடை அதிகமாக உற்பத்தி செய்கிறது. இதனால் இருதயத்தின் ரத்தக்குழாய்களில் உள்ள 'என்டோ' திசுக்கள் விரிவடைகின்றன. ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ரத்தம் உறைதலும் தடுக்கப்படுகிறது. சிரிக்கும் பொழுது மூளையில் உள்ள ஒரு லட்சம் மைல் நீளமுள்ள ரத்தக்குழாய்களுக்கும் போதுமான அளவு ஆக்சிஜன் கிடைக்கிறது. கன்னத்தின் தசைகள், இருதய தசைகள் இதனால் ரத்த சுற்றோட்டத்தில் எளிதாக பராமரிக்கப்படுகிறது.
கருத்துக்களையும், சம்பவங்களையும் ஒருவருக்கொருவர் குழுவாக இருந்து பரிமாறிக் கொள்வோம். அப்பொழுது தான் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒருவருக்கொருவர் சிரித்து, சிரித்து பேசி கொண்டாலே பகைமை உணர்ச்சியை நீக்கி விடலாம். பல நோய்கள் வராமல் தடுக்கலாம். நகைச்சுவை உணர்வுள்ளவர்களுக்கு ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், இருதய நோய், பக்கவாதம் ஆகியன வரும் வாய்ப்புகள் குறைவு.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,சித்த மருத்துவர், மதுரை.984217567We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X