"பிச்சைப் புகினும் கற்கை நன்றே' என உலகுக்கு தமிழகம் உரைத்த காலம் மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருக்கிறது. பள்ளி மாணவர்களுக்கு மதுவின் சுவை தெரிகிறது. 'எது செய்தேனும் மது குடி' எனப் புதுமொழியை அவர்கள் உருவாக்கிவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
சுதந்திரத்துக்கு முன் கூட கள்ளுக்கடைகள் இல்லாமல் இல்லை. ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமான இடத்தில் இயங்கி வந்தன. குடிப்பதுதெரிந்தால் கேவலம் என்ற உணர்வு குடிப்பவர்களுக்கு இருந்தது. அன்று குடியினால் பல குடும்பங்கள் அழிந்தன. இந்த சமூக சீர்கேட்டை ஒழித்திட ராஜாஜி போன்று சமூக நலத்தில் அக்கறையுள்ள தலைவர்கள் மதுவிலக்கை கொண்டு வந்தனர்.
முதல் மதுவிலக்கு :
ராஜாஜி முதன் முதலில் சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்திப் பார்த்து, அது வெற்றிகரமாக நடக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டபின் சென்னை மாகாணம் முழுவதற்கும் அமல்படுத்தினார். கள்ளுக்கடைகளை ஒழித்ததனால் ஏற்பட்ட அரசு கஜானாவின் வருமான இழப்பை, விற்பனை வரி மூலம் ஈடுகட்டினார். அரசாங்கத்துக்கு வருமானம் என்பதைவிட, இந்த நாட்டு ஏழை எளிய மக்களின் வாழ்வைப் பெரிதாக எண்ணிய தலைவர்கள் இருந்த காலம் அது.அண்ணாதுரை முதலமைச்சரான போது, கள், சாராயக் கடைகளைத் திறப்பதன் மூலம் அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்கும் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டது. அவர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் மறைவுக்குப் பின் மீண்டும் கள், சாராயக் கடைகளைத் திறந்து விடும் ஏற்பாடுகள் நடந்தன.வயதாகி, உடல் நிலை முடியாமல் வீட்டில் இருந்த ராஜாஜி இதையறிந்து பதறிப்போனார். அன்றைய முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் சென்று அவரது கரங்களைப் பிடித்துக் கொண்டு, "ஒரு தலைமுறை மக்கள் மறந்து போய்விட்ட இந்த பாழாய்ப்போன குடியை மீண்டும் கொண்டு வரவேண்டாம், ஏழை எளியவர்களை அழிக்கும் இந்தக் கொடுமையால் பெண்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுவர். இதனால் வரும் வருவாயை ஈடுகட்ட புதிய திட்டங்களைக் கண்டு பிடிப்பதே சரியானது" என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால் அவர் வார்த்தைக்கு மதிப்பளிக்கப்படவில்லை; மது மீண்டும் நுழைந்தது.
மது மூலம் வருமானம் :
மது மூலம் வருவாய், எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த காலத்தில் 183 கோடி ரூபாயாக இருந்தது. 201213 ம் ஆண்டிலோ 21,680 கோடி ரூபாய் அரசுக்கு வருமானமாகக் கிடைத்தது.முதலில் தயங்கி தயங்கி குடிக்க ஆரம்பித்து ஒரு கட்டத்தில் குடிப்பதே சமூக அந்தஸ்து என்ற நிலை உருவானது. 1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26. ஆனால் 2007ல் அது 17 ஆகக் குறைந்தது. 'அசோசெம்' என்கிற வர்த்தகக் கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், '1926 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம் 60 சதவீதம் அதிகரித்துள்ளது' என தெரிவிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 'டீன் ஏஜ்' பிரிவினரின் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது. தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்கள் குடிக்கு ஆட்பட்டவர்கள். இதில் வளர் இளம் பருவத்தினரையும் சேர்த்தால் 2 கோடியை எட்டும்.
பாதிப்பு :
மதுக்கடைக்குப் போக பணம் தராத தாயைக் கொன்ற மகன் குறித்தும், பெற்ற மகளை விபச்சாரச் சந்தையில் விற்ற தகப்பனைப் பற்றியும், போதையில் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்ட நண்பர்கள் குறித்தும் செய்திகளை காண்கிறோம். இப்போது குடி இல்லாத நிகழ்ச்சிகளை பார்க்க முடியவில்லை. முன்னெப்போதும் இல்லாத அளவில் தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் போன்ற அனைத்துப் பாதகங்களுக்கும் குடியே அடிப்படைக் காரணம்.குடும்ப வன்முறை அதிகரிப்பதற்குக் காரணமும் குடிப்பழக்கமே. பிறந்தநாள், திருமணநாள் என்றில்லாமல் மரண நிகழ்வுகளில் கூட குடிக்கு இடமிருக்கிறது.மது குடிப்பதால் உடல், உள்ளம் பாதிக்கும், ஆண்மைக் குறைவு, மூளை பாதிப்பு, நரம்புத் தளர்ச்சி போன்ற பல நோய்கள் ஏற்படலாம் என்றெல்லாம் விளக்கி புள்ளி விபரங்களை அறிவியலாளர்கள் அள்ளித் தருகிறார்கள். ஆனால் அவற்றைக் காது கொடுத்தும் கேளாமல், புதிய குடிமகன்கள் நாள்தோறும் உருவாகிறார்கள்.
சாலை விபத்துக்கள் :
சாலை விபத்துகள் அதிகம் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் திகழ்கிறது. 'மரணங்களுக்கு 60 சதவீதம் காரணம் குடிபோதையே' என்கிறது ஒரு புள்ளி விபரம். 'இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் விபத்துக்களால் உயிரிழக்கின்றனர். விபத்துக்கு முக்கிய காரணமாக அமைவது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதுதான். சென்னையில் நடந்துள்ள 5 ஆயிரம் விபத்துக்களில் 621 பேர் உயிரிழக்க மதுவே காரணம்' என்கிறார் நீதிபதி ஒருவர். இவ்வளவு பிரச்னைகள் இருந்தும் இந்த மதுக்கூடங்களை அரசே முன்னின்று நடத்துவது ஏன்? மதுவிலக்கை ஏன் மீண்டும் நடைமுறைப் படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினால் இதற்காக சொல்லப்படும் காரணங்கள் கள்ளச்சாராய சாவுகள் அதிகரிக்கும் என்பது தான். குடித்துப் பழகியவர்கள் அண்டையில் உள்ள மாநிலங்களுக்குச் சென்று குடிப்பதால் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் அயல் மாநிலங்களுக்குச் சென்றுவிடுகிறது என்பது இன்னொரு கருத்து.அரசு கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது.தமிழகத்துக்கு வரவேண்டிய வருமானம் அண்டை மாநிலங்களுக்கு சென்று விடுகிறது என்கிற வாதமும் பொருளற்றது. எல்லோரும் அண்டை மாநிலங்களுக்கு தினசரி போய் குடிப்பதில்லை. குறைந்தபட்சம் மாணவர்கள், இளைய தலைமுறையினர் குடிப்பழக்கமாவது கட்டுக்குள் வரும்.
இலவசத்திற்கு தேவை :
மதுவிலக்கை எதிர்ப்போர் வைக்கும் மற்றொரு வாதம், 'அரசு கோடிக்கணக்கில் இலவசங்களை வழங்குகிறது. மதுக் கடைகளால் வரும் வருமானம் பொருளாதார ரீதியில் அரசின் கஜனாவுக்குத் தேவை' என்று சொல்லலாம்.'கண்ணிரண்டும் விற்று சித்திரம் வாங்கினால் உலகம் கை கொட்டி சிரியாதோ?' என்று பாரதியார் பாடிய வரிகளைத்தான் இந்த வாதம் நினைவூட்டுகிறது. குடிக்கு அடிமையாகிவிட்ட ஒரு ஏழைத் தொழிலாளி ஒவ்வொருநாளும் ஒரு மது பாட்டில் வாங்கிக் குடித்தால் ஐந்து ஆண்டுகளில் அரசு நடத்தும் டாஸ்மார்க் கடைகளில் செலவு செய்து இழக்கும் தொகை, ஒரு லட்சத்து 26 ரூபாய் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஆனால் அரசிடம் அவருடைய குடும்பம் இலவசமாகப் பெறும் பொருட்களின் மொத்த மதிப்பு 16 ஆயிரம் ரூபாய் மட்டுமே.
முழு மதுவிலக்கு சாத்தியமா?
மக்கள்தொகையில் கணிசமான பகுதி குடிகாரர்களாக மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் தமிழக அரசு உடனடியாக பூரண மது விலக்கைக் கொண்டு வரவேண்டும் என்றும் நாம் சொல்லவில்லை. படிப்படியான மதுவிலக்கு நடவடிக்கையில் அனைவரும் இணைந்து ஈடுபடுதல் அவசியம்.மதுக் கடைகள் எண்ணிக்கையைக் குறைக்கவேண்டும். மாலையில் மட்டும் திறக்கலாம். அப்படி செய்தால் குறைந்தபட்சம் மாணவர்கள் இந்த போதையில் இருந்து தப்புவதற்கு வாய்ப்புண்டு. கேரளா போல், ஒவ்வொரு மாதத்தின் முதல்நாள் மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடைகளை மூடவேண்டும். 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுவிற்பதில்லை என்ற உத்தரவை கடுமையாக்க வேண்டும். படிப்படியாக ஐந்து வருடங்களில் மதுபானக் கடைகள் மூடுவதற்கு அரசு திட்டமிடவேண்டும். மதுவிலக்கை ஆதரித்து பல்வேறு இயக்கங்கள் போராடி வருகின்றன. இவை இணைந்து செயல்பட்டால் அது மக்கள் இயக்கமாக உருவெடுக்கும். மதுவை புறக்கணிப்போம்; மகிழ்ச்சியான தமிழகம் உருவாக்குவோம்!
சி.ஜெ.ராஜன்
தலைவர்,
சமம் குடிமக்கள் இயக்கம்,
99943 68521