பொது செய்தி

தமிழ்நாடு

ஆறு இருக்கு, 'போர்' இருக்கு...ஆனால் நீர் இருக்கா? எக்ஸ். செல்வக்குமார்- மற்றும் ஏ.சிவகுருநாதன்

Updated : ஜன 06, 2015 | Added : ஜன 05, 2015 | கருத்துகள் (10)
Advertisement
ஆறு இருக்கு, 'போர்' இருக்கு...ஆனால் நீர் இருக்கா? எக்ஸ். செல்வக்குமார்- மற்றும் ஏ.சிவகுருநாதன்

காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்று, நொய்யல்; நொய்யலின் கிளை ஆறு தான், இந்த கவுசிகா நதி. நொய்யல் துவங்கி, காவிரி வரையிலும் எல்லா நதிகளும், சாயக்கழிவுகள், சாக்கடைகளால் மாசுபட்டு வரும் நிலையில், கவுசிகா நதி இன்று வரையிலும், கழிவுகள் கலக்காமல், தூய்மையான நதியாக இருக்கிறது என்பது இந்த நூற்றாண்டின் ஆகப்பெரிய அதிசயங்களில் ஒன்று.

நொய்யலில் கலப்பதற்கு முன்பாக, ஒரு கி.மீ., தூரத்தில் இந்த நதியில் ஊற்றாகப் பொங்கி வழிந்து, கண்ணாடியின் தெளிவோடு பாய்கின்ற தண்ணீரே இதற்கு சாட்சி. ஆனால், இந்த நதி, நொய்யலில் சங்கமிக்கும் இடத்திலேயே சாய ஆலை ஒன்றிலிருந்து நொய்யல் பாழ்படுத்தப்படுகிறது என்பது தனியாகச் சொல்ல வேண்டிய சோகக் கதை. குருடிமலையிலிருந்து ஏறத்தாழ 35 கி.மீ.,க்கும் அதிகமான தூரத்துக்குப் பாய்ந்து, நொய்யலுடன் இணைகிற இந்த கவுசிகா நதி, இதற்கு இடைப்பட்ட பகுதிகளில் ஏராளமான குளங்களையும், குட்டைகளையும் நிரப்பி வருகிறது; இதன் வழித்தடத்தில் அமைந்துள்ள பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்குட்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு, இந்த நதியை விட்டால் வேறு நாதியில்லை.கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில், இந்த இயற்கை நீர் வழிப்பாதை அமைந்துள்ள பகுதிகளில், பல கிராமங்கள் உள்ளன; பல லட்சம் குடும்பங்கள் வசிக்கின்றன. பல ஆயிரம் விவசாயிகள், விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், காடுகள் அழிப்பு, மழைப்பொழிவு குறைவு, நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு, ஓடைகள் பராமரிப்பின்மை என பல காரணங்களால், இந்த நதியும் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொண்டிருக்கிறது.

கடந்த பல ஆண்டுகளாக, இந்த பள்ளத்தில் நீர் வரத்து முற்றிலுமாக தடை பட்டதால், வழியிலுள்ள குளங்கள், தடுப்பணைகள் வறண்டு, நிலத்தடி நீர் மட்டம், அதல பாதாளத்துக்குச் சென்று விட்டது. இதன் வழித்தடத்திலுள்ள ஒவ்வொரு கிராம ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சராசரியாக 50லிருந்து 60 ஆழ்துளைக் கிணறுகள் போடப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் 1,200 அடி ஆழத்துக்குப் போடப்பட்டும், பலவற்றில் வெறும் காற்றுதான் வருகிறது. அதேபோன்று, பாசனத்துக்காகப் போடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளும் வற்றிப்போய், விவசாயமும் பொய்த்துக் கொண்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டில் தான் இந்த நதியில் வெள்ளம் பாய்ந்து, 160 ஏக்கர் பரப்பளவுள்ள அக்ரஹார சாமக்குளத்தை நிரப்பியுள்ளது.இந்த குளத்தை நம்பி, அக்ரஹார சாமக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 367 ஏக்கர் பரப்பில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. வீட்டுப் பயன்பாட்டுக்கான தண்ணீருக்காக, இந்த குளத்தில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, இங்கிருந்தே கிராமங்களுக்கு பொதுக்குழாய்களின் மூலமாக தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.

இதேபோல, சர்க்கார் சாமக்குளம் பேரூராட்சியில் அமைந்துள்ள சர்க்கார் சாமக்குளம் (கலிங்கன் குளம்) இதை விட பெரிய குளமாக 200 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால் மட்டுமே, சுற்று வட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களிலும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். தற்போது, இந்த குளத்தில் ஓரளவுக்கு தண்ணீர் நிற்கிறது.இதை ஒட்டியுள்ள பகுதிகளில் பாசனத்துக்கான கிணறுகளிலும், நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலான ஆண்டுகளில் இது சாத்தியமாகயில்லை. அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்தில், கவுசிகா நதியைச் சேர்த்தால் மட்டுமே இந்த குளங்களில் மட்டுமின்றி, இந்த நதியின் வழித்தடத்திலுள்ள எல்லா கிராமங்களிலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதே, அத்திக்கடவு கவுசிகா நதி மேம்பாட்டுச் சங்க நிர்வாகிகளின் நம்பிக்கை.

மழைப்பொழிவு மிகவும் குறைவான பகுதி என்பதால், இப்படிச் செய்வதே நல்லதொரு தீர்வாக இருக்குமென்பது அப்பட்டமான உண்மை. ஆனால், அவிநாசி-அத்திக்கடவு திட்டமே, 50 ஆண்டுகளாக கானல் நீராக தள்ளிக் கொண்டு போகும்போது, அதிலே இத்திட்டத்தைச் சேர்ப்பது சாத்தியமா?.இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, பவானி ஆற்றில் உபரியாகும் 2 டி.எம்.சி., தண்ணீரைத் திருப்பும் ஒரு திட்டத்தில், ஒரு நதிக்கு புத்துயிர் தருமளவுக்கு கூடுதல் தண்ணீரைத் திருப்ப முடியுமா என்றெல்லாம் கேள்வி எழுகிறது. முதலில் தாய்த்திட்டம் நிறைவேறுமா...அதிலே இத்திட்டத்தை இணைக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா...?

ஊர் காக்கும் குளம்!அக்ரஹார சாமக்குளம் கிராம ஊராட்சித் தலைவர் கண்ணதாசன், 29, கூறுகையில், இந்த குளம் 160 ஏக்கர் பரப்புடையது. இந்த குளத்தை நம்பியே, 5 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கான அன்றாடப் பயன்பாட்டுக்கான தண்ணீருக்கு, இந்த குளத்திலிருந்தே ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குளத்தில், முற்றிலுமாக தண்ணீர் வற்றிவிட்டால், இங்குள்ள பல ஆயிரம் குடும்பங்களுக்கு, தண்ணீருக்கு பெரும் கஷ்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். அதனால் தான், இந்த குளத்துக்கு நீர் கொண்டு வரும் கவுசிகா நதியை, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் சேர்க்குமாறு, எங்களது கிராம ஊராட்சியிலும் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம். மக்களின் முதல்வர் ஜெயலலிதாவிடமும், எங்களது கோரிக்கையை சமர்ப்பித்திருக்கிறோம்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kulasekararaj Perumal - Chennai,இந்தியா
06-ஜன-201522:29:31 IST Report Abuse
Kulasekararaj Perumal பரம்பிக்குளம் அழியார் பாசன கால்வாய் என்று ஒரு இருந்தது.அது இப்போது எங்கே? அவரவர்கள் அதை ஆக்கிரமித்து விட்டார்கள். பெருந்தலைவர் காமராஜர் உருவாக்கியதை (PAP canal) அழித்துவிட்டு ஓலம் விடுகிறோம். கால்வாய், ஏரி, குளம், நீர் நிலைகள் அனைத்தையும் ஆக்கிரமித்து வீடு, ரோடு, கல்லூரி, பஸ் நிலையம் அமைத்துவிட்டு தண்ணீர் இல்லை என்று கூவி எந்த பலனும் இல்லை. நாமாகவும் எதுவும் செய்வதும் இல்லை. முன்னோர்கள் உருவாக்கியதை நாம் பாதுகாப்பதும் இல்லை. இயற்கை கருணையால் நாம் வாழ்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
06-ஜன-201516:24:18 IST Report Abuse
Nallavan Nallavan காவிரியோ, அதன் கிளை நதிகளோ வறண்டதற்குக் காரணமானவன் யார் ????? கர்நாடகா அணை தாண்டி அணை கட்டிக்கொள்ள அனுமதித்தவன் யார் ????
Rate this:
Share this comment
Cancel
krishna - madurai,இந்தியா
06-ஜன-201513:23:37 IST Report Abuse
krishna இதே போல் மதுரை அருகே உள்ள சிவரகோட்டையில் சிப்காட் தொழில்சாலை அமைக்க அரசு முயற்சி செய்கிறது. அப்படி தொழில்சாலை அமைந்தால் அதை ஒட்டி உள்ள கவுண்டமாநதி காணாமல் போகும். இரானிபேட்டை, கடலூர் சிப்காடின் பகுதி மக்களின் கதி என்னவென்று நமக்கு தெரியும். அதே போல் இங்கேயும் நடக்காமல் இருக்க தினமலர் துணை புரிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X