சுட்டதும் சுடப்பட்டதும்... | Dinamalar

சுட்டதும் சுடப்பட்டதும்...

Added : ஜன 08, 2015
Advertisement

'என் வீட்டில் புத்தகங்களை தவிர வேறு சொத்துக்கள் கிடையாது. திருடன் வந்தால் ஏமாறுவான்' என்று சொல்பவர்கள், நம்மிடையே உண்டு. அவர்கள், மனைவிக்கும், காதலிக்கும் ஒதுக்கும் நேரத்தை விட, புத்தகங்களுக்கு ஒதுக்கும் நேரம் அதிகமாய் இருக்கும். புத்தகமும் தேனும் ஒன்று தான். இரண்டுமே, திருட துாண்டும்.புத்தக திருட்டு, தேன் திருட்டை போல, கொடுமையானதோ, பகிரங்கமானதோ அல்ல. பல நேரங்களில் கர்ப்பிணியின் நடையை விட கவனமாக நடக்கும். சில நேரங்களில், கைகுலுக்குவதை போல, பகிர்தலாக இருக்கும். மூவேந்தர் முத்து வீட்டில் இருந்து, 'கலைஞர் களஞ்சியம்' எனும் நுாலை படிப்பதற்காக வாங்கி வந்த எழுத்தாளர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன், பலகாலம் வரை, 'இன்னும் படிக்கலை சார்' என்று கூறினாராம். காரணம், கொடுக்க மனம் வராதது தான். இப்போது, அந்த புத்தகத்தை கேட்க முத்து உலகத்தில் இல்லை; அவரின் நினைவை சுமந்தபடி, புத்தகம் மட்டுமே, ஏர்வாடியாரிடம் இருக்கிறது. திருச்சி கம்பன் கழக பேச்சாளர் ராதாகிருஷ்ணனிடம் கொடுத்த, புலவர் ராமமூர்த்தி பற்றிய புத்தகத்தையும், ஒரு உதவி ஆணையரிடம் கொடுத்த, வன்முறைகள் தொடர்பான புத்தகத்தையும், அவர் இன்னும் மறக்கவில்லையாம். ஆனால், ''அவர்களை கண்டால், மறந்தது போல், இருந்து விடுவேன்,'' என்கிறார். மேலும், தன் வீட்டின், முன் அறையில் (பெருமைக்காக), புத்தக அலமாரியை வைக்காததற்கும், இது தான் காரணம் என்கிறார். வசனகர்த்தா இரா.முருகன், நடிகர் கமலஹாசன், இரண்டு புத்தகங்களுக்கு இடையில் ஒரு முக்கோண கதை உண்டு.இதுகுறித்து இரா.முருகன் கூறியதாவது:கமல் வீட்டில், ஒருமுறை அமர்ந்திருந்த போது, அவருக்கு அடிக்கடி, தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன. அதனால் நேரத்தை கழிக்க, அவர் வரவேற்பறையில் இருந்த, 'நாட்டுப்புற கலைகள்' என்ற புத்தகத்தை படித்தேன். பின், கையில் வைத்துக்கொண்டே பேசிவிட்டு, இடையில் கைவிட முடியாமல், புத்தகமும் கையுமாக வீடு வந்தேன். அந்த புத்தகம் என்னோடுதான் வாழ்கிறது. 'போட்டோ கம் மென்ட்' என்ற, அரிய புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தை, கமலே என்னிடம் கொடுத்து படித்துவிட்டு தரும்படி சொன்னார். நான், பாதி படித்துக்கொண்டிருக்கும் போது, கிரேஸி மோகன் கேட்டார், அவரின் பாதி படிப்பில், அப்பாரமேஷ் வாங்கினாராம். இது வரை, அந்த புத்தகம் ஊர் சுற்றி கொண்டுதான் இருக்கிறது. நான் மீதியை படித்து விட்டு கமலிடம் கொடுப்பதற்குள், இருவருமே மறந்து விடுவோம் என்று நினைக்கிறேன். இவ்வாறு, தெரிவித்தார், இரா.முருகன். ''புத்தகத்தை விலை கொடுத்தோ, அன்பளிப்பாகவோ தான் வாங்குவேன். கடன் வாங்கவும், கொடுக்கவும் மாட்டேன்,'' என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன். ஆனாலும், அவரும், 'குமரி மலர்' என்ற ஏ.கே. செட்டியாரின் சிற்றிதழை, கந்தசாமி கவுண்டரிடம் கடன் வாங்கி படித்ததாகவும், 'மவுனியின் கதைகள்' என்ற நுாலை, தன் காலனியில் இருந்த கல்லுாரி மாணவியிடம் கொடுத்து விட்டு, வாங்க முடியாமல், வீட்டிற்கே சென்று சண்டையிட்ட அனுபவமும், மறக்க முடியாத நிகழ்வுகளாக மனதில் பதிந்து விட்டன. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், தனது மல்லாங்கிணறு கிராமத்தில், 30 ஆண்டுகளுக்கு முன், மிக ரகசியமாக, திருடிய புத்தகத்தை, கூலி என்கிறார். அவர் கூறியதாவது:எங்கள் ஊர் நுாலகத்தில், வீராச்சாமி அண்ணனோடு சேர்ந்து, புத்தகங்களை அடுக்க உதவுவேன். அதனால், என்னை நம்பி, நுாலகத்தை விட்டு விடுவார். பொன்னியின் செல்வன் புத்தகத்தை, அவருக்கு தெரியாமல், எடுத்து வந்தேன். அந்த புத்தகத்தை போல், மணியம் செல்வனின் அழகான ஓவியங்களுடன், இதுவரை, அழகான பதிப்பு வரவில்லை. நான், அமெரிக்காவில் ஒரு நுாலகத்தில் இருந்து, நகல் எடுத்து வந்த, ஆண்டன் பாலசிங்கம் எழுதிய புத்தகத்தை, ஒரு கவிஞர், இரந்து வாங்கி சென்றார். இதுவரை, 'தோழரே, அடுத்த முறை எடுத்து வருகிறேன்' என்கிறார்.சிரித்துக் கொண்டே சொன்னார், தமிழச்சி தங்க பாண்டியன்.
- நடுவூர் சிவா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X