தாகம் தீர வழி என்ன?-முனைவர் செல்லத்தாய்

Added : ஜன 09, 2015 | கருத்துகள் (6)
Advertisement
தாகம்  தீர வழி என்ன?-முனைவர் செல்லத்தாய்

'நீறு இல்லாத நெற்றியும் நீரு இல்லாத நிலமும் பாழ்' என்பர். சங்க காலத்தில் நீரின் வளமைக்கு ஏற்ப நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்தனர். அருவி, சுனை நீர், குறிஞ்சி, காட்டாறு- முல்லை; குளம், ஏரி- மருதம்; கடல்- நெய்தல் என நீர்நிலைக்கு ஏற்ப மக்களின் வாழ்வியலும் இருந்தது. பாலை நிலத்தில் நீர் இல்லாததால் வறுமை, சோகம், ஆற்றாமை, வெறுமை, திருட்டு, துன்பம் என மக்கள் துயரத்தில் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன.


தண்ணீர்...

உயிர் நீர் :ஒரு நாட்டின் வளமைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை தண்ணீர் தான். அதனால்தான் 'நீரின்றி அமையாது உலகு' என்றார் வள்ளுவர். மனிதனின் உயிர்த்திரவமே தண்ணீர் தான். மனித உடலில் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர். 'அதில் 7.2 லிட்டர் உப்பு நீர்' என்கிறது அறிவியல். உயிருக்கு ஆதாரமான நீரை நம் முன்னோர் எவ்வாறு சேமித்தனர் என்பதற்கு இன்றைக்கும் இருக்கும் நீர்நிலைகளே சான்று. கிடங்கு, குட்டை, குளம், கண்மாய், ஊரணி, ஏரி, நதி, அணை, கிணறுகளை முன்னோர் உருவாக்கினர். இதில் கிடங்கு, குட்டை கால்நடைகளுக்காக; குளம், ஊரணி மக்களுக்காக. ஏரி, குடிநீருக்காக; கிணறு, தனிமனிதன் ஏற்படுத்திக் கொண்டது; அடுத்ததாக ஆறு, அதன்குறுக்கே கட்டப்பட்டது அணை. பயன்பாட்டிற்கு போக மீதமுள்ள நீர் கடலில் கலக்கும். தான் மட்டும் பயன்படுத்தினால் போதும் என நினைக்காமல், அடுத்த சந்ததியினரும் பயன்பெற வேண்டும் என்ற தொலைநோக்கில் நீர்நிலைகள் அமைக்கப்பட்டன.


குளம் தொட்டு வளம் பெருக்கி:

இதற்கு சங்க இலக்கியங்களும் சான்று அளிக்கின்றன. கரிகால் பெருவளத்தான் 'குளம் தொட்டு (வெட்டி) வளம் பெருக்கிய' செய்தியை 'பத்துப்பாட்டு' கூறுகிறது. மேலும் 'வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைதலைகிய கடற்காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்' எனவும் கூறுகிறது. 'மழை பெய்யாவிட்டாலும் காவிரியில் நீர் வற்றாது; கடல் போல் காட்சி அளிக்கும்' என்பது இதன் பொருள். அந்த ஜீவநதி இன்று ஜீவனற்று காட்சி அளிக்கிறது. சாயக்கழிவுகள் கலந்து நொய்யல் ஆறு நோஞ்சானாகக் கிடக்கிறது. 'ஏரி மாவட்டம்' என அழைக்கப்பட்ட காஞ்சி புரம், இன்று நீருக்காக ஏங்கிக் கிடக்கிறது. தாமிரபரணி தவியாய் தவிக்கிறது.'ஊரணி நீர் எல்லோருக்கும் பயன் தருவதைப் போல இயல்பறிந்து உதவும் மனமுடைய அறிவுடையோரின் செல்வமும் அனைவருக்கும் பயன்பட வேண்டும்' என வள்ளுவர் கூறி உள்ளார். ஊரணி, எத்தனை ஊர்களில் உள்ளது என்பதை தேடித்தான் பார்க்க வேண்டும்.புதிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டாம்; இருப்பதையாவது காக்க வேண்டாமா? இதற்கு மழை நீரை சேமிக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.


எப்படி சேமிக்கலாம் :

மொட்டை மாடியில் விழும் நீரை வீணடிக்காமல் குழாய் மூலம் குளியலறைக்குள் கொண்டு வரவேண்டும். வடிகட்டி பிடித்துக் கொண்டது போக மீதியை தொட்டியில் விட வேண்டும். வடிகட்டிய நீரை குடிக்கவும்; பிடித்து வைக்கும் நீரை பிற பயன்பாட்டிற்கும் வைத்துக் கொள்ளலாம். சூரிய ஒளி படாமல் வைத்திருந்தால் நீரில் பூச்சி, புழு உற்பத்தி ஆகாது. இதை மூன்று மாதங்கள் வரை குடிக்க பயன்படுத்தலாம். மாடி வீட்டில் இருப்போர் இவ்வாறு சேமிக்கலாம். நாங்கள் 2006 முதல் இதுபோன்று சேமித்து வருகிறோம்; பணம் கொடுத்து குடிநீர் வாங்கியதில்லை. மழை நீரை வீணடிப்பதால் தண்ணீர் 'விற்பனை பொருள்' ஆகிவிட்டது.


பாடம் சொல்லும் பூமித்தாய் :

விறகு வெட்டி ஒருவன் கவலையுடன் குளக்கரையில் உட்கார்ந்திருந்தான். பூமித்தாய் அவன் முன்தோன்றி, ''ஏன் கவலையாக இருக்கிறாய். மரம் வெட்டவில்லையா... வெட்டுவதற்கு மரமே இல்லையா,'' என கேட்டாள்.விறகு வெட்டி, ''நானும் கோடாரியை குளத்தில் போடலாம் என நினைக்கிறேன். ஆனால் குளத்தில் தண்ணீர் இல்லை,'' என்றான்.பூமித்தாய், ''தண்ணீர் இல்லை என வருத்தப்பட வேண்டாம். உனக்கு பொன்னும் பொருளும் அள்ளித்தருகிறேன். அதோ தெரிகிறது பார் பெரிய மலை. அதற்கு கீழ் 'தகதக' என மின்னுவது எல்லாம் பொன் தான். அதை அள்ளிக் கொள்,'' என்றாள்.மரம் வெட்டி மலையை நோக்கி ஓடினான். பொன்மலையை எட்டிய உடன் ஆசை ஆசையாய் அதை அள்ளிக்கொள்ள நினைக்கிறான். ஆனால் தண்ணீர் தாகம் தாள முடியவில்லை. அப்போது தங்கம் பெரிதாகத் தெரியவில்லை. 'தண்ணீ...தண்ணீ' என கத்தினான்.அங்கு தோன்றிய பூமித்தாய், ''என்ன மகனே தங்கம் நிறைந்து கிடக்கிறது. எடுக்கவில்லையா,'' என்றாள்.

விறகு வெட்டி, ''எனக்கு இப்போது தண்ணீர் தான் வேண்டும். தங்கம் தேவை இல்லை,'' என்றான்.பூமித்தாய், ''அங்கே தெரிகிறது பார் ஏரி. அங்கு போய் தாகம் தீர்த்துக்கொள்,'' என்றாள்.ஒரே ஓட்டத்தில் ஏரியை அடைந்த விறகு வெட்டி தண்ணீரை கையால் எடுத்து குடித்த போது, ஒரே துர்நாற்றம்.''அய்யோ...இவ்வளவு தண்ணீர் இருந்தும் குடிக்க முடியவில்லையே,'' என கதறித் துடித்தான்.அப்போது பூமித்தாய், ''பார்த்தாயா மகனே... உன் பக்கத்தில் தங்கம் இருந்தும் எடுக்க மனமில்லை. தண்ணீர் இருந்தும் குடிக்க முடியவில்லை. இதற்கு யார் காரணம்?'' என கேட்டு மறைந்தாள். இந்நிலைக்கு மனிதர்கள் மட்டுமே காரணம்.


ஏரித் தண்ணீர் குடிக்காதவர் :

'எரவட்டி பிடிக்காத இளவட்டமும் (இளைஞர்) இல்லை; ஏரித் தண்ணீ குடிக்காத மனிதனும் இல்லை' என கிராமத்தில் கூறுவர். முன்பு, வயல் வேலைக்கு செல்வோர் வாய்க்காலில் ஓடும் தண்ணீரை எடுத்துக் குடிப்பர். ஆனால் இன்றைக்கு குடிக்க முடிகிறதா?'பாட்டனார் பண்படுத்தி பழமரங்கள் நட்டு வைத்த தோட்டத்தை விட்டு விட்டு தொலைதூரம் வந்தவன் நான்... என் பேரனுக்காய் எவன் வைப்பான் பழத்தோட்டம்?' என்பார் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன்.மழை நீரின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். சிறுதுளி சேர்ந்து தான் பெரும் தாகத்தை தீர்க்க முடியும். இருக்கும் நீர்நிலைகளை காப்பாற்றினால் தாகத்திற்கு தண்ணீர் கிடைக்கும்.நீரை தூய்மைப்படுத்தி சேமிக்கும் வழியை பார்ப்போம்.
-முனைவர் செல்லத்தாய்,
தமிழ்த்துறை தலைவர்,
எஸ்.பி.கே.கல்லூரி,
அருப்புக்கோட்டை.94420 61060
sellathai03@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
09-ஜன-201516:35:46 IST Report Abuse
ganapati sb மாடியில் விழும் மழைநீரை 3 மாதங்கள் வரை சேமித்து வைத்து குடிக்கலாம் எனும் தகவல் புதியது. பலருக்கு பயன் படும்.
Rate this:
Share this comment
Cancel
giri - Tirunelveli,இந்தியா
09-ஜன-201512:20:45 IST Report Abuse
giri சிறு துளி பெரு வெள்ளம் என்பது போலே நம் குடிநீர் நமக்கு உயிர் வாழ அவசியமாகிறது நம்மால் முடிந்த வரை சேமிப்போம்...
Rate this:
Share this comment
Cancel
babu - Nellai,இந்தியா
09-ஜன-201511:04:31 IST Report Abuse
babu நீங்க சொல்ற கருத்தெல்லாம் சரி தான். ஆனா இங்க எவன் கேட்பான். ஒருத்தனும் இல்லை. ஏன் என்றால் அவங்களுக்கு அக்கறை இல்லை. அக்கறை இருந்தாலும் அவனுக்கு நேரம் இல்லை. அப்படி நேரம் இருந்து அவன் செய்தாலும் அவனை செய்ய விடுவதில்லை இந்த சமுதாயம்...... இங்கு உள்ளவர்கள் எப்படி என்றால் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும், ஒரு நல்ல பிளாட் வீடு மற்றும் கார் வாங்க வேண்டும், மாத தவணை கட்ட வேண்டும், வார விடுமுறைகளில் வெளியே சென்று சாப்பிட்டு பொழுதை போக்க வேண்டும், தன் குடும்பம் பிள்ளை நன்றாக இருக்கனும் அடுத்தவன் நாசமாக போனாலும் தேவை இல்லை, என்பதே வழக்கமாக உள்ளதே தவிர யாராவது வேற ஏதாவது யோசிக்க முடிகின்றதா இல்லை என்று தான் பொருள். 2025 ல் தமிழ் நாட்டின் அல்ல நமது நாட்டின் கதி மிக கேவலம் தான், உதாரணம் குடிக்கும் தண்ணீர் ஒரு லிட்டர் 100 ரூபாய் என்றும் ஒரு வேலை சாப்பாடு 500 ரூபாய் என்று தான் இருக்கும். அப்பொழுது எல்லாருடைய வீட்டிலும் சொகுசு கார் மற்றும் மற்ற ஆடம்பர பொருட்கள் இருந்தாலும் நீர் இல்லாமல் காகிதம் உபயோகபடுத்தினாலும் ஆச்சரியம் இல்லை. எங்களை போன்ற ஒரு சில இளைஞர்கள் நீர் நிலைகளை காப்பாற்றும் செயலில் இறங்க ரெடி... எங்களுக்கு ஊக்கபடுத்த யார் உள்ளனர், எங்கள் குடும்ப தேவைக்கு வருமானம் யார் கொடுப்பார் மற்றும் இந்த நீர் பிரச்சனையையே காரணம் காட்டி வாழ்கையை ஓட்டும் அரசியல்வாதிகள் எங்களை சும்மா விடுவார்களா................. பதில் சொல்லுங்கள் பார்க்கலாம் முனைவர் அவர்களே, சரி நீங்கள் உங்கள் ஊரில் இதனை பற்றி எத்தனை பேரிடம் விளக்கி உள்ளீர்கள் சொல்லுங்கள். கட்டுரை எழுதுவது சுலபம், செயலில் காட்டுவது தான் சிரமம்.................... உண்மை தானே.................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X