விபத்தில்லா தமிழகத்தை காண்போம்!ஜன.11-17 சாலை பாதுகாப்பு வாரம்| Dinamalar

விபத்தில்லா தமிழகத்தை காண்போம்!ஜன.11-17 சாலை பாதுகாப்பு வாரம்

Updated : ஜன 10, 2015 | Added : ஜன 10, 2015 | கருத்துகள் (2)
 விபத்தில்லா தமிழகத்தை காண்போம்!ஜன.11-17  சாலை பாதுகாப்பு வாரம்

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தற்போது நான்குவழி மற்றும் ஆறுவழிச்சாலையை பராமரித்து வருகிறது. அதேசமயம் விபத்துகளும் அதிகரிக்கின்றன. இந்தியா போன்ற மத்திய தரவருவாய் உள்ள நாடுகளில் 80 சதவீதம் வாகன விபத்துகள் நடக்கின்றன. அதில் 23 சதவீத விபத்துகள் டூவீலர்களால் ஏற்படுகின்றன. விபத்தில் இறப்பவர்கள் 59 சதவீதம் பேர் 15 வயது முதல் 44 வயது உள்ளவர்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனம். மேலும் ஒரு லட்சம் பேருக்கு 18 பேர் விபத்தில் இறப்பதாகவும் அதன் ஆய்வு தெரிவிக்கிறது.
பள்ளிகளில் விழிப்புணர்வு இந்தியாவில் சரக்கு வாகனங்களை பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்களாக உபயோகிப்பதை சட்டம் மூலமாக கடுமையாக தடுத்திருந்தாலும், கிராம பகுதிகளில் சரக்கு வாகனங்களை பொதுமக்கள் உபயோகிக்கின்றனர்.பல்லாயிரம் கோடி செலவழித்து சாலை விதிகளை மேம்படுத்தியும், பள்ளி, கல்லுாரிகளில் போக்குவரத்து பற்றி தொடர்ந்து விழிப்புணர்வு செய்து வந்தாலும் தேசிய நெடுஞ்சாலையில் அவசரமாக தடம் மாறுதல், ஒலி, ஒளி சமிக்ஞை சரியாக காட்டாமல், போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் இருப்பதால் விபத்து ஏற்படுகிறது.எந்தவொரு வாகன ஓட்டியும் இன்னொரு வாகனம் மீது மோதுவதை தடுக்கத்தான் நினைப்பர். இருப்பினும் கடக்கும் பாதசாரிகள், இதர வாகன ஓட்டிகளின் எதிர்மறையான நடவடிக்கைகளினால் விபத்தை சந்திக்கும் இருதரப்பினருக்கும் உயிர் சேதம், உடல் உறுப்புகளை இழத்தல் மற்றும் வாகனங்களுக்கு ஏற்படும் சேதம் ஆகியவற்றால் பெரும் இழப்பு ஏற்படுகிறது. இதனாலேயே ஜன., 11 முதல் 17 வரை சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பிலும் ஏற்படுத்தப்ப டுகிறது.இறப்பவர்கள் அதிகம் இந்திய தேசிய குற்ற பதிவேட்டுக்கூடம் தரும் தகவல் நமக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. உலகிலேயே இந்தியாவில்தான் அதிகமாக வாகன விபத்துகளால் 1.35 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் இறப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய விபத்துகள் 40 சதவீதம் டூவீலர்களாலும், சரக்கு வாகனங்களாலும் ஏற்படுகிறது என்றும் தெரிவிக்கிறது.இந்தியாவில் 2003ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 84,430 ஆகவும், 2008ல் 1,18,239 ஆகவும், 2012ல் 1,39,096 ஆகவும் உயர்ந்தது. உடல் உறுப்புகளை இழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்தாண்டுகளில் 50 சதவீதமாக அதிகரித்துள்ளது.
ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் 2012ம் ஆண்டில் வாகன விபத்துகளில் இறந்த 1,39,093 பேரில் ஆண்கள் 1,18,533 பேர். பெண்கள் 20,205 பேர். இதில் 32,318 பேர் டூவீலராலும், 26,678 பேர் சரக்கு வாகனங்களாலும், 14,110 பேர் கார்களாலும், 13,076 பேர் பஸ்களாலும் இறந்துள்ளனர்.
தமிழகம் முதலிடம் :2012ல் தமிழகத்தில் மட்டும் வாகன விபத்தில் 16,175 பேர் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு 15,563 பேராக குறைந்தது ஆறுதல் செய்தி. கடந்த 2010-13ம் ஆண்டுகளில் 70 ஆயிரத்திற்கும் மேல் காயம்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த 66,238 வாகன விபத்துகளில் தேசிய நெடுஞ்சாலைகளில் 20,686 வழக்குகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 20,984 வழக்குகளும் பதிவாகியுள்ளன. விபத்து மற்றும் உயிரிழப்பில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முதலிடத்தில் உள்ளது வருந்தத்தக்கது.பெரும்பாலான விபத்துகளை ஆய்வு செய்தபோது கவனக்குறைவு, கார் ஓட்டும்போது கடைபிடிக்க வேண்டிய விதிகளை பின்பற்றாமல் இருந்ததே காரணம் என தெரியவந்துள்ளது. உதாரணமாக வாகனம் ஓட்டும்போது பெல்ட் அணிந்து ஓட்டுவதில்லை. ஸ்டியரிங்கை எப்படி பிடிக்க வேண்டும் என்பது தெரியவில்லை. பக்க கண்ணாடியை எப்படி உபயோகிப்பது, ஒலிப்பான்களை எங்கே உபயோகிக்க வேண்டும், சாலையில் உள்ள எச்சரிக்கை பலகைகளில் உள்ள குறியீடுகளின் பொருள் என்ன, நெடுஞ்சாலைகளில் செல்லும்போது வேகத்தை எவ்வாறு குறைக்க வேண்டும், அடுத்த வாகனங்களுக்கு எப்படி ஒளி அறிவிப்புகளை தர வேண்டும், முன்செல்லும் வாகனங்களிலிருந்து எவ்வளவு துாரம் இடைவெளி விட்டு செல்ல வேண்டும், வாகனத்தை ஒரு தடத்திலிருந்து மற்ற தடத்திற்கு எப்படி மாற்ற வேண்டும் என்பது குறித்து வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இதுகுறித்த விழிப்புணர்வு பாடம், பள்ளிகளில் கற்பிக்கப்படுகிறது.
இந்தியாவில் சாலை விதிகளை மதிக்காமல் விபத்தையும், உயிரிழப்பையும் ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டமும், அது சார்ந்த விதிமுறைகளும் அதை செயல்படுத்துவதும் குறைவாகவே உள்ளது.விபத்து நடந்தவுடன், எந்தெந்த துறையினரிடம் முறையிட்டு நிவாரணம் தேட வேண்டும், சிறு பழுதுகளை தாங்களாக சரிசெய்து கொள்வது எப்படி, பெரிய பழுதுகளின்போது யாரை அணுகி நிவர்த்தி செய்ய வேண்டும் என்பவை குறித்து தெளிவான பயிற்சி அளித்த பின்னரே வாகன ஓட்டிகளுக்கு வெளிநாடுகளில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.
இந்தாண்டு முதல் தமிழகத்தை விபத்தில்லா மாநிலமாக மாற்ற, குடும்பத்தை நினைத்து, சாலை விதிகளை கடைபிடித்து பயணிப்போம் இனிதாய்!- முனைவர் ஆ. மணிவண்ணன்,போலீஸ் உதவி கமிஷனர்,மதுரை. 94432 08519

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X