கடந்த, 2010ல் சென்னை மதுரவாயலில் துவங்கி, தென் மாவட்டம் விருதுநகர் வரை தொடர்ச்சியாக, நான்கு முக்கிய சம்பவங்கள் நடந்துள்ளன. மாணவன் ஆசிரியை அடித்தது, கத்தியால் குத்தியது, சக மாணவனை கத்தியால் குத்தியது, பெற்றோர், ஆசிரியரை அடித்தது என்று, வகுப்பறைக்குள்ளே வன்முறைகள் அரங்கேற்றம் தொடர்கின்றன.
ஆசிரிய - மாணவர் உறவு சீர்கேடுஅடைந்துள்ளதையே இது காட்டுகிறது.இதன் உட்காரணங்களை ஆராய்ந்தால்சற்றே திடுக்கிட வைக்கிறது.
'என்னை படிக்கச் சொல்ல நீ யார்; தேர்வில் மதிப்பெண் வாங்கலன்னா கண்டிக்க நீ யார்; ஹோம்ஒர்க் பண்ண முடியல அதுக்கு என்னா இப்போ' என்றெல்லாம் மாணவர்கள் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.இவைகள் எல்லாம் தற்கால மாணவர்களின் ரத்தத்தில் ஊறிய பண்பாடுகளின் பரிணாம வளர்ச்சியா என்பது புரியவில்லை; ஆனாலும் ஒரு திருப்தி... இந்த கண்றாவி மன வெளிப்பாடு 40, 50 சதவீத மாணவர்களிடையே மட்டுமே தோன்றி இருக்கிறது என்பது தான். அதுவும் சமயம் வரும்போது வன்முறையாக நீள்கிறது!
வரும், 2020ல் இதன் நீட்சி என்னவாக இருக்கும்? 50 சதவீதம், 80 சதவீதமாகும். 'மேய்ற மாட்ட நக்கற மாடு கெடுக்கும்' என்ற சூத்திரம் தான்; இத்துடன் நிற்குமா அல்லது மீட்சி எல்லைக்கு அப்பால் போகுமா இந்த பாதை என்பது கேள்விக்குஇந்த நிலைக்கு மாணவர்களை மட்டும் குறை சொன்னால் போதுமா? மூன்று முக்கிய காரணி கள் இருக்கின்றன..
.
மூன்றாவது வயது முடிவதற்குள்ளே, குழந்தைகளை முன் பருவக் கல்வியில் சேர்த்துவிடும் அவலம், பெற்றோரின் அன்பும், ஆதரவும், அரவணைப்பும், பாசமும் அற்றுப் போய் விட்டது. போதாக் குறைக்கு குடும்பச் சண்டைகள் வேறு.இதற்குக் காரணம் இருவரும் வேலைக்கு போவது, பணம் சம்பாதிப்பது, சம உரிமை பேசுவது என்பதாக அமைகிறதே தவிர, அன்பையும், ஆராதனையும் சொல்லிக் கொடுக்க பெற்றோருக்கு நேரமில்லை! கல்லூரித் தேர்தலில் ஜாதி, பணம் விளையாடி வன்முறையில் முடிகிற கொடுமை. கல்லூரித் தேர்தல், பஸ் டே கொண்டாடவா மாணவர்கள் கல்லூரிக்குச் செல்கின்றனர்? அத்துடன் படித்து முடித்தவுடன் வேலைவாய்ப்பில் ஏமாற்றம்.
ஆசிரியர் என்பவர் ஒரு ஜீவன்... அது வரும்... எதனா கத்தும், போகும் என்ற நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளிப்பட்டிருக்கின்றனர். மேற்கண்ட நடைமுறைகளைத் தடுக்க, எந்த ஆசிரியருக்காவது தைரியம் உண்டா அல்லது பெற்றோர் தான் வேண்டாம் என்று சொல்கின்றனரா? மாணவர்களை, எந்த விதத்திலும் கண்டிக்கக் கூடாது, தண்டிக்கக் கூடாது என்றால் என்ன செய்வர் ஆசிரியர்கள்? மாணவர்களிடம் அவமானப்படுவார இல்லை மேலதிகாரிகளிடம், 'டோஸ்' வாங்குவரா? மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி தான். குரு குல வாசத்தில் கண்டிப்பும் இருந்தது, தண்டித்தலும் இருந்தது. இதில் பயின்ற மாணவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்ல பிள்ளைகளாக இருந்தனர். இன்று ஆசிரிய, மாணவர் உறவும் அறுந்த பின், கல்வியும், ஒழுக்கமும் கேள்விக்குறிகள் தானே!
மகாத்மா முதல், முத்துக்குமரன் வரை சொன்ன பாடத் திட்டங்களில், அரசு தங்களுக்குச் சாதகமான பரிந்துரைகளை மட்டுமே எடுத்து, மற்றவற்றை புறம் தள்ளியது. அதுவும் கல்வியை தனியார்க்கு தாரை வார்த்துக் கொடுப்பதில், தமிழக திராவிடக் கட்சிகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்து விட்டன.மாநிலம் அல்லது நாடு முழுவதும் ஒரே மாதிரியான பாடத் திட்டம் இருக்கிறதா... குறிப்பாக, அந்தக் கல்விமான்கள் வலியுறுத்திய ஒழுக்கக் கல்வி எங்கே போயிற்று. விளையாட்டைக் கூட ஊக்குவிக்காமல், மதிப்பெண் பெற மனப்பாடம் செய்து, கக்குகிற பாடத் திட்டம் தானே, எல்லா தனியார் பள்ளிகளிலும் நடக்கிறது.
இதற்கு வலு சேர்ப்பது போன்று, இக்காலத்தில் அசுர வளர்ச்சியைப் பெற்றிருக்கிற தகவல், தொழில் நுட்ப வளர்ச்சிகள், சினிமா, 'டிவி' மற்றும் மொபைல்போன்கள், எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினால், மாணவர்கள் தம் ஆளுமைப் பண்பு வளர்க்கிற சுயகற்றல் முறைகளில் கவனம் செலுத்த முடியுமா? இவற்றுக்கெல்லாம் நல்வழிக் காட்ட நம் கல்வி இலாகாவும், அமைச்சகமும் தயாரில்லை.ஆசிரிய - மாணவ உறவை வலுப்படுத்த ஆலோசனை குழுக்கள், எந்தப் பள்ளியிலும் இல்லை. அரசுப் பள்ளிகளில் கேட்பாரும், மேய்ப்பாரும் இல்லை. தனியார் பள்ளிகளில் மதிப்பெண் இயந்திர உற்பத்தியும், அதைச் சார்ந்த கெடுபிடிகளும் அமலில் உள்ளன. இந்தக் கட்டுப்
பாடுகள் எப்போது வேண்டுமானா லும் வெடிக்கலாம்!
தலை (அரசு) சரியாக இருந்தால்,வாலும் சரியாக இருக்கும். போகிறபோக்கைப் பார்த்தால் தாய்மொழிகூட, பள்ளிகளில் அற்றுப் போகிற அவலம் உருவாகி விடும் போலுள்ளது. இந்தப் பாதை எங்கே போகிறது என்று நமக்குத் தெரிகிறது. அதை, மடை மாற்றம் செய்து, நல்லதொரு நாற்றங்காலை பதிய வைக்க அரசும், பெற்றோரும், ஆசிரியர்களும் தயாராக இல்லை. என்ன தான் நடக்கப் போகிறதோ?
போன்: 94444 61161