பாடப்புத்தக கடைகளாக மாறிப் போன பழைய புத்தக கடைகள்!

Added : ஜன 11, 2015
Advertisement

பழைய பெட்டியை சுத்தம் செய்தபோது, பழைய காதலிக்கு எழுதி, பயத்தால் தபாலில் சேர்க்காத கடிதத்தை பார்ப்பது போல, பல புத்தகங்கள் நம்மை, பழைய காலத்துக்கு இழுத்து செல்லும். ரயில் பயண சினேகத்திற்கு பின், வேலை தருவதாய் சொல்லி, முகவரி அட்டை கொடுத்து செல்லும் புதிய நபரை போல், நம்பிக்கை தருவதாய் சில புத்தகங்கள் அமையும். புதிய புத்தகங்களில், கிடைக்கும் வாசனையும், நமக்கே நமக்கென்ற உரிமையும் அலாதியானவை. ஆயினும், பழைய புத்தகங்களை, பழைய பதிப்பில் படிக்கும் போது, தாத்தாவின் கைப்பிடித்து, சந்தைக்கு போகும் பேரனின் அனுபவங்களை தரும். முத்துக்குளிக்க போனவனுக்கு, நத்தை கிடைப்பது போன்ற ஏமாற்றங்களையும், மீன் வலை போட்ட வனுக்கு புதையல் கிடைத்தது போன்ற ஆச்சரியங்களையும் அள்ளி தருபவை, பழைய புத்தக கடைகள். முப்பதை தாண்டியவர்களுக்கு, முத்தமிழை அள்ளி தந்த பெருமையில், பழைய புத்தக கடைகளுக்கு, பெரும் பங்கு உண்டு. சென்னையின் பழைய புத்தக கடைகளை, இப்போதும் தேடி அலையும் கூட்டம், இருக்கவே செய்கிறது. ஆயினும், கடையிலும், கடைக்கு வரும் முகங்களிலும், ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சென்னையின், பழைய புத்தக கடைகளுக்கு பேர் போன இடங்களாக, சென்ட்ரல் அல்லிக்குளம் வணிக வளாகம், மயிலாப்பூர் லஸ் முனை, திருவல்லிக்கேணி பாரதி சாலை ஆகியவற்றை சொல்லலாம். முன்னாள் முதல்வர் அண்ணாதுரை முதல் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வரை, பலர் வந்து புத்தகங்கள் வாங்கி இருக்கின்றனர் என்று, பெருமையான வரலாறுகளை சொல்லும் பெரியவர்கள், இன்றும் அங்கு உள்ளனர். அவர்களின் கடைகளுக்கு சென்று, இடியாப்ப நுாலை பிரிக்கும் சிரத்தையோடு, இலக்கிய புத்தகங்களை தேடினால், பெரும்பாலும், நம் தேடல், பொய்ப்பதுண்டு. 'தமிழ் இலக்கியங்களை படிப்போரின் எண்ணிக்கை குறைந்து விட்டது. ஆங்கில நாவலுக்கு கொடுக்கும் விலையை, தமிழ் நாவல்களுக்கு கொடுப்பதில்லை' என்று, பதில் சொல்கின்றனர் சிலர். 'பாடப்புத்தகங்களை வாங்கி வைத்திருந்தால், மார்ச் மாதம் துவங்கி, நவம்பர் மாதம் வரையில், பாதி விலைக்கு விற்று விடலாம். பழைய நாவல்களின் விலை பார்த்து, நம்மிடம், ஐந்துக்கும் பத்துக்கும் பேரம் பேசுகின்றனர்' என்று, பலர் தமிழ் படிப்போரின் ஏழ்மையை பேசுகின்றனர். ஆயினும், பாரதி சாலையில் உள்ள புத்தக கடைகளில், தமிழ் இலக்கிய புத்தகங்கள் கிடைப்பது, பசி நேரத்தில், 'பன்' கிடைத்தது போன்ற, ஆறுதலை தருகிறது. ஆனால், தமிழக தலைநகர் சென்னையின் பழைய புத்தக கடைகளில், தமிழ் புத்தகங்கள் கிடைக்கவில்லை என்பது, நமக்கு மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்கும் ஆபத்து என்ற கருத்தையும் சிலர் சொல்கின்றனர். இளம்தலைமுறை, கலை, இலக்கியம் தொடர்பான புத்தகங்களை படிப்பதை விட்டுவிட்டு, பாடப்புத்தகங்களை மட்டுமே படிக்க துவங்கி இருப்பது, ரசனையற்ற, வறட்டு சம்பாத்திய சமூகத்தையே உண்டாக்கும் என்று, உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர். 'குடி' (டாஸ்மாக்) உயர கோன் உயரும் என்ற காலம் வந்து விட்டதால், இலக்கியம் படிப்பதற்கான சம்பாத்தியத்திலும், குடிக்கின்றானா தமிழன் என்ற கேள்வியும், எழவே செய்கிறது.'இலக்கியம் படித்தால், எதற்கு ஆக போகிறது; இன்ஜினியரிங் படி, அமெரிக்க வேலை (பெண்/மாப்பிள்ளை) கிடைக்கும்' என்ற பெற்றோரின் அறிவுரையும் கலை, இலக்கியம் சார்ந்த வாசிப்பு குறைவுக்கு காரணம் என்றும், சிலர் சொல்கின்றனர். தற்கால பழைய புத்தக கடை களின் அலமாரிகளில், பெரும்பாலும் அடைகாப்பது, பொறியியல், மருத்துவம், கணினிஅறிவியல் உள்ளிட்ட பாடங்களின் தொகுப்பு தான். பாடம் சார்ந்த புத்தகங்களை தேடி வருவோருக்கு, பழைய புத்தக கடைகள், கோலார் சுரங்கம் தான். இலக்கிய ஆர்வலர்களின் எண்ணிக்கை குறைந்தாலும், படிப்பாளிகளை தன்வசம் ஈர்க்கும் காந்த மாய், பழைய புத்தக கடைகள், இன்று வரை இருந்து வருகின்றன.பள்ளி, கல்லுாரி மாணவர்களும், பெற்றோரும், அங்கெல்லாம் சென்று வந்தால், சாலை ஓரங்களில் கடைபரப்பி இருக்கும் அந்த வள்ளல்களின் வயிறு நிறைவதோடு, அவர்களின் சந்ததியின் சந்துபொந்துகளுக்குள்ளும் அறிவொளி பரவும்.

- நடுவூர் சிவா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X