இந்தியாவே விழித்தெழு... உலகை வெற்றிகொள்..: இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்

Added : ஜன 12, 2015 | கருத்துகள் (15)
Advertisement
இந்தியாவே விழித்தெழு... உலகை வெற்றிகொள்..: இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள்

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் இன்று. விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு முன் இருந்த இந்தியா என்பது வேறு; அவர் சிகாகோ சொற்பொழிவுக்குப் பிறகு தோன்றிய இந்தியா என்பது வேறு.

விவேகானந்தரின் சொற்பொழிவுக்குப் பிறகு தான் இந்தியாவில் அரசியல், பொருளாதாரம், கல்வியில் மறுமலர்ச்சி தோன்றியது. அரசியல், சமுதாய, தேசிய, ஆன்மிக சக்திகள் எழுச்சி பெற அவரது சொற்பொழிவு அடித்தளமாக இருந்தது.விவேகானந்தர் வாழ்ந்த காலத்தில் வட இந்தியா, தென்னிந்தியா என்றும், பல மாநிலங்களால், மொழிகளால், மதப்பிரிவுகளால், பழக்க வழக்கங்களால் இந்தியா பல பிரிவுகளை கொண்டிருந்தது. இந்தியர்கள் பல காரணங்களால் தனித்தனியாக இந்தியாவை நினைத்துக்கொண்டிருந்த சமயத்தில், 'இந்தியா முழுவதும் ஒரு நாடு... இந்தியப் பண்பாடு என்பது ஒன்று தான்... இந்துமதம் என்பது ஒன்று தான்...' என உறுதியாக உணர்ந்தவர்... உணர்த்தியவர் விவேகானந்தர்.


பலத்தை நினைவுபடுத்தியவர் :

இந்திய மக்களுக்கு தங்களின் பலத்தை நினைவுபடுத்தியவர் சுவாமி விவேகானந்தர். விவேகானந்தர் புதிய இந்தியாவிற்கும், பழைய இந்தியாவிற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். பண்டைய மெய்ஞ்ஞானத்திற்கும், இன்றைய விஞ்ஞானத்திற்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். மேற்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும், கிழக்கு நாடுகளின் சிந்தனைகளுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குகிறார். விவேகானந்தர் ஓர் 'ஆன்மிக சூப்பர் மார்க்கெட்'. அவரிடம் பக்தியோகம், கர்மயோகம், ஞானயோகம், ராஜயோகம் ஆகியவை உண்டு; சாக்தம் கூறும் சக்தி வழிபாடு பற்றிய கருத்துக்களும், சைவம் சார்ந்த கருத்துக்களும் வைணவக் கருத்துக்களும் உண்டு. சமய சமரசம் பற்றிய கருத்துகளும், சமுதாய சீர்திருத்தக் கருத்துக்களும் உண்டு. தொண்டு, கலைகள், பெண்கள் முன்னேற்றம், கல்வி, ஏழை எளியவர்களை உயர்த்துதல், பொருளாதாரம், தீண்டாமை, மக்களுக்கிடையில் சமத்துவம் போன்ற சமுதாய நலனுக்கு உகந்த கருத்துகளும் அவரிடம் உண்டு. இவ்விதம் விவேகானந்தர் ஓர் ஆன்மிக சூப்பர் மார்க்கெட் போன்று இருந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு பூரணஞானி.விவேகானந்தர் மனிதகுலத்திற்கு முக்திநெறியைக் காட்டுவதற்காக பிறந்தவர். அது அவரது வாழ்க்கையின் முக்கிய அம்சம்.

எழுச்சியைத் தோற்றுவித்தவர் :

சுவாமி விவேகானந்தர் நேரடியாக, மறைமுகமாக அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அவரது தேசபக்தி கருத்துகள்தான் முதன் முதலில், இந்தியாவில் தேசிய எழுச்சியை ஏற்படுத்தியது. அந்நாளில், 'தேசபக்த ஞானி' என போற்றப்பட்டார்.விவேகானந்தர் இந்தியாவில் நிகழ்த்திய சொற்பொழிவுகளில் தேசபக்தி கருத்துகள் நிறைந்திருக்கின்றன. இச் சொற்பொழிவுகள் அடங்கிய விவேகானந்தரின் நூல் இந்திய விடுதலைப்போர் நடந்த போது 'இந்திய தேசியத்திற்குப் பைபிள்' என்று அழைக்கப்பட்டது.விவேகானந்தரால் முதலில் வங்கத்தில் தேசிய எழுச்சி தோன்றியது. பிறகு அது இந்தியா முழுவதும் பரவியது. பின்னர் அது மகாத்மா காந்தியடிகள் தலைமையில் நல்ல வடிவம் பெற்றது. விவேகானந்தரின் தேசபக்தி கருத்துகள், இந்தியாவில் விடுதலைப் போராட்டம் தோன்ற அடித்தளம் அமைத்தன.தலைவர்கள் பார்வை :

இது குறித்து பாரதியார், "விவேகானந்த பரம ஹம்ச மூர்த்தியே இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்” என கூறியிருக்கிறார்.காந்திஜி, "சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நூல்களையும், முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, என் தாய்நாட்டின் மீதிருந்த தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று” என்று கூறியிருக்கிறார். "உண்மையில் இன்றைய இந்தியா விவேகானந்தரால் உருவாக்கப்பட்டது,” என நேதாஜி கூறியிருக்கிறார்.ராஜாஜி, "இந்தியாவையும் இந்துமதத்தையும் காப்பாற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவர் இல்லையென்றால், நாம் நமது இந்துமதத்தை இழந்திருப்போம்; இந்தியா விடுதலையும் பெற்றிருக்காது,'' என கூறியிருக்கிறார்.


இந்தியாவின் மீது நல்லெண்ணம் :

ஒவ்வொரு வருடமும், 'இந்தியக் கலாச்சார குழுவினர்' என்று, பலரை இந்திய அரசு தன் செலவில் மேலைநாடுகளுக்கு அனுப்புகிறது. இத்தகைய இந்தியக் கலாச்சார குழுவினர், இந்தியாவின் மீது ஓரளவு நல்லெண்ணத்தை மற்ற நாடுகளில் ஏற்படுத்துகிறார்கள் என்பது உண்மை.இது போன்று இந்தியாவிலிருந்து சென்ற எந்த இந்தியக் கலாச்சார குழுவும் செய்யாத அளவுக்கு, அந்நிய நாட்டவருக்கு இந்தியாவின் மீது நல்லெண்ணம் ஏற்படச் செய்தவர் விவேகானந்தர்."இந்தியா உலகை வெல்ல வேண்டும்...இந்தியா உலகின் ஆன்மிக குருவாக விளங்க வேண்டும்” என்று விவேகானந்தர் கூறியுள்ளார்.விவேகானந்தர் கூறிய, "இந்தியா உலகை வெல்ல வேண்டும்” என்பது ஆங்கிலேயர் செய்தது போன்று ஆயுத பலத்தாலும், பிரித்தாளும் சூழ்ச்சியாலும் அல்ல. "உலகிற்கு அமைதி தரும் கருத்துகளாலும், இந்தியாவின் ஆன்மிகச் சிந்தனைகளாலும் இந்தியா உலகை வெல்ல வேண்டும்,” என்றே கருதினார். இதை அவர், "ஓ இந்தியாவே விழித்தெழு! உன்னுடைய ஆன்மிகத்தால் உலகை வெற்றிகொள்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.இந்தியாவில் இந்துமதத்தில் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. "இவர்கள் அனைவரையும் ஒரு குடையின் (கொடியின்) கீழ் கொண்டுவர முடியுமா?” என்றால், "முடியாது” என்றுதான் சொல்ல வேண்டும். ஓர் ஆன்மிகத் தலைவரின் கீழ் இந்தியர்கள் எல்லோரையும் ஒன்றுபடுத்துவது என்பது இயலாத காரியம்.அப்படி முயற்சி செய்தால் பெரும்பாலான இந்துக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக விவேகானந்தர் இருப்பார் என்று சொல்லலாம்.

விவேகானந்தர் மறைவதற்கு முன் உலகிற்கு வழங்கிய கடைசி உபதேசம் இது: இந்தியா ஆன்மிக பூமி, அமரத்துவம் வாய்ந்த பூமி. உலக வரலாற்றில் சில நாடுகள் சில சமயங்களில் எழுச்சி பெற்றிருக்கும்; உலக வரலாற்றில் சில சமயங்களில் சில நாடுகள் வீழ்ச்சி பெற்றிருக்கும். ஆனால் இந்தியா அமரத்துவம் வாய்ந்த பூமி. இறைவனைத் தேடுவதிலேயே ஈடுபட்டால் இந்தியா என்றும் வாழும். அரசியலையும், சமூகச் சச்சரவுகளையும் தேடிப் போனால் இந்தியா செத்துவிடும்.
-சுவாமி கமலாத்மானந்தர்,
தலைவர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்,
மதுரை. 0452-268 0224.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.p.poosaidurai - Ramanathapuram,இந்தியா
12-ஜன-201517:14:17 IST Report Abuse
s.p.poosaidurai அழியாத ஒரு ஆத்தமா இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டு மனித நேயம் வளர மனித பிறப்பின் நோக்கம் என்ன என்பதை போதிக்கும் அவதார புருஷராக தோன்றிவரும் சுவாமி விவேகானந்தரை வணங்கி அவரை பற்றி தனக்கு தெரிந்தவர்களிடம் அவரை பற்றி தேடி அறிந்து கொள்ளுங்கள் என்ற அறிமுகத்தை முன்வைத்து அவரது கனவு நனவாக்க எல்லாம் வல்ல பரம்பொருள் என்றும் இந்த பூ உலகத்தில் புதிய அற்புதங்களை படைக்க சுவாமியை வணங்கவும் வாழ்த்தவும் கடமைபட்டுள்ளேன். ஹரே கிர்ஷ்ணா ஹரே ராமா
Rate this:
Share this comment
Cancel
paavapattajanam - chennai,இந்தியா
12-ஜன-201516:13:25 IST Report Abuse
paavapattajanam அடபாவி மக்களா இங்கே இருக்கும் கிழ தலைவர்கள் இவரை பற்றி பேச்சுக்கு கூட பேசியது கிடையாதே - அவர்களுக்கு தோதான ஆள் அவரில்லை போலும் - இவர்களுக்கு - அரசியல் சாக்கடையில் விழுந்து கரை படாமல் தப்பித்தவர்களை வைத்துகொண்டு அரசியல் நடத்தவேண்டும் - அதற்கு 1000 அல்லக்கைகள் வேண்டும் - அவ்வளவுதான் - அவர்களுக்கு விவேகானந்தர் என்ற ஒளி தெரியாது - ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
12-ஜன-201513:51:42 IST Report Abuse
Snake Babu விவேகானந்தர் ஓர் 'ஆன்மிக சூப்பர் மார்க்கெட்' மறுக்க முடியாத உண்மை, ஞான தீபம் 16 பாகங்கள் முழுமையான தொகுப்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் உச்சம். குறிப்பாக ராஜயோகம், பதஞ்சலி தெளிவுரை. அனைவருக்கும் ராஜயோகத்தை கொண்டு சேர்த்த பெருமை. அதேபோல கர்மயோகம், பக்தியாகம், ஞான யோகம், ஒவ்வொன்றும் பருக பருக தேகிட்டாத கருவுலங்கள். இப்படி பலவற்றை சொல்லிக்கொண்டே போகலாம். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X