மனம் இருந்தால் எப்போதும் படிக்கலாம்!| Dinamalar

மனம் இருந்தால் எப்போதும் படிக்கலாம்!

Added : ஜன 12, 2015
Advertisement

யாரை சந்தித்தாலும், கடைசியாக நீங்கள் பார்த்த படம் எது என்று கேட்டால் போதும், பதில் மளமளவென்று கொட்டும். ஆனால், கடைசியாக நீங்கள் வாசித்த புத்தகம் எது கேள்வி கேட்டால் போதும். 'அது வந்துங்க... அது வந்துங்க...' என, வானத்தை பார்க்க துவங்கி விடுவர். அழுத்திக் கேட்டால், 'நேரம் இல்லை' என, பதில் வந்து விடும். சாப்பிடும் போது கூட, படம் பார்க்கும் நமக்கு, படிப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாதா? இதுகுறித்து, எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கூறியதாவது: படிப்பது ஒரு அனுபவம். படிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் வந்து விட்டாலே போதும்; நேரம் தானாக ஒதுக்கப்படும். அந்த எண்ணம் நம் மனதில் இருப்பதில்லை. அதற்கு புத்தகங்கள் குறித்த ஆர்வம் வேண்டும். சிறு வயதில் இருந்தே, அந்த ஆர்வத்தை ஊட்ட வேண்டிய பெற்றோர், அதை செய்வதில்லை. இவ்வாறு, நாஞ்சில் நாடன் தெரிவித்தார். எழுத்தாளர் ஜெயமோகன் கூறியதாவது:நம் நாட்டில், எவ்வளவு பெரிய கடுமையான உழைப்பாளி ஆக இருந்தாலும், எட்டு மணி நேரத்துக்கு மேல் உழைப்பதில்லை. உறங்கியது போக, ஐந்து மணி நேரம் உள்ளது. அதை பயன்படுத்திக் கொள்ளலாம். தமிழர்கள் அரட்டையில் தங்கள் நேரத்தை வீணாக்கிக் கொள்வர். ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய இரண்டு மணிநேரம் அலைபேசியில் பேசுகின்றனர். இதை எல்லாம் ஒழுங்குபடுத்தினால், படிப்பதற்கு நேரம் கிடைக்கும். 4 மணி நேரம், தொலைக்காட்சி பார்ப்போருக்கு, 2 மணிநேரம் படிக்க நேரம் ஒதுக்க முடியாதா?இவ்வாறு, கேள்வி எழுப்புகிறார் எழுத்தாளர் ஜெயமோகன். நாகர்கோவிலில், ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் எழுத்தாளர் சுந்தர ராமசாமி. இடைவிடாத வியாபார நெரிசல்களுக்கு மத்தியிலும், தமிழின் மிகச்சிறந்த புனைகளை எழுதினார். அவருக்கு, வியாபாரம் என்பது, வாழ்க்கை சம்பந்தப்பட்டது. ஒருபோதும் தன் பொறுப்பிலிருந்து அவர் நழுவியதே இல்லை. அதேநேரம், உலக இலக்கியத்துக்கான தமிழின் பங்களிப்பையும் அவர், வழங்க தவறியதில்லை. ஜெயமோகன், இருபது விரல்களும், பத்து கண்களும் படைத்தவர் என, இலக்கிய உலகில் அறியப்பட்டவர். தினசரி, 200 பக்கங்கள் படிப்பதையும், 80 பக்கங்களாவது எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் தன் அரசுப் பணியில் எந்த குறையும் இல்லாமல் பணிபுரிந்து, தமிழின் குறிப்பிடத்தகுந்த நாவல்களை எழுதினார். தேர்தலில் பயன்படுத்தப்படும் இயந்திர ஓட்டுப்பெட்டியை கண்டுபிடித்த எழுத்தாளர் சுஜாதா, எப்போதும் கேட்டாலும், முதல்நாள் இரவு படித்த புத்தகங்களின் பட்டியலை அடுக்குவார். இத்தனைக்கும், சிறிது நேரம் கூட ஓய்வு கிடைக்காத உயர் பொறுப்பில், அவர் இருந்தார். நேரு, பிரதமராக இருந்தபோது,'படிப்பதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?' என, பத்திரிகையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். உடனே நேரு, ''எனது, 24 மணி நேரத்திலிருந்து திருடுகிறேன்,'' என்றார். இன்று இணையத்தில் வாசிக்கிற வர்களின், எண்ணிக்கை அதிகம் என்று கூறப்படுகிறது. முகநுால், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்தும் நேரம், திரைப்பாடல், படம் பதிவிறக்கம் போன்ற பயன்பாட்டுக்காக செலவிடும் நேரம் ஆகியவற்றை ஒப்பிடுகையில், வாசிப்புக்காக ஒதுக்கப்படும் நேரம் குறைவு. பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணிக்கும் போது, படிப்போர் இன்னும் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் எண்ணிக்கையில் குறைவு. சென்னை போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தில், பயணத்தின் போது படிப்பதற்கு நிறைய நேரம் உண்டு. மொத்தத்தில், படிக்க வேண்டும் என்ற மனம் இருந்தால், படிப்பதற்கு நிச்சயம் நேரம் கிடைக்கும்.
- நமது சிறப்பு நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X