குழந்தைகளுக்கு கதை எழுதும்போது அறிவை தூர வைத்து விட வேண்டும்!| Dinamalar

குழந்தைகளுக்கு கதை எழுதும்போது அறிவை தூர வைத்து விட வேண்டும்!

Added : ஜன 12, 2015
Advertisement

நவீன தமிழ் இலக்கியத்தின் மூத்த எழுத்தாளரான க.வை.பழனிசாமி, எட்டு கவிதை புத்தகங்களையும், இரண்டு நாவல்களையும், ஒரு சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கவிதை தொகுப்பு வெளியிடுவதற்கு முன்பே, 'கண்மணிக்கு அப்பாவின் கடிதங்கள்' என்ற பெயரில், குழந்தைகளுக்கான கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளிடம் கதை சொல்வதற்காக வெளியிடப்பட்ட 'ஆதிரையின் கதசாமி' என்ற கதை புத்தகம், தனிச்சிறப்பு வாய்ந்தது. குழந்தைகள் கதைகளில், தனிச்சிறப்பான இடத்தை பெற்றது.தன் எழுத்துக்கள் குறித்து, க.வை.பழனிசாமி கூறியதாவது: குழந்தைகளுக்கான இடத்தை நோக்கி நகர்த்து வதே, எல்லா வகையான இலக்கியங்களின் இலக்காக இருக்க முடியும். ஏனெனில் குழந்தைகளின் உலகம் தான், பொறாமையற்றது; சூது, வாது இல்லாதது; பேரன்பு கொண்டது. ''குழந்தைகளுக்கு கதை சொல்வதன் மூலமாகவே, நாம் கதை சொல்ல பழகுகிறோம்,'' என, எழுத்தாளர், அம்பை சொல்வார். அது, ஆயிரத்தில் ஒரு வார்த்தை. ஒரு குழந்தை ஆர்வமாக கதை கேட்கிறது என்றால், அந்த கதை சுவாரசியமாக இருக்க வேண்டும். கற்பனைகளோடு இருக்க வேண்டும். அப்போது தான், குழந்தை கதை கேட்க ஆரம்பிக்கும். இல்லை என்றால், அடுத்த வேலையை பார்க்க போய்விடும். எனவே, குழந்தை களுக்கு கதை சொல்ல துவங்குவதன் மூலமே, நல்ல இலக்கியத்தை எழுதும் பயிற்சியில் நாம் தேர்வாகிறோம். பெரியவர்களுக்கு கதை எழுதும் போது, அனுபவங்களை மட்டுமே பகிர்கிறோம். ஆனால், குழந்தைகளுக்கான எழுத்தில், அன்பை கோருகிறோம். அது தான், அதன் தனிச்சிறப்பு. ஆனால், குழந்தைகளுக்காக துவங்கப்படும், வெகுஜன ஊடகங்கள் எல்லாம், குழந்தைகள் என்றால், இப்படித் தான் சிந்திப்பர் என்ற வரையறைக்குள் முடக்கி விடுகின்றனர். அது தவறு. குழந்தைகளுக்கான கதைகளை எழுதும் போது, அறிவை துார வைத்து விட வேண்டும். அவர்களின் உலகத்தில், குயில் பேசும்; மயில் பறக்கும். கணினி ஓடும். மேசை துள்ளும். எனவே, அவர்களுக்கு கதை சொல்லும் போது, பெரியவர்களுக்கான அறிவை நம் மூளையில் இருந்து ஒதுக்கி விட வேண்டும். ஒரு பொம்மையை குழந்தை பார்க்கிறது என்றால், அது பார்க்க மட்டும் செய்வதில்லை. அதனோடு பேசும். மற்ற பொருட்களை பொருத்திப் பார்க்கும். அது தான் குழந்தை. அதை நோக்கித் தான், நாம் எல்லோரும் செல்ல வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

பிடித்த புத்தகத்தை வாங்கி சுதந்திரமாக படிக்கிறேன்!
நான், 9ம் வகுப்பு படிக்கும்போதே, நுாலகம் சென்று 'சிறுவர் மலர்' போன்ற புத்தகங்களை படித்து வந்தேன். அதன்பின், சிறுகதை, நாவல் படிக்க துவங்கினேன். பணிக்கு சேர்ந்தபின், ஐந்து ஆண்டுகளாக புத்தகம் வாங்கி படித்து வருகிறேன். பணிச் சூழல் காரணமாக, நுாலகம் செல்வது, இரவல் வாங்குவது குறைந்துவிட்டது. பிடித்த புத்தகத்தை நானே வாங்குவதால், சுதந்திரமாக படிக்க முடிகிறது. ஒன்றுக்கு பலமுறை விமர்சனம் கேட்டு தான் புத்தகம் வாங்குவேன். வேலைப்பளு, மன உளைச்சலை போக்கியதே புத்தகம் தான். என் அறிவு வளர்ச்சிக்கு வித்திட்டவை, சுஜாதா புத்தகங்கள்.


கணபதி சங்கர்மென்பொருள் பொறியாளர், திருவான்மியூர்


போட்டியிட கற்றுக் கொடுத்தவை புத்தகங்கள்!
நான், இயல்பாகவே திரைப்பட பாடல்களின் ரசிகை. அதனால், பாடல்களில் உள்ள வரிகளின் நயத்தை ரசிப்பேன். கண்ணதாசன், வைரமுத்து, வாலி உள்ளிட்ட கவிஞர்களின் ஏற்பட்ட ஈர்ப்பு அவர்களது கவிதைகளை தேடிப் பிடித்து வாசிக்க வைத்தது. கவிதை ஈர்ப்பு, கட்டுரை, கதைகளின் மேல் பரவியது. இப்போது, ஆங்கிலம், தமிழ் நாவல்களை அதிகம் விரும்பி படிக்கிறேன். இறையன்பின் தன்னம்பிக்கை கட்டுரைகள், எனக்கு மிகவும் பிடிக்கும். இவை அன்றி, ஆங்கில செய்தி தாள்களையும், பொது அறிவு நுால்களையும், கன்னிமாரா நுாலகத்தில் தேடித்தேடி படிப்பேன். அந்த பழக்கம் தான், எனக்குள், போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் ஆவலை தந்தது. இப்போது, ஐ.ஏ.எஸ்., பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ளேன்.ரோகிணிபொருளியல் மூன்றாமாண்டு, அண்ணா ஆதர்ஷ் கல்லுாரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X