மளிகைக் கடைக்காரரு மேல கேசு... மாமூலுக்கு தரலையாம் காசு!

Added : ஜன 13, 2015
Advertisement
மளிகைக் கடைக்காரரு மேல கேசு...  மாமூலுக்கு தரலையாம் காசு!



நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்...!கடந்த வருடம் நடந்ததெல்லாம் பழைய ஏட்டிலே...
அதிகாலையில், வெளியில் 'சில்'லென்று காற்று வீச...பஸ்சுக்குள் பண்பலையில் பரவிய சுசிலா அம்மாவின் குரல், செவிகளில் நுழைந்து, இதயத்துக்குள் ஊடுருவிக் கொண்டிருந்தது. ஜன்னலோரமாய் உட்கார்ந்திருந்த மித்ரா, சூலுார் சாலையோரம் வயல்களில் இருந்த பனி மூட்டத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.''மித்து! 1970ல வந்த பாட்டு. உன்னோட ஜெனரேஷனையும் ரசிக்க வைக்குது பார்த்தியா. அதான் பழசோட மகிமை!,'' என அருகிலிருந்த சித்ரா, மெதுவாய் சீண்டினாள்.''பாட்டுன்னா பழசை ரசிக்கலாம். எல்லாத்துலயும் பழசையே வச்சிருந்தா, மத்தவுங்க என்ன பண்றது?,'' என்றாள் மித்ரா.''ஏன்டி! நான் பாட்டைப் பத்திப் பேசுறேன். நீ ஏதோ அரசியல் பாட்டு பாடுற மாதிரி இருக்கே!,'' என்றாள் சித்ரா.''அக்கா! இது எம் பாட்டு இல்லை. சிட்டியில இருக்கிற ஆளும்கட்சிக்காரங்க பல பேரு பாடுற அழுகைப்பாட்டு!,''''உட்கட்சித் தேர்தல்னா இந்த அழுகாச்சியெல்லாம் இருக்கத்தான் செய்யும். நீ சொல்றது எந்த ஏரியா?,''''சவுரிபாளையத்துல தான். பத்து வருஷமா கம்யூனிஸ்ட் ஜெயிச்ச ஏரியாவுல, கஷ்டப்பட்டு அ.தி.மு.க.,வை ஜெயிக்க வச்சவரு, வார்டு செயலாளர் பதவி கேட்ருக்காரு. அதுக்கு 'பழைய ஆளுங்களை மாத்தக்கூடாது'ன்னு மேல சொல்லிட்டாங்கன்னு, மறுத்துட்டாங்க. கடுப்பான அவரு, தன்னோட மனைவிய கவுன்சிலர் பதவியை ராஜினாமா பண்ணச் சொல்லிருக்காரு,''''அச்சச்சோ! அப்புறம் என்ன ஆச்சு?,''''மத்தவுங்க சமாதானப்படுத்தி, தடுத்துட்டாங்க,'' என்றாள் மித்ரா.''இந்த தேர்தல்ல, ரொம்பவும் கொதிக்கிற ரெண்டு எம்.எல்.ஏ.,க்களை மாநகர மன்னரு சமாளிச்சிட்டாராம். பேருலயே மணக்கிற எம்.எல்.ஏ.,தான், இருக்கிற தெம்புக்கு மேலயே எகிறிருக்காரு. ஆனா, கண்டிப்பா பதவி கொடுக்கணும்னு அவரு கேட்ட ரெண்டு பேருமே, ஒண்ணுக்கும் உதவாதவங்களாம். அதனால, மன்னரு கடுப்பாகி, 'செம டோஸ்' விட்டு அனுப்பிட்டாராம்,'' என்றாள் சித்ரா.''ஆளும்கட்சியில கூட பரவாயில்லை. டிஎம்கேல நடந்த கூத்தைக் கேட்டு. நான் மெர்சலாயிட்டேன்...!,'' என்று ராகமாய் இழுத்தாள் மித்ரா.''ஐ....புதுப்பாட்டு. புதுத்தகவலா?,'' என்றாள் சித்ரா.''ஆமாக்கா! சிட்டிக்குள்ள ஜெயிச்ச வீரமான அந்த உடன்பிறப்பு, காட்டூர்லயிருந்து ஒருத்தரை ஓட்டுப் போட சென்னைக்குக் கூப்பிட்டுப் போயிருக்காரு. அப்போ, அவுங்க அம்மா திடீர்னு இறந்துட்டாங்களாம். அவரு அழுது புரண்டு, கோயம்புத்துாருக்குக் கிளம்பணும்னு துடிச்சிருக்காரு. அதுக்கு அந்த வீரரு, 'ஓட்டுப்போட்டு தான் போகணும்'னு கண்டீஷனா சொல்லிட்டாராம்!,''''அடப்பாவமே! என்ன கொடுமை மித்து?,''''கடைசியில வேற வழியில்லாம, அவரு இருந்து ஓட்டுப் போட்ருக்காரு. அப்புறமா, அவரை 'ஃபிளைட்'ல அனுப்பி வச்சாராம்!,'' என்றாள் மித்ரா.''பரவாயில்லை. அதையாவது செஞ்சாரே....!'' என்றாள் சித்ரா.''என்ன பரவாயில்லை...? இவரை 'ஃபிளைட்'ல அனுப்புனவரு, ஹெரனியா பேஷன்ட் ஒருத்தரை, இங்கயிருந்து போறப்ப 'ஃபிளைட்'ல கூப்பிட்டுப் போயிட்டு, ஓட்டுப் போட்ட பிறகு, வர்றப்ப வண்டியில தான் வரணும்னு சொல்லி, பாடாப்படுத்திட்டாராம்,'' என்றாள் மித்ரா.''பாடாப்படுத்துறதுன்னா, நம்ம போலீஸ் டிபார்ட்மென்ட்ல தான் டிரெயினிங் எடுக்கணும். டீசலுக்கு காசு தரலைன்னு பீளமேட்டுல இருக்கிற ஒரு மளிகைக் கடைக்காரரு மேல போலீஸ்காரங்க பொய்க்கேசு போட்டு, பாடாப்படுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.''டீசலுக்கு எதுக்குக்கா கடைக்காரரு காசு தரணும்?,'' என்று குறுக்குக் கேள்வி கேட்டாள் மித்ரா.''என்னடி கேள்வி கேக்குற...எந்த போலீஸ் வண்டிக்கு, கவர்மென்ட் காசுல டீசல் போடுறாங்க?. இந்த கடைக்காரருதான், அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் வண்டிக்கு மாசாமாசம் டீசலுக்கான காசை மாமூலா கொடுத்துட்டு இருந்தாராம். வியாபாரம் சரியில்லைன்னு, ரெண்டு மூணு மாசமா, அந்த காசை கொடுக்கலை. உடனே, அவரு மேல பொய்க்கேசு போட்டுட்டாங்க,'' என்றாள் சித்ரா.''அது சரி! நல்லபடியா வியாபாரம் பாக்கிறவரு, ஏன் போலீசுக்கு மாமூல் கொடுக்கணும்; லாஜிக் இடிக்குதே!,''''ஒண்ணும் இடிக்காது. ஒவ்வொரு ஸ்டேஷன்லயும் இது நடக்குறது தான். ஒரு ஸ்டேஷனுக்கு மாசத்துக்கு, 40 ஆயிரம் ரூபா எக்ஸ்ட்ரா செலவு வருமாம். அதெல்லாம் இப்பிடித்தான் கடையில வசூல் பண்ணுவாங்க. மாமூல் தரலைன்னா, கடைக்கு முன்னால எந்த வண்டியையும் நிறுத்த விடமாட்டாங்க. ஒரு 'நோ பார்க்கிங்' போர்டு போட்ருவாங்க. அப்புறம் எப்பிடி வியாபாரம் பண்ண முடியும்?,''''ஓ! இது தான் கதையா? அந்த ஸ்டேஷனைப் பத்தி, ஏற்கனவே, ஏகப்பட்ட 'கம்பிளைன்ட்' இருக்குக்கா. அந்த ஏரியாவுல இருக்கிற கடைகள்ல அடிக்கடி திருட்டு போயிட்டே இருக்கு. ஆனா, அக்யூஸ்ட்டைப் பிடிச்சாலும், திருடு போனதை முழுசா மீட்டுட்டாலும், சம்மந்தப்பட்டவுங்களுக்கு முழுசாப் போய்ச் சேராது!,'' என்றாள் மித்ரா.''இதுவும் எல்லா ஸ்டேஷன்கள்லயும் நடக்கிறது தான?,'' என்றாள் சித்ரா.''நீ சொல்றது உண்மை தான். ஆனா, இந்த ஸ்டேஷன்ல அது ரொம்ப ஓவரு. சமீபத்துல, எனக்குத் தெரிஞ்ச ஒரு 'கிப்ட் ஷாப்'பை உடைச்சு, 40 ஆயிரம் ரூபா பணத்தைக் கொள்ளையடிச்சிட்டாங்க. மறுநாளே அக்யூஸ்ட்டைப் போலீஸ் பிடிச்சிருச்சு. ஆனா, கடைக்காரர்ட்ட 'வெறும் 15 ஆயிரம் திருடு போனதா' எழுதிக் கொடுக்கச் சொல்லிருக்காங்க. அவரு, கேசும் வேண்டாம், கேஷூம் வேண்டாம்னு போயிட்டாரு,'' என்றாள் மித்ரா.''கேசு, கேஷ்ன்னு சொன்னதும், வெஸ்ட்ல இருக்கிற ஒரு போலீஸ் ஆபீசர் ஞாபகம் வந்துச்சு. அவரு ஏரியால, இதுவரைக்கும் ஒரு குறிப்பிட்ட ஏரியாவைச் சேர்ந்தவுங்க மட்டும் தான், திருட்டு விசிடி வியாபாரம் பண்ணிட்டு இருந்திருக்காங்க. இப்போ, மேல கவர்மென்ட் மாறுனதும், காவி கட்டுன சில பேரு போய், 'நாங்களும் அதே வியாபாரம் பண்ணப்போறோம்'னு சொல்லிருக்காங்க. இவரும் 'ஓகே' சொல்லிட்டாரு,'' என்றாள் சித்ரா.''அடடா! மத நல்லிணக்கத்தை பேணி காக்குறாரு போலிருக்கு!,'' என்று சிரித்தாள் மித்ரா.''ஆமாமா! நல்லாவே பேணி காக்குறாரு. இப்போ, அவரு ஏரியாவுல மட்டும் திருட்டு விசிடிக்கடைங்க 40 இருக்கு. எல்லாக் கடையிலயிருந்தும் மாமூல் கொட்டுது. சமீபத்துல, ரெண்டு தரப்பும் வேற 'கலர்'ல மோதிக்கிறது மாதிரி தெரிஞ்சதால, எல்லாக் கடையையும் மூடச் சொல்லிட்டாராம்,'' என்றாள் சித்ரா.''அதெல்லாம் பொன் முட்டையிடுற வாத்தாச்சே. அதை மூடிட்டாரா?,''''தற்காலிகமாத்தான். அந்த ஏரியாவுல கோல்டு கொடுக்கல் வாங்கல்ல வர்ற எல்லாப் பஞ்சாயத்தையும் இவர் தான் 'டீல்' பண்ணுவாராம். எதுக்குமே கேசு போடுறதில்லையாம். பான் புரோக்கர், பான் மசாலா விக்கிறவுங்கன்னு எல்லாத்துலயும் காசு கொட்டோ கொட்டுதுன்னு கொட்டுதாம்,''''அக்கா! இப்பிடி இருந்தா, 'பொறுத்தது போதும்; பொங்கி எழு'ன்னு 'மனோகரா' பாணியில, அந்த இடத்துக்கு வேற யாராவது 'டிரை' பண்ணுவாங்களே?,'' என்றாள் மித்ரா.''அது தெரியலை!. ஆனா, நம்ம ஊர்ல தான் சில பேரு வந்தாங்கன்னா, அப்புறமா இங்கயிருந்து நகர்றதே இல்லியே!,'' என்றாள் சித்ரா.''நீ யாரையோ குறிப்பிட்டுச் சொல்றது மாதிரி இருக்கே?,'' என்றாள் மித்ரா.''நம்ம ஊர்ல, மூன்றரை வருஷமா ஆணியடிச்சது மாதிரி ஒரு பொறுப்புல இருந்துட்டு, 'லேண்ட் அக்யூசேஷன்' கோப்புகளை எல்லாம் தேக்கி வச்சு, எல்லா வேலையும் இழுக்கிறதுக்குக் காரணமா இருந்தாங்களே...!''''ஓ...நல்லா ஞாபகம் இருக்கே. அந்த 83 ஆபீசர்ஸ் பட்டியல்ல இருந்த மேடம் தான....அவுங்க திரும்ப வந்துட்டாங்களா?,''''யெஸ்...யெஸ்...அவுங்களே தான். இதுல என்ன கொடுமைன்னா, நிலம் கையகப்படுத்துற வேலைக்கே அவுங்களை திரும்ப எடுத்திருக்காங்கங்கிறது தான்!,'' என்றாள் சித்ரா.''அந்த வேலை இப்போதைக்கு நடக்காதுன்னு முடிவு பண்ணி, அங்க 'போஸ்ட்டிங்' போட்ருப்பாங்க!,'' என்றாள் மித்ரா.''இதுல வேடிக்கை என்னன்னா, அவரை இங்க இருந்து மாத்துன அதே வி.ஐ.பி., தான் இப்போ திரும்ப கொண்டு வந்துட்டாராம்!'' என்றாள் மித்ரா.''ஏன் மித்து...! அந்த காதல் ஜோடி கடத்தல் மேட்டர்ல, பத்துப் பேரு மேல கேசு போட்டாங்களே. ஒருத்தரைக் கூட 'அரெஸ்ட்' பண்ணலையா?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.''ஆமாக்கா! போலீஸ் மூவ்மென்ட் எல்லாமே, அவுங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. சீக்ரெட் கசிய விடுறது தான் யார்ன்னு தெரியலை!,'' என்று மித்ரா சொல்லும் போதே, பஸ் நின்றது. கண்டக்டர் 'குமரன் கோட்டம்' என்று குரல் கொடுக்க, இருவரும் வேகமாக இறங்கி, கோவிலை நோக்கி நடந்தார்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X