""கட்சி பெயரை காப்பாத்தணும்னு, சி.எம்., வரைக்கும் பிரச்னையை கொண்டு போயிட்டாங்க,'' என ஆரம்பித்தாள் மித்ரா.""முதல்வரிடம் கொண்டு போற அளவுக்கு பெரிய பிரச்னையா?'' என்று அதிர்ச்சியாக கேட்டாள் சித்ரா.""நம்ம மாநகராட்சி பிரச்னைதாங்க. நவ., மாசம் நடந்த "மீட்டிங்'கில், மேயர் விருப்பத்தின் பேரில், மூணு தீர்மானம் நிறைவேத்துனாங்க. பல லகரம் "கை'மாறியிருக்குனு ஆளும்கட்சிக்குள் புகைச்சல் ஆச்சு. தீர்மானத்தை ஒத்திவைக்கணும்னு மேயருக்கு எதிரா போராடினாங்களே? அந்த விஷயம்தான். மேயர் கொண்டு வந்த தீர்மானத்தை ஒத்திவச்சா, கட்சிக்குத்தானே கெட்ட பெயர் ஏற்படும்னு, முதல்வர் வரைக்கும் பிரச்னையை கொண்டு போயிருக்காங்க.""நடந்தது, நடந்ததா இருக்கட்டும்; இனி, எல்லோரையும் அரவணைச்சு போகணும்; மன்ற கூட்டம் நடத்துறதுக்கு முன்னாடி, கட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களை அழைத்து ஆலோசிக்கணும்னு "அட்வைஸ்' பண்ணியிருக்காங்க. அதனால, போன வாரம் நடந்த கூட்டத்தில், அதைப்பத்தி யாரும், எதுவும் பேசலை,'' என்றாள் மித்ரா.""அப்படீன்னா... ஆளும்கட்சி மட்டத்தில் நடந்த அதிகார போட்டியில், மேயர் நெனைச்சது நடந்திருக்குனு, சொல்லு,'' என்ற சித்ரா, ""மினிஸ்டர் டென்ஷனாகி திட்டினாராம்? அந்தக் கதை தெரியுமா?'' என்று அடுத்த மேட்டருக்கு தாவினாள்.""என்னாச்சு?... எதுக்கு டென்ஷன் ஆனார்,'' என, பதற்றமானாள் மித்ரா.""மங்கலம், இடுவாய் பகுதியில் இலவச வேட்டி, சேலை கொடுக்கற நிகழ்ச்சியில், மினிஸ்டர் கலந்துக்கறது தெரிஞ்சும், வி.ஏ.ஓ., உட்பட வருவாய்த்துறையில் யாரும் வரலை. பங்ஷனுக்கு வந்த மினிஸ்டர், அதிகாரிகள் தரப்பில் யாரும் வராததை கேள்விப்பட்டு, வி.ஏ.ஓ.,வை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சத்தம் போட்டிருக்கார்,'' என்றாள் சித்ரா.சுடச்சுட இஞ்சி டீயும், முந்திரி பக்கோடா வும் கொடுத்து உபசரித்தாள் மித்ரா.பக்கோடாவை எடுத்து மென்ற சித்ரா, ""காஸ் மானியத்துக்கு பேங்க் கணக்கு எண் கொடுத்து பதிவு பண்ணியாச்சா?'' என்று கேட்டாள்.""இல்லைக்கா... பேங்க்கில் கணக்கு துவக்க "அப்ளிகேசன்' கொடுத்திருக்கேன். மூணு வாரம் ஆச்சு; இன்னும் "பாஸ் புக்' கெடைக்கலை."பாஸ் புக்' கிடைச்சாதானே ஜெராக்ஸ் எடுத்து கொடுக்க முடியும்?'' என்று நொந்துகொண்டாள் மித்ரா.""இதே பிரச்னைதாம்பா... திருப்பூர்ல நெறைய்யா பேருக்கு இருக்கு. மாவட்டத்துல புதுசா 2.50 லட்சம் பேருக்கு கணக்கு துவங்கியாச்சுனு, "கணக்கு' சொல்றாங்க. அவங்களுக்கு "பாஸ் புக்' கொடுத்துட்டாங்களானு அதிகாரிக கண்டுக்கவே இல்லை. அதனால, காஸ் மானியத்துக்கு 40 சதவீதத்தினர் மட்டுமே இதுவரைக்கும் பதிவு செஞ்சிருக்காங்க,'' என்றாள் சித்ரா.""இதேமாதிரி, "ஜன் தன்' திட்டத்தில், "மினிமம் டிபாசிட்' இல்லாமல் கணக்கு துவக்குறதுலயும் பிரச்னை இருக்கு. வங்கி அதிகாரிகள் தரப்பில் சரியான ஒத்துழைப்பு இல்லாததால், சில வங்கிகளில் "அப்ளிகேஷன்' கொடுக்க மாட்டேங்கிறாங்க. வேற வழியில்லாமல், 500 ரூபாய் செலுத்தி, கணக்கு துவக்க வேண்டியிருக்குனு மக்கள் புலம்புறாங்க,'' என்றாள் மித்ரா.""டி.ஆர்.ஓ.,வா இருந்த பாரிவேலை, நெடுஞ்சாலைத்துறை நிலம் எடுப்பு பிரிவுக்கு, திடீருன்னு டிரான்ஸ்பர் செஞ்சிட்டாங்களே... ஏன்... என்னாச்சு...,'' என, கடைசி மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""அதுவாக்கா... அவர், யாருக்கும் வளைஞ்சு கொடுக்க மாட்டார். சிபாரிசு செஞ்சு எந்த காரியமும் சாதிக்க முடியாது. ஒரு ஆர்.ஐ., "டிரான்ஸ்பர்' கேட்ட விவகாரத்தில், சி.எம்., ஆபிசில் இருந்தும், "ரெவின்யூ மினிஸ்டர்' நேரடியாக பேசியும், பல தடவை சொல்லியும், செஞ்சு கொடுக்கலை. ஒத்துப்போகாத அதிகாரி தேவையில்லைனு, தர்மபுரிக்கு "டிரான்ஸ்பர்' செஞ்சிட்டதா வருவாய்த்துறையில் பேசிக்கிறாங்க,'' என, மித்ரா சொல்லி முடிப்பதற்கும், பக்கோடா தட்டு காலியாவதற்கும் சரியாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE