நகருக்குள்ளே நடக்குது கேசு... நாயை வித்து எடுத்தாங்க காசு!| Dinamalar

நகருக்குள்ளே நடக்குது கேசு... நாயை வித்து எடுத்தாங்க காசு!

Added : ஜன 13, 2015
Share
''மேடம்! இனிமே மார்க்கெட்டுக்கு வர்றப்ப, நீங்க மட்டும் வாங்க. பத்து இருபது விலை குறைச்சுத் தர்றேன். ஆனா, இந்த வாயாடியை மட்டும் கூப்பிட்டு வராதீங்க. என்னால பேசி...முடியலை!,'' என்று காய்கறிக் கடைக்காரர் கிண்டலடிக்க, சேர்ந்து சிரித்தார்கள் சித்ராவும், மித்ராவும். திருப்பூர் குமரன் மார்க்கெட், பொங்கலுக்கான வியாபாரத்தில் படுபரபரப்பாக இருந்தது. கரும்பு, மஞ்சள், பூளைப்பூ
நகருக்குள்ளே நடக்குது கேசு... நாயை வித்து எடுத்தாங்க காசு!

''மேடம்! இனிமே மார்க்கெட்டுக்கு வர்றப்ப, நீங்க மட்டும் வாங்க. பத்து இருபது விலை குறைச்சுத் தர்றேன். ஆனா, இந்த வாயாடியை மட்டும் கூப்பிட்டு வராதீங்க. என்னால பேசி...முடியலை!,'' என்று காய்கறிக் கடைக்காரர் கிண்டலடிக்க, சேர்ந்து சிரித்தார்கள் சித்ராவும், மித்ராவும்.


திருப்பூர் குமரன் மார்க்கெட், பொங்கலுக்கான வியாபாரத்தில் படுபரபரப்பாக இருந்தது. கரும்பு, மஞ்சள், பூளைப்பூ என திரும்பிய திசையெல்லாம் திருவிழாக் கோலமாயிருந்தது. ராஜவீதி, ரங்கே கவுடர் வீதிகளில் நடப்பதற்கே இடமின்றி, எங்கெங்கு காணினும் ரோட்டோரக் கடைகள் முளைத்திருந்தன.


'பொது மக்கள் தயவு செய்து, வாகனங்களுக்கு வழி விட்டு, சாலையோரமாக நடந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்...!' என்று ஒலி பெருக்கி மூலமாக, மக்களுக்கு காவல்துறை அறிவுறுத்திக் கொண்டே இருந்தது. சித்ராவும், மித்ராவும் காய்கறி வாங்கிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தனர்.


''ரோடெல்லாம் கடைய வைக்க விட்டு, வசூல் பண்ணிட்டு, அப்புறம் ரோட்டுல நடக்காதீங்கன்னு சொன்னா...என்ன அநியாயமா இருக்கு?,'' என்று கொந்தளித்தாள் மித்ரா.


''இதாவது பரவாயில்லை மித்து...ஒரு நாள் கூத்து. பண்டிகை முடிஞ்சா, கடைகளைத் தூக்கிருவாங்க. ஆனா, சிட்டிக்குள்ள பல ஏரியாக்கள்ல வாரச்சந்தைங்கிற பேர்ல, முக்கியமான ரோட்டையெல்லாம் அடைச்சுக் கடை போட விட்டு, பஸ் ஓட்றவுங்களை போலீஸ்காரங்க படுத்துற பாடு இருக்கே...!,'' என்றாள் சித்ரா.


''ஆமாக்கா! நீ சொல்றது உண்மை தான். புலியகுளத்துக்குள்ள செவ்வாய்க்கிழமை போனா, வண்டி ஓட்ட முடியாது; நடக்க முடியாது. ஒரு கடைக்கு அம்பது, நூறுன்னு போலீசு வசூல் பண்றாங்க. ராமநாதபுரம் 80 அடி ரோட்டுல, வாரச்சந்தை போட்டு இதே வேலைய ஆளும்கட்சி கவுன்சிலர் ஒருத்தரு பண்றாரு!,''


''அது யாருடி புதுசா...சந்தை போடுற அளவுக்கு 'சக்தி' படைச்ச கவுன்சிலரு?,''


''சத்தியமா உனக்குத் தெரியாம இருக்காது. அங்க விசேஷம் என்னன்னா, ஒரு கடைக்கு 35 ரூபா மட்டும் தான் வாடகையாம். இதை வசூல் பண்றதுக்குன்னே, அந்த கவுன்சிலரு ஒரு ஆள் போட்ருக்காராம். வாரத்துக்கு 200, 300 கடையாவது போடுறாங்களாம்!,'' என்றாள் மித்ரா.


''நீ வேணும்னா, இதை வசூல்னு கவுரவமா சொல்லிக்கலாம். ஆனா, ரோட்டுல கடை போட்டுப் பிழைக்கிறவுங்ககிட்ட, காசு வாங்குறதை பிச்சைன்னு தான் சொல்லணும்!,'' என்றாள் சித்ரா.


''பிச்சைன்னு நீ சொன்னதும், நம்மூர்ல பல கலைகள்ல கைதேர்ந்த ஒரு வேந்தரைப் பத்தி ஞாபகம் வந்துருச்சு. அவரு அந்தப் பொறுப்புக்கு வந்ததுல இருந்து, இதுவரைக்கும் நடத்திருக்கிற வசூல் வேட்டையப் பத்தி, ஒரு புத்தகமே போடலாம்கிறாங்க. மரங்களை வெட்டுனது, மேசைகளை வித்தது, கட்டிடம் கட்டுனது, கார் வாங்குனதுன்னு அடுக்கிட்டே போறாங்க. காம்பவுண்ட்ல இருக்கிற 'பார்பர்'ட்ட கூட, பாக்கெட்ல கைய விட்டு காசை எடுத்துருவாராம்,''


''செய்வது துணிந்து செய்ன்னு பாரதி சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டாரோ?,''


''லேட்டஸ்ட்டா ஒரு நியூஸ். மகளிர் தினத்துக்கு, லேடி ஸ்டாஃப்ஸ்களுக்கு எல்லாம் சேலை வாங்கித் தந்ததா 20 லட்ச ரூபா கணக்கு எழுதிருக்காராம். முதல்ல...இப்பிடி சேலை எடுத்துத் தர்றதுக்கே அனுமதி இருக்காங்கிறது ஒரு சர்ச்சை. அதுல, 300 ரூபா சேலைகளை வாங்கிக் கொடுத்துட்டு, ஒவ்வொண்ணும் 2 ஆயிரம் ரூபான்னு 'பில்' போட்ருக்காரு!,'' என்றாள் மித்ரா.


''ஆடிட்டிங்ல பிடிச்சிட்டாங்களா?,'' என்று ஆர்வமாய்க் கேட்டாள் சித்ரா.


''ஆமா! ஒரு ஊர்ப்பேருல இருக்கிற ஜவுளிக்கடையோட 'பில்'லை வச்சிருக்காரு. அதுவும் போலி 'பில்'லாம். இது தெரிஞ்சு, அந்தக்கடைக்காரங்களே நோட்டீஸ் கொடுத்திருக்கிறதா ஒரு தகவல்!,'' என்றாள் மித்ரா.


''இவ்ளோ 'கம்பிளைன்ட்' வருது...புரபசர்ஸ், ஸ்டாஃப்ஸ்ன்னு பல பேரும் கொந்தளிக்கிறாங்க. இந்த விஜிலென்ஸ்காரங்க என்ன தான் பண்றாங்க?,'' என்று கோபமாய்க் கேட்டாள் சித்ரா.


''அவுங்களை 'லென்ஸ்' வச்சுத்தான் இனிமே தேடணும். இதுல இன்னொரு கொடுமை என்னன்னா... இந்த வசூல் மன்னர்...அடுத்ததா விவசாயம் சொல்லித்தர்ற இடத்துல இதே பொறுப்பைக் கைப்பத்தப் போறதாச் சொல்லி, காய் நகர்த்த ஆரம்பிச்சிட்டாராம்,'' என்றாள் மித்ரா.


''யாரு கண்டா...அதுவும் நடந்தாலும் நடக்கும். இப்போ...வசூல் பண்ணித் தர்றவுங்களுக்கு தான காலமா இருக்கு. நல்லா வசூல் பண்றவுங்ககிட்டதான், அதிகாரம் குவிஞ்சு கெடக்குது!,'' என்றாள் சித்ரா.


''என்னக்கா...அப்பிடியே நைசா 'பாலிடிக்ஸ்'க்குள்ள போயிட்ட மாதிரி இருக்கு...!,'' என்ற மித்ரா, ''நம்ம ஆளும்கட்சி கவுன்சிலர் ரெண்டு பேருக்குள்ள, வசூல் பண்றதுல கடும் போட்டி நடக்குது,'' என்று தனக்குத் தெரிந்த அரசியல் மேட்டரை அவிழ்த்தாள்.


''அந்தந்த வார்டுல அந்தந்த கவுன்சிலர் மட்டும் தான வசூல் பண்ணணும். அது தான மரபு?,'' என்று சிரித்துக் கொண்டே கேட்டாள் சித்ரா.


''அதென்னவோ உண்மை தான். டாஸ்மாக்ல வசூல் பண்றதுக்குப் பொறுப்பான கருப்பு கவுன்சிலருக்கும், மூன்று மன்னர்களோட பேரைக் கொண்ட ஒரு கவுன்சிலருக்கும் ஏற்கனவே ஏகப்பட்ட உரசல். இப்போ, எட்டு வார்டுகளை உள்ளடக்குன பகுதிக் கழகத்துக்கு, அந்த கருப்பு கவுன்சிலர் தான் பொறுப்பா இருக்காரு. அதனால, அந்த ஏரியா 'டாஸ்மாக்' கடை, 'பார்' எல்லாத்துலயும் அவர் தான் வசூல் பண்றாரு,'' என்று மித்ரா சொல்லிக்கொண்டிருக்கும் போதே, குறுக்கிட்டாள் சித்ரா.


''அவருக்கு தான், ஏற்கனவே சிட்டிக்குள்ள முக்கியமான 'பார்' எல்லாம் இருக்கே. அவரு பையன், கார்ப்பரேஷன் கிரவுண்ட்ல புதுசு


புதுசா எக்ஸிபிஷன் போட்டு,


அள்ளித் தட்டுறாரே. அப்புறம்


எதுக்கு இந்த வசூலு...?,''


''இதே கேள்வியத்தான் அந்த கவுன்சிலரும் கேக்குறாரு. அதனால, அந்த பகுதிக் கழகத்து பொறுப்பை எனக்குக் கொடுங்கன்னு கேட்டு, சென்னையில போய் காய் நகர்த்திட்டு இருக்காரு!,'' என்றாள் மித்ரா.


''ஆனா, நீ சொல்ற அந்த கவுன்சிலரைப் பத்தியும் நிறையா 'கம்பிளைன்ட்' இருக்கே. அவரோட வார்டுல, புதுசா குடி தண்ணி கனெக்ஷனுக்கு மட்டுமில்லாம, பழைய 'பைப்'பை மாத்தணும்னாலே 15 ஆயிரம் ரூபா கேப்பாரு. பணம் தரலைன்னு சொல்லியே, பல வீடுகளுக்கு கனெக்ஷன் கொடுக்கிறதையே


நிறுத்தி வச்சிருக்காரு...தெரியுமா?,'' என்றாள் சித்ரா.


''கரெக்ட்க்கா! சமீபத்துல அவருக்கு எதிரா, அவரோட வார்டுல மறியலே நடந்துச்சே. இந்த விஷயத்தையெல்லாம் கருப்பு கவுன்சிலரு, மேல பெட்டிஷனா அனுப்பிருக்காரு,'' என்றாள் மித்ரா.


''கருப்பு கவுன்சிலரை விடு...; போலீஸ்ல இருக்கிற கருப்பு


ஆட்டைப் பத்திச் சொல்றேன்!,'' என்றாள் சித்ரா.


''என்னக்கா சொல்ற...போலீஸ்ல பெரும்பாலும் கருப்பு ஆடு தான இருக்கு...தெளிவாச் சொல்லு!,''


''சிட்டியில கிரைம்களைக் கண்டுபிடிக்கிற எஸ்.ஐ., ஒருத்தரு, நம்மூர்ல 350 டன் புத்தகம் காணாமப் போன விவகாரத்துல, அந்த புத்தகங்களை வாங்குன அண்ணாச்சியத் தேடி சிவகங்கைக்குப் போயிருக்காரு. அவரைப் பாத்திருந்தா, ஏதாவது தேறிருக்கும். அவரு இல்லை. அந்த வீட்டுல, 'ஆப்கன் ப்ரீடு' ஒரு நாய் இருந்திருக்கு. ஒரு லட்ச ரூபா போகுமாம். அதைத் தூக்கிட்டு வந்து, 60 ஆயிரத்துக்கு வித்துட்டாராம்,''


''அக்கா! நம்மூர்ல காக்கிச்சட்டை மருமகனோட சேர்ந்து, கட்டப்பஞ்சாயத்து பண்ணி, நிலங்களை மிரட்டி வாங்குற மாமனாரு, காதல் ஜோடி கேஸ்ல மாட்டிட்டு முன் ஜாமின் வாங்குனாருல்ல. அவரு இப்போ, பல கேஸ்ல இருந்தும் தப்பிக்கிறதுக்கு, வசமா ஒரு இடத்தைப் பிடிச்சிட்டாராம்!,'' என்றாள் மித்ரா.


''வசமா ஒரு இடம்னா...போலீஸ்லயா?,'' என்றாள் சித்ரா.


''அது தான் இல்லை...நம்மூர்ல இப்போ 'பவர்ஃபுல்'லா இருக்கிற வி.ஐ.பி.,யைப் பிடிச்சிட்டாராம். சென்னை வளசரவாக்கத்துல, ஒரு பெரிய 'பிராப்பர்'ட்டிய 27 கோடிக்கு வாங்கிக் கொடுக்க உதவிருக்காரு. பார்ட்டிய மெரட்டி, நாலரை கோடி 'கம்மி'யா வாங்கிருக்காங்களாம். வி.ஐ.பி.,யோட அன்புக்குரிய அண்ணன் பையன் பேருல தான் பத்திரம் பதிவாயிருக்காம்,'' என்றாள் மித்ரா.

''சொத்துன்னதும் ஞாபகம் வந்துச்சு. வெள்ளக்கிணறுல ஹவுசிங் போர்டுக்கு 'அக்யூசேஷன்' பண்ணுன 119 ஏக்கர் இடம், வாரியத்தோட கைய விட்டுப் போகப் போகுது. லேண்ட் ஓனர்களுக்கும் பலன் இல்லாம, போர்டுக்கும் இடமில்லாம...அந்த இடத்தை கைப்பத்துறதுக்கு ஒரு 'லேண்ட் மாபியா' வேலை பாக்குது,'' என்ற சித்ரா, '' அதை அப்புறமா பேசுவோம். இப்போ, 'பர்ச்சேஸ்'சை முடிப்போம்,'' என்று மளிகைக் கடைக்கு நகர்ந்தாள்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X