எங்களின் தேவை உங்களின் அன்புதான்...| Dinamalar

எங்களின் தேவை உங்களின் அன்புதான்...

Added : ஜன 16, 2015 | கருத்துகள் (8) | |
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானேஅஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவேபாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனேஎன்னைப்
எங்களின் தேவை உங்களின் அன்புதான்...

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்


கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே

என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்...


நல்வினை தீவினை பயன்களை அனுபவிப்பதற்காக இந்த பிறவிச்சுழலில் சிக்குண்ட எங்களை மீட்கவல்லவன் நீயே... என்ற பொருள்படும் மேற்படி சிவபுராண பாடலை கண்ணில் நீர்மல்க குரல் நெகிழ நெஞ்சுருக பாடிக்கொண்டிருந்தவர்களின் கைகளில் பிடித்திருந்த சிவபுராண புத்தகங்கள் கைகளால் பிடிக்கமுடியாமல் நழுவி நழுவி கிழே விழுந்து கொண்டிருந்தது.


காரணம் அவர்கள் அனைவரும் கைவிரல்கள் சுருங்கி அல்லது மடங்கிப்போன நிலையில் இருந்த தொழுநோய் மாற்றுத்திறனாளிகள்.


அதென்ன தொழுநோய் மாற்றுத்திறனாளிகள் என்பவர்களுக்கு ஒரு சிறுவிளக்கம்.


தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்து அந்நோயிலிருந்து மீண்டுவந்தவர்களே தொழுநோய் மாற்றுத்திறனாளிகள்.


பூமியில் பிறந்த அனைத்து உயிர்களும் கருணை காட்டப்படவேண்டியவையே என்ற சுவாமி விவேகானந்தரின் உரைக்கு ஏற்ப சென்னை மைலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்தில் கடந்த 12/01/15 ந்தேதி நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளன்று தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்வு சிவபுரார பிரார்த்தனை பாடலுடன் துவங்கியது.போலியோ பெரியம்மை போல தொழுநோயும் ஒழிக்கப்பட்டுவிட்டது என்று கடந்த காங்.அரசின் காலத்தில் வீண் ஜம்பத்திற்கு பெருமைக்காக பார்லிமெண்ட்டில் பேசியதை அடுத்து தொழுநோய் ஒழிப்பு திட்டம்தான் ஒழிந்து போனது.


உலகில் அதிக எண்ணிக்கையில் தொழுநோயாளிகள் வாழும் இந்தியாவிற்கு இதனால் வெளிநாட்டில் இருந்து வரும் மருந்து மாத்திரைகள் என்ற எல்லா உதவிகளும் நின்று போயின இங்குள்ள தொழுநோய் சிறப்பு மருத்துவமனைகளும் ஒன்றன்பின் ஒன்றாக மூடப்பட்டு வருகின்றன


மற்ற நோய்கள் வந்தால் நோயாளிகளே மருத்துவரிடம் செல்வார்கள் ஆனால் இந்த நோயானது வந்து முற்றிய நிலையில்தான் நோயாளிகளுக்கே புரியும் ஆகவே மாநில அரசு இதற்கென தனிதுறையையும் அலுவலர்களையும் ஒதுக்கி வீடுவீடாகப்போய் தொழுநோய் ஒழிப்பில் அக்கறை காட்டியது ஆனால் இப்போது அந்த துறையையே ஒழித்து பொதுத்துறையில் சேர்த்துவிட்டது.இதன் ஊழியர்களும் டெங்கு சிக்கன்குனியா ஒழிப்பிற்கு மாறிவிட்டனர்.


மைக்கோ பேக்டீரிம் என்ற ஒருவித கிருமியால் பரவும் இந்த நோயானது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த யாருக்கு வேண்டுமானாலும் வரவாய்ப்பு உண்டு ஆனால் இயற்கையாகவே நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி உண்டு என்பதால் பத்தாயிரம் பேர்களில் ஒருவர்தான் இதனால் பாதிக்கப்படுவர்.


இப்படி பாதிக்கப்படுபவர்கள் அரசின் தவறான முடிவாலும் எங்கேயும் போய் சிகிச்சை பெறமுடியாமல் பெரும்பாலும் ரோட்டில் பிச்சை எடுத்துக்கொண்டு நாயிலும் கேவலமாக தெருப்பன்றியிலும் மோசமான சூழலில் உண்டு உறங்கி தங்கள் நாட்களை கழித்துவருகின்றனர்.


ஒரு காலத்தில் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களாக இருந்து வீடுவீடாகப்போய் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தியவரும் பின்னர் மடத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தன்னார்வ தொண்டராக பணியாற்றிவரும் ஆர். சிவா ராமகிருஷ்ண மடத்து தலைவராக இருந்த சுவாமி தபசியானந்தரிடம் இந்த பிரச்னையை கொண்டு சென்றபோது 'ராமகிருஷ்ணமடம் இவர்களை அரவணைக்கும், அன்பு செலுத்தும் இவர்கள் வாழ்க்கையை முன்னெடுக்கும்' என்று ஆணித்தரமாக சொல்லி அவர்களுக்கான கருணைக்கரங்களை நீட்டியவர் அவரே.


இதன் காரணமாக ராமகிருஷ்ண மடத்தில் இப்போது அவர்களுக்கு என்று தனி அரங்கம் உண்டு மாதத்தில் குறிப்பிட்ட தினத்தில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த அரங்கில் கூடுவார்கள்.அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகள் சிகிச்சைகள் தகுந்த மருத்துவரால் வழங்கப்படும்.


இந்த தொடர் சிகிச்சையின் மூலம் கிட்டத்தட்ட 1300 பேரை அந்நோயின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.


கோவிலின் வாசலில் பிச்சைக்காரர்களாக இருந்த பலர் இப்போது அதே கோவிலில் பித்தளை விளக்குகள் விற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.இரவு நேர செக்யூரிட்டியாக பணியாற்றுகிறார்கள், துணிவியாபாரம் செய்கிறார்கள்.


இவர்கள் இப்படி சுயமாக தன்னம்பிக்கையுடன் நிற்பதை பாராட்டும் வகையில் நடந்த அந்த கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராகக்கலந்து கொண்ட பிஎச்இஎல் பொதுமேலாளர் ஜார்ஜ்சைமன் சுமார் மூன்றரை லட்சரூபாய்க்கு இவர்களுக்கு புத்தாடை எடுத்து கொடுத்திருந்தார்.தற்போதைய மடத்தின் தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் முன் இவர் பேசும்போது இவர்களது இந்த தேவையை சேவையாக செய்ய எனக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு இது என்றார்.


தனியார் மருத்துவமனைகளும் அரசு மருத்துவமனைகளும் எங்களை விரட்டியடித்த போது அன்போடு கருணையோடு எங்களை அரவணைத்து எங்களை நோயின்பிடியில் இருந்து மீட்டது ராமகிருஷ்ணமடம்தான்.


நோயின் பிடியில் இருந்து மீண்டாலும் அந்த நோய் தந்ததழும்புகள் பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும் இதனைப்பார்த்து எங்களை வெறுக்காமல் பொதுமக்கள் எங்களை நாகரீகமாக நடத்தவேண்டும் வீடு வாடகைக்கு தரவேண்டும் அள்ளிஎடுத்து அரவனைக்காவிட்டாலும் நாங்கள் உங்கள் பக்கம் வரும்போது விலகி ஒடி அவமானப்படுத்தாமல் துாரநின்றாவது கனிவாய் ஒரு புன்னகை செய்யுங்கள் எங்களுக்கு அது போதும் என்று தொழுநோய் மாற்றுத்திறனாளிகள் சார்பாக பேசியவர்கள் கண்கலங்க பேசினர் இல்லையில்லை வேண்டுகோள் விடுத்தனர்.


-எல்.முருகராஜ்.


நன்றி:இப்படி ஒரு விழா நடக்கிறது என்று தகவல் தந்த ராமகிருஷ்ண விஜயம் பத்திரிகை ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தருக்கு மிகவும் நன்றி.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X