ஜனநாயக கடவுளர்களும், ஜனநாயக பக்தர்களும்!- ஜி.கிருஷ்ணசாமி --| uratha sindanai | Dinamalar

ஜனநாயக கடவுளர்களும், ஜனநாயக பக்தர்களும்!- ஜி.கிருஷ்ணசாமி --

Added : ஜன 17, 2015 | கருத்துகள் (5)
Share
ஜனநாயக கடவுளர்களும், ஜனநாயக பக்தர்களும்!- ஜி.கிருஷ்ணசாமி --

இப்போது நம் அரசியல்வாதிகளால் ஜனநாயகம், அரசியல் சந்தையில் கூவிக் கூவி விற்கப்படுகிறது. எப்படி?'வாக்காளர் பக்தர்களே, நாங்கள் தரும் இலவசப் பிரசாதத்தை பெற்று நீங்களும், உங்கள் வம்சா வழியினரும் சொர்க்க வாழ்வு வாழ அழைக்கிறோம்; வாங்க எங்களை ஆதரியுங்க...' என ஓட்டு கேட்டு, ஆட்சியில் அமர்கின்றனர்.இந்த அரசியல் கழுகுகள் விரிக்கும் ஆபத்தான இலவச வலைக்குள் சிக்கி, அக்கழுகுகளுக்கு இரையாகி வரும்
பரிதாப நிலை தான் நீடிக்கிறது.

ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவசங்கள், உயிர் போகும் நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுத்து, தற்காலிகமாக அவரை உயிர் பிழைக்க வைப்பது போல் உள்ளது. வறுமை எனும் நோயால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அந்த நோயாளியை காப்பாற்ற, அவரை வறுமையிலிருந்து மீட்டு, தனக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளை தானே தேடிக் கொள்ள ஏதுவாக, அந்த நோயாளிக்கு வழி வகுத்துக் கொடுப்பது தான், நல்ல மருத்துவரின் தலையாய கடமை. இதை சமூக ஆர்வலர்கள், பெரியோர் எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அது, செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகவே நீடிக்கிறது.

நம் அரசியல்வாதிகளுக்கு உண்மையிலேயே ஏழை, எளியவர்கள் மீது பரிவும், பற்றும், பாசமும் இருக்குமானால், ஒரு புறம் இலவசங்களை தேவைப்படுவோருக்கு கொடுத்துக் கொண்டே மற்றொரு புறம் அவர்களின் ஏழ்மையை போக்க, வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும். நாடு தழுவிய அளவில் தொழிற்சாலைகளையும், சிறு தொழில்கள் துவக்கவும், விவசாயம் லாபகரமான தொழிலாக நடைபெறுவதற்கான உறுப்படியான வளர்ச்சித் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்.ஆனால், அவ்வாறு செய்யாமல் தொடர்ந்து இலவசங்களை அடித்தட்டு மக்களுக்கு வழங்கி, அவர்களை செயலற்ற சோம்பேறிகளாக்கி, பிச்சைக்காரர்களின் லட்சியமாகக் கொண்டு, நம் அரசியல்வாதிகள் ஜனநாயக விரோத, மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏழைகள் தன்னிறைவு பெற, அவர்களுக்கு தேவைப்படுவது இலவசங்கள் அல்ல; அவர்களுக்கு தேவைப்படுவது வேலைவாய்ப்பும், நிரந்தர வருமானமும் தான். இலவசமாக தரமான கல்வி, தரமான மருத்துவ வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தரலாமே... அதை ஏன் இவர்கள் செய்யவில்லை? செய்ய மாட்டார்கள். ஏனென்றால், இந்த, 70 சதவித மக்களை நிரந்தர கையேந்திகளாக வைத்திருந்தால் தான் அவர்களின் கையேந்தி ஓட்டுகளைப் பெற்று, தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள முடியும். இலவசத் திட்டங்கள் தவிர்த்து, முன் யோசனை இல்லாத வேறு சில திட்டங்களாலும் மக்கள் வரிப்பணம் தண்ணீராக செலவழிக்கப்படுகிறது.

உதாரணமாக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம். இத்திட்டத்தால் அதிகப் பலனைப் பெறுவோர், மாநிலங்களில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் மாநிலக் கட்சியினரும், அவர்களின் கூட்டாளிகளும் தான்; பாவம் மத்திய அரசும், மக்களும். இத்திட்டத்திற்கு பெருமளவு செலவழித்த அன்றைய மத்திய காங்., அரசு, காந்தியை கவுரவிக்கும் விதமாக இத்திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இத்திட்டத்தால் கிராமப்புற மக்களின் அமோக ஆதரவை பெற்று, காங்., கட்சிக்கு கிராமப்புற மக்களிடம் செல்வாக்கு பெருகும் என்ற தப்புக் கணக்கு தான். 140 ரூபாய் சம்பளம் பெற வேண்டிய ஒரு கிராமத்தானுக்கு, வெறும், 60 ரூபாய் மட்டும் கூலியாக தரப்பட்டு, மீதிப்பணம், பல பேரால் கபளீகரம் செய்யப்பட்டு வருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

இத்திட்டத்தால் நஷ்டத்தில் விவசாயம் செய்து வந்த சிறு, குறு விவசாயிகள் தற்போது விவசாயத்தை கை விட்டு விட்டு, இத்திட்டத்தில் தங்களையும் இணைத்து பயனடைந்து வருகின்றனர். விவசாயம் நலிவடைந்து வருவதற்கு இதுவே முக்கிய காரணம். காலமெல்லாம் உழைத்தும் கடனாளியாக இருப்பதை விட, இத்திட்டத்தால் கிடைக்கும் சொற்ப வருமானமே போதும் என்ற மன நிலைக்கு வந்து விட்டனர் விவசாயிகள்.வறுமைக்கு அடிப்படைக் காரணம் வேலையில்லா திண்டாட்டமும், தொழில் வளர்ச்சி இல்லாததும் தான் என்பது ஒரு சாதாரண பாமரனுக்கு கூட தெரியும். ஆனால், நம் பொருளாதார விற்பன்னர்களுக்கும், ஜனநாயக காவலர்களான நம் அரசியல்வாதிகளுக்கும் இது தெரியாமல் போனது ஏன் என்ற ரகசியம் தான் தெரியவில்லை.மகாத்மாவின் கிராம ராஜ்யம் என்றால் என்ன? 'ஹரிஜன்' எனும் மாத இதழில், காந்தி கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்:

எப்போது கிராமப்புற கைத் தொழில்களும், சிறு தொழில்களும், முற்றிலும் இல்லாமல் போகின்றனவோ, அப்போது இந்தியாவின், ஏழு லட்சம் கிராமங்களும் முற்றிலுமாக அழிந்து போகும்.இயந்திர மயமாக்கல் வரவேற்கத்தக்கது தான்; ஆனால், இது மிகக் குறைந்த மக்கள் கூட்டத்திற்கு தான் வேலைவாய்ப்பை அளித்து, அவர்களுக்கு வாழ்வளிக்கும். கிராமப்புற மக்கள் தொகையோ பல கோடி. இவர்கள் அனைவருக்கும் சிறு தொழில்கள், கைத் தொழில்கள் மூலம் தான் வேலை தரமுடியும்; வாழ்வளிக்க முடியும்.ஆண்டில் ஆறு மாதங்கள் மட்டுமே வேலை செய்து விட்டு, மீதி ஆறு மாதங்களை வீணே உட்கார்ந்து நேரத்தை போக்கும் பல கோடி கிராமப்புற மக்களுக்கு, ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பை வழங்க, அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மகாத்மா வலியுறுத்திய நேர்மையான, லஞ்ச ஊழலற்ற நிர்வாகம், சுயநலமற்ற மக்கள் சேவை, நாட்டுப்பற்று ஆகியவை மருந்துக்கும் கூட நம் அரசியல்வாதிகளிடமும், அரசு அதிகாரிகளிடமும் இல்லாமல் போய் விட்டது. மனசாட்சியைக் கொன்று விட்ட இந்த ஜனநாயக கடவுளர்களின் மக்கள் விரோத, தேச விரோத செயல்களை, எப்போது ஜனநாயக பக்தர்களான நம் வாக்காளர்கள் இனம் கண்டு, அவர்களை முற்றிலுமாக புறக்கணிக்கின்றனரோ, அப்போது தான் நம் நாட்டிற்கும், மக்களுக்கும் விமோசனம் பிறக்கும்.
இ-மெயில்: Krishna-_samy2010@yahoo.com

- ஜி.கிருஷ்ணசாமி --
கூடுதல் காவல்துறை
கண்காணிப்பாளர் (பணி நிறைவு)
எழுத்தாளர், சிந்தனையாளர்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X