பிரச்னைகளை அணுகும் திறனை புத்தகங்களே வழங்குகின்றன!| Dinamalar

பிரச்னைகளை அணுகும் திறனை புத்தகங்களே வழங்குகின்றன!

Added : ஜன 18, 2015
Advertisement
 பிரச்னைகளை அணுகும் திறனை புத்தகங்களே வழங்குகின்றன!

'கண்ணனும் இளையராஜாவும், அனலெயோ' ஆகிய, குழந்தைகளுக்கான புனைக்கதை புத்தகங்களை எழுதிய சாய் சுந்தர்ராஜனின் இயற்பெயர், வெங்கட சுப்பிரமணியன்.

கல்லுாரி காலங்களில், தனது சீனியரான விழியனின், குழந்தை புனைக்கதையில் ஈர்க்கப்பட்டு, இந்த துறைக்கு வந்ததாக கூறுகிறார். பணியாற்றுவது, மென்பொருள் துறையில் பொறியாளராக; வசிப்பது, பெங்களூருவில். தனது படைப்புகள் குறித்து, சாய் சுந்தர்ராஜன் கூறியதாவது:
எழுதுவது எனக்குப் பிடிக்கும். இதில், குழந்தை இலக்கியத்தை தேர்ந்தெடுத்ததற்கு, விழியனே காரணம். எல்லோரின் அடிமனதில் புதைந்திருக்கும் குழந்தையை மீட்டெடுப்பதே, குழந்தை இலக்கியத்தின் குறிக்கோள். இன்றைய தலைமுறை போல அல்லாமல், போன தலைமுறையில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவு. அப்போது, விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தினோம். உடல் பலம் பெற்றோம். ஆனால், இப்போது அதற்கான சாத்திய கூறுகள் குறைந்து கொண்டே வருகின்றன. வீடியோ விளையாட்டுகள் பெருகி விட்டன. இதுபோன்ற விளையாட்டுகள், பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு நம்மை தயார்படுத்தாது. ஆனால், புத்தகங்கள் அப்படி அல்ல. புத்தக வாசிப்பு பழக்கம் ஏற்பட்டால், ஒரு பிரச்னையை, 10 விதமான கோணங்களில் அணுகி, அதற்கான தீர்வுகளை நோக்கி நாம் செல்வோம்.

அந்த கூர்மையை, புத்தகம் மட்டுமே நமக்கு வழங்கும். குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே, வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தினால், வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை முழுமையாக அலசுவதற்கு, அவர்கள் தயாராவர். அதை பாடப்புத்தகங்கள் சொல்லித் தருகின்றனவே என, நீங்கள் கேட்கலாம். பாடப்புத்தகங்கள், வரலாறு மற்றும் அறங்களை போதிப்பவை. அவை தான் சொல்லும் கருத்தை நேரடியாக சொல்பவை. ஆனால், புனைக்கதைகள் அப்படி அல்ல; கற்பனை மூலம், தான் சொல்ல வரும் கருத்தை, குழந்தைகளுக்கு சொல்லும். புதிய கற்பனை உலகங்களுக்கு கூட்டிச் செல்லும். அதன்மூலம், குழந்தைகளும் விரும்பி படிப்பர். அதுபோன்ற வாசிப்பு ஏற்பட்டால், குழந்தைகளின் அறிவு ரீதியான வளர்ச்சி, நாளுக்கு நாள் அதிகரிக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது சிறப்பு நிருபர் -



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X