நம் கலாச்சாரத்தில் ஆண்டின் 365 நாட்களுமே கொண்டாட்டமாக இருந்து வந்துள்ளது. அந்த வகையில், தை முதல்நாள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாளாக சிறப்பு பெறுகிறது. பொதுவாக மார்கழி மாதத்தில் எந்தவொரு நல்ல காரியத்தையும் துவங்கக் கூடாது என சொல்கிறார்களே, இதற்குப் பின்னால் உள்ள விஞ்ஞானக் காரணத்தை முதலில் நாம் அறிந்துகொள்வோம்!
சத்குரு அவர்கள் மார்கழி மாதம் குறித்து பேசுகையில்...
மார்கழியில், பூமியில் வடபாதியில் சூரியனது சக்தியானது குறைவாகவே இருக்கும். இந்த நேரத்தில் விதை விதைத்தோமானால் அது சரியாக முளைக்காது. உயிர்சக்தி மந்தமாயிருக்கும். இக்கால கட்டத்தில் நம் உடம்பின் ஆற்றலைப் பெருக்கிக் கொள்ளவும், ஸ்திரமாக்கி சேமித்துக் கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவேதான் இச்சமயம் திருமணங்கள் நடைபெறுவதில்லை. அதைத் தவிர்க்கும் நிலை தொடர்ந்து வருகிறது.
மனித உடலில் கருவுறுவதற்கு ஏற்ற சமயம் இதுவல்ல. இல்லறத்தில் இருப்போர் இச்சமயம் புலனடக்கத்தை மேற்கொண்டு (பாலுறவைத் தவிர்த்து) வழிபாட்டில் கவனம் செலுத்துவதை மரபாகக் கொண்டுள்ளனர். சூரியசக்தி கீழ்நோக்கி செயல்படுவதால் மனநோயாளிகள் தங்கள் மனநிலையில் சமன்பாடு கொண்டுவருவதற்கு உகந்த நேரமும் இதுதான்.
தை பிறந்தால் பிறக்கும் சந்தோஷம்!
சூரியசக்திதான் பூமியில் அனைத்து வளர்ச்சிக்குமான அடிப்படை. தாவரங்கள் வளரவேண்டும் என்றாலோ, மனிதனின் வாழ்க்கை மற்றும் உற்பத்தி மேம்பட வேண்டும் என்றாலோ சூரிய சக்தி மிகவும் அவசியம். சூரியனின் தன்மையில் மாறுபாடு காரணமாக தை மாதம் பீடை தொலைந்து புது வாழ்க்கை ஆரம்பிக்கும். இந்தக் காலத்தில் சூரிய சக்தியை தனக்குள் சேகரித்து வைத்துக்கொள்ளும் பொருளோ, மனிதனோ வளர்ச்சியை உற்சாகத்தை உருவாக்க முடியும். இதனால் மனிதனுக்கும் பிற உயிர்களுக்கும் தேவையான உணவு உற்பத்தியும் பெருகும்.
இதனால்தான் தைமாதத்தில் அறுவடைக் காலமாகவும் சுபகாரியங்களைத் துவங்கும் காலமாகவும் பார்க்கப்படுகிறது.
உணவு உற்பத்திக்கும் பயிர்கள் வளர்வதற்கும் காரணமான சூரியனுக்கு நன்றி தெரிவித்து அர்ப்பணம் செய்ய விரும்புகிறோம். குறிப்பாக விவசாய குடும்பத்தில் உள்ளவர்கள் இதை உணர்வுபூர்வமாக செய்வார்கள். தை முதல் தேதி அதாவது ஜனவரி 14ம் தேதிக்குப் பிறகு பயிர்கள் செழிப்பாக வளர்ச்சி அடைவதால் அதை சூரியனுக்கு அர்ப்பணிக்கும் நாளாகவும் அமைகிறது.
நாம் உண்ணும் உணவு உயிருக்கு ஊட்டம் வழங்குவதால் அதற்கு காரணமான மண்ணுக்கு, உணவைக் கொடுக்கின்ற விவசாயிக்கு, அதை சமைத்து வழங்கும் தாய்மார்களுக்கு, உற்பத்திக்கு உதவியாக இருக்கின்ற கால்நடைகள் குறிப்பாக மாடுகளுக்கு, மேலும் சுற்றுச் சூழலுக்கு அனைத்திற்கும் மூலமாக இருக்கின்ற சூரியனுக்கு நாம் நன்றி உள்ளவர்களாக இருப்பதை உணர்த்துவதுதான் பொங்கல் கொண்டாட்டம்.
ஈஷா பசுமை கரங்கள் திட்டம்!
ஈஷா அறக்கட்டளையானது, ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் பவ்வேறு செயல்களை தமிழகமெங்கும் செய்து கொண்டிருக்கிறது. இன்று பல்வேறு காரணங்களால் விவசாயத்தை கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஒரு அற்புத வாய்ப்பாக பசுமைக் கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது போன்ற தரமான மரக்கன்றுகள் மிகக் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.
ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் நுட்பங்களையும் நேரில் வந்து அளிப்பார்கள். உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062