புத்தக கண்காட்சியின் நிறைகளும், குறைகளும்!| Dinamalar

புத்தக கண்காட்சியின் நிறைகளும், குறைகளும்!

Added : ஜன 19, 2015
Advertisement
புத்தக கண்காட்சியின் நிறைகளும், குறைகளும்!

இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில், மொத்தம் 750 அரங்குகள் அமைக்கப்பட்டன. இந்த முறை, முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட, 50 ரூபாய்க்கான, 'சீசன் டிக்கெட்'டுக்கு பெருத்த வரவேற்பு இருந்தது. நுழைவாயிலில் இருந்து அரங்கம் வரை, இலவசமாக, வாசகர்களை அழைத்து செல்ல, ஐந்து சிறிய ரக பேருந்துகளும், வெளியிடங்களுக்கு செல்வோருக்கு, 'நம்ம ஆட்டோ'க்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. ஊனமுற்றோருக்கு, இரண்டு, சக்கர வண்டிகள், தினசரி, 500க்கும் மேற்பட்ட தண்ணீர் கேன்கள் மூலம், குடிநீர் வினியோகம் என, அடிப்படை தேவைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் காணப்படும் குறைகளில் பெரும்பாலானவை, இந்த முறையும் களையப்படவில்லை என்ற அதிருப்தி, கண்காட்சியில் பங்கேற்ற பதிப்பாளர்கள் மற்றும் வாசகர்களிடம் உள்ளது.கண்காட்சி துவங்கிய ஓரிரு நாட்களிலேயே, தரை விரிப்புகள் வாய் பிளந்து, சுருள துவங்கின. அவற்றால், கண்காட்சிக்கு வந்த பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் அதிகளவில் தடுக்கி விழும் நிலை ஏற்பட்டது. தரைக்கு அமைக்கப்பட்ட பலகைகள், பல இடங்களில் ஏற்றத் தாழ்வாக இருந்ததால், வாசகர்கள் நடக்கவே திணற வேண்டியிருந்தது. பெரும்பாலான, அரங்குகளில், 'கிரெடிட் கார்டு' வசதி இல்லை. 'பபாசி' அலுவலகத்தையே நாடவேண்டி இருந்தது. அரங்கின் உள்ளே, அலைபேசி களுக்கான, 'சிக்னல்' சரியாக கிடைக்கவில்லை. அதனால் நிறைய பேர், அலைபேசியுடன், அரங்கிற்கு வெளியே பதறியடித்து செல்ல வேண்டி இருந்தது. 75 கழிப்பறைகள் இருந்தும், பெண்களின் கழிப்பறைகள் சுத்தமாக இல்லை. கழிப்பறைகளுக்கு செல்லும் வழிகள், சில நேரங்களில் சகதியாக இருந்தன. வாகன நிறுத்தங்கள் நிரம்பி வழிந்தன. பல்வேறு இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதித்ததால், புதிய வாசகர்களுக்கு வாகன நிறுத்தம் பற்றி குழப்பம் ஏற்பட்டது. உணவகங்களில் வழக்கம்போல, ஒன்றுக்கு பத்தாக உணவு பொருட்களின் விலை இருந்தது.

இதுகுறித்து, 'பபாசி' நிர்வாகிகள் கூறியதாவது: நாங்கள், குறைகள் இல்லாமல் தான் இந்த நிகழ்ச்சியை நடத்த விரும்புகிறோம். எல்லா குறைகளுக்கும், காரணம், எங்களுக்கு கிடைத்த குறுகிய கால அவகாசம் தான். பத்தே நாட்களுக்குள், அரங்குகளை அமைக்க வேண்டியிருந்தது. அதில், கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், வேலைகள் சுணங்கின. 'வை-பை' வசதி ஏற்படுத்தி தருவதாக, ஒப்பந்தம் செய்த நிறுவனம், சரியான அளவில் சேவை செய்யவில்லை. அதற்காக வருந்து கிறோம். 'கிரெடிட் கார்டு'களை ஏற்கும் வசதிகளை, எல்லா பதிப்பகங்களாலும் செய்ய முடியாது. காற்றோட்டத்திற்காகவும், வசதியாக நடந்து செல்லும் வகையிலும், அரங்குகளுக்கான இடைவெளியை, 20 அடியாக அமைத்திருக்கிறோம். அவசர கால வழிகளையும், விடுமுறை நாட்களில் திறந்து வைத்திருக்கிறோம். ஆயினும், விடுமுறை நாட்களில், 20 ஆயிரத்திற்கும் அதிகமான வாசகர்கள் கூடுவதால், இதுபோன்ற இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. கழிப்பறைகளில், 'டைல்ஸ்' வசதி ஏற்படுத்த தான் நினைத்து இருந்தோம். ஆனால், கால அவகாசம் கிடைக்கவில்லை. கழிப்பறையை பயன்படுத்துவோரில் பலர், தண்ணீர் பாட்டில், நாப்கின்களை, கழிப்பறைக்குள் போட்டுவிடுவதால், சில இடர்ப்பாடுகள் ஏற்படுகின்றன. ஆயினும், புகார்களின் அடிப்படையில், சுகாதார பணியாளர்கள், அவற்றை நிவர்த்தி செய்கின்றனர். அடுத்தடுத்த ஆண்டுகளில், இதுபோன்ற குறைகள் வராமல் பார்த்துக் கொள்ள முயல்வோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

- நடுவூர் சிவா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X