நீங்கள் சாப்பிடுவது 'விஷம்!'| Dinamalar

நீங்கள் சாப்பிடுவது 'விஷம்!'

Updated : ஜன 20, 2015 | Added : ஜன 20, 2015 | கருத்துகள் (6)
 நீங்கள் சாப்பிடுவது 'விஷம்!'

( " உங்கள் குரல் உலகம் முழுவதும் " என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்த புதிய பகுதியில், வாசகர்கள் தாங்கள் விரும்பும் சுவையான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இதில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்தும் தரமானதாக, தனி நபர் எவரையும் காயப்படுத்தாததாக இருக்க வேண்டும். அரசியல், மனித நேயம், உடல் ஆரோக்கியம் போன்று எது தொடர்பாக வேண்டுமானாலும் கட்டுரைகள் அமைந்திருக்கலாம். உங்கள் பெயர், இ-மெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களுடன் உங்களுடைய கட்டுரைகள் வெளியாகும். பொங்கல் பரிசாக இந்த புதிய பகுதியை வரவேற்று ஆதரவு தர வேண்டுகிறோம்.) மனிதன், விலங்குகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்த பழக்கம், காலப்போக்கில் மாறி, விவசாயம் செய்து உண்ணக் கற்றுக்கொண்டான். 'உணவே மருந்து' என்று, முன்னோர்கள் தெரியாமல் சொல்லி வைத்தார்கள். இன்று நாம் உண்ணும் உணவே விஷமாகிவிட்டது. பல இனம் புரியாத நோய்களால், மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆரம்பத்தில் விவசாயம் பார்த்துவிட்டு, பிறகு மருத்துவன் ஆன எனக்குள் இருக்கும் ஆதங்கம் தான், இந்த கட்டுரை.பழங்கால விவசாயமுறை: நான் சிறுவயதாக இருந்த காலத்தில், நெல் நடுவதற்கு முன், வயலோரம் வளர்ந்து கிடக்கும் காட்டுச்செடிகளை வெட்டி, வயலில் போட்டு, மிதித்த பிறகு, நெல் நாற்று நடுவோம். இந்த செடிதான், நெல்லுக்கான இயற்கை உரம். பிறகு சிறிது நாள் கழித்து, மக்கிப்போன குப்பைகளையும், மாட்டுச்சாணத்தையும் மேல் உரமாக இடுவோம். நெல் வளர்ந்த பிறகு, பூச்சிக்கொல்லியாக வேப்பம் புண்ணாக்கை கரைத்து தெளிப்போம். விதைப்பு முதல் அறுவடை வரை ரசாயன உரங்களை பயன்படுத்தியது கிடையாது.இன்று உள்ள பல்வேறு வகையான பூச்சிக்கொல்லிகள் அன்று கிடையாது. விளைந்த பயிர்களை, ரசாயன கலவை கொண்டு பாதுகாக்கும் பழக்கம், அன்று இல்லை. நெற்பயிரே ரசாயன பொருட்களை கண்டதில்லை. மற்ற பயிர்களான கம்பு, சோளம், கேழ்வரகு, தினை போன்ற பயிர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம், 100 சதவீதம் இயற்கை விவசாயம் தான்.


விவசாயத்தின் இன்றைய நிலை:

எல்லாமே வேகம் என்ற இந்த காலத்தில், விவசாயமும் செயற்கை முறைக்குமாறி வேகமெடுத்தது. இன்று ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் இல்லாமல், விவசாயம் இல்லை, என்ற நிலை வந்துவிட்டது. விளைவு நிலத்தில் இருந்து, மனிதனின் ரத்தம் வரை, ஆபத்து மிகுந்த வேதிப்பொட்களால் நிரப்பப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி அடைந்து, பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததால், விவசாய வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. கஷ்டப்பட்டு பயிர் செய்யும் விவசாயிக்கு, தான் எதிர்பார்க்கும் நியாயமான வருவாய் கிட்டுவதில்லை.உதாரணத்துக்கு, ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் விளைவிக்க, என்ன செலவு - என்ன வரவு என்பதைக் காணலாம்.நிலத்தைப் பண்படுத்த, விதை சோளம் வாங்க, களை எடுக்க, தண்ணீர் பாய்ச்ச, உரம் சேகரிக்க, அறுவடை செலவு என மொத்தம், ஏக்கருக்கு ரூ.24,400 செலவாகிறது. ஆனால், வரவு, -20 மூட்டை சோளம், ஒரு மூட்டை ரூ.1,200 என்ற விலையில், - 20 மூட்டை சோளம் விற்றால், கிடைப்பது,

20 x ரூ.1200/- = ரூ.24,000/- (24,200 --- 24,000 = ரூ.200 நஷ்டம்)ஆகவே, ஒரு ஏக்கர் மக்காசோளம் விதைத்தால், 4-மாதம் கழித்து, ரூ.200- நஷ்டத்தை வேண்டுமானால் சந்திக்கலாம். இதில் எதிர்பாராமல் இயற்கை சீற்றங்கள் வந்தால், பெரும் நஷ்டம். கரும்பை பற்றிக் கேட்கவே வேண்டாம். 10 மாதங்கள் காத்திருந்து, நஷ்டத்தை சந்திக்கலாம். இப்படிப்பட்ட சூழலில், வேறு வழி தெரியாதவர்கள் மட்டும் தான், விவசாயம் செய்வார்கள்.


நஞ்சாகிப்போன உணவு:

இந்த ஆண்டு, அமெரிக்காவில் நடந்த, சர்க்கரை நோய் குறித்த சொற்பொழிவில், ஒரு மருத்துவ பெண்மணி, உலகம் முழுவதுக்குமான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி, நாம் உண்ணும் உணவில் 4000 வகையான ரசாயனப் பொருட்கள் கலக்கப்படுகின்றன. அவை உணவில் வாசனை கூட்ட, நிறம் ஏற்ற, பதப்படுத்த, என பல்வேறு வழிகளில் சேர்க்கப்படுகின்றன. மேலை நாடுகளில் உற்பத்தியாகும், சில பொருட்கள், அங்கு பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது."உலக இயற்கை வேளாண்மை செய்யும் அமைப்பு" உலகின் மொத்த விளைநிலத்தில் ஒரு சதவீதத்திற்கும் (1சதவீதம்) குறைவான பகுதியில்தான், இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது என்ற விவரத்தை அளித்துள்ளது. இயற்கை விவசாயம் என்பது, ரசாயனம் கலக்காமல், மூன்று ஆண்டுகள் காத்திருந்து, நான்காவது ஆண்டிலிருந்து, விவசாயம் செய்யும் முறையாகும். அதுவும் மண்ணின் நச்சுப்பொருட்களின் அளவை பாரிசோதித்த பிறகு தான் அறியமுடியும்.என்னைப் போன்ற மருத்துவர்கள், அரிசி உணவுகள் சாப்பிடுவதால்தான் நம்மில் பலருக்கு, சர்க்கரை வியாதி வருகிறது என்று கூறிவருகிறோம். அப்படி என்றால் “ மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று, யானை கட்டி போரடித்து” விளைவித்த செந்நெல்லை உண்ட சோழர் காலத்து மக்கள் எல்லோரும், சர்க்கரை நோயினால்தான் மாண்டிருக்க வேண்டும்.


இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

மேலை நாட்டு உணவு வகைகளை நம் தலையில் கட்டுவதற்கு, இதுவும் ஒரு உத்தி. தானிய வகைகளை குறை சொல்வதை நிறுத்திவிட்டு, அதனுடன் கலக்கப்படும் பொருட்களை தடுக்கவேண்டும். சமைத்த உணவை பலநாள் வைத்து சாப்பிடுவது என்பது, இன்னொரு மோசமான முறை. உணவுப்பொருட்கள் சமைத்தபின்னரே வேதியியல் மாற்றத்துக்கும், உயிரியியல் மாற்றத்திற்கும் உள்ளாகும். குளிர்சாதன பெட்டியில் வைப்பதால், அதிலிருந்து வரக்கூடிய கெட்ட நாற்றத்தை வேண்டுமானால் தடுக்கலாம்.நிலத்தில் விளைவது சரியில்லை என்று அசைவ உணவுக்கு மாறலாம் என்றால், அதிலும் பல அதிரடி மாற்றங்கள். பழங்காலத்தில் மனிதன் வேட்டையாடி உண்டான். அப்போது அவனும் ஓடவேண்டும். அவனிடமிருந்து காத்துக்கொள்ள, விலங்கும் ஓட வேண்டும். அதனால், அசைவ உணவு செரிமானமானது. ஆனால் இன்றைய மனிதன் குளிரூட்டப்பட்ட அறையில் உட்கார்ந்து கொண்டு, பல வேண்டாத உணவுகளை கொடுத்து வளர்க்கப்பட்ட, கொழு கொழு கோழியைத் தின்று, தானும் நோய்வாய்ப்பட்டு மடிகிறான். எனவே மக்களே சிறிது சிந்தித்து செயல்படுங்கள்.

- டாக்டர் ஆர்.ராமசாமி

அறுவை சிகிச்சை நிபுணர், - கோவை

98942 57565

drrams001@gmail.com.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X