en parvai | திருக்குறள் தரும் தன்னம்பிக்கை-முனைவர் இளசை சுந்தரம்,| Dinamalar

திருக்குறள் தரும் தன்னம்பிக்கை-முனைவர் இளசை சுந்தரம்,

Added : ஜன 21, 2015 | கருத்துகள் (6)
Advertisement
திருக்குறள் தரும் தன்னம்பிக்கை-முனைவர் இளசை சுந்தரம்,

'வரலாறு என்பது வந்து போனவர்களின் தொகுப்பு அல்ல, சாதனைகளை தந்து போனவர்களின் தொகுப்பு' என்பார்கள். திருக்குறளை நமக்குத் தந்ததன் மூலம் வரலாற்று சாதனையாளர்கள் வரிசையில் சிறப்பிடம் பெறுகிறார் திருவள்ளுவர். ஒரு நூல் ஆடையாகும் அதிசயத்தை கண்டதுண்டா? திருக்குறள் என்ற ஒரு நூல் தமிழன்னைக்கு ஆடையானது. தன்னம்பிக்கை பற்றிய புதுக்கவிதை ஒரு வினா எழுப்புகிறது.
'நம்பிக்கையை நீங்கள் எங்கு வைத்தீர்கள்?
புலியின் பல்லில் வைத்தீர்கள்
நரியின் கொம்பில் வைத்தீர்கள்
ஜோசியரின் சொல்லில் வைத்தீர்கள்
ராசிக்கல்லில் வைத்தீர்கள்
கிளியின் கூட்டில் வைத்தீர்கள்
ஜாதக ஏட்டில் வைத்தீர்கள்
நம்பிக்கையை நீங்கள்
உங்களுக்குள் வைத்தீர்களா?'திருக்குறளில் தன்னம்பிக்கையை கவனிப்போம்.

''வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்'' என்கிறது குறள்.

காலம் என்ற சிற்பி நம்மை செதுக்கிக் கொண்டிருக்கிறான். அதில் நாம் சிற்பமா? சிதறி விழும் கற்களா? நாம் சிற்பமாகத்தான் ஆக வேண்டும். அதற்கு சாதனைகள் செய்ய வேண்டும். சவால்களை சந்திக்காமல் சிகரங்களை தொடமுடியாது. அதற்கு தேவையானவற்றை பட்டியலிடுகிறார் திருவள்ளுவர். நாம் மேற்கொள்ளப் போகிற செயலின் தன்மை என்ன? அதை நிறைவேற்ற என்னிடம் உள்ள ஆற்றல் என்ன? எதிர்கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளதா? எதிரியின் வலியினைப் புரிந்து கொண்டோமா? நமக்கு துணை நின்று உற்சாகப்படுத்துகிற நட்பு வட்டம் உள்ளதா? இவற்றில் முக்கியம், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை.
'முடியுமா? என்பது மூடத்தனம்;
முடியாது என்பது கோழைத்தனம்.
முடியும் என்பதே மூலதனம்'
இந்த உந்து சக்திதான் ஒருவனை
வெற்றியாளன் ஆக்குகிறது. எல்லாம் நன்றாக வாய்த்திருந்தும், இது என்னால் முடியாது என்று நடுங்குகிறவனுக்கு வெற்றி இல்லை.


எண்ணத்தின் வலிமை:

எவன் எந்த செயலில் நம்பிக்கை வைத்திருக்கிறானோ அவன் அதுவாகவே ஆகிறான் என்கிறது கீதை. எண்ணங்களின் தன்மைக்கேற்ப நமது செயல் அமைகிறது. ஊக்கத்துக்குத் தக்கவாறு உயர்கிறோம்.

''வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு'' என்கிறது திருக்குறள். தண்ணீரின் உயரத்துக்குத் தக்கபடி உயரும் தாமரை போல உள்ளத்துக்குத் தக்கபடி உயர்கிறது எண்ணம். தன்னம்பிக்கை கொண்டவன், அதிலே நிலைத்திராமல் தடுமாறினால் சிக்கல் தான். அவனை அப்படித் தடுமாறவைக்கிற எதிரிகள் யார்? குறித்த வேலையை குறித்த நேரத்தில் செய்து முடிக்காமல் தள்ளிப்போடுகிற தாமத குணம், மறதியினால் வரும் கேடு, சோம்பல், நீண்ட நேரத் தூக்கம் இவைகள் தான். நம்பிக்கையை நடத்திவைக்கும் நன்மருந்து தளராத தன்னம்பிக்கை நமக்குள் இருக்குமானால், அதனை நிறைவேற்றித் தரும் வல்லமையை முயற்சி வழங்கும்.

'' அருமை உடைத்தன்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்'' என்று குறள் பேசுகிறது.
'' முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை
இன்மை புகுத்தி விடும்'' என்கிறது மற்றொரு குறள்.
ஓர் அரங்கத்தில் கைதட்டும் போட்டி நடந்தது. நீண்ட நேரம் கைதட்டுகிறவர்களுக்கு ஒரு பரிசு உண்டு. மற்றவர்களெல்லாம் கைதட்டி ஓய்ந்த பிறகு, ஒரு கைதட்டு ஒலித்துக் கொண்டே இருந்தது. பரிசு வழங்க அவரை மேடைக்கு அழைத்தார்கள். இரண்டு பேர் மேடையேறினார்கள். ஒருவருக்குத் தான் பரிசு என்று சொல்லப்பட்டது. அப்போது ஒருவர் பேசினார்; ஒரு பரிசு போதும். நாங்கள் இருவரும் சேர்ந்து தான் கைதட்டினோம். இருவரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள். போரில் நான் எனது வலது கையை இழந்தேன். இவர் தனது இடது கையை இழந்தார். ஆனாலும் நாங்கள் மிச்சமிருந்த கைகளை இணைத்து தட்டி வெற்றி பெற்றோம். ஒன்று என்னுடைய கை. இன்னொன்று அவருடைய கை. மூன்றாவது எங்களிடம் இருந்த நம்பிக்கை. இதைத்தான் திருக்குறள்

''பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி'' என்று கூறுகிறது.


நல்ல எண்ணம் வேண்டும்:

எதையாவது நினைத்து குறுக்கு வழியில் முன்னேறி விடலாம் என்று நினைத்தால் அந்த வெற்றி தற்காலிகமானது தான். 'உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல்' என்கிறார் திருவள்ளுவர். அப்போது தான் செயலில் தெளிவு இருக்கும். தேவை இல்லாத அச்சம் ஏற்படாது. மிகவும் கம்பீரமாக செயலில் ஈடுபடலாம். வெற்றிக் கனியை பறிக்கலாம். தளராத ஊக்கத்தோடு உண்மையாக உழைப்பவர்களின் முகவரியைத் தெரிந்து கொண்டு செல்வமும், புகழும் வந்து சேரும்.


குறிக்கோளும் கொள்கையும்:

திருக்குறள் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், சமூக பொது வாழ்க்கைக்கும் வழிகாட்டும் நூல். நல்லன எவை, அல்லன எவை என்பதை சுட்டிக்காட்டும் நூல். கடமைகளையும், நற்பண்புகளையும், நற்செயல்களையும் வரையறை செய்யும் நூல். தீய பண்புகளையும், தீய செயல்களையும் வெறுத்து ஒதுக்கி, அறிவுக்கும் ஆற்றலுக்கும் மதிப்பு அளிக்கும் நூல். முயற்சிக்கும் ஊக்கத்திற்கும் ஆக்கந்தரும் நூல். உழைப்பையும், உற்பத்திப் பெருக்கத்தையும் வலியுறுத்தும் நூல். மனிதகுலம் முழுவதும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் நூல். திருக்குறளை வாசிப்பது,நேசிப்பது மட்டுமல்ல; சுவாசிக்க வேண்டும். வள்ளுவத்தை வாழ்வியல் ஆக்க வேண்டும்.

-முனைவர் இளசை சுந்தரம்,
எழுத்தாளர்,
பேச்சாளர் 98430 62817வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karuppiahkathiravan - theni,இந்தியா
21-ஜன-201518:02:15 IST Report Abuse
karuppiahkathiravan திருக்குறள் தமிழ்மக்களின் ஞானபோக்கிசம், தெய்வப்புலவர் வள்ளுவர் தாத்தா ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mannar Nagarathinam - Ramanathapuram,இந்தியா
21-ஜன-201515:37:54 IST Report Abuse
Mannar Nagarathinam "தமிழ் மொழி" "வள்ளுவனால் கர்வமும் கௌரவமும் பெறுகிறது" உங்கள் உரையால் உங்களின் விருதுக்கு பெருமை அளித்துள்ளிர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Yuvi - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
21-ஜன-201513:30:58 IST Report Abuse
Yuvi வள்ளுவர் ஒரு ஞான வள்ளல் ஆவார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X