செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்| Dinamalar

செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

Added : ஜன 22, 2015 | கருத்துகள் (5)
செலவில்லாத மருந்து சிரிப்பு - டாக்டர் ஜி.கணேசன்

சிரிப்பு என்பது மகிழ்ச்சியின் வெளிப்பாடு, சந்தோஷத்தின் குறியீடு. மனம் மகிழ்ச்சியாக இருப்பதை முகச்சிரிப்பு வெளிகாட்டும். மனிதனுக்கு மட்டுமே உரித்தான சிறந்த பண்பு, சிரிப்பு. மனிதனால் சிரிக்க, சிரிப்பை வரவழைக்க முடியும். அதேபோல் சிரிப்பை விரும்பாத மனிதர்கள் உலகில் இல்லை.

'எந்நேரமும் சிரித்த முகத்துடன் இருப்பவர்களை எனக்கு பிடிக்கும். புன்னகையுடன் வேலை செய்பவர், திறமை, ஆர்வம், குறித்த நேரத்தில் தங்கள் வேலையை செய்து முடிப்பார்' என பல இடங்களில் மகாத்மா காந்தி கூறி உள்ளார். சிரிப்பு குறித்து வள்ளுவரும் கூறி உள்ளார்.


சிரிக்கும்போது நடப்பது:

சிரிக்கும்போது நம் உடலில் அநேக மாற்றம் ஏற்பட்டு அவை எல்லாமே ஆரோக்கியம் காக்க உதவுகிறது. வயிறு குலுங்க சிரிக்கும்போது உடலில் 57 தசைகள் வேலை செய்கின்றன. சாதாரண புன்முறுவலுக்கு நம் முகத்தில் 13 தசைகள் இயங்குகின்றன. வயிறு குலுங்க சிரிப்பவர்கள் பிராணவாயுவை அதிக அளவில் உட்கொண்டு, கரியமில வாயுவை அதிகம் வெளியேற்றுகின்றனர். இது உடலில் உண்டாகும் கழிவுகளை உடனுக்குடன் அகற்றி, ரத்தம் சுத்தமாக உதவுகிறது. இதன்மூலம் இதயம், நுரையீரல், கல்லீரல், கணையம், மண்ணீரல் போன்ற உயிர் காக்கும் உறுப்புகள் சிறப்பாக இயங்க உதவுவது சிரிப்பு.


நோய் விலகும்:

'வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்' என்பது முன்னோர் வாக்கு. இது நூற்றுக்குநூறு உண்மை. மனம் நிறைந்து சிரிக்கும்போது 'என்டார்பின்' எனும் ஹார்மோன் உடலில் சுரக்கிறது. இது ஒரு வலி மறப்பான் மருந்தாக பயன்படுகிறது. இது வலி ஏற்படுத்தும் நோய்தன்மையை வெகுவாக குறைக்கும். இதற்கு உண்மை நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட வேண்டும். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையாளர் நார்மன் கொவ்சின். இவருக்கு முதுகு தண்டில் வலி ஏற்பட்டது. நோய் குணமாக தாமதமானது. பழைய சினிமா கருவி ஒன்றை விலைக்கு வாங்கி வீட்டில் வைத்தார். அதிக சிரிப்பை ஏற்படுத்தும் நகைச்சுவை படங்களை தினமும் பார்த்தார். தன்னை அறியாமல் வாய்விட்டு சிரித்தார். ஒரு படம் பார்க்க ஆகும் மூன்றுமணி நேரத்தின்போது, வலியை முற்றிலும் மறந்தார். மருத்துவர்கள் கொடுத்த மருந்துகளை சாப்பிட்டார் வலி குறைந்து, விரைவிலேயே குணமானார்.


மனக்கவலை மறைய:

இயந்திர வாழ்க்கையில், இளம்வயதிலே மன அழுத்தம் அதிகமாகி உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதயநோய், மனச்சோர்வு, மனக்கவலை போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வாக நகைச்சுவை உணர்வை அதிகரிக்கவேண்டும், சிரிப்பை ஒரு பயிற்சியாக செய்யவேண்டும் என டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர். மனக்கவலையை மறக்க உதவும் செலவில்லாத மருந்து சிரிப்பு. இதன் மூலம் மன அழுத்தம், கவலை, கோபம் குறைகிறது. தனிமையை விரட்டி மற்றவர்களுடன் இணைந்து பணிபுரியும் குழுமனப்பான்மையை ஊக்கப்படுத்துகிறது. தினமும் 15 நிமிடங்கள் சிரித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும், இதனால் ஆஸ்துமா, ஒவ்வாமை போன்ற நோய்கள் தடுக்கப்படுகிறது என ஆராய்ச்சிகள் நிரூபித்து உள்ளன.


ஹாஸீயயோக் சிரிப்பு பயிற்சி:

சிரிப்பின் சிறப்பை, பண்டைய மக்கள் தெரிந்து வைத்து இருந்தனர். ஆதிகாலத்தில் குருகுல கல்வி முறையில் பலவித யோகாசன பயிற்சி அளிப்பது வழக்கம். அதில் முக்கியமானது தான் இந்த 'ஹாஸீயயோக்' எனும் சிரிப்பு பயிற்சி. போர்க்காலங்கள், இயற்கை பேரழிவு, நோய்தொற்று தீவிரமாகும்போது, சிரிப்பு பயிற்சி அளிக்கப்படும். இது மக்களிடம் ஏற்பட்ட மன உளைச்சல், மன பயம், மனக்கவலை போன்றவற்றை மாற்றி மன வலிமையை தந்தது. 'மனித உடல் ஆரோக்கியத்திற்கு சிரிப்பு இன்றியமையாதது' என உலக ஆராய்ச்சிகள் உறுதி செய்து உள்ளன. சிரிப்பு எனும் மனித குணத்தை ஒரு சிகிச்சை முறையாக சேர்த்து உள்ளனர். உலகில் சிரிப்பு சிகிச்சை தற்போது பிரபலமாகி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகள் 'சிரிப்பு மருத்துவமனையை' துவங்கி உள்ளன; நம் நாட்டில் உள்ள நகைச்சுவை மன்றங்கள் போல!


சிரித்த முகம் தேவை:

சிரித்த முகத்துடன் உள்ளவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு கூடும், நகைச்சுவை ததும்ப பேசுபவர்களை சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும். பல புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். எனவே நீங்களும் நகைச்சுவை உணர்வை அதிகப்படுத்தி, எந்த விஷயத்தையும் நகைச் சுவையோடு பேச கற்றுக்கொள்ளுங்கள். நகைச்சுவை துணுக்கு, நிகழ்ச்சியை தினமும் நண்பர்களிடம் கூறுங்கள். இதற்காக நகைச்சுவை நூல்களை அதிகம் படிக்கவேண்டும். 'டிவி' க்களில் அழவைக்கும் சீரியல்களை தவிருங்கள். நகைச்சுவை உணர்வு அதிகமாகும்போது மனம் எளிதாகும், உடல் நலமாகும், வாழ்வு வளமாகும்.

- டாக்டர் ஜி.கணேசன்,
பொதுநல மருத்துவர்,
ராஜபாளையம். 99524 34190.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X