வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ': - ஆர்.முருகேசன்| Dinamalar

வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ': - ஆர்.முருகேசன்

Added : ஜன 23, 2015 | கருத்துகள் (14)
வறட்சியை வரவழைக்கும் 'டெவில் ட்ரீ':  - ஆர்.முருகேசன்

பழந்தமிழ் நாட்டில் மாதம் 3 முறை தவறாது மழை பெய்ததாக நாம் இலக்கியங்கள் வாயிலாக மட்டுமே அறிகிறோம். இன்று, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை விளைச்சல் கண்டாலே மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது. இன்றைக்கு அதிக செலவு பிடிக்கும் தொழிலாக விவசாயம் மாறிவிட்டது.

விவசாயம் நலிவடைய காரணம் மழை இன்மையே. மழை பொய்த்து போக கருவேலமரம் தான் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மரங்களால் ஒரு சிலரின் வாழ்வாதாரம் சிறப்படையலாம். ஆனால், அடுத்த தலைமுறை வரை பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கருவேல மரங்களுக்கு உண்டு.


மழை பொழிவு குறையும்:

'சாத்தான் மரம்' (டெவில் ட்ரீ) என சில நாடுகளில் கருதப்படும் இந்த சீமைக்கருவேல மரத்தின் தாவரவியல் பெயர், 'புரோஸோபிஸ் ஜூலிபுளொரா'. 'பேபேஸி' என்ற தாவரவியல் குடும்ப வகையைச் சேர்ந்த இது, 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேர்கள் நிலத்தடி தண்ணீரை தேடித்தேடி உறிஞ்சி விடும். நிலத்தடி நீர் இல்லாத இடங்களில் புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும். எங்கெல்லாம் கருவேலமரங்கள் அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் மழைப் பொழிவு குறைந்து விடும். ஆங்கிலேயர் ஆட்சியில் 1876ல் அப்போதைய மாகாணத்தின் தலைமை வனத்துறை தலைவராக இருந்த பெட்டோர்ன் என்பவரால் இந்தியாவில் சீமைக்கருவேல மரம் அறிமுகப்படுத்தப்பட்டது. ராமநாதபுரம் உட்பட தென்மாவட்டங்களில் 1960ல் தான் இந்த விதை தூவப்பட்டது. தற்போது தமிழகத்தில் மொத்தம் 4.50 லட்சம் எக்டேர் நிலத்திலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 1.50 லட்சம் எக்டேர் நிலத்திலும் பரவியுள்ளது. ஆரம்பத்தில், தரிசு நிலங்கள் பசுமையாக வேண்டும் என்ற நோக்கத்தில் பரவச் செய்யப்பட்டது. ஆனால், பின்பு தரிசு நிலம் மட்டுமல்லாது விளை நிலங்களிலும் வளர்ந்து மற்ற தாவரங்களின் வளர்ச்சியை தடுத்து மண் வளத்தையும் அழித்து விட்டது, இந்த கருவேலமரம். பாலைவனமாக மாற்றும் மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரீபியன் தீவுகள் ஆகியவற்தை தாயகமாக கொண்ட இவை தற்போது இந்தியா, இலங்கை, சோமாலியா, எத்தியோபியா உள்ளிட்ட நாடுகளில் பரவி, அங்கெல்லாம் வறட்சியை வரவழைத்து பாலைவனமாக மாற்றி வருகிறது. இந்த மரம் வளரும் இடங்களில் மற்ற தாவரங்கள் வளராது. மண்ணை உவர் நிலம் ஆக்கி விடும். உவர் நிலத்தில் கால்நடைகளுக்கு தீவனம் கூட விளையாது. கால்நடைகளின் கழிவுகள் கிடைக்கப்பெறாத மண், மலடாகி வளம் குன்றிவிடும். இந்த மரம் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் மனங்களில் வன்மங்களும், கொடிய சிந்தனைகளுமே மேலோங்கி இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.


அமெரிக்காவில் விழிப்புணர்வு:

இந்த மரத்தை 'வளரக்கூடாத நச்சு மரங்கள்' பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இந்தியாவில், கேரள அரசு இந்த மரத்தை தடை செய்துள்ளது. அங்கு இந்த மரத்தை பார்க்க முடியாது. தமிழ்நாட்டில் இப்போது தான் இம்மரத்தை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஆனந்தராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில், 'வைகை ஆறு மற்றும் பிரதான நீர்நிலைகளில் வளர்ந்துள்ள கருவேலமரங்களை ஒழிக்க வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது. எப்படி 'பார்த்தீனியம்' என்ற விஷச்செடியின் விதைகள் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையுடன் கலந்து, நாடு முழுவதும் பரப்பப்பட்டதோ, அது போல் வறட்சி நீட்டிக்க வேண்டும் என்பதற்காக, மேலை நாடுகளின் திட்டப்படியே இந்த மரத்தின் விதைகள் இந்தியாவில் பரப்பப்பட்டது. அதன் விளைவு, நீடித்த வறட்சி ஏற்பட்டு மண் வளமும் குன்றி விவசாயம் நலிவடைந்து விட்டது. இதனை அழிக்க இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர வேண்டும். என்.எஸ்.எஸ்., முகாம்கள் மூலமாக இந்த மரம் அழிப்பு பணியில் ஈடுபடலாம். சேவை சங்கங்கள் கிராமங்களை தத்தெடுப்பதன் மூலமாகவும் இதனை அழிக்கலாம். பிரதமர் மோடியின் 'தூய்மை இந்தியா' திட்டம் போல் கருவேல மரம் ஒழிப்பு இயக்கத்தை கையில் எடுக்க வேண்டும். இம்மரங்களை முற்றிலும் ஒழித்து விட்ட கிராமங்களை கண்டறிந்து குடியரசு தின விழாக்களில், கலெக்டர்கள் பரிசளிக்க வேண்டும். சிந்தனையாளர்களும், மனிதாபிமானிகளும், நீதிமான்களும், ஆட்சியாளர்களும் ஒரே நாளில் ஒன்று சேர்ந்து திட்டம் வகுத்து மனித குல சீரழிவிற்கு காரணமான கருவேல மரங்களை 'வேர் அறுக்க' வேண்டும். அது ஒன்றே மனித குலத்திற்கு, நீர்வளத்திற்கு செய்யும் பெரிய தொண்டு.

- ஆர்.முருகேசன்.
தலைவர்,
தரணி விவசாய ஆராய்ச்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனம்.
94434 65991We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X