உயிர்த்தெழுமா மருத்துவ துறை?- பி.ஜாபர் அலி,பத்திரிகையாளர்| uratha sindhanai | Dinamalar

உயிர்த்தெழுமா மருத்துவ துறை?- பி.ஜாபர் அலி,பத்திரிகையாளர்

Added : ஜன 24, 2015 | கருத்துகள் (3) | |
நீதித் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை; இந்த மூன்று துறை களையும் புனிதப் பணிகளை செய்யும் துறையாக பார்க்கிறோம். காரணம், இத்துறைகள் கெட்டுப் போனால் ஒட்டு மொத்த சமூகமும் சீரழியும். அதனால் தான் இந்த மூன்று துறைகளுக்கும் சமூகப் பார்வை பிரதானமாக இருக்க வேண்டும். செய்யும் சேவைக்கும் பணமும் ஒரு அங்கம். சமூகத்தில் இந்த மூன்று துறைகள் மீதும் இன்னமும் அந்தஸ்தான பார்வை
உயிர்த்தெழுமா மருத்துவ துறை?- பி.ஜாபர் அலி,பத்திரிகையாளர்

நீதித் துறை, கல்வித் துறை, மருத்துவத் துறை; இந்த மூன்று துறை களையும் புனிதப் பணிகளை செய்யும் துறையாக பார்க்கிறோம். காரணம், இத்துறைகள் கெட்டுப் போனால் ஒட்டு மொத்த சமூகமும் சீரழியும். அதனால் தான் இந்த மூன்று துறைகளுக்கும் சமூகப் பார்வை பிரதானமாக இருக்க வேண்டும். செய்யும் சேவைக்கும் பணமும் ஒரு அங்கம்.

சமூகத்தில் இந்த மூன்று துறைகள் மீதும் இன்னமும் அந்தஸ்தான பார்வை இருப்பதால் இந்த துறை மீது மக்கள் மத்தியில் ஒருவித ஈர்ப்பு இருக்கிறது. அதனாலேயே ஒவ்வொருவரும் தன் மகனை, மகளை டாக்டராக, கல்வியாளராக, நீதிபதியாக பார்க்க விரும்புகின்றனர். மருத்துவராக இருப்பவர்கள் இந்த விஷயத்தில் உறுதியாக உள்ளனர். அதனாலேயே பிள்ளைகளை கட்டாயப்படுத்தி மருத்துவம் படிக்கவைக்கின்றனர். தாங்கள் ஏற்கனவே கட்டி வைத்துள்ள மருத்துவமனைகளை, தொடர்ந்து நிர்வகிக்க ஆள் வேண்டும் என்ற நெருக்கடி. இந்த ஆசையை பயன்படுத்தி, தனியார் மருத்துவ கல்லூரிகள், லட்சக்கணக்கில் பணம் பெற்று, எம்.பி.பி.எஸ்., படிப்பு முதல் எம்.டி., படிப்பு வரையில் அட்மிஷன் போடுகின்றன. இப்படி பணத்தை கொட்டி படிக்கும் மாணவர்கள், முறையாக மருத்துவம் படிக்கின்றனரா என்றால், இல்லை.இந்த இடத்தில் தான் மருத்துவம் படிக்கும் பெரும்பாலானவர்களின் தகுதி கேள்விக்குரியதாகிறது. மருத்துவம் படித்து விட்டு தகுதியின்றி வரும் மருத்துவர்கள், அப்பாவிகளின் உயிரோடு விளையாடும் ஆபத்தான சூழ்நிலை உருவாகி இருப்பதற்கான அடிப்படையான காரணம், மருத்துவ கல்வி வியாபாரமானது தான்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான், இந்திய மருத்துவ கவுன்சில். மருத்துவக் கல்வி தரமானதாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட, இந்த கவுன்சில் இன்று தரம் இழந்து போனதன் விளைவு, அப்பாவிகள் பலரின் உயிர்கள், தகுதியற்ற மருத்து வர்களின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் விஷயத்தில், மத்திய அரசும் தெளிவான பார்வையில்லாமல் சென்று கொண்டுஇருக்கிறது.இதை பயன்படுத்தித் தான் தனியார் மருத்துவக் கல்லூரிகள், இந்தியாவில் புற்றீசல்களாக கிளம்பி இருக்கின்றன. எந்தவிதமான அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இல்லாமலேயே, மருத்துவ கல்லூரி நடத்த அனுமதி வாங்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
இதன் பின்னணியில் இருப்பது எல்லாமே லஞ்சம் தான். இந்திய மருத்துவ கவுன்சில் தலைவராக கேதன் தேசாய் இருந்தபோது தான், ஏகப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகள் இந்தியாவில் முளைத்தன. எல்லா துறைகளிலும் தனியாரை அனுமதிக்கும் போக்கு, தவிர்க்க முடியாத சூழ்நிலையில், மருத்துவ துறைகளிலும் தனியாரை அனுமதிப்பதில் தவறில்லை தான் என்றாலும், பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும் தனியார் மருத்துவ துறைகளுக்குள்ளும் புகுந்து அடிக்கும் கொள்ளை ஏராளம்.

போக்குவரத்தில் தனியாரை அனுமதித்திருக்கும் அரசு, கட்டண நிர்ணயம் உட்பட 'ரூட்பர்மிட்' வரையில் எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. சினிமா தியேட்டர்களில் ஏ, பி, சி என்று வகை பிரித்து கட்டணம் நிர்ணயித்துள்ள அரசு, அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவமனைகளையும் அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல, சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அப்படி இருந்தால் தான், தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கட்டணம் என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை தடுத்து, கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஒவ்வொரு மருத்துவரும் சாதாரண காய்ச்சலுக்குக் கூட ரத்தப்பரிசோதனை, ஸ்கேன் செய்யச் சொல்லும் அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பெரிய மருத்துவமனைகள் உள்ளுக்குள்ளேயே பரிசோதனை நிலையங்களை வைத்து அப்பாவிகளை சுரண்டும் போக்கு நடக்கிறது.ஒரு தரமான பரிசோதனை நிலையம் அமைக்க, இரண்டு கோடி ரூபாய் வரையில் தேவைப்படுவதால், கடன் வாங்கி பரிசோதனை கூடம் அமைக்கும் மருத்துவர்கள், கடனை திருப்பி செலுத்தும் நோக்கோடு ஆலாய் பறக்கின்றனர். அதனாலேயே, தேவை இல்லாதவர்களுக்கும் பரிசோதனை செய்யச் சொல்லி வற்புறுத்துகின்றனர். அதுமட்டுமல்ல, மருந்து வணிக நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் உடன்பாடு இருக்கிறது. தங்கள் நிறுவன மருந்துப் பொருட்களை சிபாரிசு செய்தால், அதற்கேற்றபடி மருத்துவர்களுக்கு ஊக்கப் பரிசு அளிக்கின்றன மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்.

தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கட்டணத்தை இஷ்டம் போல் நியமித்துக் கொள்ள அரசு அனுமதிப்பதில்லை. தொலைபேசி ஒழுங்கு முறை ஆணையம் அதை கட்டுப்படுத்துகிறது. அதேபோன்றதொரு ஆணையம் சுகாதாரத் துறையிலும் ஏற்படுத்தும்போது, மருந்துப் பொருட்களின் விலையும், மருத்துவ உபகரணங்களின் விலையும் கட்டுக்குள் வைத்திருக்கவும் விலை ெவளிப்படையாக தெரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும்.ஒரே நோய்க்கு ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக ௨௦ ஆயிரம் வாங்கினால், இன்னொரு மருத்துவமனையில், லட்சம் ரூபாய் வாங்குகின்றனர். சிகிச்சை ஒன்றே தான் என்றபோது கட்டணத்தில் மட்டும் இவ்வளவு வித்தியாசம் ஏன்? இதையும் முறைப்படுத்த அரசு முறையான சட்ட திட்டங்களை இயற்ற மடியும். ஆனால், ஒரு நோய்க்கு இவ்வளவு தான் இன்சூரன்ஸ் கிளைம் பண்ண முடியும் என்று இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் சொல்கின்றன. அப்படியென்றால் சிகிச்சையில் மருத்துவமனைகளுக்குள் கட்டண வித்தியாசம் வருவது ஏன்?

இது தவிர, கட்டணம் வசூலிப்பதற்கென்றே, நோயாளி குணமடைந்த பின்னும் சிகிச்சை என்ற பெயரில் மருத்துவமனைகளில் தங்க வைக்கும் போக்கு, தனியார் மருத்துவமனைகளில் நடக்கிறது.கட்டணம் பெற்று செய்யப்படும் சேவையில் குறைபாடு என்றால், நுகர்வோர் அதற்கான இழப்பீடு பரிகாரம் தேட சட்டத்தில் வழி உள்ளது.ஆனால், கட்டணம் பெற்று மருத்துவம் பார்க்கும் மருத்துவர்கள் சேவை குறைபாட்டால், உயிரிழப்பு நேர்ந்தால் கூட, எந்த பரிகாரமும் தேட முடியவில்லை. அப்படியொரு பாதுகாப்பு, மருத்துவர்களுக்கும், மருத்துவ துறையை சார்ந்தவர்களுக்கும் இருப்பதாலேயே, அவர்கள் தினமும் உயிர்களோடு விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ஆக, மருத்துவ சேவை குறைபாட்டுக்காக மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் தண்டிக்கும்படி கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டியதும் அவசியத்திலும் அவசியம். இந்த பிரச்னைகள் எல்லாம் தீர வேண்டும் என்றால், மருத்துவக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்துவதில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். தரமான மனித நேயமிக்க மருத்துவர்கள் உருவாக்கப்படும் சூழ்நிலையை ஏற்படுத்தினாலே படிப்படியாக எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
இ-மெயில்: pudumadamjaffar1968@gmail.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X