பொது செய்தி

தமிழ்நாடு

கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு சாரதா சிட்பண்ட்ஸ் நிதி: முதல்வர் மம்தா பானர்ஜியை விசாரிக்க பா.ஜ., கோரிக்கை

Updated : ஜன 28, 2015 | Added : ஜன 26, 2015 | கருத்துகள் (15)
Share
Advertisement
 கூடங்குளம் எதிர்ப்பாளர்களுக்கு சாரதா சிட்பண்ட்ஸ் நிதி: முதல்வர் மம்தா பானர்ஜியை விசாரிக்க பா.ஜ., கோரிக்கை

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு, மேற்கு வங்கத்தில் செயல்பட்ட, சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனம் நிதி உதவி அளித்ததாக, வருமான வரித்துறையினர், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதுவரை, வெளிநாடுகளில் இருந்து, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டத்துக்கு, நிதியுதவி அளிக்கப்பட்டது என்ற புகார் இருந்தது. இப்போது, உள்நாட்டைச் சேர்ந்த ஒரு நிதி நிறுவனமும், நிதி அளித்துள்ளது என்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


முறைகேடு:

மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டா உட்பட, சில நகரங்களில் செயல்பட்ட நிறுவனம், சாரதா சிட்பண்ட்ஸ். கவர்ச்சிகரமான முதலீட்டு திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம் பெருமளவில் நிதி திரட்டிய இந்நிறுவனம், நிர்வாகிகள் மற்றும் ஊழியர்களின் முறைகேட்டால் தற்போது மூடப்பட்டு உள்ளது. பொதுமக்கள், 1.7 கோடி பேரிடம், 300 கோடி ரூபாய் வரை டிபாசிட் வசூலித்து மோசடி செய்து விட்டதால், இது தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த சிட்பண்ட் மோசடியில், மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.பி.,க்கள் மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் தலைகளும் உருண்டுள்ளன.


நன்கொடை:

இந்த நிறுவனத்தின் கணக்குகளை, 2014 செப்டம்பரில், அமலாக்கப் பிரிவு, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, நிறுவன கணக்குகளில் இருந்து, தமிழகத்தின் கூடங்குளம், மேற்கு வங்கத்தின் ஹரிப்பூர் அணுமின் திட்டங்கள், கர்நாடக மாநில, அறிவியல் தொழில் நகரத் திட்டங்களை, எதிர்த்துப் போராடும் தன்னார்வ அமைப்புகளுக்கு, 5 கோடி ரூபாய், நன்கொடை வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.மேலும், இந்தத் தொகையானது, மேற்கு வங்கத்தின் அரசியல்வாதி ஒருவர் மூலம், அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு, கைமாறி உள்ளதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. கூடங்களும் அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு, வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாக, முந்தைய காங்கிரஸ் அரசு ஆட்சியின் போது, உள்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இதுகுறித்து, அப்போதைய பிரதமர் அலுவலக, இணை அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:அணு உலைக்கு எதிரான போராட்டங்களை நடத்துவோருக்கு, வெளிநாடுகளில் இருந்து தொண்டு நிறுவனங்கள் மூலம், பணம் வருவதாக புகார் வந்தது. இதுகுறித்து, உள்துறை விசாரணைக்கு உத்தரவிட்டோம். விசாரணையில், சில தொண்டு நிறுவனங்களின், வரவு, செலவு குறித்து உரிய ஆவணங்கள் இல்லை. இதைத் தொடர்ந்து, அந்நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கினோம். வெளிநாடுகளிலிருந்து, நிதி வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. பொதுவாக, நாட்டின் மின் உற்பத்திக்கு, முக்கியமாக இருக்கும், அணுமின் நிலையங்களை எதிர்ப்பது, வளர்ச்சியைத் தடுப்பதாகும். இதைத் தான் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களும் செய்கின்றனர்.சாரதா நிதி நிறுவனம், கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களுக்கு, நிதியுதவி அளித்தது குறித்து, சி.பி.ஐ., விசாரிக்கிறது. அதுகுறித்த தகவலை, பா.ஜ., அரசு தான் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


முதல்வரிடம் விசாரணை?

மேற்கு வங்கத்தில் இருந்து, தென் மாநில வளர்ச்சித் திட்டங்களை, எதிர்க்க பணம் வருகிறது என்றால், அம்மாநில முதல்வரையும், விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என, பா.ஜ., கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் தேசிய செயலர், எச்.ராஜா கூறியதாவது:அணு உலை போன்ற வளர்ச்சித் திட்டங்களை, சில தொண்டு நிறுவனங்களும், நக்சலைட்டுகளுமே, எதிர்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தில், கம்யூனிஸ்டுகளை எதிர்க்க, நக்சலைட்டுகளின் ஆதரவை அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி நாடினார். இப்போது, நக்சலைட்டுகளை திருப்திபடுத்த, அவர்கள் எதிர்க்கும் அணுஉலை திட்டங்களுக்கு, நிதி அளிக்க முன்வந்திருக்கலாம். மேலும், சாரதா சிட்பண்ட்ஸ், வெளிநாட்டு பணத்தை, இந்தியாவுக்குள் கொண்டு வரும் கருவியாக பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்ற, சந்தேகம் எழுகிறது.எனவே, அணு உலை எதிர்ப்புக்கு, சாரதா சிட்பண்ட்ஸ் நிதி அளித்ததாக எழுந்துள்ள புகார் குறித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா
பானர்ஜியையும் விசாரிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


உதயகுமார் சொல்வது என்ன?

கூடங்குளம் போராட்டக்காரர்கள் சிலர், தங்கள் போராட்டத்துக்கு ஆதரவு திரட்ட, 2012ல் கோல்கட்டா சென்றதாகவும், அங்கிருந்து சிலர், கூடங்குளம் வந்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.சாரதா நிதி நிறுவனம் மூலம், கூடங்குளம் போராட்டக்காரர்களுக்கு, பணம் வந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து, போராட்ட ஒருங்கிணைப்பாளர், உதயகுமாரை சந்திக்க, அவர் வீட்டிற்கு, நிருபர்கள் சென்றபோது, 'அவருக்கு உடல்நிலை சரியில்லை' என்று கூறி, நிருபர்களை சந்திக்க மறுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan S - Chennai,இந்தியா
27-ஜன-201517:42:30 IST Report Abuse
Kannan S மொட்டை தலைக்கும் முழங்காலும் முடிச்சி போடுகிற வேலையை தினமலர் நன்றாக செய்கிறது
Rate this:
Cancel
RGK - Dharapuram,இந்தியா
27-ஜன-201515:46:59 IST Report Abuse
RGK எல்லாமே பூர ப்ராடு
Rate this:
Cancel
Sathesh Pandian - Chennai,இந்தியா
27-ஜன-201515:45:48 IST Report Abuse
Sathesh Pandian உங்க கற்பனைகளுக்கு அளவே இல்லாம போயிட்டு இருக்கு. முடிந்தால் ஆதாரங்களுடன் நிருபியுங்கள். வரவேற்கிறேன். நாசா விஞ்ஞானி நாராயணசாமிக்கு அடுத்து தினமலர் என்று இருக்க வேண்டாமே. நீங்களும் பல வருடங்களாக அணுஉலை எதிர்பாளர்கள் மேல் கரியை பூச முயற்சி செய்கிறீர்கள். ஒன்றும் உருப்படியாக நிருபிக்க முடியவில்லையே. இதில் பலர் நேரில் கையுட்டு வாங்கியது போன்று கருத்து வேறு தெரிவிக்கிறார்கள். உங்களால் நிருபிக்க முடியாததை எழுதுவதை தவிருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X