கிராமங்களுக்காக கரம் கோர்ப்போம்: தி.இரா. திருவேங்கட ராஜ்| Dinamalar

கிராமங்களுக்காக கரம் கோர்ப்போம்: தி.இரா. திருவேங்கட ராஜ்

Added : ஜன 27, 2015 | கருத்துகள் (1)
கிராமங்களுக்காக கரம் கோர்ப்போம்: தி.இரா. திருவேங்கட ராஜ்

நகரத்தில் பணிபுரிந்த போது அவ்வப்போது விடுமுறைக் காலங்களில் சொந்தக் கிராமத்திற்குச் சென்று வரும்போதேல்லாம் ஒரு கேள்வி மனத்திரையில் ஓடிக் கொண்டேயிருக்கும். எதிர்பார்த்த வளர்ச்சியை கிராமங்கள் பெறாததற்கும், உயிர்த் துடிப்போடு இயங்காததற்கும், தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளாமைக்கும் நம்மை ஆளும் அரசாங்கங்கள் மட்டும் தான் காரணமா ? வேறு காரணங்கள் இருக்கிறதா ? என ஆராய்ந்து பார்ப்பதுண்டு. இப்போது அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்பு சொந்தக் கிராமத்திற்கு திரும்பி வந்த பின் இந்த சந்தேகம் கொஞ்சம் வளர்ந்திருக்கிறேதே தவிர குறையவில்லை.


ஓய்வுக்கு பின் கிராமப்புற சேவை:

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும் படித்து விட்டு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களும் ஒவ்வொரு கிராமத்திலும் குறிப்பிடத்தக்க அளவு இருக்கின்றனர். கிராம வளர்ச்சிக்கு அவர்களுக்கு எந்தவித பங்குமில்லையா? அதிலும் அரசு ஊழியர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். வேலைப் பாதுகாப்பும் நிதிப் பாதுகாப்பும் பெற்றவர்கள். அதனால் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொண்டவர்கள். ஓய்வுக்குப் பின் அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்த கிராமப் பகுதிகளுக்கு என்ன பங்களிக்கிறார்கள் என நடுநிலையோடு ஆராய்வது அவசியம். குண்டும் குழியுமான கிராமத்துச் சாலைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தும் சரிவர இயங்காத சூழல், நீர் வற்றிப்போன காலத்தில்கூட தூர் வாரப்படாத கண்மாய்களும் குளங்களும்; சில பகுதிகளில் நீர்நிலைகளைப் பாழாக்கும் ஆகாயத் தாமரைகள்; கிராமங்களின் சாபக் கேடுகளாக நீக்கமற வளர்ந்து நிலத்தடி நீரை உறிஞ்சி நிற்கும் கருவேல மரங்கள். இது தவிர நவீன வாழ்க்கை நமக்கு வழங்கிய கொடையாக எங்கெங்கும் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகள், தமிழக கலாசாரத்தை பறைசாற்றும் மது பாட்டில்கள் என அழகான கிராமங்கள் இன்று பொலிவிழந்து நாற்றமடித்துப் போய் உள்ளன. ஊருக்குள் நுழையும் போதே நம்மை விரட்டி அடிக்கும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள். அதுவும் மழைக்காலத்தில் சொல்ல வேண்டியதே இல்லை. சில விதிவிலக்குகள் தவிர கிராமங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழவில்லை. மாற்றம் ஒன்று தான் மாறாது என்ற உலகியல் தத்துவம் கிராமங்களுக்குப் பொருந்தாது போலும். இந்த அழுக்குகளையும் இழுக்குகளையும் மாற்ற வேண்டி அதற்காக முயற்சிக்க வேண்டியது பணி ஓய்வு பெற்ற ஊழியர்களின் கடமையல்லவா.


அரசுப் பள்ளிகளில் வசதி:

பணி ஓய்வு பெற்ற பின்பும் உடல் ஆரோக்கியத்தோடு இருப்போரின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதில் தவறில்லை. முதலில் கிராமப் பள்ளிக் கூடங்களை எடுத்துக் கொள்வோம். முன்பெல்லாம் பள்ளிக்கூடங்களுக்கு கட்டடங்கள் இல்லை. மரத்தடியில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன என அறிந்திருக்கிறோம். மாணவர்கள் அமர்ந்திட பெஞ்சுகள் இல்லை. தரையில் உட்கார்ந்து பாடம் படிக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கிறோம். விஞ்ஞானக் கூடங்கள் இல்லாமை போதுமான கழிப்பறை வசதிகள் இன்மை என பல பிரச்னைகள் இருந்தன. ஆனால் சமீப ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளுக்காக அரசுகள் பெரும் அளவில் நிதி ஒதுக்கீடு செய்து அனைத்து வசதிகளையும் செய்து கொண்டிருக்கின்றன. சில நேரங்களில் தேவைக்கும் அதிகமாகவே உபகரணங்களும் கம்ப்யூட்டர்களும் கட்டடங்களும் உள்ளன. ஆனால் இவை கல்வி மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறதா? மாணவர்களின் வகுப்பறைத் தேர்ச்சியுடன் கூடிய பிற திறன்களை வளர்த்திட என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன? மாணவர்களின் உடல் வலிமையும் அறிவுத் திறனும் வளர்ந்திட பள்ளிக்கூடங்களுக்கு உதவிடத்தான் ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் -ஆசிரியர் கழகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் அந்த அமைப்புகள் உயிரோட்டமாக இயங்குவதில்லை. உள்ளூர் மக்களின் பங்கும் மிகக் குறைவே. பள்ளிக் கூடம் அரசின் சொத்தாக இருக்கலாம். ஆனால் பள்ளிக் குழந்தைகள் நமது சொத்தல்லவா? அறிவும் அனுபவமும் மிக்க ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இத்தகைய கல்வி சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தினால் பள்ளிகள் பலன் பெறும்.


கிராம வளர்ச்சி மன்றங்கள்:

கிராமத்தின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்கும் அரசின் திட்டங்கள் மக்களை அடைவதற்கும் பாலமாக இவர்கள் திகழ வேண்டும். இதற்காக கிராம வளர்ச்சி மன்றங்களை உருவாக்கலாம். ஆனால் ஜாதியும், அரசியலும், மத மாறுபாடுகளும் இவற்றுள் புகுந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பல துறைகளில் பணியாற்றிய அனுபவத்தையும் துறைசார்ந்த அறிவையும், தான் சார்ந்திருக்கும் கிராம வளர்ச்சிக்கு இவர்கள் பயன்படுத்தினால் ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாறும். காந்தி கண்ட கனவும் நனவாகும். விவசாயம் சார்ந்த விவாதக் கூட்டங்கள் நடத்துவது, நவீன விவசாயம், இயற்கை வேளாண்மை பற்றி விளக்குதல், நூலக வாசகர் வட்டக் கூட்டங்கள் நடத்துவது, மருத்துவ முகாம்கள் நடத்துவது என பலவற்றைச் செய்யலாம். ஊடகங்களும் தகவல் தொழில்நுட்பமும் பெரும் அளவில் வளர்ந்திருக்கின்றன. அவற்றை முழுமையாக பயன்படுத்தினால் பெரும் பயன் கிடைக்கும். செலவில்லாமல் ஊர்ப்பணி செய்ய பல வழிமுறைகள் உள்ளன.


வங்கிகள் மூலம் நலத்திட்டங்கள்:

மழை வளம் காக்க சில மரங்களை நட்டு பராமரிப்பது என்பது இயலாத காரியமா? அதற்குக் கூட அரசை நாட வேண்டுமா? வங்கிக் கிளைகள் குக்கிராமங்களில் கூட திறக்கப்பட்டு வருகின்றன. எழுத்தறிவற்ற மக்களுக்கு நாம் உடனிருந்து இந்த நிதிச்சேவைகளைப் செய்து தரலாம். இதற்கெல்லாம் தேவைப்படுவது பணமல்ல, நல்ல மனமே. இதைப் போல் எத்னையோ உதவிகள் கிராம மக்களுக்குத் தேவைப்படுகின்றன. அவற்றைக் கண்டறிந்து மனமுவந்து உதவினால் கிராமமே வாழ்த்தும். இது எனது கிராமம்; நான் பிறந்து வளர்ந்த பூமி; இதன் பெருமைக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற செயல்களை செய்வேன். என்று ஓய்வு பெற்ற ஒவ்வொருவரும் சூளுரைத்தால் பொற்காலம் மலரும். நம்மை இந்த சமுதாயம் வாழ்த்தும்.

- தி.இரா. திருவேங்கட ராஜ்,
பேராசிரியர் (ஓய்வு),
அருப்புக் கோட்டை.
94862 14341We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X