நேரு எப்படிப்பட்டவர்?| Dinamalar

நேரு எப்படிப்பட்டவர்?

Updated : ஜன 30, 2015 | Added : ஜன 30, 2015 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
நேரு எப்படிப்பட்டவர்?

1946-இல் நேருவுக்கு ஐம்பத்தேழு வயது. அவருக்கு நல்ல உடல் தகுதியும் இருந்தது. பத்து ஆண்டுகள் சுகாதாரமற்ற சூழலில் அடைத்து வைக்கப்பட்டு, சிறைச்சாலை உணவையே சாப்பிட்டு வாழ்ந்த ஒரு மனிதருக்கு, உடல் தகுதியுடன் இருப்பதென்பது வழக்கத்தைவிட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவருடைய நாள் ஹட யோகப் பயிற்சியுடன் தொடங்கும். சிரசாசனம் செய்வதில் அவருக்குத் தனி மகிழ்ச்சி. அவர் தனித் திறமையுடன் குதிரை ஏற்றப் பயிற்சியும், நீச்சல் பயிற்சியும் செய்வார். அவர் ஐரோப்பாவில் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்றிருக்கிறார். உயர்ந்த இமயமலைச் சிகரங்களில் மலையேற்றப் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். 1953-இல் எட்மண்ட் ஹில்லாரியும் டென்சிங் நார்கேயும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்த பிறகு டார்ஜிலிங் நகரில் மலையேற்றப் பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கப்பட்டது. அது இளைஞர்களிடத்தில் மலையேற்றப் பயிற்சியை பரப்புவதற்கு உதவும் என்று நேரு நம்பிக்கை கொண்டார். மலைகளில் நடப்பதற்கும் குதிரையில் சவாரி செய்வதற்கும் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். உடலை ஈடுபடுத்தி செய்யும் துணிச்சலான செயல்கள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அதனால் பயங்கொள்ளித்தனத்தை அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனுடைய இயல்பான தொடர்விளைவாக அவருடைய சொந்தப் பாதுகாப்பையே அவர் ஏளனமாகக் கருதலானார். நல்ல உணவையும் சிறந்த பழங்களையும் அவர் விரும்பி சாப்பிட்டார். எனினும் எதிலும் அளவோடு இருந்ததால் அவர் ஒல்லியாகவும், உடலை எளிதில் வளைக்கும் திறன் படைத்தவராகவும் இருந்தார். எனவே தொப்பை வயிறுகளையும், டபிள் சின்களையும் சற்றே வெறுத்தார். அவர் நடக்கும்போது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒரு துள்ளல் இருக்கும். படிக்கட்டுகளில் ஏறும்போதெல்லாம் இரண்டு இரண்டு படிக்கட்டுகளாகத் தாவி ஏறுவதில் அவருக்கு ஆர்வம். விடுதலைப் போராட்ட வீரர்கள் தேசத்தின் வீர நாயகர்களாகக் கருதப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில், சிற்பி செதுக்கியது போன்ற அவரது முக அழகும், பிற அம்சங்களும் மக்கள் இடையே அவருக்குக் கூடுதலான கவர்ச்சியை அளித்தன. இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் விதித்த கடுமையான தணிக்கை முறையை இந்தித் திரைப்பட உலகம் எதிர்த்துப் போராடி வந்தது. அந்த நிலையிலும், முற்போக்கான திரைப்படப் படைப்பாளிகளும், பாடலாசிரியர்களும் தேசிய இயக்கத்தின் மீதான தங்களது போற்றுதலை தங்களது கதைகளிலும், பாடல்களிலும் ரகசியமான முறையில் புகுத்தி வந்தனர். புகழ்பெற்ற நடிகர் அசோக்குமார் நடித்து 1941-இல் வெளியான நயா சன்சார் இந்தித் திரைப்படத்தில் அத்தகைய பாடல் வரிகள் இடம் பெற்றன.பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ஒரு கேளிக்கை என்ற முறையில் இந்தி சினிமாவுக்கு ஒரு தாழ்ந்த அந்தஸ்தே தரப்பட்டிருந்தது. அலாஹாபாத்தில் ஆங்கில, அமெரிக்கத் திரைப்படங்கள் மக்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ள இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டன. இரவு 9.30 மணி காட்சிக்கு பால்கனி இருக்கைகளில் அமர்ந்து படம் பார்ப்பது என்பதே ஒரு சமூக நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது. அதற்காகவென்றே மேட்டுக்குடி பெண்கள் பிரெஞ்சு சிபான் மற்றும் ஜார்ஜெட் புடவைகள் அணிந்து, பவுடர் பூசி சென்ட் அடித்து அலங்கரித்துக் கொள்வார்கள். சூட்டும் டையும் அணிந்த அவர்களின் கணவன்மார்கள் உடன் செல்வார்கள். படம் முடிந்து விளக்குகள் போட்டவுடன் இசைக்கப்படும் இங்கிலாந்து பேரரசரை கடவுள் காப்பாற்றுவாராக என்ற பாடலுக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்துவார்கள். இந்தி திரைப்படத்துக்கு செல்லவேண்டும் என்றால் மக்கள் நெரிசல் மிகுந்த சந்துகள் வழியாக கடைவீதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள திரையரங்கத்துக்கு குதிரை வண்டியில்தான் செல்லவேண்டும். அந்த இந்திப் படங்கள் புராணங்களையும் பழங்கதைகளையும் தழுவியதாக, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டுவதாக, குடும்ப, தேசபக்த உணர்வுகளைத் தொடுவதாக அமைந்திருந்தன. பெருந்திரளான மக்கள் அவற்றைக் கண்டு களித்தனர். பர்தா அணிந்த பெண்களுக்கு என்றே பால்கனி இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இந்தியனின் இந்தியா என்ற ஒன்று இருக்கிறது என்பதை, அதன் கடந்த காலமும் நிகழ்காலமும், பாடலும், கதையும், நடனமும், மொழியும் இன்னும் செயல்துடிப்புடன் இருக்கின்றன என்பதை இந்தி சினிமாக்கள் மெய்ப்பித்துக் கொண்டிருந்தன. இந்தித் திரையுலகின் புகழ்பெற்ற நடிகையான தேவிகா ராணி நேருவை பெரிதும் மதித்துப் போற்றியவர். தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெள்ளிச் சட்டம் போட்டு அவர் நேருவுக்கு அனுப்பி இருந்தார். சுதந்தரத்துக்குப் பிறகு, தேவிகா ராணியும் அவர் கணவர் ஸ்வெதோஸ்லாவ் ரோயரிக்கும் பெங்களூரில் இருந்து தில்லி வரும்போதெல்லாம் நேருவின் அரசு இல்லமான தீன் மூர்த்தி இல்லத்துக்கு விருந்தினர்களாக வருகை தருவதுண்டு.நேருவிடம் இருந்த மிகவும் மறக்கமுடியாத மனிதப் பண்பு என்னவென்றால் மற்ற மனிதர்களை அவர் எவ்வாறு நடத்தினார் என்பதுதான். பொது நிகழ்ச்சிகளிலும், தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலும் நேரம் தவறாமை என்பது அவருக்கு மரியாதை நிமித்தமான செயலாகவும், பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற விஷயமாகவும் இருந்தது. பொதுமக்களுக்கு தொல்லை தரும் வகையில் விஐபி-களுக்கு அளிக்கப்படும் மரியாதைகளை அவர் கடுமையாக எதிர்த்தார். 1949 பிப்ரவரியில் புது தில்லி ரீகல் திரையரங்கில் நடந்த ஹாம்லெட் நாடக நிகழ்ச்சிக்கு பிரிட்டிஷ் தூதரின் விருந்தினராக நேரு சென்றிருந்தார். அந்த திரையரங்கத்துக்கு வெளியே இருந்த சாலை மூடப்பட்டு மூன்று மணி நேரம் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது என்பதை அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் கேள்விப்பட்டார்.'இது பொது மக்களில் பெரும்பகுதியினரை மட்டுமின்றி நமது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பெரிதும் ஆத்திரம் அடையச் செய்திருக்கிறது என்பது இயல்பே... பாதுகாப்பு நடவடிக்கைகளை என்னால் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதுபோல மணிக் கணக்கில் சாலையை மூடி போக்குவரத்தைத் தடை செய்வது பெரிதும் எதிர்ப்புக்குரியது. இதைச் செய்துதான் ஆக வேண்டும் என்றால் கவர்னர் ஜெனரலோ நானோ எங்கேயும் வெளியே செல்லக்கூடாது என்பது தெளிவு. உண்மையில் என்ன நடந்தது என்பதையும், மிகவும் வெளிப்படையாகத் தவறு எனத் தெரியும் ஒரு வழிமுறையை அவர்கள் வலியுறுத்தியது ஏன் என்பதையும் இதற்குப் பொறுப்பானவர்களிடம் தயவுசெய்து நீங்கள் விசாரிக்க வேண்டும்' என்று அவர் ஆணையிட்டார்.தனிப்பட்ட வாழ்க்கையில், பழைய நண்பர்களை நேரு மதித்துப் போற்றினார். புதிய நண்பர்களையும் கவர்ந்தார். அவருக்கு அன்பானவர்களை, வழக்கமாகக் கடிதங்கள் மூலம், கனிவினால் கட்டிப்போடும் அவரின் பண்புதான், அவருடன் அவர்களை மிகவும் நெருக்கமாக வைத்திருந்தது. ஹாரோ பல்கலைக்கழகத்தில் அவர் மாணவனாகவும், விஜயலட்சுமி ஐந்து வயதுச் சிறுமியாகவும் இருந்தபோது, 1905-இல் அவர் அனுப்பிய படங்கள் அச்சிட்ட அஞ்சல் அட்டைகளில் இருந்துதான் சகோதரியுடனான அவரது கடிதப் போக்குவரத்து தொடங்கியது. அதைத் தொடர்ந்த ஆண்டுகளில் அவர் எழுதிய இரண்டு கடிதங்களில் அடங்கியுள்ள சில வரிகள் அந்த உறவின் நெருக்கத்தை வெளிப்படுத்துகின்றன. 'பாடன்வீலரில் இருந்து, 1935 டிசம்பர் 31:உனக்கு வெகு விரைவிலேயே நான் மீண்டும் கடிதம் எழுதுகிறேன். ஏனெனில், அப்படி எழுத வேண்டும் என்று எனக்கு ஆவல் மேலிட்டது. நான் இதை எழுதும்போது பழைய ஆண்டு கடந்துகொண்டிருக்கிறது - ஏறக்குறைய இது நள்ளிரவு நேரம் - இந்தப் புத்தாண்டின் வருகையின் போது உனக்குக் கடிதம் எழுத வேண்டும், என்னுடைய அன்பு அனைத்தையும் உனக்கு அனுப்பவேண்டும் என்ற ஆர்வம் என்னுள்ளே வலுவாக ததும்பிக் கொண்டிருக்கிறது. தேவாலய மணிகள் ஒலிக்கின்றன. அந்த மணியோசை பள்ளத்தாக்குகள் எங்கும் அலை அலையாய்ப் பரவி ஒவ்வொருவரையும் தன்னுள் அடக்கிக்கொள்கிறது. எங்கோ பீரங்கி வெடிக்கும் ஓசையும் கேட்கிறது... அது என்னை போரைப் பற்றியும், அதன் துன்பங்களைப் பற்றியும், பேரழிவைப் பற்றியும் சிந்திக்கத் தூண்டுகிறது.'
=========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthiban S - arumuganeri,இந்தியா
01-பிப்-201523:02:47 IST Report Abuse
Parthiban S இனியாவது நாட்டுக்கு நல்லது 'நேரு''மோடி'..?
Rate this:
Share this comment
Cancel
rajarajan - bangalore,இந்தியா
31-ஜன-201511:11:36 IST Report Abuse
rajarajan இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களில் செக்கிழுத்த செம்மலை போன்று பாதிக்கப் பட்டவர் வேறு யாருமே இல்லை என்பதுதான் உண்மை.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
30-ஜன-201516:46:33 IST Report Abuse
Endrum Indian செக்கிழுத்த செம்மல், கல்லுடைத்த பாரதியார் எங்கே. சிறையில் முதல் வகுப்பு அனுபவித்தவர் எங்கே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X