முதுமை தொல்லையா? - ப.சுப்பிரமணியன்| Dinamalar

முதுமை தொல்லையா? - ப.சுப்பிரமணியன்

Added : ஜன 30, 2015 | கருத்துகள் (8)
முதுமை தொல்லையா? - ப.சுப்பிரமணியன்

"மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு இலை பாரமா கொடிக்கு காய் பாரமா பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா” மண்ணுக்கு மரமும், மரத்துக்கு இலையும், கொடிக்கு காயும், குழந்தை தாய்க்கும் பாரமில்லை. ஆனால் இன்று...பெற்ற பிள்ளைகளுக்கு பெற்றோரே பாரமாகி விட்டார்கள்.

முதுமை ஒரு செல்லாக்காசு. இப்படி சொல்வதற்கு காரணம். முதுமையினால் தள்ளாமை, தள்ளாமையினால் இயலாமை, இயலாமையினால் மற்றவர்களின் உதவியை நாடியே தீர வேண்டிய கட்டாயம். எப்பொழுதும் யாரோ ஒருவரின் கையை எதிர்பார்த்தே வாழ வேண்டிய சூழ்நிலை. சொந்தங்களோ, சுற்றங்களோ, எத்தனை பேர் பெற்றோரை ஒரு சுமையாக கருதாமல் பேணி பார்க்கின்றனர். பிறக்கிறார்கள், வளர்கிறார்கள், படிக்கின்றார்கள், வேலைக்கு செல்கின்றார்கள். திருமணமும் ஆகிறது. பிள்ளைகளை பெற்றுக் கொள்கிறார்கள். பிறந்த பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை எண்ணியே உழைத்து, உழைத்து, பிள்ளைகளை கரை சேர்க்கின்றனர். இதற்குள் வாழ்க்கை முழுவதையும் உண்ணாமல், உறங்காமல், உழைத்து ஓய்ந்து போய் விடுகின்றனர். கடமைகளை எல்லாம் முடித்ததும், கடைசிப்பயணம் உடனே வந்து விட வேண்டும். கடமையை முடிக்காதவர்களுக்கு கடமையை முடிக்கும் வரை காலனிடம் கொஞ்சம் வாய்தா வாங்கி கொள்ளலாம். ஆனால், இப்படி ஒரு ஏற்பாடு இறைவனின் படைப்பில் இல்லை. அதனால், முதுமை காலத்தில் முகப்பில் அமர்ந்து கொண்டு மோட்டை பார்த்து கொண்டு, பழைய நினைவுகளை அசை போட்டு கொண்டிருக்கின்றனர். முதுமை காலத்தில் பெரும்பாலானோருக்கு நடமாட முடிவதில்லை. நடை, உடை இன்றி நலிந்து, மெலிந்து போனபோது, மகனோ, மகளோ, சுற்றமோ உதவிக்கு வந்து கவனித்து கொள்ள மாட்டார்களா என்ற எண்ணமே மேலோங்கி இருக்கும். இன்றைய சூழலில் முதுமை உற்றத்தார்க்கும், சுற்றத்தார்க்கும் தொல்லையாகவே படுகிறது.


தனிமைபடுத்தல்:

முதுமையால் தனிமைப்படுத்தப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு. "மண்ணும் தான் நல்ல மண்ணு மன்னவரும் நல்லவரே


மன்னவரை பெற்றெடுத்த மலைக்குரங்கே தொந்தரவு”


"பூமியும் தான் நல்ல பூமி புண்ணியரும் நல்லவரே


புண்ணியரை பெற்றெடுத்த பெருங்குரங்கே தொந்தரவு” என்று மாமியாரை வசை பாடியே, அவர் மகனை அழைத்து கொண்டு தனிக்குடித்தனம் சென்ற மருமகள்கள் உண்டு. பணியின் காரணமாக வெளிநாடு சென்று விட்ட பிள்ளைகளும் உண்டு. மனம் போனபடி குணங்கள் போகாமல், குணம் மாறி பெற்றோரை பிரிந்து சென்ற பிள்ளைகளும் உண்டு. சொத்தை பிரிப்பதில்லை என்று பெற்றோரும், சொத்தை பிரி என்று பிள்ளைகளும் இருபக்கம் இழுக்க, ஒரு பக்கத்தில் பெற்றோரை பிரித்து விட்ட பிள்ளைகளும் உண்டு. "தங்க மக்கள் வாசலிலே, தங்க காசு தரையெல்லாம் உருளுது. எங்கட்கு உண்பதற்கு காசு இல்லை” என்று முதுமை காலத்தில் புலம்பும் பெற்றோரும் இருக்கிறார்கள். சொந்த வீட்டை தவிக்க விட்டு சின்ன வீட்டை தேடி சீரழிந்த மகனால், முதுமைக் காலத்தில் பெற்றோர் முனங்கித் தீர்க்கும் நிகழ்வுகளும் உண்டு. இப்படி பல காரணங்களுக்காக பிரிந்து சென்ற பிள்ளைகள் கவனிக்காததால், தனியே தவிக்கும் பெற்றோர் ஏராளம்.


வரிசை கட்டிய பிரச்னைகள்:

சில இடங்களில் பிள்ளைகள் பெற்றோரை பார்த்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும் அவர்களால் முடிவதில்லை. காரணம், அவர்களின் குடும்பச் சூழல். பிள்ளைகள் கவலை, பணி செய்யும் இடத்தில் பிரச்னை, வருமானம் பற்றாக்குறை என அவர்களின் பிரச்னை வரிசையில் நிற்கின்றன. பெற்றோரின் பிரச்னைகளை கேட்டால் நிச்சயம் பிள்ளைகள் நல்ல தீர்வு சொல்வார்கள். ஆனால், பிள்ளைகளுக்கு பெற்றோரின் பிரச்னையை கேட்கவே நேரமில்லை. அதனால்தான் இன்று முதியவர் இல்லம் பெருகி கொண்டே இருக்கிறது. முதியவர்களை இல்லத்தில் சேர்த்து விட்ட கையோடு, பிள்ளைகள் நிம்மதி பெருமூச்சு விட்டாலும், முதியவர்கள் மகிழ்வாக இருக்கின்றார்களா? அது தான் இல்லை. காரணம் சற்று நல்ல நிலையில் இருப்பவர்களை, அதாவது அவர்கள் வேலைகளை அவர்களே செய்து கொள்ளுபவர்கள் அங்கு சென்றால், அங்குள்ள சூழல் அவர்களை பைத்தியமே ஆக்கிவிடும். நம்மை விட ரொம்பவும் நலிவுற்றவர்களை, அங்கு காணும்போது, நமக்கும் இப்படி ஆகிவிடுமோ, என்ற பீதியும் ஒரு வித பயமும் கூட ஏற்பட்டு மனநிலையும், உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது.


குறை காணாதீர்கள்:

முதுமை, அது எல்லோருக்கும் ஒருநாள் கண்டிப்பாக வரும். ஏன், கடவுள் கூட மனித அவதாரம் எடுத்தால் முதுமையை சந்திக்க வேண்டியது வரும். ஆகவே முதுமையை தொல்லையாக கருதாதீர்கள். கடமைக்காக பெற்றோரை கவனிக்காவிட்டாலும் ஒரு தொண்டாய் நினைத்து செய்யலாமே. நம்மை பெற்றவர்கள் என்ற எண்ணம் கண்டிப்பாக நமக்கு மகிழ்ச்சியை தரும். முதியவர்களுக்கு ஒரு செய்தி. நமக்கு பிள்ளைகள் வேண்டும் என்று எண்ணி, மக்களை பெற்று கொண்ட பெற்றோர்களே, உங்களின் பிள்ளைகளிடம் குறை காணாதீர்கள். சொந்தங்களிடமும், சுற்றங்களிடமும், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அனுசரித்து செல்லுங்கள். அவர்கள் அன்பை பொழிவார்கள். பிறகு என்ன, முதுமைக்கு 'குட்பை' சொல்லுங்கள். மனதினால் என்றும் இளமையாக இருங்கள்.

- ப.சுப்பிரமணியன், வங்கி மேலாளர் (ஓய்வு), காரைக்குடி. 94431 22045.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X