குறுந்தொழிலை குறுக விடாதீர்: வி.எஸ்.மணிமாறன்| Dinamalar

குறுந்தொழிலை குறுக விடாதீர்: வி.எஸ்.மணிமாறன்

Added : பிப் 03, 2015 | கருத்துகள் (1)
குறுந்தொழிலை குறுக விடாதீர்: வி.எஸ்.மணிமாறன்

அனைத்து சிறு மற்றும் குறுந்தொழில்கள் நாட்டின் முதுகெலும்பு. நம் நாட்டை பொறுத்தவரையில் விவசாயத்திற்கு அடுத்ததாக அதிக வேலை வாய்ப்பினை வழங்கும் துறை சிறு குறுந்தொழில்கள் தான். குறிப்பாக கிராமங்களில் அதிக வேலை வாய்ப்பினை அளிக்கும் தொழில் குறுந்தொழில். நாட்டின் மொத்த உற்பத்தியில் சிறு குறுந்தொழில்களின் பங்கு 45 சதவீதம். மேலும் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்கு வகிக்கிறது.


ரூ.15 லட்சம் கோடி முதலீடு :


மத்திய சிறு, குறுந்தொழில் தொழில் அமைச்சகத்தின் படி இயந்திர தளவாடங்களின் மொத்த முதலீடு ரூ. 25 லட்சம் வரை குறுந்தொழில்கள் எனவும், ரூ.25 லட்சத்திற்கு மேல் ரூ. ஐந்து கோடி வரை சிறு தொழில்கள் எனவும், ரூ.ஐந்து கோடிக்கு மேல் ரூ.பத்து கோடி வரை நடுத்தர தொழில்கள் எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாத 5.25 கோடி குறு, சிறு தொழில்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் மொத்த முதலீடு சுமார் ரூ.15 லட்சம் கோடி.தமிழகத்தை பொறுத்தவரை பதிவு செய்த மற்றும் பதிவு செய்யப்படாமல் 12 லட்சம் குறு, சிறு தொழில்கள் உள்ளன. இவற்றின் மூலம் சுமார் 80 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். வாகன உதிரி பாகங்கள், ரப்பர், தோல் பொருட்கள், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு தொழில்களில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. குறு, சிறு குறுந்தொழில்கள் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கெமிக்கல், பிளாஸ்டிக், ரப்பர், டெக்ஸ்டைல், ஆயத்த ஆடைகள், தீப்பெட்டி, மருந்துகள், சூரியசக்தி பயன்பாட்டு உபகரணங்கள், வாகன உதிரிபாகங்கள், ஸ்டீல் மற்றும் உணவு பதப்படுத்துதல் சார்ந்த சுமார் 6000 வகையான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இந்நிறுவனங்களின் மொத்த முதலீடு ரூ.75 ஆயிரத்து 500 கோடி.


வளர்ச்சியை பாதிக்கும் வட்டி :


தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் 12.5 சதவீதம் முதல் 14 சதவீதம் வட்டி விகிதத்தில் சிறு, குறுந்தொழில்களுக்கு கடனுதவி அளிப்படுகிறது. ஆனால் தொழில்துறையில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றான சீனாவில் சிறு, குறுந்தொழில்களுக்கு அதிகபட்ச வட்டி விகிதம் சுமார் எட்டு சதவீதம் மட்டுமே. எனவே நம் நாட்டிலும் எட்டு சதவீதத்திற்கும் குறைவான வட்டியில் சிறு, குறுந்தொழில்களுக்கு வழங்கினால் சீனாவை போன்று சிறு, குறுந்தொழில்கள் நல்ல வளர்ச்சியடையலாம். ஸ்டேட் வங்கி விதிமுறைகளின் படி ரூ.பத்து லட்சம் வரை பிணையத்தொகை இல்லாமல் சிறு, குறுந்தொழில்களுக்கு கடன் உதவி வழங்கலாம். இதை பெரும்பாலான வங்கிகள் பின்பற்றுவதில்லை. இது தொழில் வளர்ச்சியை பாதிக்கிறது.


ஒற்றை சாளர முறையில் உரிமம் :

புதிதாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்படும் லைசென்ஸ்கள் அனைத்தும் ஒற்றை சாளர முறையில் வழங்க வேண்டும். அதாவது கட்டட வரைபட அனுமதி, தீயணைப்புத்துறை, மின் இணைப்பு, மாசு கட்டுப்பாடு வாரிய ஒப்புதல், வணிக வரிப்பதிவு, தொழிலாளர் நலச்சட்டங்கள் உட்பட அனைத்தும் ஒற்றை சாரள முறையில் வழங்கப்படும் போது தொழில் முனைவோர் சிரமமின்றி விரைவாக தொழில் தொடங்க வழி காணப்படும். முதல் தலைமுறை தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனர் மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரூ.ஐந்து லட்சம் முதல் ரூ.ஒரு கோடி வரை தொழில் தொடங்க வங்கியின் மூலம் கடனுதவி பெறலாம்.


ளம்தலைமுறை தொழில் :

இதுதவிர தொழில் முனைவோருக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது. திட்ட முதலீட்டில் 25 சதவீதம் வரை மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும் வங்கி கடனுக்கான வட்டியில் மூன்று சதவீதம் பின்முனை வட்டியாக அரசே செலுத்தும். சென்னையில் உள்ள 'தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம்' இளம் தலைமுறை தொழில் முனைவோர்களை உருவாக்கிடும் வகையில் 'மெம்பர்ஷிப் பார் நியூ ஆன்ட்ரபிரனர்' என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை செயல் வடிவம் கொடுப்பதற்காக தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனமும் மடீட்சியாவும் இணைந்து இளம் தலைமுறையினர் தொழில் வழிகாட்டி மையத்தை மடீட்சியா அலுவலகம் செயல்படுத்தி வருகிறது.


கேள்விக்குறியான தொழில்கள் :


இந்தியாவின் முதுகெலும்பாக செயல்பட்டு வரும் சிறு, குறுந்தொழில்கள் இன்றைய நிலை மிகவும் கேள்விக்குறியாக உள்ளது. ஒரு சில சந்தர்ப்பங்களில் சிறு தொழில் நிறுவனங்கள் நலிவடையும் பொழுது வங்கிகளில் பெறப்பட்ட கடன்களை செலுத்த முடியாத நிலையில் அவர்களுடைய சொத்துக்கள் முழுவதும் 'சர்பேசி' சட்டம் மூலம் ஏலத்தில் கொண்டு வரப்படுகின்றன. 2013 மார்ச் கணக்கின்படி வங்கிகளில் வாராக்கடன் ரூ.1.76 லட்சம் கோடி. தவிர்க்க முடியாத காலங்களில் ஒருசில சிறு தொழில் நிறுவனங்கள் நலிவடைந்த நிறுவனமாகிறது. அந்த அவல நிலையில் இருந்து மீண்டு வெளிவருவதற்கு வெளிநாடுகளில் உள்ளது போல் 'எக்சிஸ்ட் பாலிசி' நம் நாட்டில் இல்லாதது வேதனைக்குரியது. தமிழகத்தில் சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சியடைய 'எக்சிஸ்ட் பாலிசி' கட்டாயம் தேவை.


கட்டமைப்பு வசதிகள் ஏராளம் :

தமிழகத்தில் சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, ஓசூர் நல்ல தொழில் வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள தென் மாவட்டங்கள் பின் தங்கிய நிலையிலே உள்ளது. காரணம் போதிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலை முன்பு இருந்தது. ஆனால் தற்பொழுது கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு சர்வதேச விமான நிலையம், நான்குவழிச்சாலை, அகல ரயில் பாதை வசதிகள், துறைமுகம், கன்டெய்னர் டெர்மினல், சரக்கு பெட்டக வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மதுரை - தூத்துக்குடி தொழில் வழிப்பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தொழில் வளர்ச்சியில் தென் மாவட்டம் பின் தங்கியே உள்ளது.


தொழில் மாநிலம் தமிழகம் :


சென்னை மற்றும் பெங்களூருவில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 80 சதவீதம் பேர் மதுரை, நெல்லையில் இருந்து சென்றவர்கள் தான். மத்திய, மாநில அரசுகள் பெருந்தொழில்களை துவக்க விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களை தென் மாவட்டங்களில் தொழில் துவக்க அழைப்பு விடுக்க வேண்டும். பாரத ?ஹவி எலெக்ட்ரிக்கல், ராணுவ தளவாடங்கள், ரயில் பெட்டி தொழிற்சாலைகள் போன்ற நிறுவனங்களில் எதாவது ஒன்றாவது துவங்க வேண்டும். தென் மாவட்டங்களில் பெருந்தொழில்கள் துவங்கப்படும் பொழுது ஆயிரக்கணக்கான துணைத் தொழில்கள் உருவாகும்.
- வி.எஸ்.மணிமாறன்,
தலைவர், மடீட்சியா.
94890 88021We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X