ஒரு நாள் வசூலு ஒரு லட்சம்... ஓஹோன்னு சம்பாதிக்கிறது தான் ஒரே லட்சியம்!| Dinamalar

ஒரு நாள் வசூலு ஒரு லட்சம்... ஓஹோன்னு சம்பாதிக்கிறது தான் ஒரே லட்சியம்!

Added : பிப் 03, 2015
Share
கனவு மெய்ப்பட வேண்டும்கைவசமாவது விரைவில் வேண்டும்...! சிஸ்டத்தில் பாட்டை ஓட விட்டுக் கொண்டே, இணையத்தில் தீவிரமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் மித்ரா.''ஹாய் மித்து! என்னடி காலங்காத்தால பாரதியார் பாட்டோட, ஏதோ தேடல்ல இறங்கிட்ட...?,'' என்று கேட்டவாறே, மித்ராவின் அறைக்குள் புகுந்தாள் சித்ரா.''அக்கா! என்ன காலைல 'சர்ப்ரைஸ் விசிட்'டா இருக்கு. என்ன இந்தப் பக்கம்?,''
ஒரு நாள் வசூலு ஒரு லட்சம்...  ஓஹோன்னு சம்பாதிக்கிறது தான் ஒரே லட்சியம்!

கனவு மெய்ப்பட வேண்டும்கைவசமாவது விரைவில் வேண்டும்...! சிஸ்டத்தில் பாட்டை ஓட விட்டுக் கொண்டே, இணையத்தில் தீவிரமாய் எதையோ தேடிக் கொண்டிருந்தாள் மித்ரா.
''ஹாய் மித்து! என்னடி காலங்காத்தால பாரதியார் பாட்டோட, ஏதோ தேடல்ல இறங்கிட்ட...?,'' என்று கேட்டவாறே, மித்ராவின் அறைக்குள் புகுந்தாள் சித்ரா.
''அக்கா! என்ன காலைல 'சர்ப்ரைஸ் விசிட்'டா இருக்கு. என்ன இந்தப் பக்கம்?,'' என்று விசாரித்து விட்டு, ''உலகத்துக்கே இது பாரதியார் பாட்டுன்னு தெரியும். ஆனா, நம்மூர்ல இது வேந்தர் பாட்டு!,'' என்றாள் மித்ரா.
''என்ன மித்து! அவரு பதவிக்காலம் முடியுறதுக்கு முன்னாடியே, இங்கயிருந்து கிளம்புறாராம். வேற 'போஸ்ட்டிங்' ரெடி பண்ணிட்டாராம். ஏன்னா, இங்க விஜிலென்ஸ் வலை இறுகிட்டு இருக்காமே!,'' என்றாள் சித்ரா.
''அது தெரியலைக்கா! ஆனா, 'ஆடிட்டிங்'ல ஏகப்பட்ட விஷயத்தைக் கண்டுபிடிச்சிருக்காங்க. பல மாநிலங்கள்ல இருந்து, 'டிஸ்டன்ஸ் எஜூகேஷன்'ல பல நுாறு பேரு படிக்கிறதுக்கு, நேஷனல் கோ-ஆர்டினேட்டர்ங்கிற பேர்ல, இவரோட 'பினாமி' ஒருத்தருக்கு ரெண்டு வருஷத்துல ரெண்டரை கோடி ரூபா கமிஷன் கொடுத்திருக்காரு. இப்போ, அந்த ரெண்டு பர்சன்டேஜையும், அஞ்சாக்கிட்டாராம் இந்த அஞ்சா நெஞ்சன்!,'' என்றாள் மித்ரா.
''அப்புறம் இவரு 'வாட்' வரிங்கிற பேர்ல எடுத்திருக்கிற பணம், அந்த டிபார்ட்மென்ட்டுக்கே போகலையாம். ஏன்னா, அதுல இருக்கிற 'டின்' நம்பர் ஏற்கனவே 'கேன்சல்' ஆனதாம். இப்பிடி பல முனை தாக்குதல் அவருக்கு. அதனால, முக்கியமான அசோசியேஷன்காரங்களுக்கு 30 போஸ்ட்டிங் தர்றதாச் சொல்லி 'காம்ப்ரமைஸ்' பண்ணிருக்காராம்!,'' என்றாள் சித்ரா.
''இந்த உள் ஒதுக்கீடு சரியா வருமான்னு தெரியலை?. ஆனா, ஆளும்கட்சியில, உள் ஒதுக்கீடு கிடையாதுன்னு சொல்லிட்டாராம் நம்ம 'மன்னர் மகன்'. மலர் போல வாடிட்டாரு ஒரு எம்.எல்.ஏ.,!,'' என்றாள் மித்ரா.
''அவரு தான் ஸ்ரீரங்கத்துல 'கேம்ப்' போட்ருக்காரே. அவர் என்ன பண்ணுனாரு?,'' என்றாள் சித்ரா.
''அந்த எம்.எல்.ஏ.,தொகுதியில, 20 வார்டுக வருதாம். மூணே மூணு வார்டுல, தன்னோட ஆளுங்களுக்கு பதவி கேட்ருக்காரு அவரு. அதைக்கூட தரலையாம்!,'' என்றாள் மித்ரா.
''சிட்டி சேச்சியை, கேவலமாத் திட்டி அழ வச்சாரே, ஒரு கவுன்சிலரு. அவருக்கும் 'சேர்மன்' பதவி கிடைக்கலைன்னு தான் கடுப்பாகி, அந்தம்மாவை வாய்க்கு வந்தபடி திட்டுனாராம்,''
''நான் கேள்விப்பட்ட காரணம் வேற மாதிரி இருந்துச்சு. அதை விடு...தண்ணீர்ப்பந்தல்ல இருக்கிற ஒரு 'பார்'ல, ஏகப்பட்ட கட்டப்பஞ்சாயத்து நடக்குதாம். அங்க தான், சரக்கைப் போட்டுக்கிட்டே... யாரை எப்பிடி 'அட்டாக்' பண்ணி, காசு கறக்கிறதுன்னு திட்டம் போடுறாங்களாம். அதையெல்லாம் 'அசால்ட்'டா 'டீல்' பண்றது, ஆளும்கட்சி கவுன்சிலருங்கிறாங்க. இதுல என்ன பெரிய 'பியூட்டி'ன்னா, அந்த கவுன்சிலருக்கு சரக்கே ஆகாதாம்!,''
''காசுல தான் அவருக்கு போதை போலிருக்கு. கட்சிப் பேரை விட, உடம்பைப் பத்திரமா பாத்துக்கிறாரோ?,'' என்றாள் சித்ரா.
''அக்கா! நீ பத்திரம்னு சொன்னதும், அந்த டிபார்ட்மென்ட்ல இருக்கிற ஒரு பெரிய ஆபீசரைப் பத்தி, ஞாபகம் வந்துச்சு!,'' என்றாள் மித்ரா.
''பெரிய ஆபீசர்ன்னா, எங்கயிருக்கிறவரு...? சென்னையில இருக்கிற ஆபீசர், ரொம்ப நேர்மையானவர்ன்னு கேள்விப்பட்ருக்கனே!,'' என்றாள் சித்ரா.
''நான் சொல்றது இங்கயிருக்கிற ஆபீசரைத்தான். வந்த புதுசுல, இவரைப் பாத்து, 'ரொம்ம்ம்ப நல்லவன்'னு எல்லாரும் நினைச்சிருக்காங்க...ஆனா...''
''என்னடி...ஆனா...ஆவன்னான்னு இழுக்கிற?,''
''அவரோட வசூல் வேட்டையப் பாத்துட்டு, எல்லா 'சார்'களும், மெரண்டு கெடக்காங்க. அவரோட ஒரிஜினல் பதவி ஒண்ணு தான். ஆனா, இருக்கிறது மூணு பதவி; பாக்கிறது நாலு மாவட்டம். அதனால, ஆபீஸ்ல அவரைப் பாக்கவே முடியாது. தினமும் நாலு ஆபீசு போயிருவாராம். ஒரு ஆபீசுக்கு 25ன்னு கணக்குப் பண்ணி, ஒரு நாளைக்கு ஒரு லட்சம் இல்லாம வீடு திரும்புறது இல்லியாம்!,'' என்றாள் மித்ரா.
''மித்து! என் உச்சி மண்டையில கிர்ர்றுங்குது...!'' என்று ராகமாய் இழுத்தாள் சித்ரா.''கொஞ்சம் பொறு! முழுசாச் சொல்லிர்றேன். ஒவ்வொரு ஆபீசும், மாசாமாசம் 25 ஆயிரம் மாமூல் கொடுக்கிறது இல்லாம, இவர் 'சர்ப்ரைஸ் விசிட்' போனா, அன்னிக்கு எக்ஸ்ட்ரா 15 ஆயிரம் காணிக்கை செலுத்தணுமாம். அப்படின்னா, இவரோட வருமானம் என்னன்னு கணக்கு பண்ணிக்கோ!,'' என்றாள் மித்ரா.
''இவரை, எப்பிடி ரெண்டு மூணு பதவியில வச்சிருக்காங்க?,'' என்று அப்பாவியாய்க் கேட்டாள் சித்ரா.
''அவுங்க அமைச்சரு, ஹாஸ்பிடல்ல முடியாமப் படுத்துக் கிடந்தப்ப, எந்த ஆபீசரும் எட்டிப் பார்க்கலையாம். இவரு தான் போய்ப் பாத்துட்டு, 'ட்ரீட்மென்ட்' செலவுக்குக் காசு கொடுத்தாராம். அதுல தான், ஒரே கல்லுல மூணு மாங்கா அடிச்சிருக்காரு,'' என்றாள் மித்ரா.
''இதென்ன பிரமாதம்! ஒரே பதவிய வச்சுக்கிட்டு, ஒரு போலீஸ் ஆபீசர், மூணு ஸ்டேஷன்கள்ல ராப்பகலா 'குடி'மகன்களுக்கு சேவை பண்றாரு தெரியுமா?,'' என்று சிரித்தாள் சித்ரா.
''நீ சொல்ற ஆபீசர், எந்த திசையில இருக்காரு. கிழக்கயா, மேற்கயா?,''
''கிழக்கு பகுதிக்கு அவரு தான் பாஸ். பீளமேடு, சரவணம்பட்டி, சிங்காநல்லுார்ன்னு அவரோட எல்லையில, ஏகப்பட்ட சரக்குக்கடைங்க இருக்கு. அங்க இருக்கிற 'பார்'கள்ல எல்லாம், 24 மணி நேரமும் சரக்கு விக்கிறதுக்கு இவரு, பாதுகாப்பு கொடுக்குறாராம். இதுலயே பல லட்ச ரூபா வருமானம் வருதாம். அதுவும் போதாதுன்னு, சரவணம்பட்டி ஏரியாவுல, 'வேற' தொழிலுக்கும் பலத்த ஆதரவு கொடுக்குறாராம்!,'' என்றாள் சித்ரா.
''இதெல்லாம் பெரிய ஆபீசர்களுக்குத் தெரியாமலா இருக்கும்?,'' என்று கோபமாய்க் கேட்ட மித்ரா, மொபைலில் வந்த அழைப்பை எடுத்து, 'பாஸ்கர்! நான் அப்புறம் பேசுறேன்!' என்றாள்.''தெரியும்....தெரிஞ்சு தான், ஒரு ஸ்பெஷல் 'டீம்' வச்சு, அந்த ஏரியாவை 'வாட்ச்' பண்ணிருக்காங்க. அதுல, ஒரு புரோக்கரைப் பிடிச்சிட்டாங்க. அவரோட போனை 'செக்' பண்ணுனாலே, பல விஷயங்கள் தெரியும்னு நியாயமா 'சம்பாதிக்கிற' போலீஸ்காரங்க குமுறுறாங்க!,'' என்றாள் சித்ரா.
''இப்பல்லாம் சம்பாதிக்கணும்னா சாமியையே ஏமாத்தலாம்னு முடிவுக்கு வந்துட்டாங்க!,'' என்று அடுத்த மேட்டருக்கு 'இன்ட்ரோ' கொடுத்தாள் மித்ரா.
''மித்து! நீ சொல்லப்போறது கோவில் மேட்டர். கரெக்ட்டா?,''
''ஹைய்யோ! நீ நிஜமாவே கற்பூரம் தான்க்கா. நம்மூர்ல இருக்கிற நரசிம்மர் கோவில்ல வைகுண்ட ஏகாதசி அன்னிக்கு, திருப்பதியில இருக்கிறது மாதிரி, துணியில உண்டியல் வச்சிருப்பாங்க தெரியுமா?,''
''ஆமா! இது எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான?,'' என்றாள் சித்ரா.
''அது தெரியும். அன்னிக்கு மத்த நாளை விட, அதிகமா உண்டியல் வரும். அது தெரியுமா? இந்த வருஷம் வந்த காசை எண்ணுறதை 'கேமரா'வுல 'வாட்ச்' பண்ணிருக்காங்க. அப்போ, அந்த கோவில் ஊழியர் ஒருத்தரு, இடுப்புல பணத்தை மறைக்கிறதைக் கண்டு பிடிச்சிட்டாங்க. அவரைப் பிடிச்சுப் பார்த்தப்போ, இடுப்பைச் சுத்தி 24 ஆயிரம் ரூபா சுருட்டி வச்சிருந்திருக்காரு,''
''அடப்பாவி! அவரை போலீஸ்ல பிடிச்சுக் கொடுக்கலையா?,''
''நீ வேற! அவருக்கு கோவில் அதிகாரி, பயங்கர 'சப்போர்ட்'டாம். அவரு தான், 'ஜாயின்ட்' ஆபீசர்ட்ட, 'சுமூகமா' பேசி, நடவடிக்கை இல்லாம காப்பாத்திருக்காரு!,'' என்றாள் மித்ரா.
''இப்பல்லாம் என்ன 'ரெகமண்டேஷன்'னாலும், துட்டு வெட்டலைன்னா வேலை நடக்காது!,'' என்றாள் சித்ரா.
''ஆமா! நீ சொல்றது எந்த டிபார்ட்மென்ட் மேட்டர்?,'' என்றாள் மித்ரா.''ஹவுசிங் போர்டுல தான். மினிஸ்டர் ரெகமண்ட் பண்ணுனப்ப எல்லாம், 'வீடு இல்லை'ன்னு சொன்ன ஆபீசரு, 'எலிஜிபிலிட்டி'யே இல்லாம, ரெண்டு மூணு டிரைவர்களுக்கு பெரிய வீடுகளை 'அலாட்' பண்ணிருக்காராம். ஒரு 'அலாட்மென்ட்'டுக்கு அம்பதாயிரமாம். அந்த ஆபீசரோட ஐ 10 காரை, சர்வீஸ் பண்ணிக் கொடுத்ததுக்காக ஒரு வீடு கொடுத்திருக்காரு. காசில்லாமப் போனா, 'இன்று போய் நாளை வா' தான்!,'' என்றாள் சித்ரா.
''அக்கா! காசில்லாம எதுவும் இங்க நடக்காது. பஸ், கண்டக்டருக்கு நாலஞ்சு லட்சம் வாங்குறதா சொன்னியே. அங்க ஜே.இ., ஆகணும்னா 10 லட்சம், ஏ.இ.,ஆகணும்னா 14 லட்சமாம். இவுங்க வந்தா, பஸ் டயரை விப்பாங்களா? பஸ்சையே விப்பாங்களா?,'' என்றாள் மித்ரா.
''மித்து! அந்த 'காஸ்ட்லி' கிளப் மேட்டரை நாம பேசுனதும், அங்க நடக்க இருந்த எலக்ஷன் தள்ளிப் போயிருச்சாம்...சரி...நீ கொஞ்சம் தள்ளு. நான் ஒரு 'மெயில்' பண்ணிக்கிறேன்'' என்று சிஸ்டத்தில் இருந்து மித்ராவைக் கிளப்பி, அங்கே உட்கார்ந்தாள் சித்ரா.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X