""இடைத்தேர்தல் வந்தாலும் வந்துச்சு; கையில் இருந்த காசு காணாம போயிருச்சேனு, மாநகராட்சியில புலம்புறாங்க,'' என்றபடி, சுவாரஸ்யமான தகவலுடன் வீட்டுக்குள் வந்தாள் மித்ரா.""ஸ்ரீரங்கம் போயிட்டு வந்தீயா; செலவாயிடுச்சுன்னு புலம்புறீயே?'' என, கிண்டலடித்தாள் சித்ரா.""நமக்கு அங்க வேலையில்லை. ஆளும்கட்சிக்காரங்க, மண்டலம், வட்டம், சதுரம்னு எல்லாருமே மூட்டை முடிச்சோடு கௌம்பிட்டாங்க. வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, வேலையை துவக்கிட்டாங்க. திருப்பூர் அமைச்சர் பொறுப்புல எட்டு பூத் கொடுத்திருக்காங்க. அதில், இரண்டு பூத் மேயர் பொறுப்புல ஒப்படைச்சிருக்காங்க. துணை மேயர், மண்டல தலைவர்கள்னு ஒவ்வொரு பிரதிநிதிகளும் "பங்கு' போட்டு வேலை பார்க்குறாங்க,'' என்று மித்ரா முடிப்பதற்குள், ""தேர்தல் வேலைன்னா சும்மாவா? தண்ணியாட்டம் செலவு பண்ணித்தானே ஆகணும்?,'' என்றாள் சித்ரா.""ஆமா... 15 நாளைக்கு தங்கியிருந்து, செலவும் செய்யணுமே. அதனால, மாநகராட்சி அதிகாரிகள், ஒப்பந்ததாரர், தொழிலதிபர்கள்னு பட்டியலிட்டு, தேர்தல் செலவுக்குன்னு ரெண்டு ரவுண்டு வசூல் வேட்டை நடத்தியிருக்காங்க. அதனால, மாநகராட்சி வட்டாரத்துல புலம்பல் ஜாஸ்தியாயிருக்கு. ஆளுங்கட்சி மட்டுமின்றி, தி.மு.க., தரப்பிலும் நிதி வசூலிச்சு, ஸ்ரீரங்கம் போயிருக்காங்க,'' என, பெருமூச்சு விட்டாள் மித்ரா.""தகவல் கொடுக்கலைன்னு புகார் செஞ்சதால, இப்ப, "தண்ணி' காட்டிட்டு இருக்காங்க...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.""அக்கா... என்ன விஷயம்? கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்..'' என்று கெஞ்சினாள் மித்ரா.""அதுவா... கொஞ்ச நாளைக்கு முன்னாடி, டெங்கு காய்ச்சல் பரவி, இரண்டு குழந்தைங்க இறந்தாங்க. முன்னாடியே தகவல் சொல்லியிருந்தா, சம்பந்தப்பட்ட இடத்தை நாங்க "கிளீன்' பண்ணியிருப்போம்னு மாநகராட்சியும், பி.டி.ஓ.,க்களும் புகார் செஞ்சாங்க. சுகாதார துறைக்கு மாவட்ட நிர்வாகம் "செம டோஸ்' விட்டதால, காய்ச்சல்னு யாராவது சிகிச்சைக்கு போனாலே, உடனே "அட்மிட்' பண்ணிட்டு, மர்ம காய்ச்சலா இருக்குனு "ரிப்போர்ட்' பண்ணிடுறாங்க. டெங்கு இருந்தா தகவல் சொல்லச் சொன்னா, காய்ச்சல் இருந்தாலே "ரிப்போர்ட்' பண்றாங்களேனு மாநகராட்சி அதிகாரிங்க கண்ணீர் விடாத குறையா புலம்புறாங்கப்பா,'' என்றாள் சித்ரா.""அரசாங்க அலுவலகத்துல ஊழியர் பற்றாக்குறைக்கு அளவில்லாம போச்சு,'' என, சலித்துக் கொண்டாள் மித்ரா.""ஏன்... என்னாச்சு... ஏதும் காரியம் ஆகலையா,'' என சித்ரா கேட்க, ""அதெல்லாம் இல்லக்கா... கலெக்டர் ஆபீசுல நடக்கற குறைகேட்பு கூட்டத்துல, வனத்துறைக்கு வரும் மனுக்களை வாங்கி, மாவட்ட வன அலுவலருக்கு அனுப்புறத்துக்கு கூட ஆள் இல்லீங்க. பல்லடம் "வாட்ச்சர்' வந்து காத்திருக்கிறார். கூட்டம் முடிஞ்சதும், மனுக்களை "வாட்ச்சர்'கிட்ட கொடுத்து அனுப்புறாங்க. அவர், உடுமலையில் இருக்கும் ஆபீசுக்கு போயி கொடுத்துட்டு வருவார். அதுக்கு அப்புறமா, மனு மீதான நடவடிக்கை விவரத்தையும், பதிவேட்டையும் மறுபடியும் போயி வாங்கிட்டு வந்து, அந்த வாரம் வெள்ளிக்கிழமைக்குள், சமூக பாதுகாப்பு பிரிவுல காண்பிக்கணும். அடுத்த வாரம் திங்கட்கிழமை மறுபடியும் மனுக்களையும், பதிவேட்டையும் "வாட்ச்சர்'கிட்ட கொடுத்து அனுப்புறாங்க,'' என்றாள் மித்ரா.""ஒவ்வொரு வாரமும் மனுக்களை எடுத்துட்டு போற வேலையை பார்த்தா, "வாட்ச்சர்' வேலையை யார் செய்வாங்க,'' என கேள்வி எழுப்பிய, சித்ரா, ""தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கில், "சரண்டர்' ஆன ரெண்டு பேரிடமும் 28 மணி நேரம் விசாரணை நடத்தியிருக்காங்க. விசாரிக்கிறதுக்கு முன்னாடியும், பின்னாடியும் மருத்துவமனை பரிசோதனையும் செஞ்சிருக்காங்க. விசாரணை தகவல் எதுவும் "லீக்' ஆகக்கூடாதுன்னு, உத்தரவு போட்டிருக்காங்க,'' என்றாள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE