ஜல்லிக்கட்டும்... தமிழர் வீரமும்!| Dinamalar

ஜல்லிக்கட்டும்... தமிழர் வீரமும்!

Updated : பிப் 04, 2015 | Added : பிப் 04, 2015 | கருத்துகள் (10)
ஜல்லிக்கட்டும்... தமிழர் வீரமும்!

ஏறத்தாழ, 6000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதன், மாடுகளை அடக்கி, அதை வீட்டு விலங்காக மாற்றினான். சுமார், 3500 வருடங்களுக்கு முன்பாகவே, மாடுகளை, வீரர்கள் அடக்குவது போன்ற, சுவர் ஓவியங்கள் தமிழகத்தில் கிடைத்துள்ளன. முற்கால தமிழகத்தில், 'ஏறுதழுவுதல்' என்கிற பெயரில், ஜல்லிக்கட்டு நடந்துள்ளது. ஆண்கள், தங்கள் வீரத்தை பறைசாற்றும் வீர விழாவாகவே, 'ஜல்லிக்கட்டு' பார்க்கப்பட்டுள்ளது.அக்காலத்தில், காளையை அடக்கும் ஆண்களையே, பெரும்பாலான பெண்கள் தங்கள் துணைவராக தேர்ந்தெடுப்பர். 'அசுர பலம் கொண்ட காளையை அடக்கிய நான், நிச்சயம் உன்னை திருடர்களிடமிருந்தும், காட்டு விலங்குகளிடமிருந்தும் காப்பேன். என்னை திருமணம் செய்து கொள்' என, ஆண்கள் வீரம் காட்டி, பெண்களை மணம் புரிய, ஜல்லிக்கட்டு ஒரு முக்கிய நிகழ்வாக, வரலாற்றில் இருந்து வந்துள்ளது. தமிழர்களின் பாரம்பரியத்தோடும், கலாசாரத்தோடும் பின்னிப் பிணைந்தது ஜல்லிக்கட்டு.உலகம் முழுவதும் உள்ளது:

தமிழகம் மட்டுமல்லாது, மாடுகளை வைத்து விளையாடுவது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் காணப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்ட்ராவில் நடைபெறும், 'ரேக்ளா ரேஸ்' எனப்படும், மாட்டு வண்டி போட்டி பிரபலமானது. அதே போல் ஸ்பெயினில் நடைபெறும், 'புல் ஃபைட்' எனப்படும், காளையை அடக்கும் போட்டி, உலக பிரசித்தம்; ஸ்பெயினின் தேசிய விளையாட்டும்கூடதமிழக வரலாற்றில், பல்வேறு வீர விளையாட்டுக்கள் இருந்து வந்துள்ளன. புலியை கொன்று அதன் நகத்தை, கயிற்றில் கோர்த்து, மணப்பெண்ணின் கழுத்தில் கட்டியதே, பின்னாளில் 'தாலி' ஆனது, என்ற கருத்து உண்டு

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த வீர விளையாட்டுக்களில் ஒன்றான ஜல்லிக்கட்டுக்கு, சென்ற வருடம் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இன்று வரை தடை தொடர்கிறது
தடைக்கு காரணம்:

இதற்கு முக்கிய காரணம், 2011இல் மத்திய அரசு, 'காட்சிப்படுத்த தடை' விதிக்கும் அரசாணையில், சிங்கம், புலி, கரடி, குரங்கு உள்ளிட்ட விலங்குகளோடு, காளையையும் சேர்த்து உத்தரவிட்டதுதான்.
விலங்குகள் வதை தடுப்பு சட்டப்படி, 'காட்சிப்படுத்த தடை' விதிக்கப்பட விலங்குகளை, எக்காரணம் கொண்டும், யாரும் காட்சிப்பொருளாகவோ, வித்தை காட்டும் விலங்காகவோ, சண்டையிட வைத்தோ, மக்களிடம் காட்டக் கூடாது.

ஏனெனில் வேடிக்கை காட்டி, பணம் பறிக்கும் நோக்குடன், அவ்விலங்குகளுக்கு உணவளிக்காமல், சரியான மருத்துவம் அளிக்காமல், வதைப்படுத்துவதை தடுப்பதே, இச்சட்டத்தின் நோக்கம். இதனால் தான், சர்க்கஸ்களில் விலங்குகளை ஈடுபடுத்த, தடை உள்ளது.
எதிர் வாதம்:

ஜல்லிக்கட்டுக்கு எதிரான நிலை கொண்டவர்களின் வாதம் இரண்டு :

1) காளைகள் வதைக்கப்படுகின்றன

2) மாடுபிடி வீரர்களுக்கு உடல் மற்றும் உயிர் சேதம் ஏற்படுகிறது.

பொதுவாக மனிதர்கள் நினைப்பது என்னவெனில், இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானது; பிற உயிரினங்கள் எல்லாம் மனிதர்களுக்கு அடிமை. மனிதர்களின் மகிழ்ச்சிக்காக விலங்குகளை என்ன வேண்டுமானாலும் செய்யலாம், என்ற நினைப்பு உள்ளது. உண்மை என்னவெனில், 80 லட்சம் உயிரினங்களில் ஒன்று தான் மனித இனம். மனிதர்கள் வாழ எவ்வளவு உரிமை உள்ளதோ, அதே அளவு உரிமை விலங்குகளுக்கும் உள்ளது, என்பது விலங்கின ஆர்வலர்களின் வாதம்.

'ஆயிரக்கணக்கான, மனிதர்களின் நடுவில், ஒரு மாட்டை ஓட விட்டு, 10 அல்லது 20 பேர் சேர்ந்து, அதை அடக்க முயல்வது, மனித தன்மையே இல்லை' என்பது அவர்களின் வாதம்.

மனிதர்கள் காட்டு வாசியாக இருந்த காலம் வரை, விலங்குகளுடன் சண்டையிட்டு, தங்களது வீரத்தைக் காட்டினர். 21ஆம் நூற்றாண்டிலும், விலங்குகளுடன் நமக்கு சண்டை தேவையா. அவைகளை தொல்லை செய்யாமல், நிம்மதியாக வாழ விட வேண்டும். எந்த விலங்கையும், துன்புறுத்தும் உரிமை, நமக்கு கிடையாது. தற்போது தொலைக்காட்சி, திரைப்படம் போன்ற பல பொழுது போக்கு அம்சங்கள் உள்ளன.

எனவே ஜல்லிக்கட்டை பொழுதுபோக்கு, என்று சொல்வதை ஏற்றுகொள்ள முடியாது. பல ஆண்டுகளுக்கு முன், காளைகளுக்கு, சாராயத்தை வாயில் திணித்து, மைதானத்திற்கு அனுப்புவர். வீரர்கள் மாடுகளின் வாலை முறுக்கி உடைத்து, ரத்தம் வழிய, வழிய கொம்பை உடைத்து, கண்களில் மண்ணை தூவி அதனை அடக்குவர். வீரர்களில் குடல் சரிந்து, வயிறு கிழிந்து, இறந்தவர்கள் பலர்; கால், கைகளை இழந்தவர் பலர்.

பலர் ஆடு மாடுகளின் இறைச்சியை உண்கின்றனர். அதுவும் விலங்குகளுக்கு எதிரானது தான் என்றாலும், ஒரு நிமிடத்தில் அவற்றின் உயிர் பிரிந்து விடும். ஆனால் ஒன்றின் வாலையோ, கொம்பையோ, காலையோ உடைத்து சித்ரவதை செய்தால், அது வாழ்நாள் முழுவதும் ஊனமுற்ற மாடாகி, எதற்கும் பயனற்றதாகி விடும். ஒரு விளையாட்டினால் மனிதனுக்கோ, விலங்குகளுக்கோ பாதிப்பு ஏற்படுமாயின், அதில் நீதிமன்றம் தலையிடலாம், என்பது இவர்களின் வாதம்.ஆதரவு வாதம்:

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவானவர்களின் வாதம் :

ஜல்லிக்கட்டு என்பது, தமிழர் கலாசாரத்தின் முக்கிய அம்சம். ஒவ்வொரு இன மக்களுக்கும், ஒரு வீர கலாசாரம் இருப்பது போல், தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டு இருக்கிறது. அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பல ஊர்களில் இதற்காகவே, நாட்டுக் காளைகளை வளர்க்கின்றனர். ஜல்லிக்கட்டை நிறுத்தினால், பல்லாயிரம் பேரின், வேலைவாய்ப்பு பறி போகும்; நாட்டு மாடுகளின் இனமும் அழிந்து போகும்.

சென்ற வருடம், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி, மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் எவ்வித துன்புறுத்தல் இல்லாமல், ஜல்லிக்கட்டை நடத்தியதைப் போன்று, இந்த வருடமும் பாதுகாப்பாக நடத்தத் தயாராக இருக்கிறோம்.

ஒரு மாநில மக்களின், பாரம்பரிய உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. இது லட்சக்கணக்கான மக்களின் விருப்பம்; பண்டிகை கொண்டாடும் முறை; வாழ்க்கை முறையின் ஒரு அங்கம். மத்திய அரசு உடனடியாக 'காட்சிபடுத்தும் விலங்குகள்' பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும்.யானைக்கே இல்லாத கட்டுப்பாடு:

மேலும், ஜல்லிக்கட்டு காளையை உழவுக்கு பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டு, கோவில் மாடாக வழிபட்டு, ஜல்லிக்கட்டுக்கு மட்டும், பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. நடுவண் அரசு விதித்துள்ள கட்டுப்பாடு, யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்து, பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்

எத்தனையோ பாரம்பரிய விளையாட்டுக்கள் அழிந்து போய் இருக்கின்றன. எஞ்சி இருக்கும் சில விளையாட்டுக்களையாவது, காப்பது நம் கடமை.

பாமர மக்களுக்கு, மகிழ்ச்சியை அளிக்கும் விளையாட்டு இது. எனவே ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க, தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும். பல நாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை ரசிக்கின்றனர். ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடை, அவர்களின் வருகையைக் குறைத்து, இந்திய அரசுக்கு சுற்றுலா வருமானத்தையும் குறைக்கும்.

விலங்கு நல ஆர்வலர்கள், எதற்கெடுத்தாலும் தடை கேட்பது நியாயமே இல்லை. பல ஆயிரம் தமிழர்களின் மனதை, இது புண்படுத்துகிறது என்பது இவர்களின் வாதம்.

சென்ற வருடம் உச்ச நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டை அனுமதித்தது.நிபந்தனைகள் :*போட்டி நடத்துவதற்கு, 30 நாட்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து அனுமதி வாங்க வேண்டும்.

* அரசு அனுமதிக்கும் இடங்களில் மட்டுமே போட்டி நடத்த வேண்டும்.

* போட்டியில் எத்தனை காளைகள், மனிதர்கள் பங்கேற்கின்றனர்என்பதை எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும்.

* விலங்கு நல ஆர்வலர்கள், போட்டி நடக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.

* பார்வையாளர்கள் இருக்கும் இடத்திற்கு மாடுகள் செல்லா வண்ணம் தடுப்பு அமைக்க வேண்டும்

* முழு போட்டியையும் வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்

* மாடு பிடி வீரர்கள் மது அருந்தி இருக்கக் கூடாது. அதே போல், மாடுகளுக்கும் கட்டாயமாக சாராயம் கொடுக்கக் கூடாது.

* மாடு பிடி வீரர்கள் அனைவரும் ஒரே நிற, 'டி- -ஷர்ட்' களை அணிந்திருக்க வேண்டும்.

மேலும், பல்வேறு ஏற்றுக்கொள்ளக்கூடிய நிபந்தனைகளை, உச்ச நீதிமன்றம் விதித்தது. அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு கிராம மக்களும், இந்நிபந்தனைகளை ஏற்று, சென்ற வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தினர்.

இனி வரும் எல்லா வருடமும், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, ஜல்லிக்கட்டை நடத்த தயாராக மக்கள் இருக்கின்றனர். எனவே, தமிழக அரசு முழுமுயற்சி எடுத்து, ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க, வழி செய்ய வேண்டும். வெளிநாட்டினரும் ஆவலாக கண்டு ரசிக்கும், ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்க வேண்டும். மாடுகளுக்கும், மனிதர்களுக்கும் துன்புறுத்தல் இல்லாமல், மகிழ்ச்சியுடன் இவ்விழா நடைபெற வேண்டும் என்பதே, பெரும்பாலான தமிழர்களின் ஆசை.

கட்டுரையாளர்: ஸ்ரீதர் சத்யநாராயணன்

மின்னஞ்சல்: < sridhar.great2007@gmail.com>

அலைபேசி: 9790824237We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X