ஆயிரம் ஆண்டானாலும் மக்காத குப்பை: டாக்டர் சாமிநாதன்| Dinamalar

ஆயிரம் ஆண்டானாலும் மக்காத குப்பை: டாக்டர் சாமிநாதன்

Added : பிப் 05, 2015 | கருத்துகள் (20)
ஆயிரம் ஆண்டானாலும்  மக்காத குப்பை: டாக்டர் சாமிநாதன்

முன்பெல்லாம் மளிகை கடைக்கு செல்வதென்றால் சீனி வாங்க தனிப்பை, பருப்பு, வத்தல் போன்றவற்றிற்கு தனிப்பை கொடுத்து அனுப்புவர். பொருட்களை பத்திரமாக வாங்குவது எப்படி என்பது குறித்து தனி வகுப்பு நடத்தி குழந்தைகளை கடைக்கு அனுப்பி வைப்பார் தாயார். அந்த சமயங்களில் எல்லாம் நான், கடைக்காரர் மளிகை பொருட்களை பல்வேறு வடிவங்களில் கட்டுவதை கண்டு வியந்தது உண்டு.அப்போது பிளாஸ்டிக் என்றால் வீடுகளில் ஒயர்களில் செய்யப்படும் கூடைகள், நாற்கலிகள் பின்னப்படுவை மட்டுமே. ஜவுளிக்கடைகளில் கூட சணல் பைகள் கொடுக்கும் வழக்கம் இருந்தது.


தடைசெய்யப்பட்டவை :

1990ல் பாலிதீன், பிளாஸ்டிக் புழக்கத்திற்கு வந்த போது, அதை மரங்களின் நண்பன் என்றும், இனி பேப்பருக்காக மரங்களை வெட்டவேண்டாம்; நச்சுத்தன்மை இல்லாதது, நீர்புகாதது உள்ளே உள்ள பொருட்கள் வெளியே தெரிவதால் பொருட்களின் தரத்தை பார்த்து வாங்கலாம். உணவுகளை பூஞ்சை, பாக்டீரியா தாக்குதல் இல்லாமல் பாதுகாக்க முடியும் எனக் கூறினர். இதன் ஆபத்தை உணராமல் பாராட்டி வரவேற்றோம். இப்படி சீரும், சிறப்புமாக வரவேற்கப்பட்ட பாலிதீன் பொருட்கள் தான், இப்போது, உலகம் முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. துவக்கத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்தவை தற்போது குழந்தைகளின் விளையாட்டு பொருட்கள், பால் பாட்டில்கள், குழந்தைகளுக்கான நாப்கின் என ஆரம்பித்து, குப்பை எடுக்கும் கருப்பு கவர்கள், விளம்பர பேப்பர்கள், குடிக்கும் தண்ணீர் பாட்டில்கள், உணவுப்பொருட்களை பார்சல் செய்யும் கவர்கள், மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும் பொருட்கள், டம்ளர்கள், செருப்புகள் என நாம் அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத அளவிற்கு கலந்துவிட்டது.இது தவிர மருத்துவ துறையில் ரத்தம் வைக்கும் கவர்கள், ஊசிகள், குளுக்கோஸ்பாட்டில்கள், மருந்து பாட்டில்கள், கை உறைகள் என மருத்துவ உலகிலும் தவிர்க்க முடியாத பொருளாகி விட்டது.ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பில்லியன் (ஒரு பில்லியன் 100கோடி) பைகளும், 24 பில்லியன் தண்ணீர் பாட்டில்களும் தூக்கி எறியப்படுகின்றன. இது தவிர ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, சீனா, பாகிஸ்தானில் மட்டும் 23 ஆயிரம் டன் மின்னணு குப்பை சேகரமாகின்றன. இந்த பாலிதீன் குப்பை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மக்கிவிடுவதில்லை.


மழைநீர் செல்லாது :

இதனால் பாலிதீன் பொருட்களை மறுசுழற்சி செய்கின்றனர். ஆனால் மறுசுழற்சியின் அளவை விட, பயன்பாட்டின் அளவு பல மடங்கு உயர்ந்து நிற்கிறது. இப்படி வளர்ந்து நிற்கும் பாலிதீன் மனித இனத்திற்கு மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள், சுற்றுப்புறத்தில் உள்ள நுண் உயிர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எறிதல், எரித்தல், பயன்படுத்துதல் என மூன்று வகையிலும் பாலிதீனால் ஆபத்து ஏற்படுகிறது.பயன்படுத்திய பாலிதீன் கவர்கள், பாட்டில்களை பூமியில் எறிவதன் மூலம் மழைநீர் பூமியின் அடியில் செல்வதில்லை. இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைகிறது. கவர்கள், பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்களில் மழைநீர் தேங்கி, மலேரியா, டெங்கு, கொசுக்களின் உற்பத்தி கூடாரமாகி விடுகிறது. இத்தகைய கவர்கள் ஆற்றினையும் மாசுபடுத்தி, நீரோட்டத்துடன் கலந்து அணைகள், கடல் பகுதிகளை மாசுபடுத்தி, கடல் வாழ் உயிரினங்களுக்கு அழிவினை ஏற்படுத்தி விடுகிறது. வண்ண, வண்ண பாலிதீன் பைகளை உணவு என நினைத்து விலங்குகள் சாப்பிட்டு இறந்துவிடுகின்றன. இந்தியாவில் சராசரியாக பாலிதீனை உட்கொண்டு தினமும் 20 பசுக்கள் இறக்கின்றன என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


புற்றுநோய் வரும் :

பாலிதீன் பைகள் எரிக்கப்படுவதால் கார்பன் மோனாக்சைடு, டயாக்ஸின், அல்டிஹைடு ஆகிய நச்சுப்புகைகள் வெளியாகிறது. இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் புற்றுநோய்கள், கண் எரிச்சல், தலைவலி, நுரையீரல், தைராய்டு சம்பந்த மாக நோய்கள் வருகின்றன. இதனால் புவிவெப்பமயமாதலும் நடக்கிறது.பாலி எத்தினால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள், சமையலறை பொருட்களில் அதிக சூடான உணவுப்பொருட்களை வைக்கும் போதோ, சூடான குடிநீரை வைக்கும் போதோ அதிலிருந்து டயாக்சின் என்னும் நச்சுப்பொருள் வெளியாகிறது. பிளாஸ்டிக் பாட்டில்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் இந்த நச்சுப்பொருள் வெளியாகும். பாட்டிலில் உள்ள தண்ணீரில் அசிட்டால்டிஹைடும், பிஸ்டீனால் ஏ என்னும் நச்சுப்பொருளும் கலக்கிறது. இதனால் புற்றுநோய் வரும். உடல் பருமன், சர்க்கரை நோய் உண்டாகும். குடிநீர் குழாய்களில் அதன் வளையும் தன்மைக்காக 'தாலேட்' என்னும் நச்சுப்பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த 'தாலேட்' குழந்தைகளின் விளையாட்டு பொருளிலும் சேர்க்கப்படுகிறது. இதனால் குழந்தையின்மை, பிறப்பு குறைபாடுகள், கருப்பை கட்டிகள் உண்டாகிறது.பாலிதீன் பைகள் 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ளவற்றை அரசு 2002ல் தடை செய்துவிட்டது. 20 மைக்ரான் தடிமன் உள்ள ஒரு பை தயாரிக்க 10 காசு செலவானால், 40 மைக்ரான் தடிமன் உள்ள பை தயாரிக்க 2 ரூபாய் செலவாகும். அதிகப்படியான பைகளின் பயன்பாட்டினை தடுக்கவே இந்த தடை.மக்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகள் அதில் சேர்க்கப்படும் பொருட்களை பொறுத்து ஆக்ஸோபிளாஸ்டிக்குகள், ஹைடிரோ பிளாஸ்டிக்குகள் அல்லது நார்ச்சத்து உடைய பிளாஸ்டிக்குகள் என வகைபடுத்தப்படுகின்றன.ஹைடிரோ அல்லது நார்ச்சத்து உள்ள பிளாஸ்டிக்குகள் விவசாய கழிவு பொருட்கள், மக்காச்சோளம், சோயா, உருளைக்கிழங்கு ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக்குகள் 10 முதல் 45 நாட்களில் மக்கிவிடும் என்றாலும் இவற்றை மற்ற பிளாஸ்டிக் பொருட்களுடன் சேர்த்து மறுசுழற்சியோ அல்லது மக்கச்செய்யவோ முடியாது. தனி இடம் வேண்டும். இவற்றை எரிப்பதால், மீத்தேன், கரியமில வாயுக்கள் வெளியாகின்றன. இதனை தயாரிக்க செலவும் அதிகம் ஆகும்.எனவே பாலிதீன் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மாற்றாக சணல், துணிப்பைகளை பயன்படுத்தவேண்டும். பொருட்கள் வாங்கும் போது பாத்திரங்கள், பைகள் எடுத்துச் செல்லவேண்டும். பிளாஸ்டிக் பாட்டில்களை கட்டாயம் தவிர்க்கவேண்டும்.
-டாக்டர் சாமிநாதன்
சித்த மருத்துவர், தேனி.
99446 25511.We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X