நேரு - சுதந்தரமும் தனிமையும்

Updated : பிப் 05, 2015 | Added : பிப் 05, 2015 | கருத்துகள் (1)
Advertisement
நேரு - சுதந்தரமும் தனிமையும்

நேரு ஆட்சியதிகாரத்துக்கு வந்தபோது, நூற்றாண்டுக் காலத்துக்கும் மேற்பட்ட காலனியாதிக்கத் தனிமைப்படுத்தலில் இருந்து கட்டவிழ்த்துக் கொண்டு எழுந்து வெளியே வந்த இந்தியா, மனிதகுலத்தின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக இரண்டு வல்லரசுகளுக்கு இடையிலான பனிப்போரின் பகைமைகளாலும், மூர்க்கத்தனமான போட்டிகளாலும் வெட்டித் துண்டாடப்பட்டுக் கிடந்த உலகத்துக்குள் நுழைந்தது. இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்கா மேற்கொண்ட அணுகுண்டு பரிசோதனை அப்போது அதனுடைய நேசநாடாக இருந்த சோவியத் யூனியனுக்குத் தெரிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்கள்மீது வீசப்பட்ட அணுகுண்டுகள் நேச நாடுகள் கூட்டணி என்பதன் எந்தவித மிச்சசொச்சத்துக்கும் முடிவு கட்டின. ஆயுதத்துக்கு ஆயுதம் என வல்லரசுகளின் ஆயுதக் கிடங்குகளை நிரப்புகிற அதிகரித்துவரும் ஆயுதப் போட்டியின் வடிவத்திலான பயங்கர ஆட்சியின் தொடக்கத்தை அவை குறித்தன. மூன்றாம் உலகப் போர் என்பதன் விளிம்பில் உலகத்தை அவை கொண்டுபோய் நிறுத்தின. ஓராண்டுக்குப் பிறகு பிகினி தீவுகளில் அமெரிக்கா நடத்திய அணு ஆயுதப் பரிசோதனைக்கு எதிராக நேரு வன்மையாகக் கருத்து தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு நாளேட்டில் அவர் பின்வருமாறு எழுதினார்:'அமைதிக்கு அடித்தளம் அமைப்பதற்கு இது வழியல்ல... அமைதி என்பது இப்போது வெகு தொலைவுக்கு விலகிச் சென்றுவிட்ட ஒன்றாக, மங்கி மறைந்துவிட்ட ஒரு கனவாகத் தோன்றுகிறது. மனிதகுலம் அதனுடைய அழிவை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது... சொற்கள் அவற்றின் அர்த்தங்களை எல்லாம் இழந்துவிட்டனவா? மனிதர்களின் மனங்கள் அவற்றை இழுத்துப் பிடித்து நிறுத்தும் ஆதாரங்கள் அனைத்தையும் இழந்துவிட்டனவா? இது வெறித்தனத்துக்கு இட்டுச் செல்லும் வழி என்பது நிச்சயம். நமது எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் மாபெரும் மனிதர்கள் ஆபத்தான சுயநலக்கார பித்தர்களாக இருக்கிறார்கள். அவர்களிடத்திலே அதிகாரச் செருக்கும் மமதையும் நிறைந்திருக்கிறது. அவர்கள் தங்கள் இழிவான எண்ணங்களைக் கைவிட்டு சரியாகச் சிந்தித்து செயல்படுவதற்கு மாறாக உலகம் முழுவதும் சாவையும் அழிவையும் விதைக்க முயல்கிறார்கள்' என்று குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் புதிய அரசாங்கம் வல்லரசுகள் விதித்த இரண்டில் ஒன்று என்ற நிபந்தனையில் எந்த உயிரோட்டத்தையோ அரசியலையோ பார்க்கவில்லை. இந்த இரண்டில் ஒன்று என்பதை நேரு அபத்தமானதாகக் கருதினார். இரண்டு கருத்துகளை மட்டுமே ஏற்றுக் கொண்டு அவற்றின் அடிப்படையில் செயல்படுவதற்கு மனித மூளை ஒன்றும் அத்தனைச் சிறியது அல்ல என்ற பொருள் அதில் அடங்கியுள்ளது. நடைமுறையில் பார்த்தால், நீண்டகால அடிமைத்தனத்தால் முடமாக்கப்பட்டுள்ள நிலைமைகளில் இருந்து இந்தியாவுக்கு புத்துயிர் அளிப்பதற்கான சிறந்த வாய்ப்பு, இரு தரப்புகளிடம் இருந்தும் நட்புறவையும் ஒத்துழைப்பையும் கேட்பதுவே ஆகும். இரண்டு தரப்பு ராணுவக் கூட்டணிகளிலும், ஒப்பந்தங்களிலும் சேர மறுத்தது என்பதும்கூட, அணு ஆயுதப் போருக்கான வாய்ப்பு எப்போதும் நிலவக்கூடிய, தீப்பற்றிக்கொள்ளும் ஆபத்து நிறைந்த ஒரு உலகச் சூழலில், நிலைமையில் சூடேற்றுவதை எதிர்க்கும் இந்தியாவின் நிலைப்பாட்டைக் குறிப்பதாக இருந்தது. எளிதில் உடைந்து நொறுங்கும் நிலையில் இருந்த சர்வதேசச் சூழல்தான் நேருவுக்கு கவலைக்குரியதாக இருந்தது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நடுநிலைப் பாதையை மேற்கொண்டதற்கு அதுவே காரணம். 'உலகம் முழுவதும் இன்று பூசல்கள் நிறைந்து காணப்படுகின்றன. அடிவானத்தில் பேரழிவு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது' என்று 1949 மே 10-ஆம் தேதி வானொலியில் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் - அரசியல், வெளியுறவுச் செயல்பாடுகள், பிரபலமான கதைப் படைப்புகள் - எல்லாம் உண்மையில் போர்களிலேயே பேராபத்தை விளைவிக்கக்கூடிய இன்னொரு போர் மூளலாம் என்ற அச்ச இருளால் மூடப்பட்டிருந்தன. யூஜின் பர்திக், ஹார்வி வீலர் ஆகியோர் எழுதிய பெயில் சேப், நெவில் ஷூட்டே எழுதிய ஆன் த பீச் ஆகிய நாவல்கள் எல்லாம் இந்தச் சூழலையே படம்பிடித்துக் காட்டின. பனிப் போரானது ஜேம்ஸ் பாண்ட் உதயமாவதற்கும், துப்பறியும் கதைகள் தோன்றுவதற்கும் வழிவகுத்தது. இந்தியாவுக்கு அமைதி என்பதுதான் முதன்மைத் தேவையாக இருந்தது. எனவே, பனிப் போரில் இருந்து விலகி இருப்பது என்பதுதான் உள்நாட்டில் தேச நிர்மாணத்துக்கு அவசியமான அமைதிக்கு சிறந்த உத்தரவாதமாக இருந்தது. அது மட்டுமின்றி போருக்கு தயார் செய்து கொண்டிருக்கும் ஒரு சூழலில் அமைதியையும் நடுநிலைக் கண்ணோட்டத்தையும் புகுத்துவதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.இந்தியாவின் அணிசாரா கொள்கை, இரு வல்லரசுகளாலும் முழுக்க முழுக்க கண்டனம் செய்யப்பட்டது. இந்தியா எதிரியின் பக்கம் 'சாய்ந்துவிட்டது' என்று இரண்டு வல்லரசுகளுமே நம்பின. சுதந்தரமாக இருப்பது என்ற புதிதாக விடுதலை பெற்ற ஒரு நாட்டின் உறுதிப்பாடு இரண்டு நாடுகளின் மதிப்பீட்டிலும் இடம்பெறவில்லை. இரண்டு நாடுகளுமே அவற்றின் சொந்த வரலாற்றை மறந்துவிட்டதாகத் தோன்றியது. இளம் அமெரிக்கக் குடியரசு 'வலையில் சிக்க வைக்கும் கூட்டணிகளுக்கு' எதிராகப் பிரகடனம் செய்தது. அந்தக் கூட்டணிகளில் இருந்து ஏறக்குறைய ஒன்றரை நூற்றாண்டுக் காலம் விலகி இருந்தது. தனது புரட்சியைக் காத்து நின்ற சோவியத் நாடு, எந்தத் தலையீட்டையும் ஏற்கவில்லை. அணு குண்டு வெடிப்பை வெறுக்கும் வகையிலும் கடுமையாகக் குற்றம் சாட்டும் வகையிலும் விமரிசித்தபோதிலும் அதிலிருந்து ஓரளவுக்கு விலகி இருக்கும் வகையிலேயே நேரு நடந்துகொண்டார். வளர்ச்சிக்கான பல்வேறு துறைகளில் இரு வல்லரசுகளிடம் இருந்தும் அவர் உதவியை வரவேற்றார். எனினும், ஒரு தேசமாக உருவெடுக்கும் வளர்ச்சிப் பருவத்தில் அடியெடுத்து வைத்த ஒரு நாடு, நட்புறவுக்கும் நல்லிணக்கத்துக்கும் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த ஒரு நாட்டிடம் இருந்து நேரடித் தாக்குதலை எதிர்கொண்டது எதிர்பாராத ஒன்றாகவும் திகைக்க வைப்பதாகவும் இருந்தது. அதில் அறிவுக்குப் பொருத்தமற்ற அம்சமும் அடங்கியிருந்தது. கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்தப்பட்டிருந்த நேருவை - அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் என்பது முறைகேடான சொல்லாகக் கருதப்பட்டது - சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நாளேடான பிராவ்தா, காமன்வெல்த் அமைப்புடன் இந்தியாவுக்குள்ள தொடர்பைப் பற்றிப் பேசும்போது, 'ஏகாதிபத்தியத்தின் ஏவல்நாய்' என்று மனத்தைப் புண்படுத்தும் வகையில் குறிப்பிட்டது.1949-இல் அமெரிக்காவுக்கு முதன் முதலாக நேரு மேற்கொள்ள இருந்த பயணம் குறித்து சோவியத் பத்திரிகையான நியூ டைம்ஸில் 'சியாங் காய் ஷேக்கின் வாரிசு' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியானது. 'ஆசிய மக்களின் விடுதலை இயக்கங்களுக்கு எதிராகச் செயல்படுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு மூர்க்கத்தனமான பசிபிக் ராணுவக் கூட்டணி குறித்து... அகிசன் நேருவுக்கு எடுத்துக் கூறுவார். அமெரிக்க, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தங்களது கொடிய திட்டங்களில் இந்தியாவுக்கும், இப்போதைய அதன் பிற்போக்குத் தலைவர்களுக்கும் சிறப்பு இடம் ஒதுக்கித் தருவார்கள்... சியாங் கே ஷேக் விட்டுச் சென்ற காலி இடம் நேருவுக்கு வழங்கபடுகிறது' என்று அது எழுதியது. இதை ஆதரிக்கும் வகையில் இன்னொரு சோவியத் பத்திரிகையான இஸ்வெஸ்தியா அக்டோபர் 23-இல் பின்வருமாறு எழுதியது: 'பிற்போக்கு கோமிண்டாங் கட்சியினரை வைத்து ஆடிய சூதாட்டத்தில் சீனாவில் தோல்வி கண்டுவிட்ட நிலையில், அமெரிக்க ஆளும் வட்டாரங்கள் ஆசியாவில் தங்களுக்கு அடிபணிந்து செயல்படக்கூடிய ஒரு புதிய ஏஜெண்டை வெறித்தனமாகத் தேடிவருகிறார்கள்.'0ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறையும் பிரிட்டிஷ் தூதரகத்தில் நடைபெற்ற காமன்வெல்த் கூட்டத்தில் விஜயலட்சுமி கலந்துகொண்டார். ஸ்டாலின்கிராடு போர் குறித்து எடுக்கப்பட்ட திரைப்படத்தில், இரண்டாம் உலகப் போரின்போது இரண்டாவது போர் முனையைத் தொடங்குவதற்கு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார் என சர்ச்சில் மீது ஸ்டாலின் குற்றம்சாட்டுவதாகவும், போரின் பாதிப்பை ரஷ்யா தாங்கிக்கொண்டதற்குப் பிறகே, தங்களுக்கு முன்பாக ரஷ்யா பெர்லினை சென்றடைந்துவிடும் என்று கூட்டணியில் உள்ள மேற்கத்திய நாடுகள் உணர்ந்ததற்கு பிறகே இரண்டாம் போர் முனை தொடங்கப்பட்டதாக ஸ்டாலின் கூறுவதாகவும் சித்திரிக்கும் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து சோவியத் அரசாங்கத்திடம் அளிக்கப்பட இருந்த பிரிட்டிஷ் அரசின் அறிக்கைதான் ஆகஸ்ட் 17-இல் நடைபெற்ற கூட்டத்தில், முக்கிய விவாதப் பொருள் ஆக இருந்தது. அந்தக் காட்சியை நீக்க வேண்டும், படம் முழுவதும் வரும் வசனங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் பிரிட்டிஷ் அரசின் கோரிக்கை. ஐ.நா.வின் செயல்திட்டமும், கிரீஸ், எகிப்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்த சுருக்கமான ஆய்வும் இரண்டாவது விவாதப் பொருள் ஆக இருந்தது. 'இந்தோனேஷியப் பிரச்னை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது நான் அங்கே இருந்தது ஓரளவுக்கு சங்கடமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஐ.நா. பொதுப் பேரவைக் கூட்டத்தில் விவாதப் பொருளாக இந்தோனேஷியப் பிரச்னையை சேர்ப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் பிரிட்டன் வாக்களித்திருந்தது. முக்கியமான சர்வதேசப் பிரச்னைகள் தொடர்பான பிரிட்டனின் அணுகுமுறை என்னைத் திகைப்படைய வைத்தது. பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை யதார்த்தத்தில் இருந்து முற்றிலும் விலகி இருப்பதாகவே தோன்றுகிறது' என சகோதரர் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் விஜயலட்சுமி குறிப்பிட்டிருக்கிறார்.
=========நேரு : உள்ளும் புறமும் நயன்தாரா சகல்தமிழில்: ஜெயநடராஜன்கிழக்கு பதிப்பகம்பக்கம் 320 விலை ரூ 200இணையத்தில் புத்தகத்தை வாங்க : https://www.nhm.in/shop/978-93-5135-152-8.htmlஃபோன் மூலம் புத்தகத்தை வாங்க : 09445901234 / 09445979797

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ad Appavi - Periyakulam,இந்தியா
11-பிப்-201522:05:33 IST Report Abuse
Ad Appavi அறிவாளிகள் என்று கருத்து எழுதுபவர்கள் 1947 ல் இருந்து இந்தியாவை பார்த்தல் தெரியும் ஒருவேளை கால எந்திரம் இருந்தால் இவர்களை அழைத்து போகலாம் வரலாற்றை வெறுமெனே வரலாறாக பார்க்காமல் சர்வதேச அரசியல் சூழ்நிலை ,பொருளாதாரம் இந்திய பொருளாதாரம் அறிவியல் முன்னேற்றத்தில் இந்தியாவின் நிலை, கலாசார போலிகளின் எச்சரிக்கை , காட்டிகொடுக்கும் கைக்கூலிகளுக்கு மத்தியில் நாட்டை பெருவர்தகர்களுக்கு விற்க முயலும் கும்பல் ஒரு புறம் சோசலிசத்தை பரிசித்து பார்க்க முயலும் கூட்டம் ஒருபுறமாக அனைவரையும் அரவணைத்து செல்லவும் அதே நேரம் சுதந்திர போராளிகள் நன்றியை மறக்காமல் அவர்களுக்கும் வலிக்காமல் ஒரு தேசத்தை கட்டமைப்பது என்ற நிலையை இன்று நோகாமல் மீடியா வெளிச்சத்தில் இருப்பவர்கள் சொல்லும் பொது மனம் வலிக்கிறது. உண்மை தெரிந்து பேசுங்கள் அல்லது பேசாது இருங்கள் கீ போர்டு இருக்கு என்று எதையாவது எழுத வேண்டாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X