வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை: முனைவர், சவுந்தர மகாதேவன்| Dinamalar

வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை: முனைவர், சவுந்தர மகாதேவன்

Added : பிப் 06, 2015 | கருத்துகள் (4)
Advertisement
வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை: முனைவர், சவுந்தர மகாதேவன்

சாதனை எனும் சொல்லின் நிகழ்கால நிஜங்கள் இளைஞர்கள். துள்ளித்திரியும் கவலையற்ற காளைகள் அவர்கள். விழியுமில்லை ஒளியுமில்லை; ஆனாலும் இருட்டிலும் இயங்குகிறதே வவ்வால்!நினைத்ததை முடித்துக்காட்டும் வல்லமை அவர்களுக்கு உண்டு. ஒரு பறவையின் பரந்துபட்ட ஆகாயத்தைப் போல் விரிந்து கிடக்கும் விரிவானில் வலம் வரும் பட்டாம்பூச்சிகள் அவர்கள். இயக்கத்தின் அடையாளம் இளைஞர்கள். நினைவு என்னும் நெடுவனத்தில் மலர்களும் இருக்கும் மலைப்பாம்புகளும் இருக்கும். தடைகளை இன்முகத்துடன் ஏற்றுத் தாண்ட முயன்ற இளைஞர்களையே வரலாறு வரவில் வைத்திருக்கிறது. சிகாகோ மாநகருக்குச் சென்று "சகோதர சகோதரிகளே!” என்ற இரட்டைச் சொற்களால் இந்தியப் பண்பாட்டின் உன்னதத்தை உலகிற்கு உரக்கச் சொல்லி. இந்தியா பற்றிச் சிந்தியாதவர்களையும் தன்னை சந்திக்க வைத்துவிட்டுக் கப்பலேறிய கம்பீரமான இளைஞர் சுவாமி விவேகானந்தரின் விந்தை சாதாரணமானதா?


அநீதியை அழிப்போம்:

சாதாரண தோல்விகளுக்கும் சாதாரணமாகிப் புலம்பும் இளையோர் கூட்டமாக இளைய சமுதாயத்தை ஏன் சொல்லவேண்டும்? சுதந்திரப்போரின் தியாகதீபங்களைக் கொடூரமாய் துன்புறுத்திக் கொடுமைப்படுத்திய ஆஷ் எனும் ஆங்கிலேய அதிகாரியை மணியாச்சி ரயில்நிலையத்தில் துணிச்சலாய் சுட்டுக்கொன்றுத் தன் இன்னுயிரையும் தந்த வீரவாஞ்சிநாதன் எனும் இளைஞர் அநீதியை அழித்த அக்கினிக் குஞ்சாயிற்றே! விவேகானந்தரின் சிஷ்யையாக விளங்கிய சகோதரி நிவேதிதா, பாரதி எனும் இளைஞரின் உள்ளுக்குள் ஒளிந்திருந்த அக்கினிக் குஞ்சை சொற்களால் கூர்தீட்டிச் சாதனைவானில் சிறகடிக்க வைத்த இளையதீபம். 1905ல் சகோதரி நிவேதிதாவை பாரதி சந்தித்தார். "பாரதத் தாய் உன் கண் எதிரே கையில் விலங்கோடு நிற்க நீ உடைத்தெறியாமல் நிற்கலாமா பாரதி!” என்று சினத்தோடு அவர் வினவ 23 வயதேயான இளையபாரதி சிலிர்த்தெழுந்தான்; ”சொல்லுக்கடங்காவே பராசக்தி சூரத்தனங்களெல்லாம் வல்லமை தந்திடுவாள் பராசக்தி வாழியென்றே துதிப்போம்” என்று தேசம் காக்க தெய்வத்திடம் பாரதி வல்லமை வேண்டினான்.


பாரதிக்கு சகோதரி:

நிவேதிதா மகத்தான இளைய சக்தியாகப் புலப்பட்டார். பிரகாசமான முகத்தோடு உறுதியோடு பேசிய சகோதரி நிவேதிதாவிடம் பேசியபின் பாரதியின் தன்னம்பிக்கை இன்னும் கூடியது. நிவேதிதாவைச் சந்தித்து உபதேசம் பெற்ற நிகழ்வையும், அவரிடம் பெற்ற ஞானதீட்சையையும் தன் இறுதிக்காலம் வரையிலும் சக்தியாய் பாரதி மனதில் தேக்கிவைத்திருந்தார். சாதிக்கும் இளைஞர்கள் எண் கோட்பாடுகளை உலகின் பார்வைக்குக் கொண்டுசென்ற ஒப்பற்ற இளைய கணிதவியல் சாதனையாளர் சீனிவாச ராமானுஜம் இந்த உலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள். வாழ்கிற வருடங்களுக்கும் சாதித்தலுக்கும் சம்பந்தமில்லை என்று சப்தமாய் சொல்லிச் சாதிக்கிறவர்கள் இளைஞர்கள். வாழ்வை அறுத்தெறியும் வாளல்ல வாழ்வு. நெஞ்சம் நினைத்தால் பஞ்சுபோல் லேசாகி வானையும் எட்டலாம்! சாதனை வானிலும் பறக்கலாம் என்று காட்டிய அந்த இளம் சாதனையாளர் நம்மை வியக்க வைக்கிறார்; உள்ளிருந்து இயக்கவைக்கிறார். "எங்களால் சாதனை செய்து சிறக்கவும் முடியும் இளம் வயதில் கேப்டனாய் பறக்கவும் முடியும்” என்று 16 வயதில் விமானம் ஓட்டும் பயிற்சியைத் தொடங்கி 18 வயதில் விமான ஓட்டியாய் உரிமம் பெற்று, 21 வயதில் இளைய கமாண்டராய் பொறுப்பேற்று, 2100 மணிநேரம் விமானம் ஓட்டி லிம்கா சாதனையாளர் பட்டியலில் "உலகின் இளம்விமானக் கேப்டன்” எனும் சிறப்பினைப் பெற்ற சாதனைப் பெண்மணி பவிகா பாரதி இளைஞர்களின் முன்னேற்ற முன்மாதிரி.

ஆம் ! எழுதாத பேனாவை எவர்தான் பையில் வைத்திருப்பார்? ஆறிப்போன தேநீரை யார்தான் விரும்புவார்? சூடுதான் தீர்மானிக்கிறது உயிர்மையின் உன்னதத்தை. இயங்கிக்கொண்டிருக்கும் இளைய சமுதாயத்தையே உலகம் உள்ளபடி விரும்புகிறது. வியர்வை சிந்தாமல் விந்தை இல்லை.


வெற்றியின் முதல்படி:

தடையாளக் கற்றுக்கொள்வது தான் வெற்றியின் முதல்படி. முருங்கையை முறிக்க ஒருகை போதும். ஆனால் தேக்கை முறிக்கப் பலகரங்கள் வேண்டும். ஒற்றுமையின் அடையாளம் இளைய சமுதாயம். சிக்குப்பட்ட நூல் கண்டே நம்மைச் சிரமப்படுத்துகிறது. சிக்கலில் தவிக்கும் மனமே நம்மைக் கலவரப்படுத்துகிறது. இளைத்துப் போவதோ தோல்வி கண்டு களைத்துப் போவதோ இளைய சமுதாயத்தின் பண்புகள் இல்லை. வழுக்கி விழாமல் வாழ்க்கை இல்லை. விழுந்து எழாதவன் வீரனுமில்லை. தேக்கிலை போல் பரந்து விரிந்திருக்கிறது இந்த வாழ்வெனும் பூங்காவனம். அதில் மலர்ந்து விரியும் வாசமலர்கள், நிகழ்காலத்தின் பாசமலர்கள் இளைஞர்கள். அன்பு இளைய சமுதாயமே! நீங்கள் காலத்திற்காக காத்திருக்க வேண்டாம். சில நேரங்களில் சிலருக்கு; அவர்கள் காலமான பின்தான் காலமே வருகிறது. காலத்தை விஞ்சி நாம்செய்யும் செயல்களே நம்மைப் பலகாலம் கடந்தும் வாழவைக்கிறது.


கலங்கரை விளக்குகள்:

இந்தச் சமுதாயம் சில கணங்களில் உங்களை ஓரங்கட்டுவதற்காக நீங்கள் துயரப்பட வேண்டியதில்லை. கலங்கரை விளக்குகள் கரையோரமாகத்தானிருக்கும். மைல்கற்கள் நாம் கடக்கவேண்டிய தூரத்தை அமைதியாய் தெரிவித்தபடி சாலையோரமாகத்தான் இருக்கும். வளையோர் சூடார்; இளையோர் தேடார். ஆனாலும் எழுச்சியோடு பூக்கவில்லையா எருக்கம் பூக்கள்? முள்ளுக்கு அருகிலும் முனைப்போடு பூத்திருக்கும் ரோஜாக்கள் மாதிரிச் சவால்களுக்கு மத்தியிலும் சந்தோஷமாய் பூத்துக்குலுங்குங்கள். வாழ்வின் யதார்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். தோல்விகளையும் இன்முகத்தோடு பெற்றுக் கொள்ளுங்கள். வருத்தப்படுவதற்காகவோ தோல்வியின் வாசலில் நிறுத்தப்படுவதற்காகவோ நீங்கள் பிறக்கவில்லை என்பதை உணருங்கள் இளைஞர்களே. உயரத்தூண்களே நீங்கள் துயரத்தூண்களாக ஒருநாளும் மாறவேண்டாம்! உங்கள் திசைகளைத் தீர்மானியுங்கள்; வானம் வசப்படும்.

- முனைவர், சவுந்தர மகாதேவன், தமிழ்த்துறைத் தலைவர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி 99521 40275

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
06-பிப்-201517:25:55 IST Report Abuse
ganapati sb மற்றவர் பாராட்டை எதிர்பார்க்காமல் தன பணியை செய்யும் எருக்கம்பூ மயில்கல் கலங்கரை விளக்கு உதாரணம் அருமை
Rate this:
Share this comment
Cancel
Shruti Devi - cbe,இந்தியா
06-பிப்-201513:50:59 IST Report Abuse
Shruti Devi படிக்கும் போதே புல்அறிகிறது மிகவும் அருமை... மாணவ மாணவிகளின் காதுகளில் சென்றடிய வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
karuppiahkathiravan - theni,இந்தியா
06-பிப்-201511:47:17 IST Report Abuse
karuppiahkathiravan நன்றி, நெஞ்சுரம் மிக்க கருத்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X