ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இரு கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி மீனவ பெண் மற்றவர்கள் போல் சுறுசுறுப்பாக பணி செய்து வருகிறார். ராமேஸ்வரம் சேராங்கோட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த நம்புசெல்வம் மனைவி பூமாரி, 28. இவருக்கு 6 வயதில் ஒரு மகன் உள்ளார். 5 வயதில் ஏற்பட்ட காய்ச்சலால் பூமாரியின் இரு கால்களும் செயலிழந்தன.
அதன்பின், முடங்கிக் கிடக்காமல், வீட்டு வேலைகளை தானே செய்து யார் உதவியும் இன்றி வாழ பழகிக்கொண்டார். வறுமையில் தவித்த குடும்பத்தை காப்பாற்ற, 10 வயது முதல் மற்ற மீனவ பெண்களுடன் சேர்ந்து நடுக்கடலுக்கு படகில் சென்று மற்றவர்களுக்கு நான் சளைத்தவர் இல்லை என நிரூபிக்கும் வகையில், மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். ஆனாலும், மற்றவர்களை விட 20 சதவீதம் குறைவாக கிடைக்கும் சம்பளத்தால்," தான் ஒரு மாற்றுத்திறனாளி' என்பதை எண்ணி வருந்துகிறார். பூமாரி, குடிநீர் தேவைக்கு 200 மீட்டர் தூரமுள்ள கிணற்றுக்குசென்று, நீரை இறைத்து தலையிலும், இடுப்பிலும் குடங்களை சுமந்து வந்து தேனீ போல் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள பூமாரி, தனது கணவர் பிரிந்து சென்று விட்டதால் சோகமாக உள்ளார்.
அவர் கூறியதாவது: கால்கள் ஊனமானாலும் குடும்பத்துக்கு பாரமாக இருக்க விரும்பாமல் சிறுவயதில் கடலுக்கு சென்று இரவில் விழிந்திருந்து (தள்ளு வலையில்) மீன்பிடிப்பேன். வாரத்திற்கு 2 நாட்கள் மீன்பிடிக்க சென்றால், ரூ.600 கூலி கிடைக்கும். வீடுக்கு தேவையான குடிநீர் எடுத்து வந்து, நானே உணவு சமைப்பேன். ஊனமுற்றவள் என மற்றவர்கள் என்னை ஒதுக்கவில்லை, என்றார். ஊனத்தை வென்று சாதனை படைத்த மீனவ பெண் பூமாரி, பாரதி கண்ட புரட்சி பெண்ணாக விளங்குகிறார்.