அன்பை போற்றும் காதலுக்கு ஜே! பொற்கொடி, எழுத்தாளர்| Dinamalar

அன்பை போற்றும் காதலுக்கு ஜே! பொற்கொடி, எழுத்தாளர்

Added : பிப் 08, 2015 | கருத்துகள் (3)
Share
அன்பை போற்றும் காதலுக்கு ஜே! பொற்கொடி, எழுத்தாளர்

புனித வேலன்டைன் என்னும் துறவியால், மனிதர்களிடையே நிலவும் அன்பை கொண்டாட உருவான நாள், பிப்., 14. ஆனால், இன்று, தாய் - தந்தை பாசம், சகோதர பந்தம், பிள்ளைப் பாசம், நண்பர்கள் நேசம் என்று எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி, ஆண் - பெண் இடையே உருவாகும் காதலை மட்டும் கொண்டாடும் தினமாகி விட்டது. 'வேலன்டைன்ஸ் டே' - காதலர் தினம் ஆகவே மாறிவிட்டது.காதல், தமிழ் மொழியின் கவர்ச்சிகரமான பதம். 'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்' என்று கம்பர், ராமன் - சீதைக்கிடையே காதல் முகிழ்த்த தருணத்தை பகர்கிறார். கண்ணின் வழியே உள் நுழைந்து உள்ளம் ஊடுருவும் தன்மை கொண்டது காதல். அதனால் தான், நமக்கு அறிமுகமற்ற ஒருவரிடம் பேசும்போது, சில நொடிகளுக்கு மேல் அவர்கள் கண்களைப் பார்க்கக் கூடாது என்று கண்களுக்கே, 'தடா' போட்டு நாகரிகம் பேணுகிறது இலக்கியம். அத்துடன் நில்லாது, காதலியின் கடைக்கண் பார்வை, காதலனுக்கு மாமலையையும் கடுகாக எண்ணி புரட்டிப் போடும் ஆற்றலைக் கொடுக்கும் என, காதலின் மகத்துவத்தை பாடுகிறது. இப்போதைய காதல் எப்படி இருக்கிறது என்று யோசிக்கும்போது, கிடைக்கும் பதிலால் மனம் சற்று வலிக்கத்தான் செய்கிறது. சமூக பொறுப்பின்றி எடுக்கப்படும் சில திரைப்படங்களின் தாக்கத்தால், ஐந்தாவது படிக்கும் மாணவ, மாணவியரே காதலிக்க துவங்கி விடுகின்றனர். உடன் படிக்கும் சக மாணவ, மாணவியரிடம் சாதாரணமாக பழகும் இயல்பை தொலைத்து, ஈர்ப்புக்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாமல், அதைக் கடந்து செல்லவும் முடியாமல், பிஞ்சிலேயே பழுத்துவிடுகிற இளங் குருத்துகளை என்ன செய்வது?

மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., அனுப்புவதற்கும், 'வாட்ஸ் அப்'பில் போட்டோ போடுவதற்கும், 'பேஸ்புக்'கில் 'ஸ்டேட்டஸ் அப்டேட்' செய்வதற்கும் அடிப்படைக் காரணம், மனித மனம் காதலை தேடிக் கொண்டேயிருப்பது தான்; ஆனால், எப்படிப்பட்ட காதலைத் தேடுகின்றனர் என்பது தான் கேள்வி. ஆண்களின் பண பலத்தை குறிவைத்து பெண்களும், பெண்களின் உடல் அழகு மற்றும் உத்தியோகம் பார்த்து ஆண்களும், திட்டமிட்டு காதலிக்கின்றனர். விதி விலக்காய், ஒரு சிலர் உண்மையாகவும் காதலிக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது. எனினும், பெரும்பான்மை மக்கள் தான் சமூகத்தை உருவாக்குகின்றனர். இதயங்கள் இரும்பாகி விட்ட இயந்திர உலகில், காதல் என்னும் பூ நசிந்து போகிறது. இதனால், ராஜகுமாரர்கள் வில்லன்கள் ஆகிவிடுவதும், காதல் தேவதைகள் தேவையற்ற தொல்லைகள் ஆகிவிடுவதும் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. பொது தொலைபேசிகளும், கடிதங்களும் வளர்த்த காதலில் இருந்த அடர்த்தி, இன்றைய காதலில் இல்லை. காலை, 'குட் மார்னிங்'கில் ஆரம்பித்து, 'இப்போது எங்கு இருக்கிறாய், என்ன செய்து கொண்டிருக்கிறாய், என்ன சாப்பிட்டாய், யாருடன் பேசினாய்?' என்று நச்சரித்து, பரஸ்பர நம்பிக்கையற்ற, பத்திரத்தன்மையற்ற காதலில் என்ன சுவாரசியம் இருக்கிறது? 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' எனும்போது, இந்த அதீத தகவல் தொடர்புகளால், காதல் நீர்த்து போவது தான் உண்மை. 'ஷாப்பிங் மால்'களில் கை கோர்த்தபடி சுற்றினால், தங்களை காதலர்கள் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொள்கின்றனர்.

உடல் ஆளுமையை மட்டும் குறிக்கோளாக வைத்து பின்னப்படும் காதல் வலை, ஓரிரு முறை, 'ரிசார்ட்'களிலும், பண்ணை வீடுகளிலும் தங்கி, தங்கள் இலக்கை அடைந்தவுடன் விட்டு விலகி ஓடுவது இயல்பாகி விட்டது. காதல்களை விட, 'பிரேக் அப்'களின் எண்ணிக்கை இன்று அதிகம். காளான்கள் போல் முளைக்கும் இவ்வகை காதல்கள், காதல் தோல் போர்த்திய காமவிலங்குகள். கற்கால மனிதன், வரைமுறையற்ற மிருக வாழ்க்கையிலிருந்து சிறிது சிறிதாய் மீண்டு, உடல் போர்த்தி, நாகரிகம் கற்று, ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசார விதியை தானே உருவாக்கி, தன் வாழ்க்கையை ஒழுங்குமுறை படுத்திக் கொண்டதே இன்று நாம் வாழும் வாழ்க்கை. ஆனால், இப்போது காணப்படும் நிகழ்வுகள், மனிதன் தன் நாகரிக வாழ்வியல் தொலைத்து, மீண்டும் விலங்கு வாழ்க்கைக்கு திரும்பி விடுவானோ என்ற அச்சம் தோற்றுவிப்பதை தடுக்க முடியவில்லை. மனிதனை ஆட்கொள்ளும் உணவுர்களுள் வலிமையானது காதல் உணர்வு. அந்த உணர்வு முறையாய் புரிந்து கொள்ளப்பட்டு, அன்பு எனும் உரமிட்டு, நம்பிக்கை எனும் நீருற்றப்பட்டு வளர்க்கப்பட்டால், சமுதாய ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் மருந்தாக மாறும் வல்லமை உடையது. தனி மனித கர்வத்தை போக்கி, அன்பிற்கு வசப்படும் அழகிய காதல் உணர்வை அடையாளம் காட்டும்.

பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் வாழும் பெண்ணிடமும், தன் காதலியின் ஒற்றை புன்னகைக்காக தன் உயிரையே கொடுக்கத் தயாராக இருக்கும் உன்னத ஆணிடமும் காதலை காணலாம். பிரசவ வலியால் துடிக்கும் மனைவியின் துன்பத்தை தன் கண்ணிலும், நெஞ்சிலும் நிரப்பி, அவள் வலி சுமக்கும் கணவனிடமும்; கணவனை திட்டியபடியே அவனுக்குப் பிடித்ததை சமைக்கும் மனைவியிடமும்; மனைவியைத் திட்டிக் கொண்டே அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுக்கும் கணவனிடமும்... வயோதிக காலத்தில் தன் கணவன் அல்லது மனைவி வாழ்ந்து உயிர் துறந்த வீட்டிலேயே தானும் சாக விரும்பி, அவ்விடம் விட்டு அகலாத உங்கள் தாத்தா - பாட்டியிடமோ கூட, நீங்கள் உண்மைக் காதலை அதன் முப்பரிமாணங்களோடு தரிசிக்க முடியும். மனித மனங்களை மட்டுமின்றி, சமுதாயத்தையும் தன் ஒற்றை பார்வையால் சீர் செய்யும் திறன் பெற்ற உள்ளம் நிறைந்திருக்கும் உண்மைக் காதலை போற்றி வளர்த்து, வீட்டையும், நாட்டையும் அன்பால் செழிப்பாக்க முனைவோம்!

இ - மெயில்: porkodirameshbabu@yahoo.com

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X