வாழப்''பொருள்'' வேண்டும் வாழ்வதிலும் ''பொருள்'' வேண்டும்.
உங்கள் இல்லாமையையும் இயலாமையையும் யாரிடமும் சொல்லாதீர்கள்
எல்லா அறிவுரைகளுக்கு பின்னும் இரண்டு அர்த்தம் இருக்கிறது
ஒன்று அக்கரை மற்றொன்று பொறாமை
எந்தப்பொருளையும் வீணாக்கக்கூடாது என்பது அடிப்படைச்சட்டம் அது நேரமாகட்டும், துண்டுத்தாளாகட்டும்
ஒவ்வொரு சிக்கலுமே நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டிய வாய்ப்பு
வாழ்வின் முன்னேற்றங்களுக்கு நினைவாற்றல் எவ்வளவு அவசியமோ அதுபோல வாழ்வின் மகிழ்ச்சிக்கு ஞாபகமறதி மிக மிக அவசியம்
விளக்கங்கள் கொடுத்து தக்கவைக்கும் உறவுகள் நெடுங்காலம் நிலைத்து நிற்பதில்லை
இதெல்லாம் வித்தியாசமான பழமொழிகளாக மட்டுமல்ல வாழ்க்கையோடு ஒத்துப்போகும் அல்லது ஒத்துக்கொள்ளவேண்டிய புதுமொழியாகவும் இருப்பது போல தெரிகிறதா அப்படியானால் உங்களது பாராட்டு அனைத்தும் பசுபதிநாதனைத்தான் போய்ச்சேரவேண்டும்.
யார் இந்த பசுபதிநாதன்
சேலத்தை சேர்ந்தவர் சினிமா விளம்பரங்களை சுவற்றில் எழுதுபவர்
பள்ளியில் படிக்கும் போதே புத்தகபையை பிடிப்பதற்கு பதிலாக பெயிண்டிங் பிரஷை பிடிப்பதில் கைகள் ஆர்வம்காட்ட பெயிண்டிங் பிரஷைபிடித்தார்.
எந்த தொழில் செய்தாலும் அதில் ஒரு தனித்துவம் இருக்கவேண்டும் என்று நினைப்பவர் இதன் காரணமாக சினிமா விளம்பரங்களை சுவற்றில் எழுதும்போது அதில் வித்தியாசம் காண்பித்தார்.உதாரணமாக புவனா ஒரு கேள்விக்குறி என்ற சினிமா விளம்பரம் எழுதும்போது புவனா ஒர ? என்று எழுதுவார்.
இது போன்ற வித்தியாசங்கள் மற்றும் முத்து முத்தான அழகிய எழுத்துக்கள் இவருக்கு வரவேற்பையும் வருமானத்தையும் பெற்றுத்தந்தாலும் இவரது தந்தையான சுதந்திரபோராட்ட தியாகி அர்த்நாரிக்கு இது மனநிறைவைத்தரவில்லை.
நாட்டின் நலனிற்கு நாங்கள் உழைத்தோம் ஆனால் நீ உனக்காக மட்டுமே உழைக்கிறாய் உன் உழைப்பு கொஞ்சமாவது சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
தந்தையின் வார்த்தை பசுபதிநாதனுக்குள் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது சமூகத்திற்கு நாம் என்ன செய்யமுடியும் என்று சிந்தித்து எடுத்த முடிவுதான் சமூகத்திற்கு நலன்தரும் வாசகங்களை சுவற்றில் எழுதுவது என்று.
சேலத்தில் எல்லோரும் பார்க்கும்படியான ஒரு பொதுச்சுவற்றில் வெள்ளை அடித்து கறுப்பு வண்ணத்தில் சமூகத்திற்கு பயன்படும்படியான ஒரு பொன் மொழியை எழுதிவைத்தார்.
அவரது இஷ்ட தெய்வமான மருதமலைமுருகன் ஆசியை பெறும்பொருட்டு அந்த இடத்திற்கு எம்எம்எம்(மருதமலை முருகன்)கார்னர் என்றும் பெயர்வைத்தார்.வழக்கம் போல அந்த பக்கம் போனவர்கள் 'இது என்ன புதுசா இருக்கே'? என்று படித்து பார்த்து பாராட்டிவிட்டு சென்றனர்.
வாரத்திற்கு ஒரு முறை இதே போல இவர் எழுதிப்போட இதைப்படிக்கவே தனி வாசகர்வட்டம் உருவானாது.எங்கவீட்டு சுவரும் சும்மாதான் இருக்கு இங்கே பக்கம்தான் அங்கேயும் வந்து எழுதிவிட்டு போங்களேன் என்று ஒருவர் கூப்பிட இதே வாசகம் இரண்டாவது சுவற்றில் இடம் பெற்றது.அதைப்பார்த்துவிட்டு இன்னோருவர் கூப்பிட மூன்றாவது சுவற்றில் இடம் பெற்றது. இப்படியே இப்போது சேலத்தின் முக்கியமான முப்பது இடங்களில் இவரது வாசகம் எழுதிப்போடப்படுகிறது.
வாரத்தில் மற்ற நாட்களில் எல்லாம் சொந்தவாழ்க்கயைின் தேவை மற்றும் தேடலுக்காக சினிமா திரைஅரங்குகளின் வாசலில் சினிமா விளம்பரம் எழுதுபவர் வாரத்தில் ஒரு நாள் இந்த முப்பது சுவர்களிலும் சமுதாய நல கருத்துக்ககளை எழுத கிளம்பிவிடுவார்.
ஒவ்வொரு செவ்வாய்கிழமை இரவு 9 மணிக்கு தனது மொபட்டில் (முன்பு சைக்கிளில்)கிளம்பி முப்பது சுவர்களுக்கும் வெள்ளை அடித்துவிடுவார்.வெள்ளை அடித்து முடிவதற்கு நடுநிசி ஒரு மணியாகிவிடும். இரண்டு மணி நேரம் துாங்குபவர் அதிகாலை 3 மணிக்கு எழுந்து பெயிண்ட் பிரஷ்சுடன் கிளம்பி முப்பது சுவரிலும் வாசகத்தை எழுதி வீட்டிற்கு வரும்போது நன்றாகவே விடிந்துவிடும்.
புதன்கிழமை காலையில் முப்பது சுவர்களிலும் ஒரே மாதிரியான வாசகம் பளிச்சிடும். இப்படி இவர் எழுத ஆரம்பித்து 22 வருடங்களாகிறது.ஒரு முறை எழுதிய வாசகத்தை திரும்ப எழுதியது கிடையாது.என்ன எழுதுவது என்பதை செவ்வாய்கிழமை முடிவு செய்வார்.
சிலர் இது என் சொந்த சிந்தனையோ? என்று கேட்பார்கள் இது என் சிந்தனை அல்ல.நான் புத்தகங்களில் படித்தபோது பெரியவர்களிடம் கேட்டபோது காதில் விழுந்த போது கண்ணால் பார்த்போது பளீரிடும் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்வேன்.இதை நீங்களும் நிறைய படித்திருப்பீர்கள் ஆனால் மறந்திருப்பீர்கள் நான் மறக்காமல் எழுதுகிறேன் அவ்வளவுதான்.
சினிமா இயக்குனர் சசி தோல்விகளால் துவண்டு போய் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து சேலம் பக்கம் வந்தபோது நான் எழுதிப்போட்டிருந்த 'ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் சாதனையாளராக வாழ்ந்துவிடலாம்' என்ற வார்த்தையை படித்துவிட்டு தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் சாதித்தார் என்று கேள்விப்பட்டேன்,பெருமையாக இருந்தது.
அதே போல இந்த முப்பது சுவர்களிலும் அரசியல் சினிமா உள்ளீட்ட எந்த போஸ்டர்களையும் யாரும் ஒட்டமாட்டார்கள், அது எழுதப்பட்ட வார்த்தைக்கு கிடைக்கும் பெரிய மரியாதையாக கருதுகிறேன்.
குளிர் மழைக்காலத்தில் நான் கொஞ்சம் சோர்வானால் கூட என் மணைவி அலமேலு கிளம்புங்க கிளம்புங்க எல்லோரும் படிக்க காத்திருப்பாங்க என்று என்னை சோர்வடையவிடாமல் கிளப்பிவிடுவார் அவருக்கு பெரிய நன்றியை சொல்லவேண்டும்.
இந்த வாசகங்களை எல்லாம் தொகுத்து சேலம் பகுதியில் நடக்கும் திருமணவிழாக்களில் வரும்விருந்தினர்களுக்கு பரிசு புத்தகமாக கொடுப்பதும் நடந்துவருகிறது.
இன்னும் நிறைய பேர் நிறைய இடங்களில் எழுத கூப்பிடுகிறார்கள் ஆனால் இதை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருப்பதால் மனவேதனையோடு மறுத்துவருகிறேன்.
பசுபதிநாதனின் தந்தையும் தியாகியுமான அமரர் அர்த்நாரியின் மனம் இப்போது சந்தோமாக வாழ்த்திகொண்டு இருக்கும், நீங்களும் வாழ்த்த விரும்பினால் தொடர்பு கொள்ள வேண்டிய எண்:9443221318.
-எல்.முருகராஜ்.