பாட்னா: பீகாரில், ஐக்கிய ஜனதா தளத்தின் சட்டசபைத் தலைவராக, நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைப்பதற்கு, அவருக்கு, கவர்னர் கேசரிநாத் திரிபாதி அழைப்பு விடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதேநேரத்தில், 'ஜிதன்ராம் மஞ்ஜி பரிந்துரையை ஏற்று, சட்டசபையை கலைக்க, கவர்னர் உத்தரவிடுவாரோ' என்ற கலக்கமும், ஐக்கிய ஜனதா தள கட்சியினரிடையே நிலவுகிறது.
பீகாரில், பரபரப்பான அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில், ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம், படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு பொறுப்பேற்று, நிதிஷ் குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்; தன் ஆதரவாளரான ஜிதன்ராம் மஞ்ஜியை, முதல்வராக நியமித்தார்.
ஓரம் கட்டினார்:
ஜிதன்ராம் மஞ்ஜி, தனி கோஷ்டியை துவக்கி, நிதிஷ் குமார் ஆதரவாளர்களை ஓரம் கட்டினார். இதையடுத்து, முதல்வர் பதவியிலிருந்து விலகும்படி, ஜிதன்ராம் மஞ்ஜியிடம், நிதிஷ் குமார் வலியுறுத்தினார். இதை ஏற்க மறுத்த மஞ்ஜி, அமைச்சரவையை கூட்டி, சட்டசபையை கலைக்கும்படி தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு பரிந்துரை செய்தார். இதற்கு பதிலடியாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டினார், நிதிஷ் குமார். இதில், கட்சியின் சட்டசபைத் தலைவராக நிதிஷ் குமார் தேர்வு செய்யப்பட்டார். அரசியலமைப்பு சட்ட விதிமுறைகளின்படி, சட்டசபையில் பெரும்பான்மை பலம் பெற்றுள்ள கட்சியின் எம்.எல்.ஏ.,க்களால், தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் தான், முதல்வராக முடியும். ஆனால், ஏற்கனவே பீகார் முதல்வராக பொறுப்பேற்ற ஜிதன்ராம் மஞ்ஜி, இன்னும் பதவி விலகவில்லை. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம், காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகளை சேர்ந்த, 130 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு கடிதங்களுடன், ஐக்கிய ஜனதா தள மாநில தலைவர் பசிஸ்தா நாராயண், நேற்று, கவர்னர் மாளிகைக்கு சென்றார். ஆட்சி அமைக்க நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்கும்படி மனு அளித்தார். காங்கிரசைச் சேர்ந்த சதானந்த சிங், ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த அப்துல் பாரி சித்திக் உள்ளிட்டோர் அப்போது, உடன் இருந்தனர். பீகார் சட்டசபை சபாநாயகர், உதய் நாராயன் சவுத்ரி, நிதிஷ் குமாரை, ஐக்கிய ஜனதா தளத்தின் புதிய சட்டசபைத் தலைவராக அங்கீகரித்துள்ள நிலையில், கவர்னர் கேசரிநாத் திரிபாதி, இன்று எடுக்கவுள்ள முடிவு எதிர்பர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கேசரிநாத் திரிபாதி, மேற்குவங்க கவர்னராக பதவி வகிக்கிறார்; பீகார் மாநில கவர்னர் பொறுப்பையும், கூடுதலாக கவனிக்கிறார். இவர், பா.ஜ.,வின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர். கல்யாண் சிங், உ.பி., மாநில முதல்வராக இருந்த போது, அங்கு சட்டசபை சபாநாயகராக பதவி வகித்தவர்; உ.பி., மாநில பா.ஜ., தலைவராகவும் செயல்பட்டவர்.
தூண்டி விடுவதாக...:
கட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடும்படி, ஜிதன்ராம் மஞ்ஜியை, பா.ஜ., தலைவர்கள் தூண்டி விடுவதாக, ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் புகார் கூறிவரும் நிலையில், பழம்பெரும் பா.ஜ., தலைவரான கேசரிநாத் திரிபாதி, எந்த மாதிரியான முடிவை எடுப்பார் என தெரியாமல், நிதிஷ் குமார் ஆதரவாளர்கள் குழப்பமடைந்து உள்ளனர். ஆட்சி அமைக்க வரும்படி, நிதிஷ் குமாருக்கு அழைப்பு விடுக்காமல், ஜிதன்ராம் மஞ்ஜியின் பரிந்துரையை ஏற்று, சட்டசபையை கலைத்து விடுவாரோ என, அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதற்கிடையே, சட்டசபை கலைக்கப்பட்டால், ஜிதன்ராம் மஞ்ஜி ஆதரவு எம்.எல்.ஏ.,க் களுடன், புதிய ஆட்சியை அமைக்கவும், பீகார் மாநில பா.ஜ., தலைவர்கள் தயாராகி வருகின்றனர். இப்போது, பீகார் மாநில அரசியலின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் மிகப்பெரிய பொறுப்பு, கவர்னர் கேசரிநாத் திரிபாதியின் கையில் உள்ளது.
யாருக்கு பலம்?
* பீகாரில், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு, 111 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், 97 பேர், நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.
* லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தின், 24 எம்.எல்.ஏ.,க்களும், காங்., மற்றும் சுயேச்சை
உள்ளிட்ட, 10 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவும், நிதிஷ் குமாருக்கு உள்ளது.
* இதனால், தனிப் பெரும்பான்மைக்கு தேவையானதை விட, அதிகமாகவே நிதிஷ் குமாருக்கு எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது.
* பா.ஜ.,வுக்கு சட்டசபையில், 87 உறுப்பினர்கள் உள்ளனர். ஜிதன்ராம் மஞ்ஜி, ஐக்கிய ஜனதா தளத்தை உடைத்து, அதிலிருந்து கணிசமான எம்.எல்.ஏ.,க்களை, பா.ஜ.,வுக்கு இழுத்து வந்தால், பா.ஜ., தலைமையில் ஆட்சி அமைவதற்கான வாய்ப்பும் உள்ளது.
* 'பீகார் சட்டசபை கலைக்கப்பட்டால், சட்டசபை தேர்தலை சந்தித்து, ஜிதன்ராம் மஞ்ஜியின் உதவியுடன், அதிக தொகுதிகளில் வெற்றி பெறலாம்' என்றும், பா.ஜ., தலைவர்கள் கணக்கு போட்டுள்ளனர்.
எங்கள் கட்சிக்குள் இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்தியதே, பா.ஜ., தலைவர்கள் தான். மோடியும், அமித் ஷாவும் தான், இதற்கு மூளையாக செயல்பட்டனர். நிதிஷ் குமாருக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபிக்க, கவர்னர் அல்லது ஜனாதிபதி முன் அணிவகுக்க, 130 எம்.எல்.ஏ.,க்கள் தயாராக உள்ளனர்.
கே.சி.தியாகி, பொதுச் செயலர் - ஐக்கிய ஜனதா தளம்
பீகாரில் நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு, நிதிஷ் குமாரின் பதவி வெறி தான் காரணம். தலித் சமுதாயத்தை சேர்ந்த, ஜிதன்ராம் மஞ்ஜியை அவமதிக்கும் வகையில், நிதிஷ் குமாரும், அவரின் ஆதரவாளர்களும் செயல்படுகின்றனர். பிரச்னைக்கு, பா.ஜ., மீது பழிபோடுவது கேலிக் கூத்தாக உள்ளது.
ஷாநவாஸ் உசேன், செய்தி தொடர்பாளர் - பா.ஜ.,
ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, நிதிஷ் குமார் கூட்டியதும், அதில், அவர் கட்சியின் சட்டசபைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதும், சட்டவிரோதமானது. இவர்கள் என்ன செய்தாலும், ஜிதன்ராம் மஞ்ஜியின் படகை மூழ்கடிக்க முடியாது.
ஜிதன்ராம் மஞ்ஜி, பீகார் முதல்வர் - ஐக்கிய ஜனதா தளம்