சூரிய ஆற்றலை பயன்படுத்துவோம்: முனைவர் சி.பழனியப்பன்| Dinamalar

சூரிய ஆற்றலை பயன்படுத்துவோம்: முனைவர் சி.பழனியப்பன்

Updated : பிப் 09, 2015 | Added : பிப் 09, 2015 | கருத்துகள் (3)
சூரிய ஆற்றலை பயன்படுத்துவோம்: முனைவர் சி.பழனியப்பன்

மாசுபடுத்தக்கூடிய, இன்னும் சில காலங்களே கிடைக்கக் கூடிய நிலக்கரி, பெட்ரோலிய பொருட்களை தவிர்ப்பதற்கு சூரிய மின் மற்றும் வெப்ப ஆற்றல் சரியான மாற்று வழி. நமது அன்னியச் செலாவணியில் கிட்டத்தட்ட 70 சதவீதம், பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதில் செலவிடுகிறோம். இதை குறைப்பதற்கும் நமது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வைத்திருப்பதற்கும் சூரிய ஆற்றலை பயன்படுத்த வேண்டியது அவசியம்.அதிக விலை, சேமித்து வைப்பதில் உள்ள சிரமங்கள் ஆகிய காரணங்களால் இந்த இயற்கை சக்தியை அதிக அளவு பயன்படுத்துவதற்கு தயக்கம் உள்ளது. தற்பொழுது நடந்துவரும் ஆராய்ச்சி மற்றும் மக்கள் அதிக அளவில் சூரிய வெப்ப கருவிகளை பயன்படுத்த முன்வந்தால் விலை குறைய வாய்ப்பு உள்ளது.விலை குறைவு:

உதாரணத்திற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரூ.2 லட்சமாக இருந்த 1000 வாட்ஸ் சூரிய மின்சார திட்டம் 40 சதவீதம் விலை குறைந்து உள்ளது. இந்த துறையில் 30 ஆண்டு அனுபவம் வாய்ந்த நான், மத்திய அரசு உதவியோடு பல மாநிலங்களில் தொழிற்சாலைகளில் சூரிய ஆற்றல் கருவிகளை அமைத்துள்ளேன். குறிப்பாக பருப்பு, ரப்பர், தேயிலை, மசாலா, வாசனை திரவியங்கள், பழம், காய்கனிகள், தோல், மருந்துப் பொருட்கள், உப்பு, உணவு தயாரிப்பு, ஜவுளி, வாகனங்களின் வர்ணம் உலர்த்தும் அறைகள் ஆகியவற்றில் சூரிய ஆற்றல் உபயோகிக்கும் முறைபற்றி ஆராய்ச்சி செய்து பின் அதை நடைமுறைப்படுத்தினேன். தொழிற்சாலைகளில் உபயோகப்படுத்தும் சுடுநீர் மற்றும் சுடுகாற்று உற்பத்தியின் 10 சதவீத அளவை சூரிய சக்திக்கு மாற்றினால், ஆண்டிற்கு 2500 மில்லியன் லிட்டர் பெட்ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதியை தவிர்க்கலாம்.பசுமை பெயின்ட் தொழிற்சாலை:

தொழிற்சாலை பெயின்ட் பூசும் இயந்திர அறைகள் மற்றும் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் அதிக அளவில் காற்றை வெப்பப்படுத்தி பெயின்ட்டை உலர வைப்பதற்கு பயன்படுத்துகின்றனர். டீசல் போன்றவை எரிக்கப்பட்டு வெப்பமாற்றி மூலம் காற்றை 80 முதல் 180 செல்சியஸ் வரை சூடேற்றி காற்றாடி மூலம் உலர்த்தும் அறையில் பரவ செய்கின்றனர். மேற்கண்ட முறையில் உபயோகித்து வந்த 5 பெரிய தொழிற்சாலைகளில் சூரிய சுடுகாற்று மூலம் எரிபொருட்களை 30 சதவீதம் வரை குறைத்துள்ளனர். கிட்டத்தட்ட 1000 சதுர மீட்டர் பரப்பளவு சூரிய வெப்பக்காற்று சாதனம் இந்த தொழிற்சாலைகளில் வெற்றிகரமாக செயல்படுகிறது.காடு அழிவதை தவிர்க்கலாம்:

தேயிலை தூள் தயாரிப்பது பார்ப்பதற்கு எளிதாக தெரிந்தாலும் இதற்கு அதிக அளவு வெப்ப ஆற்றல் தேவைப்படுகிறது. உதாரணத்திற்கு, 1 கிலோ பறித்த இளந்தளிர் டீ இலையை 3 சதவீதம் மட்டுமே ஈரப்பதமுள்ள தூளாக மாற்ற தேவையான வெப்ப ஆற்றல் 1 கிலோ இரும்பை உருவாக்குவதற்கு தேவையான ஆற்றலை விட அதிகம். இதற்காக அதிக அளவில் மரங்களில் இருந்து விறகுகள், நிலக்கரி உபயோகித்து வருவதால் காடுகள் அழிகின்றன. 20 ஆண்டுகளாக எனக்கு தெரிந்து, 4 தேயிலை தொழிற்சாலைகளில் இயங்கிவரும் சூரிய காற்று உற்பத்திக்கலன் 25 சதவீதம் விறகுகளை மிச்சப்படுத்தி வருகிறது. நறுமண மசாலாபொடி தயார் செய்யும் ஆலைகளிலும் சூரிய வெப்பத்தாலே நறுமணப்பொருளை உலர்த்தி தரமான மசாலா பொடி தயார் செய்யப்படுகிறது. மிளகு, ஏலக்காய், மஞ்சள், பூண்டு, முந்திரி பருப்பு உலர்த்துவதற்கு சூரிய வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தலாம். தோல் ஆலைகளிலும் 'ஆட்டோ ஸ்பிரே'க்கு தேவையான சுடுகாற்றை சூரிய கலன்கள் மூலம் முழுமையாக கொடுக்க முடியும். ராஜஸ்தானில் சானிட்டரி சாதனங்ககளை உலர்த்துவதில் சூரிய உலர்த்தி முன்னிலை வகிக்கிறது.மீன் உலர்த்துதல்:

இந்தியா 8041 கி.மீ., நீளமுள்ள நீண்ட கடற்கரையை கொண்டது. 4.57 மில்லியன் டன் மீன் வளம் நம் கடல் எல்லைக்குள் உள்ளது. பாதுகாத்து வைக்க போதிய வசதியின்மையால் 21 சதவீத மீன்கள் அழுகி விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதிக மீன் பிடிப்பு காலங்களில் குளிர் சாதனப்பெட்டியில் உபரியான மீன்களை சேகரித்து வைக்க வேண்டும் அல்லது கருவாடாக மாற்ற வேண்டும். திறந்த வெளியில் உலர்த்துவதால் தரமில்லாத கருவாடு தான் உற்பத்தி செய்ய முடியும். கேரளாவில் 500 கிலோ அளவுள்ள சூரிய வெப்ப சேகரிப்பான் நிறுவி தரமான கருவாடை பெற்று மீனவர்கள் லாபம் பெறுகின்றனர்.ஜம்மு காஷ்மீரில்...:

ஜம்மு காஷ்மீரில் உள்ள 'லே' என்ற மலைப்பிரதேசம் 4000 மீட்டர் உயரம் கொண்டது. இங்கே ஆண்டு தோறும் 2600 டன் ஆப்ரிகாட், 3500 டன் ஆப்பிள், 8500 டன் காய்கறிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. போதிய பதப்படுத்தும் தொழில்நுட்பம் நடைமுறையில் இல்லாததால் 45 சதவீதம் வேளாண் உற்பத்தி வீணாகிறது. லடாக் மற்றும் கார்கில் பொருளாதாரம் அங்குள்ள காய்கறிகள், பழ உற்பத்தி அடிப்படையில் அமைந்துள்ளது. அங்குள்ள கடுமையான குளிர்காலத்தை எதிர்கொள்ள பழம் மற்றும் காய்களை வெயில் காலத்தில் உலர்த்தி வைத்து கொள்ளுதல் அவசியம். இங்கு சூரிய சக்தியுடன் பழங்கள் உலர்த்தும் கருவிகளை நிறுவி மக்கள் பயன் பெறுகின்றனர். தமிழகத்தில் வத்தலக்குண்டு அருகில் இயற்கை வேளாண் தொழில்நுட்பம் மூலம் விளைவிக்கப்படும் பழங்களை, சூரிய வெப்ப ஆற்றல் கலன் பயன்படுத்தி உலர்த்தி ஏற்றுமதி செய்து வருகின்றனர்.வீட்டு உபயோகம்:

கோவையில் ஒரு நிறுவனம் முதன் முறையாக சோலார் வாட்டர் ஹீட்டர் மூலம் டீசல் உபயோகத்தை முழுவதுமாக மாற்றி அமைத்துள்ளது. வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், ஓட்டல்கள் மற்றும் விடுதிகளில் சோலார் வாட்டர் ஹீட்டர் மூலம் எரிபொருள்களின் உபயோகத்தை கணிசமாக குறைக்கமுடியும். 'மாசுபடுத்தும் பெட்ரோலிய எரிபொருளில் இருந்து நீண்ட காலம் கிடைக்கக்கூடிய இயற்கை ஆற்றல்களை பயன்படுத்துவது நமது எதிர்காலத்திற்கு மிக அவசியம்' என்கின்றனர் அறிஞர்கள்; இன்றைய தேவையும் கூட. நாட்டிற்கும் நமது சந்ததியின் எதிர்காலத்திற்கும் அவசியமான இந்த சூரிய ஆற்றலை அதிக அளவு பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும்.
- முனைவர் சி.பழனியப்பன், சூரிய சக்தி விஞ்ஞானி, தேனி. 99940 94400We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X