'27 நாட்களுக்கு முன் கட்சியில் சேர்ந்தவர்களுக்கு தரப்படும் முக்கியத்துவம், 27 ஆண்டுகளாக, கட்சிக்காக உழைக்கும் பெண்களுக்கு தரப்படுவதில்லை' என, தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், விஜயதரணி எம்.எல்.ஏ., ஆவேசமாக பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின், முதல் செயற்குழுக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. 'முதலில், செயற்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி' என, அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின், நேற்று மதியம், 'மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்கலாம்' என, அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில், விஜயதரணி எம்.எல்.ஏ., பேசியதாவது:காங்கிரசில் சேர்ந்து, 27 நாட்கள் கூட ஆகவில்லை. அவர்கள் சிறப்பு அழைப்பாளராக செயற்குழுவில் பங்கேற்கின்றனர். டில்லி சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், 27 ஆண்டு களாக கட்சிக்காக உழைத்த பிறகே, நான் எம்.எல்.ஏ., பதவி அடைந்து, தற்போது தான் செயற்குழு கூட்டத்திற்கு வந்துள்ளேன். என்னை போல, பல ஆண்டுகளாக கட்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவர், நடிகை குஷ்புவைத் தான் சூசகமாக தாக்கி பேசினார் என்பதால், கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. முன்னாள் எம்.பி., கே.எஸ்.அழகிரி பேசுகையில், ''லோக்சபா தேர்தல் தோல்வி பற்றி இன்னும் நாம் விவாதிக்கவில்லை. பூத் கமிட்டியில் போதுமான உறுப்பினர்கள் இல்லை. எனவே, கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். இது பற்றி விரிவாக பேச வேண்டும்,'' என்றார். அதற்கு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக், ''வரும், 25ம் தேதி மீண்டும் தமிழகத்திற்கு வருகிறேன். அப்போது நடக்கும் கூட்டத்தில், கட்சி வளர்ச்சி பற்றிய கருத்துக்களை தெரிவியுங்கள்,'' என்றார்.
சிதம்பரம் புறக்கணிப்பு :
= பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை நிர்வகித்து வரும் தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சொத்துகளை பாதுகாக்கவும், அதை காப்பாற்றவும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானம், நேற்றைய செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதில், உறுப்பினர்கள் அனைவரும் கையழுத்திட்டனர்.
= எந்த ஒரு சலசலப்பு, கூச்சல் குழப்பம், அடிதடி, கலாட்டா ஏற்படாமல் கூட்டம் அமைதியாக நடந்து முடிந்தது.
மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம்:கூட்டம் முடிந்த பின், நிருபர்களிடம் தமிழக காங்., தலைவர் இளங்கோவன் கூறியதாவது: மத்திய அரசின் நில ஆர்ஜித சட்டத்தை எதிர்த்து, தமிழக காங்கிரஸ் சார்பில் மாவட்ட வாரியாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். உறுப்பினர் சேர்க்கை பணிகள் குறித்து, இன்று விவாதித்தோம். மாவட்ட வாரியாக, வட்டார வாரியாக கட்சியை பலப்படுத்துவது, அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதித்தோம். சிதம்பரம் உட்பட செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும், கூட்டத்தில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்திருந்தோம். இவ்வாறு, அவர் கூறினார்.