""மாவட்ட நிர்வாகமே ஸ்தம்பிக்கிற அளவுக்கு, டெங்கு காய்ச்சல் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்திடுச்சே...,'' என, கவலையுடன் கூறினாள் சித்ரா.
""ஆமாக்கா... இவ்ளோ வேலை செஞ்சும், மக்களிடம் ஒத்துழைப்பு இல்லாததால, கட்டுப்படுத்த முடியாம போச்சுக்கா...'' என்றாள் மித்ரா.
""ஏன்... நம்ம மாவட்டத்துக்கு இவ்வளவு சோதனை வருது? என்னோட காலத்துல டெங்கு பிரச்னை பெரிசா இருக்கேனு கலெக்டரும் ரொம்ப கவலையில் இருக்கார். போன வாரம் முழுவதுமே டெங்கு ஒழிப்பை தவிர, வேற வேலையை அவரால் பார்க்கவே முடியலை. சுகாதாரத்துறை செயலர் கலந்துக்கிட்ட ஆய்வு கூட்டத்துல வேற, சப்-கலெக்டர் சொன்ன பதில், அவரை வேதனைப்படுத்தியிருச்சு,'' என சித்ரா முடிப்பதற்குள், ""கலெக்டர் சங்கடப்படுற மாதிரி, சப்-கலெக்டர் அப்படி என்ன சொன்னார்...'' என அவசரப்பட்டாள் மித்ரா.
""நம்மூருக்கு வந்திருந்த, சுகாதாரத்துறை சிறப்பு செயலர் செந்தில்குமார், டெங்கு பாதித்த இடங்களில் வீதி வீதியா 3 கி.மீ., நடந்து போயி, ஆய்வு
செஞ்சார். கலெக்டர் அலுவலகத்தில்அதிகாரிகளிடம் கலந்துரையாடினார். அப்ப, பல்லடத்துல டெங்கு பாதிப்பு சம்பந்தமா கேள்வி கேட்டிருக்கார். சப்-கலெக்டர், "எனக்கு தகவல் தெரியலை சார்...' என மழுப்பியிருக்கிறார். "டெங்கு பாதித்த காரணத்தால தானே, இந்த மாவட்டத்துக்கு இரண்டாவது தடவை வந்திருக்கிறேன். கலெக்டர் போயி பார்த்திருக்காரே? ஒங்களுக்கு தெரியலையா,'னு, விடாப்பிடியா கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு, "கலெக்டர் சொல்லவே இல்லை,'னு சப்-கலெக்டர் சடார்னு பதில் சொல்லியிருக்கார். அதைக்கேட்டு டென்ஷன் ஆன கலெக்டர், ரொம்ப கடுமையா பேசியிருக்கிறார்; நிலைமை மோசமானதால, சிறப்பு செயலர் குறுக்கிட்டு சமாதானம் செய்ய வேண்டியதா போச்சுனு மத்த அதிகாரிங்க பேசிக்கிட்டு இருக்காங்க,'' என, மடமடவென கூறி முடித்தாள் சித்ரா.
""ஊருக்குள் இவ்வளவு விஷயம் நடந்துட்டு இருக்கு. ஆளும்கட்சிக்காரங்களும், எதிர்கட்சிக்காரங்களும் ஸ்ரீரங்கத்துக்கு வரம் வாங்க... ஸாரி... ஓட்டுக்கேட்க போயிட்டாங்க. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவோம்; எந்நேரமும் எங்க வீட்டு கதவை தட்டலாம்னு வாக்குறுதி சொல்லிக்கிட்டு இருக்காங்க... ஆனா, நம்மூரில் குறைகேக்குறதுக்கு ஒருத்தரையும் காணலை,'' என, புலம்பினாள் மித்ரா.
""அது... சரி... கார்ப்பரேசனில் நடந்த கூத்து தெரியுமா, உனக்கு?,'' என, அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.
""ஏன்... அங்க என்ன பிரச்னை,'' என ஆர்வமுடன் மித்ரா கேட்க, ""சிட்டி முழுவதும், டெங்கு பிரச்னையில் பரபரப்பா இருக்கு. அதில் கவனம் செலுத்த வேண்டிய சுகாதார ஆய்வாளர், வழக்கம்போல், போதையில் ஆபீசுக்கு வந்திருக்கார். அதைப்பத்தி, தன்னோட அறைக்கு உயரதிகாரி அழைத்து விசாரிச்சிருக்கார். வாக்குவாதம் முத்தி, ரெண்டு பேரும் கடுமையா பேசியிருக்காங்க. கைகலப்பு வரைக்கும் போயிடுச்சுன்னு சொல்றாங்க. இதைத்தான் கார்ப்பரேசன் ஊழியர்கள் பரபரப்பா பேசிக்கிட்டிருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""இந்த விசயம் இன்னும் வெளிச்சத்துக்கு வரலையா,'' என மித்ரா விடாப்பிடியாக கேட்க, ""டெங்கு களேபரத்துல எல்லோரும் இருக்கிறதால, காத்தோட காத்தா கரைஞ்சிடுச்சு. ஆனாலும், ரெண்டு பேரும் இந்த பிரச்னைக்கு பிறகு, ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிக்கிட்டுத்தான் இருக்காங்க,'' என்றாள் சித்ரா.
""அதவிடுப்பா... ஊரெல்லாம் குண்டும் குழியுமா இருக்கு... நெடுஞ்சாலைத்துறையினர் என்ன தான் செய்றாங்க,'' என கடைசி மேட்டருக்குள் நுழைந்தாள் மித்ரா.
""எந்த வேலையா இருந்தாலும், ஜவ்வா இழுக்கிறது அவுங்களோட வேலை... என்ன மாய மந்திரமோ தெரியலை... கோழிப்பண்ணை பகுதியில் ஒரு கி.மீ., தூரத்துக்கு மட்டும் ஒடனடியா ரோடு போட்டுட்டாங்க,'' என ஆச்சரியப்பட்டாள் சித்ரா.
""முக்கியமான அதிகாரி யாராவது, அந்தப்பக்கம் குடியிருப்பாங்க... அதனால, ஒடனடியா ரோடு போட்டிருப்பாங்க,'' என,
"அசால்ட்'டாக பதில் சொல்லி விட்டு கிளம்பினாள் மித்ரா.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE